பேருந்துக்குள் வன்முறை


(குறிப்பு: இது நான்குபேர் உருட்டுக்கட்டையுடன் வழிமறித்து வண்டியேறி அட்டகாசம் செய்த வன்முறையல்ல... கதை, திரைக்கதை வசனமெழுதித் திரைத்துறையினருடன் போக்குவரத்துத் துறை இணைந்து வழக்கமாகவே பேருந்துகளில் அரங்கேற்றப்படுகின்ற ஒரு வன்முறை!!)

குடும்ப அலுவலாகச் சென்னை சென்றிருந்தேன்... அங்கிருந்து திரும்ப மதுரைக்கு வர எப்போதும் செல்லும் பிரபல தனியார் டிராவல்ஸின் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.. இதுவரை நான் அந்த டிராவல்ஸின் பஸ்ஸில் பயணித்தது எல்லாமே நள்ளிரவுப் பேருந்துகளில்தான்... அப்போதெல்லாமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இரு இருக்கை வரிசைகளுக்கு இடையே உயரத்தில் அமைதியாகத் தொங்கிக்கொண்டு வந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.... அவர்களது பேருந்துகளில் திரைப்படங்கள் போடுவதில்லைப் போலும் என்று தப்புக் கணக்கு போட்டவனாக எப்போதும் போல் அதே கம்பெனி பஸ்ஸில் இம்முறை மாலை 7 மணி பஸ்ஸில் பயணமானேன்...

இதுவரை சும்மாவே தொங்கிக்கொண்டு வந்தே நான் பார்த்த அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பயணம் ஆரம்பித்த‌ சில நிமிடங்களிலேயே உயிர்பெற்றது... ஓபனிங்கிலேயே பெருங்குரலெடுத்து மிரட்டத்துவங்கிய டிவிப்பொட்டியில் சிம்பு மற்றும் தனுஷ் குத்தாட்டம் போட்ட பாடல்கள் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.... இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமானதாக இருந்தும், சுதந்திர‌ இந்தியாவின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் பெற்ற குடிமகனாகிய நான் எனது சொந்த உரிமைகளின் பேரால் "பார்க்க வேண்டாம்" எனத் தவிர்த்திருந்த திரைப்படங்கள் இவை என்ற காரணத்தினால், இந்தப் பாடல்கள் எனக்குப் புதிதாக இருந்தன....

"சிலம்பாட்டம்" படத்தில் ஒருபாடலில் சிம்பு ஒரு கூட்டத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்... அவ்வப்போது சுற்றி ஆடுபவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சிம்பு மட்டும் நடுவே தனியாவர்த்தண நடனம் (?) செய்வதாகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.... சிம்பு முழங்காலில் நின்றுகொண்டு "வெடுக் வெடுக்" கென எழுந்து நிற்கிறார்.... பின்பு முழங்காலில் நின்றவாறே கைகளைப் பின்பக்கமாகத் தரையில் ஊன்றிக்கொண்டு இப்பொழுது கால்பாதங்களைத் தரையில் பதித்து, மல்லாந்த உடலைக் கை ஊன்றித் தாங்கிக் கொண்டு கால்களை மேலே உதறுகிறார்... பிறகு மீண்டும் "வெடுக் வெடுக்" என எழுந்து அமர்கிறார்.... பின்னணியில் அதிரடிக்கும் குத்தாட்ட இசை வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.... அந்த‌ ந‌ட‌ன‌க்காட்சியை என் ம‌ன‌துக்குள் இசையைத் தவிர்த்து 'ம்யூட்' செய்து பார்க்கையில்.... க‌டுமையான‌ ம‌ல‌ச்சிக்க‌லால் ப‌ல‌ச்சிக்க‌லுக்கு ஆளாகிவிட்ட‌ ஓர் இளைஞ‌ன் காலையில் ஃப்ரீயாக‌ப் போவதற்காக‌ மேற்கொள்ளும் க‌டும் பிர‌ய‌த்த‌ன‌ங்கள் இவை என்று டைட்டில் போட்டுக் காட்டினால் ந‌ம்பும் மாதிரியாக‌ இருந்த‌து!!

இவ்வாறாக‌ செங்க‌ல்ப‌ட்டு தாண்டி எங்கோ ஒரு மோட்டலில் சாப்பாடுக்காக‌ நிறுத்தினார்க‌ள்.... சாப்பிட்டு ஏறிய‌தும் அதே டி.வி மீண்டும் உயிர்பெற்று எழுந்த‌து!
இம்முறை ஒரு திரைப்ப‌ட‌ம்.... க‌லாநிதி மாற‌ன் வ‌ழ‌ங்கும், த‌னுஷ் ந‌டிக்கும் என்று பில்ட‌ப் கொடுத்து "ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தைப் போட்டார் டிரைவ‌ர்.... அடுத்த‌ சில‌ நொடிக‌ளிலேயே புரிந்தது இத்த‌னை நாள் இந்த‌ ப‌ஸ்ஸில் நான் அல‌ட்சிய‌மாக‌ப் பார்த்துவ‌ந்த‌ அந்த‌த் தொலைக்காட்சி இய‌ந்திர‌ம் தூங்கும் ஓர் மிருகம் என்று! அது விழித்துக் கொண்டால் என்னென்ன‌ அவ‌ல‌ங்க‌ளை உருவாக்கும் என்ப‌த‌ற்கு நான் க‌ண்ணால் க‌ண்ட ஒரு சாட்சியானேன்!!

"ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தை நான் பார்த்திருக்க‌வில்லை... ஆனால் அதுவொரு வெற்றிப் ப‌ட‌ம் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... வ‌ன்முறையாக‌ அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தேயாக‌ வேண்டுமென்று நிர்ப‌ந்திக்க‌ப் ப‌ட்ட‌தில் நான் பார்த்த‌வ‌ரை அப்ப‌ட‌த்தில் ச‌த்த‌த்தையும் ர‌த்த‌த்தையும் த‌விர‌ வேறெதுவுமே இல்லை! ஸ்பென்ஸ‌ர் ப்ளாஸாவிலும் ஆந்திராவின் ஒரு ப‌ப்ளிக் மார்க்கெட்டிலும் துப்பாக்கி ம‌ற்றும் வாள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் தாங்கிய‌ இர‌ண்டு ப‌டைக‌ள் பெரும்போர் புரிகின்ற‌ன‌... மூன்று நான்கு ர‌வுடிகளைப் போர்வீர‌ர்க‌ளுட‌னும் அர‌ண்ம‌னையோடும் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள்.... அட‌ எதுக்கு இந்த டுபாக்கூர் ப‌ட‌த்த‌ப் ப‌த்தி இவ்ளோ பேசிக்கிட்டு.... கேவ‌ல‌மான‌ ஒரு குப்பைப் ப‌ட‌ம் பாஸ்.... ப‌ஸ்ஸூக்குள்ள‌ ஏத்தி மூச்சுத் திண‌ற‌த் திண‌ற‌ முழுப் ப‌ட‌த்தையும் போட்டுக்காட்டித் திருச்சி வ‌ரைக்கும் சாவ‌டிச்சுட்டுதான் விட்டாங்க...

இப்போ மேட்ட‌ருக்கு வ‌ர்றேன்....

பேருந்துக‌ளுக்குள் க‌ண்டிப்பாக‌த் திரைப்ப‌ட‌ம் போட‌வேண்டுமா?

இது வியாபார‌ உல‌க‌ம்... ந‌ட‌ந்துகொண்டிருப்ப‌தோ "இல‌வ‌ச‌" யுக‌ம்....
வார‌ இத‌ழ் வாங்கினால் சிம்கார்டு இல‌வ‌ச‌ம்.... காஃபித்தூள் வாங்கினால் பாத்திர‌ம் துல‌க்கும் ஜெல் இல‌வ‌ச‌ம்... ஏன் வோட்டு போடுற‌துக்கு இல‌வ‌ச‌மா ஹாட்கேஷ் (hot cash) கொடுக்கும் அள‌வு வ‌ந்துவிட்ட‌ இந்த‌ உல‌கில் ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் இல‌வ‌ச‌மாக‌ ஒரு ப‌ட‌ம் போடுவ‌து சாதார‌ண‌ம்தான்... ஆனால் கோதுமை ரொட்டி வாங்கினால் ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் இல‌வ‌ச‌ம் என்று கையில் கொடுத்தால் ஓகே... ஆனால் வாங்குப‌வ‌ன் ச‌ர்க்க‌ரை நோயாளியாக‌ இருந்தாலும் கூட‌ கோதுமை ரொட்டி வாங்கிவிட்டாய் என்று இல‌வ‌ச‌ வாழைப்ப‌ழ‌த்தை வ‌ன்முறையாக‌ வாயில் திணித்தால்???... அதுபோன்ற‌தொரு ம‌னித‌ உரிமை மீற‌லாக‌த்தான் என‌க்குத் தெரிகிற‌து பேருந்துக்குள் இப்படி ம‌கா ச‌த்த‌மாக‌ப் ப‌ட‌ம் போட்டு மிர‌ட்டுவ‌து! "உன‌க்குப் பிடிக்குதோ பிடிக்க‌லையோ போடுற ப‌டத்த நீ பாத்துத்தான் ஆகணும்... என்ன‌து தூங்கிடுவியா??...அடீங்க்க‌... ம‌வ‌னே எங்க‌ ஹீரோ ப‌ற‌ந்து பறந்து தாவி... தார‌ த‌ப்ப‌ட்டையெல்லாம் தெறிக்க‌ வில்ல‌னை வ‌த‌ம் செய்யுற‌ ச‌வுண்டு எஃபெக்ட்ல‌ நீ எப்டி டா ராசா தூங்குவ‌!!" என்று க‌ண்ட‌க்டர் க‌லாய்க்காத‌ குறைதான்....

சரி... லீக‌லா ஒரு லா பாயிண்ட்டு வைக்கிறேன்..... எல்லா திரைப்ப‌ட‌ங்களிலும் டைட்டில் கார்டு போடுவ‌த‌ற்கு முன்பாக‌ ச‌ம்பிர‌தாய‌மாக‌ இன்றும் கூட‌ "யு" , "ஏ" , "யுஏ" என்றெல்லாம் சென்சார் போர்டு ச‌ர்டிஃபிகேட்டுக‌ள் போடுகிறார்க‌ள்.... 18 வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று (ஏட்டில் ம‌ட்டும்) சில‌ க‌ட்டுப்பாடுக‌ள் இன்றும் இருக்கிற‌து... அட்லீஸ்ட் இதை வெகுசில‌ வீட்டிலாவ‌து சில‌ பெற்றோர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள்.... இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ ஆபாச‌ம் வ‌ன்முறை என்று எந்த‌க் கட்டுப்பாடும் இல்லாம‌ல் ஏற‌க்குறைய‌ எல்லா ப‌ஸ்ஸிலுமே திருட்டு விசிடிக் க‌ளில் ப‌ட‌ம் போடுகிறார்களே.... ஆபாச‌ போஸ்ட‌ர்க‌ளில் சாய‌ம் அடிக்கும், தியேட்ட‌ர்க‌ளை உடைக்கும் ந‌ம‌து "க‌லாச்சார‌ பாதுகாவ‌ல‌ர்க‌ள்" இதையெல்லாம் க‌ண்ட‌தே இல்லையா???

ப‌ர்ச‌ன‌லாக‌ அன்றைக்கு நான் பேருந்தில் வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விப‌த்தில் ப‌லியான‌ உற‌வின‌ரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வ‌ந்து கொண்டிருந்தேன்... இப்ப‌டிப் ப‌ல‌ரும் ப‌ல‌ க‌வ‌லைக‌ளுட‌னும் நிம்ம‌தியான‌ ஒரு ப‌ய‌ண‌த்தைத் தேடி வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌லாம்... அந்த‌ வேளைக‌ளில் அத்துமீற‌லாக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ம்ப‌டியாக‌த் திணிப்ப‌து என்ன‌ ம‌னிதாபிமான‌மோ தெரிய‌வில்லை.....

பேருந்துக‌ளில் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு இல்லாம‌ல் இருக்க‌ வாத்திய‌ இசை இசைக்க‌லாம்... அல்ல‌து ப‌ய‌னுள்ள‌ சில‌ வீடியோக்க‌ளைக் கூட யாருக்கும் கஷ்டம் தராத வண்ணம் ஒளிப‌ர‌ப்ப‌லாமே.... அட‌... அப்போகூட‌ த‌மிழ‌னுக்கு சினிமாதான் வேணுமா?? அம‌ர‌ர் ஊர்திக‌ளிலும் ஆம்புல‌ன்சிலும் நான் ப‌ய‌ணித்த‌து இல்லை.. அதில் கூட‌ திரைப்ப‌ட‌ம் போடுகிறார்க‌ளா?? தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்க‌ள்...

பிர‌பு. எம்

3 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான அக்கறையோடு எழுதி இருக்கீங்க.. ரைட்டு.. இப்பவும் ஊர்லதான் இருக்கீங்களா? ஏன் கூப்பிடலை?

Cable Sankar said...

அது சரி.. ரொம்பத்தான் நல்லவனா இருக்கீங்க பிரபு.. வாழ்க் வளமுடன்..

Taj :) said...

I can understand the emotions u would have gone through at that time. In fact I was able to have a illusion of what exactly had been through your mind, it was so well portrayed. Again the expression expressed is too good and the way it is expressed is wonderful. As soon as we read this we start blaming why a TV has to be played. I am very well impressed with the way you have portrayed this article. According to me a writer is successful only when he is able to turn the direction of thoughts of the reader towards his direction. And you are very succesful through this article.

I would suggest you to play with your mind now, Probably I would ask a question why a TV shouldn't be played? I would like you to write an article on this.... try, trust me it will be interesting and really funny and controversial to this article. A writer should be able to judge both the sides of the coin. Just try this time and I am sure you would succeed....Taj :)

Post a Comment