ஒரு பாரதியார் பாடல்!!

"வறுமையின் நிறம் சிவப்பு" எனும் அற்புதமான திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இதமான பாரதியாரின் காதல் கானம்!!"தீர்த்தக் கரையினிலே...ஷெண்பகத்தோட்டத்திலே.." என சுகமான வ‌ரிக‌ளை.... வார்த்தைக்கு வலிக்காமல் ராகம் அமைத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்...

பாடல் வரிகள் பின்வருமாறு...

"தீர்த்தக் கரையினிலே தெற்குமூலையில்
ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் ‍‍‍, அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி..பார்த்த‌விட‌த்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி...ஆஆ... பாவை தெரியுதடி...


மேனி கொதிக்குத‌டி த‌லை சுற்றியே..வேத‌னை செய்குத‌டி..
வானில் இட‌த்தையெல்லாம் இந்த‌ வெண்ணிலா வ‌ந்து த‌ழுவுதுபார்
மோனத்திருக்குதடி
இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே..
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ!!!"

இந்த‌ப் பாட‌லை ராக‌த்தோடு Download செய்வ‌தற்கான‌ இணைப்பை விரைவில் இங்கு வ‌ழ‌ங்க‌ முய‌ற்சிக்கிறேன்...

தொட‌ர்ந்து என‌க்குப் பிடித்த‌ பாட‌ல்க‌ளை இங்கு உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விழைகிறேன்...

அடுத்த‌வார‌ம் உங்க‌ளை ச‌ந்திக்கிறேன்...

ந‌ட்புட‌ன்,
பிர‌பு

இலக்கியம்!!

இலக்கியம்.... தங்கவயல் அது...திறந்தவெளித் தங்கவயல்!! காவலெல்லாம் கிடையாது....கைப்பிடித்து வழிகாட்ட சிலருக்கு சிலர் கிடைப்பதுண்டு, வாழும்நாளில் இயன்றவரை அறுத்துக்கொள்ளலாம்...தங்கவயலில் அறுவடை இலவசம்!!...எனினும் இங்கு அறுப்போர் குறைவு!! எனக்குத் தெரிந்தவரை இதுதான் இலக்கியம்!!....."மொழி" யெனும் பயணச்சீட்டு இருந்தால் காகிதவெளியில் உலகையே பவனி வரலாம்...வரலாறும் புவியியலும் சூரியஒளிபடும் மணல்வெளிகளையும் பதிவு செய்யும்...இலக்கியமோ..மனிதத்தடம் பதிந்த மணல்வெளிகளை மட்டுமே பதிவு கொள்ளும்....பதித்துச் செல்லும்!!
"அசோகர் சாலையோரத்தில் மரங்களை நட்டார்" = இது வரலாறு... சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"யோ இலக்கியம்!! மேலோட்டமாய் சொன்னால்...இது உணர்வுகளின் மொழிவடிவம்!! இங்கு என்னையே கூட நான் சந்திக்க நேரலாம்...இன்னொரு பாத்திரத்துக்குள் நானே கூட உயிர் வாழலாம்!! இந்த அதிசியங்கள் வேறெங்கு சாத்தியம்?? மனிதர்கள்....சாதரணமாக நம் கண்ணில் படும் அசைவினங்கள்...ஆனால் மனங்களைப் பார்த்ததுண்டோ?? நாமும்தான் காட்டியதுண்டோ?? மனங்களைப் படிக்கலாம் இங்கு!!
வெகுஜனப் படைப்புகளையும் சாட வேண்டியதில்லை....அவை.. மேல்தோலின் மயிர்க்காலில் பல சாகசங்கள் புரிபவை!! புல்லரிக்க வைக்கும் ரசாயனம் நன்கு அறிந்த பேனா வல்லுநர்கள் மொழிகள் தோறும் ஏராளம்!! அவற்றையும் ரசிக்க வேண்டும்...எனினும் மேல்பரப்பில் சிறிது நேரம் அதிக சுகமின்றி வருடிக்கொடுத்துவிட்டு....விருட்டென்று விரல்களை ஆழத்தில் செலுத்தி இதயப்பரப்பை லேசாகத் தீண்டிவிட்டுக் கொஞ்சமே கொஞ்சம் வலியுடன் எத்தனையோ வாழ்வியல் உண்மைகளை விளங்க வைத்திடும் வல்லமை பெற்ற எழுத்துக்கள், படைப்புகளும் உள்ளனவே அவை உலகுள்ள காலம் வரை எங்கேயோ... யாரேனும் ஒரு மனிதனைப் பாதித்துக் கொண்டுதான் இருக்கும்!! இதயம்தனில் நகக்கீறல் பட்ட கணம்...எவனோ ஒருவனின் வலி நமக்கு வலிக்கும்...அவன் கண்ணீர் நமக்குக் கரிக்கும்!!....அவனது சாயலாய் எத்தனையோ சகமனித மனங்கள் அகத்தால் படிக்கப்பெறும்!! மனங்களைப் படிக்க வாருங்கள்....தங்கவயல் இது...அறுவடை இலவசம்!!!

ச‌க‌ வாச‌க‌ன்,
பிர‌பு.எம்

வணக்கம்!!

அன்பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம்!!
இணைய‌த்தில் த‌மிழில் எழுதிப் ப‌திப்ப‌து ஓர் ஆன‌ந்த‌ அனுப‌வ‌ம்!! இத‌னை சாத்திய‌மாக்கிய‌ அனைத்துத் த‌மிழ்த் தொழில்நுட்ப‌ வ‌ல்லுநர்க‌ளுக்கும், க‌ணிணி பொறியாள‌ர்க‌ளுக்கும் முதலில் என் ந‌ன்றிக‌ள்!!!
"வாச‌க‌ர் தேவை!!" = ஆம்...இதுதான் உண்மையில் என‌க்கும், என் போன்றோருக்கும் முக்கியத் தேவை...தேட‌லும் கூட‌!க‌ல்லூரி நாட்க‌ளில்...மாசற்ற அழகிய வெள்ளைத்தாள்களைப் போல‌ என்னைக் க‌வ‌ர்ந்திழுத்த‌ வேறு பொருள் எதுவும் இல்லை!!...எதையாவ‌து எழுத‌வேண்டும் என்று ஓர் உண‌ர்வு...திடீரென்று, வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதோ...இல்லை ஏதேதோ வேலைக‌ளில் மூழ்கியிருக்கும் போதோ..முக்கிய‌மாக‌த் தூங்கும் போதோ, திடீரென்று ம‌ன‌தைக் கீறிடும் என்ன‌வோ மாதிரியான‌ ஒரு வார்த்தை மின்ன‌ல்!!...அதை எழுத்தில் வ‌டித்திட‌, பதித்திட‌த் துடிக்கையில் வெள்ளைத்தாளின் அழ‌கை, அந்த‌ நிற‌த்தின் சிற‌ப்பை...க‌ண்க‌ள் ர‌சித்து வெறிக்கும்! எந்த‌தூக்க‌த்திலும் விழித்து, தாளில் பேனாவை உர‌ச‌விட்டுவிடுவேன்...ம‌ன‌ அலையைப் ப‌திக்கும் முத‌ல் முய‌ற்சி அது!!காகித‌த்துக்கு வ‌லிக்காம‌ல் என் பேனா தாள்ப்ப‌ரப்புக்கு ச‌ற்று மேலே காற்றில் கிறுக்கும்!...சில நொடிகள்தான் காகித‌த்தில் அக‌ப்ப‌டாமலேயே அந்த‌ மின்ன‌ல் க‌ண்ணெதிரே க‌ரைந்து போகும்...வெள்ளைவெளியில், பேனாமுனையால் ஒரு சிறு பொட்டை ம‌ட்டும் த‌ட‌ய‌மாய் விட்டுவிட்டு!!! நீங்க‌ளும் எழுதுவீர்க‌ளா?? எனில் இது உங்க‌ளுக்கும் மிக‌வும் ப‌ழ‌கிய‌ அனுப‌வ‌மாக‌ இருக்குமே!! ஆம்..இதைத்தான் சொன்னேன்....என‌க்கும், என்னைப்போன்றோருக்கும் பொதுவான‌ தேட‌ல்தான் இது என்று!!
என‌வே எழுதுகிறேன்....மீண்டும் மீண்டும்...அதே த‌லைப்பு தான்....."வாச‌க‌ர் தேவை"!!!!
மென்சிரிப்புட‌ன்,
எம். பிர‌பு!!