பொக்கிஷம்: விமர்சனம்


சோம்பலான ஒரு காலைப் பொழுதில்... வீட்டில் தனியாக... காதல் கன்ஃபார்ம் ஆகிவிட்டதால் கொஞ்சம் கசக்கும் காதலியின் ஸ்வீட் நத்திங் எஸ்.எம்.எஸ்களுக்கு இடையே மறைந்துபோன தந்தை தன் கைப்படப் பதித்துவைத்திருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான காதல் கதை பொதிந்துவைத்த பொக்கிஷமாக மகனின் கண்ணில் பட்டால்..... எத்தனைப் பக்கங்களில் புனைந்து தள்ளியிருந்தாலும், சைக்கிள் வேக ஸ்க்ரீன்ப்ளே என்றாலும் பொருட்படுத்தாது ஒரேமூச்சில் படித்துவிடத்தானே தோன்றும்... அதே துளிர்க்கும் ஆர்வத்தையும் பங்களிப்பையும் நம்மிடமும் எதிர்பார்த்துச் சேரன் (ரொம்பவே ஆழமாக) புதைத்து வைத்திருக்கும் "பொக்கிஷம்" தான் படம்!

"இன்னுமொரு புதுமையான‌ காதல் கதை" என்று ஃப்ளாஷ் கார்டு போட்டுதான் இப்போதெல்லாம் காதல் கதையே எடுக்கிறார்கள்.... இங்கு சேரனோ "இதோ ஒரு பழமையான காதல் கதை" என்று நம்பிக்கையாகக் களம் கண்டிருக்கிறார்!

எடுத்துக் கையாளப்பட்டிருப்பது ஓர் அழகான கதைதான் என்பதில் நிச்சியம் ஐயமில்லை... அஞ்சல் கடிதங்களால் பரிமாறிக்கொள்ளப்படும் காலம்சென்றதொரு கண்ணியமான காதல் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த்துபோல் ஃப்ரெஷாகப் பதிவுகொள்ளப் பட்டிருக்கிறது டிஜிட்டல் செல்லுலாய்டில்!! மொத்தப்படத்தையும் கண்ணுக்கு வலிக்காத வண்ணங்கள் தெளித்துத் திருத்தமாய் வடித்த ஒரு கிரீட்டிங் கார்டு போலப் பார்த்துப் பார்த்துப் புனைந்திருக்கிறார் சேரன்....

நீண்டவெளியான‌ கதைக்களத்தில்.... இரண்டே இரண்டு காதலர்களை அருகருகே அமரவைத்துப் படமாய் எடுத்திருந்தால் வசனப் பொட்டலங்களை குவித்து வைத்திருப்பார்கள் இண்டர்வல் வரை.... ஆனால் இங்கு காதலன் கோல்கத்தாவில்... காதலி நாகூரில்....எனவே வசனப் பொட்டலங்களுக்குப் பதிலாகப் பருமனான கடிதப் பொட்டலங்களாக‌ நிரப்பிவைத்திருக்கிறார்கள. கடைசி சொட்டு இங்க் இருக்கும்வரை எழுதப்பட்ட அத்தனை காதல்கடிதங்களும் வரிவிடாமல் வாசிக்கப்பட்டிருக்கின்றன படம் முழுதும்!! விளைவு நாகூரிலிருந்து கோல்கத்தாவிற்கு ஸ்கூட்டரில் போகும் எஃபெக்ட் நமக்கு....

நீள நீளமாய் நட்பு பாராட்டும் கடிதக் கவிதைகளைவிட ஆரம்பத்தில் சேரன், பத்மப்ரியா அறிமுகம் கொள்ளும் மருத்துவமனைக் காட்சிகளும் அந்தக் குட்டிக் குட்டிப் பேச்சுகளால் பரிச்சியம் வளர்ப்பதுமான விஷுவல் கவிதைகள் ரொம்பவே பாந்தம்....
கடிதப் போக்குவரத்து தொடங்குமட்டும் சேரன் தெரிகிறார்... அங்கங்கே பன்னீர் தெளித்து சிலிர்க்கவும் வைக்கிறார்... ஆனால் கடிதம்மூலம் சீனப் பெருஞ்சுவராய்க் காதல் வளர்க்க ஆரம்பித்தவுடனேயே நடிகர் சேரன்தான் வந்துபோகிறார் படமோ நீளமான வார்த்தைக் கவிதைகளால் மட்டுமே நகர்கிறது அங்குலம் அங்குலமாக‌.... அந்தக் காட்சிகளில்தான் ஏதோ ஒருவித வறட்சி ஆட்கொள்கிறது.....

அழகான காதல்கதை ஒன்றை "ஆட்டோகிராஃப்" சேரன் சொல்லும்போது அங்கே வெள்ளித்திரை சுவாரஸ்யங்கள் ஏதுமின்றி வெறும் காட்சிகளால் படம் நகரும்போது ரீல் சுற்றும் தியேட்டர் ஆபரேட்டரின் கை வலியை உணரமுடிகிறது! திடீரென்று விழித்துக் கொண்டவராய்... நதீராவிடம் பேசும்வரை வேறு யாருடனும் பேசமாட்டேன் என்ற மூன்று நாள் மவுன விரதம் அநியாயமாய்க் காலேஜ் ஃபோனை எடுக்கும் அட்டெண்டரிடம் முறிந்து போவது டிப்பிக்கல் சேரன் டச்... ஆனால் அவ்வளவுதான் ஒரு டச் வைத்துவிட்டு மீண்டும் கடிதம் எழுதப் போய்விடுகிறார்!

ஆறு அங்குலத்துக்கு நீண்ட ரொட்டிக்கு (Soft Bread) இரண்டே ஸ்பூன் ஜாம் தடவிக் கொடுத்திருக்கிறார்... இடையிடையே சில ஸீன்கள் தித்தித்தாலும் மொத்தமாக வெறும் ரொட்டியை சவைக்கும் உணர்வே மிஞ்சுகிறது!

கடிதப் போக்குவரத்து திடீரென நிற்பதும்... தவித்துப் போகும் சேரன் பத்மப்ரியாவைத் தேடி அலைவதும்... வாழ்நாள் முழுக்க சேரன் தேடியும் கிடைக்காத தூரத்துக்குத் தன் மகளைக் குடும்பத்தோடு கடத்திவிடும் நதிராவின் தந்தையின் சூழ்ச்சியும் வலியோடு கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகின்றன... ஆனால் அதுவும் ஆமை நகர்வுதான்!

இறந்துவிட்ட சேரனின் ஒரே மகன் ஆர்யன் ராஜேஷ், முகவரி இல்லாமல் உரைக்குள் மாட்டிக்கொண்ட சேரனின் கடைசி கடிதங்களைப் பொக்கிஷமாகப் பத்மப்ரியாவைத் தேடிக் கண்டுபிடித்து கை சேர்க்கும் காட்சிகள்.... கடுகடுக்கக் காத்திருந்தபின் வந்து கால்நனைக்கும் கடலலைகள்! சில்லிட வைக்கும் உணர்வுப் புதையலுக்காய் ரொம்பவே காத்திருக்க வேண்டியிருக்கிறது.... ஒட்டுமொத்த வாழ்க்கையே ஏமாற்றமாய் மிகவும் உருக்கமாய் எதிரொலிக்கிறது பாட்டியாகிவிட்ட பத்மப்ரியாவின் ஈனஸ்ருதி அழுகை அந்த உச்சக்காட்சியில்....

நடிப்பில் சேரன் அதே அதே அதே சேரன்தான்.... ஆனால் பத்மப்ரியா.... முகத்தை மூடிக்கொண்டு கண்களாலேயே க(வி)தை சொல்லியிருக்கிறார்.... அன்புள்ள‌ படவா... அன்புள்ள திருடா.. அன்புள்ள மன்னா... என்று பாடலில் கொஞ்சும் அழகுமுகம் சமூகத்தின் அர்த்தமற்ற‌ சில வறட்டுப் பிடிவாதங்களினால் இறுதியில் தோல்சுருங்கிக் கசங்கிப் போன ஒரு கனவாய்ப் போய்விடுவ‌தின் வலியை லைஃப்டைம் பெர்ஃபார்மன்ஸாகப் பதிவுசெய்திருக்கிறார் என்றே செல்லலாம்... வைரபாலனின் கலையும், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் திகட்டாத அலங்காரத்தினால் கச்சிதமாக அழகுபடுத்திக் கொடுத்திருக்கின்றன பொக்கிஷத்தை! நீ.....ளமான படத்துக்குக் காட்சிகளை முடிந்தவரை சுருக்கமாய்க் கத்தரிபோட்டிருக்கும் எடிட்டரின் ரூமில்தான் இந்தக் கடிதக்கோர்வை திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது.... இளையராஜாவாய்ப் பின்னணி இசையில் பேசியிருக்க வேண்டியப் பல இடங்களில் இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளியின் "இசை" ஊமையாகிப் போயிருப்பது பெரும் ஏமாற்றம்... பாடல்கள் நன்றாக இருப்பது ஆச்சர்யமான ஆறுதல்..

மாறுபட்ட நேர்மையான சமூகக் கருத்துக்களால் கவர்ந்த "பாரதி கண்ணம்மா" , "பொற்காலம்", வரிசையிலான ஆரம்பகாலப் படங்களே சேரனின் நிஜமான‌ பொக்கிஷங்கள்... இது வெறும் நிழல்தான்...

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாறுபட்ட நேர்மையான சமூகக் கருத்துக்களால் கவர்ந்த "பாரதி கண்ணம்மா" , "பொற்காலம்", வரிசையிலான ஆரம்பகாலப் படங்களே சேரனின் நிஜமான‌ பொக்கிஷங்கள்... இது வெறும் நிழல்தான்...//

என்னுடைய கருத்தும் அதேதான்

azhagan said...

A lot of people appreciate "autograph". It is really sad. It is a film about a man with out culture, decency,etc.etc. To call seran a great director is really a JOKE

வால்பையன் said...

தமிழ் சினிமா மேல் இருந்த மரியாதை போய் பல வருசங்களாச்சு!

பிரபு . எம் said...

//தமிழ் சினிமா மேல் இருந்த மரியாதை போய் பல வருசங்களாச்சு!//

நான் எதன் மேலும் எளிதில் "மரியாதை" வைத்துவிடுவதில்லை...
அனைத்து மொழி சினிமா மீதும் நான் கொண்டிருப்பது ஒருவிதமான "சிநேகம்" ...அது குறைவதுமில்லை கூடுவதுமில்லை!!

சில படங்கள் தானாகவே மரியாதையான இடத்தை மனதுக்குள் தேடிப் பிடித்துவிடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.... ஆனால் படைப்பாளிகள் "மரியாதை" தேடிக்கொள்வதற்குப் பல "தியாகங்கள்" புரிய நேர்கிறது!!

பிரபு . எம் said...

நண்பர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி :)

பிரபு . எம் said...

//A lot of people appreciate "autograph". It is really sad. It is a film about a man with out culture, decency,etc.etc. //

Yes Some rejected "Autograph" differing with its concept... But the movie acclaimed both commercial and critical success....

I personally couldnt accept "7-G Rainbow Colony's" moral... But again the movie acclaimed all forms of success....

My point of view is to observe and enjoy "the tale" the director says... and never listen what the movie says!! The right to tell is his.. and the right to listen is ours :)

//To call seran a great director is really a JOKE//

I dont accept this friend... Cheran is reasonably good for his excellent filmography of his past...

Post a Comment