விஜய் டி.வி கோபிநாத்: ஒரு பார்வை


உங்களுக்குப் பிடித்தத் தமிழ்த் தொலைக்காட்சிப் பிரபலம் யார்? என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் பெயர் விஜய் டி.வியின் கோபிநாத்! (ஆதாரம்: ஒரு பத்துபேர்கிட்ட கேட்டேன்!!) பல வீடுகளில் "நீயா? நானா?" நிகழ்ச்சியை விடாது பார்க்கிறார்கள்... நிகழ்ச்சியில் பேசுபவர்கள் அவரவரின் அலைவரிசையில் கருத்துகளை சொல்ல, விவாதத்தில் கிளம்பும் சூடு தணிந்து விடாமல், அப்படியே சுடுதண்ணியில் படகுவிட்டுக் கரைசேர்ந்திடும் லாவகத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளார் கோபிநாத் தன்னுடைய இந்த நீண்டகால அனுபவத்தில்...!

'ஹாய்'மதன், அனுஹாசன் வரிசையில் ஒரு வெயிட்டான விக்கெட்டாக இவரையும் விஜய் டி.வியும் நேரம் பார்த்துக் களமிறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... பர்சனலாக எனக்கு "நீயா? நானா?" நிகழ்ச்சியின் மீது எவ்வித ஈர்ப்பும் கிடையாது... இருப்பினும் சேனல் மாற்றும்போது கண்ணில் பட்டால், எரிச்சலைக் கிளப்புமாறு ஒருவர் பேசும் வரை பொறுமையிருந்தால் பார்ப்பேன்! (இம்சையக் கூட்ட எபிஸோடுக்கு ரெண்டுபேர் கண்டிப்பா இருப்பானுங்க‌!)

பத்துப் பதினைந்து வருடங்களாகத் தமிழ்த் (தனியார்த்) தொலைக்காட்சிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் நம் சின்னத்திரை, பெரியத்திரை பெருசுகளின் 'பென்ஷன்' வாங்கும் களமாகத்தான் இருந்திருக்கிறது.... சன் டி.வியைத்தான் சொல்லவேண்டும்... அழகுப் பதுமைகளை வைத்து ஓட்டிவிடும் கமர்ஷியல் நிகழ்ச்சிகள் தவிர ஏதாவது டாக் ஷோ மாதிரி ஏதாவது என்றால் விசு, டி.ஆர் என்று கோடம்பாக்கத்திலிருந்து அழைத்து வந்து விடுவார்கள்... 'அறிவாளிகள்' என்கிற இமேஜோடு திரையுலகைவிட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டு இங்கு சின்னத்திரையில் விசுவின் வழித்தோன்றல்களாக லட்சுமி,ரேவதி,ரோகிணி,குஷ்பு எனறு வரிசையாக ஆளுக்கொரு டாக் ஷோவை எடுத்துக்கொண்டு கடையைத் திறந்தார்கள்... எல்லாம் ஆரம்பப் பரபரப்புக்களோடு புஸ்வானமாகிப் போனது கண்கூடு!!

உண்மையில் தொலைக்காட்சி மீடியம் என்பது முற்றிலும் வேற ஏரியா... விஷுவல் கம்யூனிக்கேஷன், ஜர்னலிசம் என்று முறைப்படி எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் படித்து வெளிவருகிறார்கள் இருப்பினும் வாரத்துக்கு ஒரு சேனல் துவங்கும் தமிழ் தொ.கா உலகில் இன்னும் டயட் மீறிய ஹீரொயின்களின் அழுகாய்ச்சி சீரியல்களும் சினிமா கிளிப்பிங்குகளும் மட்டுமே ஆக்கிரமித்துக் கிடப்பது நம் தலையெழுத்து!!

ச‌ரி ந‌ம்ம‌ கோபியிட‌ம் வ‌ருவோம்... ஒரு "மீடியா ப‌ர்சன்" என்கிற ரீதியில் ம‌க்க‌ள் ம‌த்தியில் மேலோட்ட‌மாக‌ எதிர்பார்க்க‌ப்ப‌டும் ஒருவித‌ மிடுக்கு கோபிநாத்திட‌ம் நிச்சிய‌மாக‌ உள்ள‌து.... அதாவ‌து "மீடியா" என்கிற‌ தோர‌ணையில் எவ‌ரையும், எத‌னையும் 'கேஷுவ‌லாக‌' அணுகும் பாங்கு என்று எளிதாக‌ச் சொல்ல‌லாம்.... (க‌ட்சிக்கார‌ர்க‌ள் எல்லாம் ஆளுக்கொரு சேன‌ல் ஆர‌ம்பித்து வைத்திருக்கும் நிலையில் (ஸ்டார்) விஜ‌ய் டி.வியில் வேலை கிடைத்த‌து இவரிடம் இந்த‌ 'மிடுக்கு' மிச்ச‌ம் இருப்ப‌த‌ற்கு ஒரு முக்கிய‌க் கார‌ண‌ம் என்பதை இங்கு சொல்லித்தான் ஆக‌வேண்டும்!!)

அர‌சிய‌ல் நிக‌ழ்ச்சிக‌ளில் ஆர‌ம்பித்து த‌ற்போது இவ‌ர் நிர‌ந்த‌ர‌மாக‌ கோலொச்சிவ‌ரும் " நீயா? நானா?" வ‌ரை கோபிநாத்தின் வ‌ள‌ர்ச்சி நிதான‌மான‌து.... நிறுத்தி நிதான‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ந்து இப்போது வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திரு.கோபிநாத், தொகுத்து வ‌ழ‌ங்குத‌லிலும் வ‌ர்ண‌னையிலும் விடாது த‌ன் ஆளுமையால் க‌வ‌ர்ந்தாலும்... ஹோம் ஒர்க்கில் ரொம்ப‌வே கோட்டை விடுகிறாரோ என்று தோன்றுகிறது....

இவரது நிகழ்ச்சிகளில் எடுத்தாளப்படும் த‌லைப்புகளை ஒட்டி எந்த‌ள‌வு இவ‌ர் த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக்கொள்கிறார் என்ப‌து நிச்சிய‌ம் கேள்விக்குறிதான்.... உதார‌ண‌மாக‌ கிராம‌த்துத் திருவிழாக்க‌ளைப் ப‌ற்றி விவாத‌ம் செய்யும் எபிஸோடில் ச‌ர்ச்சைக்குரிய‌ ந‌ள்ளிர‌வு ந‌ட‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி ஒருவ‌ர் சொல்ல‌ "அப்ப‌டியா? என்று நிமிர்ந்து, எங்கே? எந்த‌ப் ப‌குதியில்? .." என்கிற‌ ரீதியில் புதிதாக கேட்கிறார்.... இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் ஜு.வி, ரிப்போர்ட்ட‌ர், ந‌க்கீர‌னில் எல்லாம் வ‌ந்து வ‌ந்து புளித்துப்போய் ந‌டைமுறையாகிவிட்ட‌ ஒன்றாச்சே....! இதுபோன்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் க‌வ‌னிக்க‌ முடிகிற‌து அவ‌ரிட‌ம், த‌லைப்பு சார்ந்த‌ போதுமான‌ ஆய்வு இல்லாத‌தை.... அதேபோல் பேட்டியெடுக்கும்ப் போதும் சினிமா, அர‌சிய‌ல் என்றால் ஓரளவு ஓகே(அதுவும் தற்காலிக நிகழ்வுகளில்தான் ஸ்ட்ராங்காக இருக்கிறார்) அதுத‌விர‌ ம‌ற்ற‌ துறை சார்ந்த‌வ‌ர்க‌ளைப் பேட்டியெடுக்கும்போது அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி இன்னும் அதிக‌ ஆய்வுக‌ள் மேற்கொண்டு க‌ல‌க்க‌ வேண்டும் இவ‌ர்....சில‌கால‌ம் முன்பு இவ‌ர் எழுத்தாள‌ர் ஜெய‌காந்த‌னைப் பேட்டிக‌ண்ட‌ போது வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிந்த‌து இல‌க்கிய‌ம் ம‌ற்றும் ஜெய‌காந்த‌னின் எழுத்துக்க‌ளோடுமான‌ இவ‌ர‌து ப‌ரிச்சிய‌மின்மை.....

ந‌ம்பிக்கை த‌ரும் ஒரு mighty wicket ஆக‌ உருவெடுத்து வ‌ருவ‌த‌ற்கான‌ ஸ்கோப் இருக்கிற‌து கோபிநாத்துக்கு அதை அவர் இன்னும் சிற‌ப்பாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாமே.....!!

கோபிநாத் போன்றோருக்கு அவ‌ர்க‌ளின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்....

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!! ;-)

நன்றி "யூத்ஃபுல் விகடன்"!!


இன்னொருமுறை யூத்ஃபுல் விகடனில் என் சிறுகதை ("சாபங்கள் பலிப்பதில்லை") வெளிவந்துள்ளது....
விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!! :)


விக‌னில் ப‌டிக்க‌: CLICK HERE

நன்றி நன்றி நன்றி!! :-)

சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை


"இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய்ப் போகட்டும்" - பி.எஸ்.வீரப்பா (ஒரு திரைப்படத்தில்!)

மழைக்கால மத்தியாணம்...எப்பவும் புழுதிவாரி இறைக்கும் வாகனங்கள் "ஸீசனல் ஆஃபராக" சகதியை வாரிஇறைத்துச் சென்றுகொண்டிருந்தன.....அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய், கிடைக்கிற‌ "சைடு கேப்" பில் எல்லாம் புகுந்து மும்முரமாகத் தங்கள் தலைவனுக்கு ஏதோ விழா எடுப்பதாக‌ ஸ்பீக்கர்கள், தோரணங்கள்,ட்யூப் லைட்டுகள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகள் நட்டுவைக்கும் கலாச்சாரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செயல்வீரர்கள்....

ரோட்டின்மேல் இருக்கும் ராசய்யா_____ன் (ஏதாவது ஒரு ஜாதி பேரை வைத்து கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க) வீட்டு வாசல் கதவு முழுதுமாய்த் திறந்திருக்கிறது... வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருந்தவண்ணம் உள்ளது.... முன் அறையில் கொஞ்சம் பழசாகிவிட்ட‌ ஒரு மர சோபாவில் சற்று கண்ணயர்ந்தவனாய்த் தலைக்குக் கைவைத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் தருமராஜன்... உள் அறையில் உடைந்துபோய் அமர்ந்திருக்கிறார் சீதம்மாள்... அருகே சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

"யாரு....தருமனா இப்புடி சாய்ஞ்சு கிடக்குறான்... தேனி மாதிரி சுத்திட்டு இருப்பியேய்யா என் ராசாஆஆஆ...இப்புடி உடம்பு சோந்து கண்ணசந்து கிடக்குதியே.... உங்கப்பன் உன்ன‌ விட்டுட்டுப் போய்ட்டானேஏஏஏஏஏஏ......." என்று சவுண்டை ஸ்டார்ட்செய்து கை ரெண்டையும் விரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார் அந்தக் கிழவி, "அடியே சீத.. எஞ் சீத...உன்னய தனியா விட்டுட்டு போக எப்புடிடீ மனசு வந்துச்சு அந்தப் பயலுக்கு??.... பாவிமக கண்ணுல கத்திய போட்டுப் படுக்க வெச்சுட்டாண்டீ அந்த பாழா போற டாக்டரு... பாவிமவன்.... மூஞ்சிபாக்க குடுத்துவெக்கலியே இந்த பாழாப்போற கண்ணுக்கு...." ஐயோ ஐயோ ஐயோ!! என்று நடுநடுவே மூக்கைச் சிந்திக்கொண்டு நெஞ்சில் அடித்து அழத்தொடங்கினாள் "கிழவி" என்று அழைக்கப்படும் தருமனின் பாட்டி... ராசய்யா_____க்கு பெரியம்மா முறைவேண்டும்.... கண் ஆபரேஷன் செய்து படுத்துக் கிடந்தமையால் ராசய்யா____ன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரால் முடியாமல் போய்விட்டது (ஓ! அதைக் கிழவியே சொல்லிடுச்சோ!!) "கிழவி"யின் அலறலிலும் தருமனின் அயர்வு அகலவில்லை.... உடலும் மனதும் உளைந்துபோக அவனையுமறியாமல் தூங்கிக் கிடக்கிறான்.....

வீட்டிற்கு வெளியே.... செயல்வீரர்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் விழா துவங்குகிற வண்ணமாய், இரண்டடி இடைவெளியில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் எல்லாம் உயிர்பெற்றுப் பிளிரத் துவங்கின.... தெரித்துக் கண்விழித்தான் தருமன்.... சீதாம்மாளிடம் இருந்த கிழவி விழித்துவிட்ட தருமனை நோக்கி அழுதவண்ணம் எழுந்துவர... துக்கம் தீர்ந்தவனாய்க் கிழவியின் துஷ்டியைக் ஏற்று அமரவைத்தான் தருமன்.... இழவில் பங்கேற்று, சம்பிரதாயப்படி சொல்லாமல் சென்றுவிட்டு, இப்போது "கிழவி"யை அழைத்துக்கொண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்திருந்தார்கள் மாமன் மச்சான்கள்....

"சரி... நடந்தது நடந்துபோச்சு...."என்று ஒருவர் ஆரம்பித்தாக‌ வேண்டுமே....!!

தருமனின் தோள்மேல் கைவைத்து ஒருவர் பேச்சை ஆரம்பிக்க "இனி ஆகவேண்டியத பாக்கணும் இல்லையா..." என்று அடுத்தவர் தொடர்ந்தார்.... குடியிருக்கும் பங்காளிகள் ஆட்கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ராசய்யா____க்கு சொந்தமான‌ பிரச்னைக்குரிய சில வீடுகளின் பத்திரங்கள் கிடைத்ததா?? என்று அக்கறையாகக் கேட்டு விசாரித்தார்கள்....

"ஒருவாரமா வீடு முழுசும் அலசியாச்சு...
எங்க வெச்சுட்டுப் போனாருன்னே தெரியல...."

"சொந்தக்காரப் பயபுள்ளகளா போயிட்டானுங்க.. இல்லைன்னா... போய் அவனுகள‌..." என்று ஒரு மச்சான் செண்டிமென்டலாக‌ சீற.....

"என்னய்யா சொந்தம்?? செத்த வூட்டுக்குக் கூட வராத பயலுகள போய் சொந்தம் கிந்தம்னு சொல்லிக்கிட்டு.." என இன்னொரு மச்சான் டென்ஷனானார்...

ஓர் ஆக்ஷன் சீக்வன்ஸ் மெல்ல உருவெடுக்கத் துவங்க "அமைதியா இருங்கப்பா.... ஆகுறதப் பேசுங்க.... " என்று 'கட்' கொடுத்தார் பெரியப்பா ஒருவர்...அவரே தொடர்ந்து "குருஜி கிட்ட கேக்குறதுதானே... பத்திரம், சாவியெல்லாம் எங்க வெச்சுருப்பாருன்னு.... மை வெச்சு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாறே...." என்று ஓர் அறிவுப் பூர்வமான ஐடியாவை எடுத்து விட்டார்....

"குருஜி வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஐயாவோட ஃபோட்டோ முன்னாடி உக்காந்து நம்பிக்கையா கேளுங்க... யார் கனவுலயாவது வந்து பத்திரம் இருக்குற எடத்த சொல்லுவாறு"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு...." என்றான் இளைய மகன் வேலுராஜன்

" யய்யா... அப்பா கனவுல வந்தாராய்யாஆஆ..." என்று கிழவி கூவினாள்....

"தூங்குற முன்னாலயே இந்தப் பாட்டுச் சத்தத்துல முழிச்சிட்டேனே ஆத்தா...." என்று தருமன் கண்கலங்கினான்.....!!!

அப்போதும் கடும்சத்தமாய் வெளியே விழாக்கோலம் அலறிக்கொண்டுதான் இருந்தது.... "நாசமாப் போறவனுக......" என்று ஆரம்பித்து விழா அமைப்பினரையும்... விழா நாயகர்களையும் ஒட்டுமொத்தமாய் சபித்துத் தள்ளினாள் கிழவி.....

ரெண்டு நொடி அமைதியாய் ஏதோ நினைத்த தருமன்... வெகுண்டெழுந்தான்....

"ஒருபயலும் வேணாம்... நானே போறேன்.... எண்ணி ரெண்டே நாளு... அதுக்குள்ள பத்திரத்தக் கிரயம் பண்ணுறோம்.... அதுக்குள்ள அந்த வீட்டுல இருக்குறவனெல்லாம் தலதெறிக்க ஓட விடுறேன்.... யாருகிட்ட சொல்லி, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குந் தெரியும்...." என்று தருமன் வெடித்துக் கிளம்பினான்....

அவன் கிளம்பும் முன்னமே.... உள் அறையிலிருந்து ஈனஸ்ருதியில் ஓர் ஒலி வந்தது... "வேணாம் தருமா... வேணாம் ராசா....பழியெல்லாம் உங்கப்பாவோட போவ‌ட்டும்... வீட்டுல இருக்குறவுகள‌ அடிச்சு விரட்டித் தெருவுல நிக்கவெச்சு அவங்க வாயில வுழ வேணாம்யா....யாரு வாயிலும் வுழ வேணாம்யா... இனிமேலும் வேணாம்யா ஏச்சும் பேச்சும்..." திடீரென்று அழத்துவங்கினார் தருமனின் தாய் சீதம்மா....

வெடித்துக் கிளம்பிய‌ தருமனின் காதில்வந்து விழுந்தது தாயின் விம்மல்.....

வேறுசில தொழில்களும் செய்திருந்தாலும் சாதாரண ராசய்யாவாக இருந்தவர் ஊர் போற்றும் ராசய்யா_____ஆக மாறியது என்னவோ வட்டிக் கொடுத்து பிழைக்க ஆரம்பித்த பின்புதான்... நிலத்தின்பேரில் கொடுக்கப்பட்ட சில வட்டிக் கடன்கள் அசலைப் பணமாய் அன்றி நிலமாகவே திருப்பிப் பெற்றுத்தந்தன‌.... வராக் கடன்களை வசூலிக்க அவர் மேற்கொண்ட சில காரியங்கள் கல்லடிபடாத ராசய்யாவுக்கு சொல்லடிகள் வாங்கிக்கொடுத்தன... கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க சுனாமிபோல் வந்து சூழ்ந்த‌ சுற்றமும் நட்பும், உச்சவரம்பை மீறிய சொத்துகளுக்கு பினாமிகளாய் மாறின‌.... வளர்பிறையெல்லாம் முடிந்து கோர்ட்டு கேஸ் என்று தேய்பிறை துவங்க "பாவம்....ந‌ல்லா வாழ்ந்த குடும்பம்" என்று ராசய்யாவின் இறந்தவீட்டில் வந்தவர்கள் சிலர் 'உச்' கொட்டும் அளவுக்கு ராசய்ய தலைவிழும் முன்னே செழித்துக் கொழித்த காலமெல்லாம் இறந்தகாலாமாகிப் போனது...... பத்திரங்களைக் கைப்பற்றி பிரச்னைக்குரிய வீடுகளையெல்லாம் விற்றே தீர வேண்டிய பொருளாதார நிர்பந்தத்தில் இப்போது மூத்தவன் தருமன்....

பலபேர் வாயில் விழுந்து சாபங்களைக் கட்டிக் கொண்டதன் பலன்தான் இப்படி ஊர்போற்ற வாழ்ந்த வீடு தூண் விழுந்து கிடப்பதாகப் பலரும் காதுபடவே பேசினார்கள் இறந்த வீட்டில்.... சீதாம்மாளின் நம்பிக்கையும் இதுதான்.... நல்ல பணம், கெட்ட பணம், பாவப்பட்ட பணம் என்றெல்லாம் பணத்தில் வகையுண்டு என்று இன்றும் ஸ்திரமாக நம்பும் பழி பாவத்துக்கு அஞ்சும் குடும்பத்தலைவி சீதாம்மாள்....

சீதாம்மாளின் அழுகை மற்றும் மூணாம் கிளாஸ், நாலாம் கிளாஸில் எப்போதோ வாத்தியார்கள் சொல்லக் கேள்விப் பட்டிருந்த‌ நியாயம், தர்மம் போன்றவை சார்ந்த உணர்வுகள் எல்லாம் சின்ன வேகத்தடை போட்டாலும் பொங்கிவந்த வேகமும் கோபமும் குறையுமுன்னமே சீற்றத்தோடு கிளம்பினான் தருமன்..... செல்ஃபோனில் யாரையோ அழைத்து காட்டமான சில காரியங்களை செய்துமுடிக்கும் வியூகங்களோடு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.... சீதம்மாளுடன் சேர்ந்து "வேணாம் ராசா...." என்று கோரஸ் போட்ட அவன் வீட்டுப் பெண்களின் ஓலம் வண்டியைக் கிளப்பிச் செல்லும்வரை அவன் காதில் விழந்துகொண்டுதான் இருந்தது.....

தூக்கம் விழித்த குழந்தைபோல விசும்பிக்கொண்டிருந்தது வானம்..... முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கிக்கிடந்த தண்ணீரும் சுற்றிச் சூழுந்துள்ள சகதிக்கும் நடுவே விடாது ஹார்ன் அடித்து.... கிடைக்கும் சந்தடியில் நுழைந்து செல்ல‌ வாகனங்கள் போராடிக்கொண்டிருந்த‌ சூழல், அதே சாலையில் வண்டிக்குள் சூடாய் அமர்ந்திருக்கும் தருமனுக்கு இன்னும் கொஞ்சம் வெறியேற்றுவதாய் இருந்தது.... வழிநெடுக ஸ்பீக்கர்கள் அலறவிடப் பட்டிருக்கின்றன‌... மழைமேகம் சூழ்ந்து வானம் கொஞ்சம் கறுத்துவிட்டதாம், ஸோ மதியம் மூணு மணிக்கே ரோட்டின் ஓரங்களில் நட்டுவைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை ஒளிர வைத்துவிட்டார்கள்..... மழைபெய்யும் நேரம் ஓபன் லைனில் கரண்ட் எடுத்து லைட்டு களை எறிய வைத்திருந்தார்கள்..... ஷாக் அடித்து செத்தால் அவர்கள் தலைவனுக்கா நஷ்டம் என்று வழிநெடுக மக்கள் கூட்டம் மண்டையிலடித்துக் கொண்டு சென்றது...... அதே தலைவர் தன் காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு "ஙே" என்று பல்லைக்காட்டி சிரித்தவாறு போஸ் கொடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட க்ளோஸ் அப் ஷாட் ஃபோட்டோவை கிட்டத்தட்ட இருபதடி உயரத்தில் ஃப்ளக்ஸ் போர்டாகக் கட்டிக்கொண்டிருந்ததில் பேருந்து ஒன்று செல்ல முடியாமல் நிற்க.... ரோட்டில் டிராஃபிக் ஜாம்....

டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட தருமனின் மனதில் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் நினைவுகளும் அலையடித்த வண்ணமிருந்தன ... உடனிருந்த மச்சான்கள் இறுக்கமாய் அமர்ந்திருக்க.... தருமனின் காதில் இன்னும் "வேணாம் தருமா..." என்று சாபத்துக்கு அஞ்சிய‌ சீதம்மாளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் தந்தை வாங்கிக்கட்டிக் கொண்ட சாபங்களும் அடுத்தடுத்து காட்சிமாறிய வாழ்க்கையும்கூட மனதில் வேகமாய் ஓடியது......அதேநேரம் அந்த வீட்டில் குடியிருப்பவர்களை இன்றே அடித்துத் துரத்தும் வெறியும் குறைவின்றி எக்காளமிட்டது....

விழா நாயகர் தலைவருக்கு ஒருபுறம் சிங்கிள் போஸ்... மறுபுறம் அவர் ஃபேமிலி ஃபோட்டோ...இன்னொருபுறம் ஒரு சிங்கத்தின் உடலில் அதன் தலைக்குப் பதிலாக தலைவரின் தலையை மார்ஃபிங் செய்து ஒன்று என்று ஃப்ளக்ஸ்களாக அடுக்கி வைத்திருந்தார்கள் உயிரினும் மேலான தொண்டர்கள்... வைப்பரை இயக்குமளவு இப்பொழுது மழை பெய்தது.... இந்த அரசியல் அலப்பறைகளால் இடர்பட்டுக் கிடக்கும் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டு நனையத் துவங்கிய மக்கள் எல்லாரும் கடுப்பில் நெழியத்துவங்கினார்கள்....

வெறுப்பின் உச்சத்தில் வேக ஆரம்பித்த தருமன் காரின் ஜன்னலைக் கீழே இறக்கினான்.... காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தத்தையும் தாண்டித் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது பொதுஜனம்... டிராஃபிக் போலீஸ் படாதபாடுபட்டு அந்த பஸ்ஸை ஒருவழியாக நகர்த்த... டிராஃபிக் ஜாம் மெல்லக் கலையத் துவங்கியது..... இங்கு கலவரமே நடந்து ஓய்ந்தாலும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ரோட்டு ஓரங்களில் தலைவரின் மனைவியின் ஆளுயரப் போஸ்டர் ஒன்றில் கோந்து தடவி அவர் படத்தைச் சுவரில் நிறக வைத்து ஆறுபேர் சேர்ந்து தேய் தேய் என்று தேய்த்து ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்..... கூட்டம் கலைந்து, போவோர் வருவோர் எல்லாருமே தலைவர் "ஙே" என்று சிரிக்கும் அந்த பிரம்மாண்ட கட்‍‍‍=அவுட்டைப் பார்த்து மண்ணை வாறி தூற்றாத குறையாய் சபித்துச் சென்றனர்.....

வண்டி நகர ஆரம்பித்தவுடனே ஜன்னலை மூடிய தருமன் மெலிதாக சிரித்தான்... "ஏன்டா...இவனுகள‌ ஊரே சபிக்குது...ஆனா எவனுக்கு என்ன ஆகியிருக்கு?? யாரோ ரெண்டு பேர் சாபத்துல நான் அழியப்போறேன்னு பயப்படுறாளே என் ஆத்தா!!!.." என்று சொல்லி "வேகமா விடுறா வண்டிய..." என்று ஓங்கி முழங்கினான் தருமன்.... சீதம்மாளின் அழுகுரல் இப்பொழுது அவன் காதில் ஒலிக்கவில்லை.....

சாபங்கள் பலிப்பதில்லை???!!!! :-)