செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...
37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! சச்சின் ஒரு சகாப்தம் என்றால் அவருடன் இணையாய்க் கிளம்பிய காம்ப்ளி வெகுசீக்கிரம் மறந்துபோய் விடக் கூடிய ஒரு வரலாறாகிப் போனதற்கு முழுப்பங்கும் அவரையே சாரும்... சச்சினின் கதையைப் போல் காம்ப்ளியின் கதையும் முக்கியத்துவம் வாய்ந்தது... இவர்களின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாடத்தையும் பதிய முனைகிறேன்.....
குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!
ஆரம்பத்தில் தடுமாறினாலும் மிகவிரைவில் சர்வதேச ஆடுகளத்தைப் புரிந்துகொண்டு துடிப்பான இளைஞனாக ஜொலிக்கத் தொடங்கிய காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" சச்சினும் இந்திய அணியின் அப்போதைய ரஜினி-கமல் ஆனார்கள்!! ஆஸ்திரேலியாவிடமும் பாகிஸ்தானிடமும் தவறாமல் மரணஅடி வாங்கும் அன்றைய இந்திய அணியில் ஸ்ரீகாந்துடன் சித்துவோ அல்லது ரவிசாஸ்திரியோ துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவர்... அதிரடி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து களமிறங்குபவர் கேப்டன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட நாட்களாக ஆக்கிரமித்துவந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடமிருந்து சச்சினுக்கு முன்பாகவே பறித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் வலுவான மிடிலஆர்டர் அஸ்திரமாகப் பலமுறை புகழப்பட்டது.... அசார், காம்ப்ளி, மஞ்ச்ரேக்கர் ஆகியோருக்கு அடுத்துக் களமிறங்குவதால் சச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்பது ஓவருக்கு மேலான அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடிந்தது.... அந்த நேரத்தில் இங்கிலாந்திற்கு எதிரான ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று தன் முதல் சதமடித்துக் கலக்கினார் காம்ப்ளி!!
தடதடவென முன்னேறிய காம்ப்ளி சச்சினை மெல்ல மெல்ல ஓவர்டேக் செய்து ஸ்டார் அவதாரம் கிட்டத்தட்ட எடுத்தாகிவிட்ட நாட்களில் சச்சினும் காம்ப்ளியும் பங்குபெறும் பெப்ஸி விளம்பரம் டிவிக்களில் மிகவும் ஹாட்டானது!! ஸ்பின்னர்களை சமாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபாரமான ஃபுட் வொர்க் உலகம் முழுவதும் பிரிசித்து பெற்றுவந்தது... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவரில் காம்ப்ளி அனாயசமாக 22 ரன்களை விளாசித்தள்ளினார்.... 90களில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் பயங்கர சுழல் அஸ்திரம் என்பதையும், அப்போதைய சராசரி ரன்ரேட்கள் 3 அல்லது 4 ஆகத்தான் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்! தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்த காம்ப்ளி கிட்டத்தட்ட சச்சினை முந்திக்கொண்டு அணியில் தனக்கென ஓர் தனி இடத்தை முத்திரை வீரராக ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்....
மறுபுறம் சச்சினுக்கோ தொடர்ந்து சோதனைகள்... அருமையாக ஆடிவந்தாலும் நிலையான ஃபார்ம் இல்லாதது சச்சினுக்குப் பெரும் தலைவலியாக இருந்துவந்தது. பெரும் எதிர்பார்ப்புகளால் கடுமையான அழுத்தத்தையும் அவர் சந்தித்து வந்தார்... இருப்பினும் தன்னம்பிக்கையுடன் தன் தொழிலில் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செயல்பட்டுவந்த சச்சினுக்கு ஒரு நியூசிலாந்து பயணத்தில் நீண்டநாள் காத்திருந்த துவக்க ஆட்டக்காரர் வாய்ப்பு கிடைக்கத் தன்னை முழுமையாக நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்டர் பேட்ஸ்மேன்!! தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த சச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு சதம்கூட அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விமர்சிக்கப் பட்டுவந்த களங்கத்தையும் துடைத்தார், கொழும்புவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் துவக்க ஆட்டக்காரராக இறங்கிய சச்சின் தன் ஒருநாள் போட்டியின் முதல் சதத்தைக் கடந்தார் அந்தப் போட்டியில் 110 ரன்களைக் குவித்திருந்தார்... அடுத்தடுத்து சதங்களைக் குவிக்கத் தொடங்கிய சச்சின் பின்னாளில் உலகில் யாருமே குவித்திராத அளவுக்கு சதங்களைக் குவிப்பார் என்று அந்நாளில் அவரது ரசிகர்களே கூட நினைத்திருக்க மாட்டார்கள்!!
சச்சினின் கவனமும் ஆர்வமும் தொடர்ந்து ரன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த அதேகணம் தங்க நகைகள் அதிகம் அணிந்துகொள்ளும் ஆர்வத்துக்காக சில பத்திரிக்கைகளில் கவர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... விதவிதமான கெட்-அப்களோடு ஆட ஆரம்பித்த காம்ப்ளி ஷார்ட் பால்களுக்குத் (Short ball) தொடர்ந்து இறையாக ஆரம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்கடி மாற்றத் துவங்கிய காம்ப்ளி கல்லி பொஸிஷனில் (Gully Slips) பலமுறைத் தொடர்ந்து தன் விக்கெட்டைப் பறிகொடுத்தும்கூடப் பிரச்னைக்குரிய தன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளவே இல்லை!!
1996ம் ஆண்டு வில்ஸ் உலகக்கோப்பை இந்தியாவில் நடந்தபோது காம்ப்ளி உள்ளிட்டப் பலவீரர்களுக்குத் தெரியாது அது அவர்களின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்று!
தொடரும்......
பி.கு
(சச்சினின் கதை இன்ஸ்பிரேஷன் என்றால் காம்ப்ளியின் கதை நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கைப் பாடம்... திறமை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்தபோதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாயகனாய்ப் மாறிப்போனது துரதிர்ஷ்டம்!! அவர் கதை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஓர் எச்சரிக்கை மணி... சச்சினிடம் do's ஐயும் , காம்ப்ளியிடம் dont's ஐயும் கற்றுக்கொள்ள வேண்டும்!!)
1 comments:
//சச்சினிடம் do's ஐயும் , காம்ப்ளியிடம் dont's ஐயும் கற்றுக்கொள்ள வேண்டும்!//
Excellent. அடுத்தப்பகுதியை சீக்கிரம் போடுங்கள்.
Post a Comment