"நன்று" என முடியும் குறள் - சிறுகதை

"சூரியன் மீதெல்லாம் கோபப் படுறதுல சத்தியமாஅர்த்தம் இல்லடா.... காம்டவுன் டா சுதன்!!"

தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வீறுகொண்டு எழுந்த‌ ஹை வோல்டேஜ் கோபத்துக்கு சடன் பிரேக் அடித்துத் துயில் முறித்தான் சுதன்!! லீவெடுத்துத்தூங்கும் போது ஏழுமணிக்கெல்லாம் சரியா மூஞ்சிலயே குறிவெச்சு வெயிலடித்து எழுப்பிவிட்டதால் சூரியன் மீது பொத்துக்கொண்டு வந்த கடுங்கோபம் அது!!

இந்த வாரத்தில் இதுவரைக் கடந்துள்ள நான்கு நாட்களில் இவ்வாறு சுதன் கட்டுப்படுத்தும் நானூற்று இருபத்து நான்காவது கோபம் இது என்பது பின் குறிப்பு!

வீட்டு சமையலறையில் தங்கை ஷாலினி கோதுமைப் பந்துகளை உருட்டித் தேய்த்துக் கொடுக்க அதைக் கொதிக்கும் எண்ணெயில் காட்டி வீங்கவைத்துப் பூரிகளாகச் சட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் "ஹோம் மேக்கரான" சுதனின் அம்மா!! சுதன் சிரித்தமுகமாய் "ஆ.. இன்னைக்கு பூரியா!!.. உடனே குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி சிரித்துவிட்டுப் போனது கொஞ்சமும் செயற்கையாக இல்லைதான்.... ஆனாலும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.... கோபக்கார அண்ணனின் இன்முகம் பார்த்து இரண்டு நிமிடம் திகைத்துப் போன ஷாலினி , "அடுத்த பூரிக்கு மாவெங்கடி??" என்று அம்மா கதறிய குரல் கேட்டுதான் இயல்பு நிலை அடைந்தாள்!

அமைதியாக பூரி சாப்பிட்டுவிட்டு... "அம்மா நீங்களும் கையோட இப்பவே சாப்பிட்ருங்க..." என்று கணிவாக சொல்லிவிட்டு " பக்கத்தில கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன் மா.... ஷாலினி உனக்கு ஏதோ புக் வாங்கணும்னு சொன்னியே.. என்னன்னு சொல்லு அண்ணன் வாங்கிட்டு வர்றேன்..." அக்கறையாய் கிளம்பிப் போன படு பொறுமையான சுதனைப் பார்க்கவே வியப்பாக இருந்தது அம்மாவுக்கும் ஷாலினிக்கும்!! ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள் ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!!

சுதனுக்கும் தன் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும்.... ஸாரி.... அவன் கஷ்டப்பட்டு ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றங்கள் அவனைச் சுற்றி எல்லோருக்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியாமல் இல்லை...... இனிமேல் தானொரு கோபக்கார சுதன் அல்ல... என்று அறிவிக்காத குறைதான்..... இந்த மாற்றங்களைப் பற்றியெல்லாம் வீட்டில் பேசவேண்டும் என்று சுதனுக்கு ஆசைதான்.... ஆனால்... யாருடன்?

அப்பாவிடம்?? " நோ.... அவர் கோபப்படுவதில் "சீனியர் சுதன்"

சரி.... அம்மாவிடம்?? .... " பேசலாம்தான் ஆனால் இதெல்லாம் அவர்களுக்குப் புரியாது"...

தங்கை....?? . "சே சே...சின்னப் பொண்ணு!!"

இப்படியெல்லாம் அவன் மனது ஒவ்வொருத்தர் பற்றியும் அனுமானம் சொன்னதால் யாரிடமும் பேசவில்லை... அதற்கும் ஒரு கோபம் மனதில் எழ,

" இது அவங்க சுபாவம்டா சுதன்... பொறுமையா போடா.... அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா!!"

என்று அட்வைஸ் பண்ணியது அவனுடன் அதிகம் பேசும் அவன் மனம்!! பொதுவாகவே அவர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்வதில்லை.... இதுவும் முக்கியமான ஒரு பின்குறிப்பு!

சுதனிடம் இந்த மாற்றமெல்லாம் நான்கு நாட்களாகத்தான்.... அதாவது சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பட்ட ஒரு குறிஞ்சிப் பூ மாற்றமிது!!! கடந்த ஞாயிரன்று ஓர் "ஆட்டோகிராஃப்" சந்திப்புக்கு அழைப்பு வந்திருந்தது சுதனுக்குப் பிரிந்து சென்ற தன் பள்ளி நண்பர்களிடமிருந்து!! பள்ளி நண்பர்கள் எல்லாரும் மீண்டும் அதே பள்ளியில் அதே ஆசிரியர்கள் முன்னிலையில் ஒன்று கூடி அந்தநாள் ஞாபகங்களை அசைபோட‌ ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் சுதனின் பள்ளித் தோழர்கள்....

" வர முயற்சி பண்றேன் டா.." தகவல் சொன்ன ஒரு நண்பனிடம் சுதன் இழுக்க......

"டேய்... பிரவீன் எல்லாம் அமெரிக்கால இருந்து வர்றான்டா... நம்மல்லாம் லோக்கல் ல இருந்துட்டே வரலன்னா நல்லா இருக்காதுடா...."

சொன்ன மாத்திரத்தில் சுதன், "அமெரிக்கால இருக்கிறவன் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கான்டா.... உள்ளூர்க்காரனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்..... விடுடா.. நான் முயற்சி பண்ணுறேன்னு சொல்றேன்ல !!" என்று கோபத்தில் ஃபோனை வைத்தேவிட்டான்....

"அமெரிக்கா"..... சுதனுக்குப் பிடிக்காத சில வார்த்தைகளில் அதுவும் ஒன்று!!

நான்கு வருடங்களாக அதே டெலிகாம் கம்பெனியில் அதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை...... நாளொன்றுக்குக் குறைந்தது நாற்பது கிலோமீட்டராவது தன் மோட்டார் பைக்கின் ஆக்ஸலேரேட்டரைத் தொழில் நிமித்தம் திருகும் சுதன் ஒரு கடின உழைப்பாளி.... இப்போது மட்டுமல்ல படிப்பிலும் கூட ஒரு கடுமையாக உழைக்கும் மாணவன்...... கஸ்டமர்களிடம் மட்டும் கோபத்தைக் காட்டமாட்டான்....மற்றபடி உடன் வேலைபார்ப்போருக்குக் கூட ஒரு "டெரர்" இமேஜ் தான் சுதன்மீது..... எங்கிருந்து எகிறி வரும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது ஆனால் கோபம் எறிந்து எழுந்துவிட்டால் கொட்டித்தீர்த்திடத் தெரியும் அவன் நாக்கிற்கு..... அவன் மனது கடந்த பல வருடங்களாக அவனையே " Mr. பெர்ஃபெக்ட்" விருதுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்துவருகின்றது!!

அந்த வெள்ளிக்கிழமை திடீரென எதிர்பாராத ஓர் அங்கீகாரம் அவனது இத்தனை நாள் உழைப்புக்குக் கிடைத்தது...... மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி விலிருந்து நேரே ஏரியா மேனேஜர் போஸ்டுக்குப் ப்ரமோஷன்!!! சம்பளத்திலும் நல்ல முன்னேற்றம்...... சந்தோஷத்தில் நிறைந்த மனது இப்போது ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவர்களின் மறு சங்கமத்திற்கு ஓர் ஏரியா மேனேஜராகச் செல்ல அனுமதித்தது!!

சாதாரணக் கோபங்களுடன்தான் விடிந்தது அன்றைய பொழுது .... பதவி உயர்வு பற்றி சுதன் தன் வீட்டில் சொல்லியிருக்க வில்லை...... ஏதோ புத்துணர்ச்சியோடு அவன் படித்த பள்ளி நோக்கி அன்று தன் ஸ்ப்ளண்டரை இயக்கினான்.... பேக்ரவுண்டில் "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே " என்று பி.ஜி.எம் எஃபெக்ட் எல்லாம் கேட்டது..... பழைய நினைவுகளை வாழ்ந்து பார்க்கும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை அவனிடம்!!!

அற்புதத் தருணமாக இருந்தது அது..... பழைய நண்பர்கள்... அதே இடம்..... ஒரு பொதுத்தேர்வு முடிந்த அன்று மெழுகுவர்த்தி கொளுத்திப் பிரிந்த கூட்டம்...... இன்று மீசை வைத்து அதே இடத்தில் மீண்டும் கூட்டமாய்!!!

கொஞ்சம் நரைத்திருந்தாலும் அதே ஆளுமை செபாஸ்டின் சாரிடம்!! பசங்க ஒவ்வொருத்தரிடமும் சில மாறாத தன்மைகளும் பல மாற்றங்களும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன........

ஒரு வகுப்புக்கு மூன்று "கார்த்திக்"குகள் இருந்தாக வேண்டுமே!! அவர்களின் வகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.... மூன்று மாணவர்களுக்கு ஒரே பெயர் "கார்த்திகேயன்" அதிலும் இருவருக்கு இனிஷியலும் ஒன்றாக அமைந்திருந்தது!! எனவே பட்டப்பெயர் தவிர வேறு வழியில்லாமல் போக...... சில பட்டப்பெயர் திலகங்கள் ஒன்றிணைந்து மூன்று கார்த்திகளுக்கும் அவர்களது உடல் பருமனிற்கேற்பப் பின்வருமாறு பட்டாபிஷேகம் செய்தார்கள்.... கொஞ்சம் ஒல்லியானவன் கார்த்திக் (Thick), ஒரு சுற்றுப் பெருத்தவன் கார்த்திக்கர் (thikcker), மற்றும் ரொம்பப் பெரியவர் கார்த்திக்கெஸ்ட் (Thickest!!)... ...

இப்போது பார்த்தபோது திக்கெஸ்ட் கார்த்திகேயன் வடக்கில் வேலை கிடைத்து சப்பாத்தி புண்ணியத்தில் கொஞ்சம் Thin ஆகியிருந்தார்..... திக்கு க்குத் திருமணமாகி திக்கரை விடக் கொஞ்சம் திக்காகிப் போயிருந்தார்!!! அவர்களுக்கு மாற்றுப் பட்டாபிஷேகங்கள் நடந்தன!!! அவர்களின் சின்னவயது ஹீரோவாக இருந்த செபாஸ்டியன் சார் அட்டெண்டன்ஸ் எடுத்து (!) அசத்தலாக ஓர் உரையாற்றினார்!! தொடர்ந்து பசங்க ஒவ்வொருவராக மேடையேறித் தங்கள் மறக்கமுடியாத பள்ளி நிகழ்வைப் பகிரத்தொடங்கினர்!!!

நடப்பதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு அதிகம் பங்குபெறாமல் இருந்தான் சுதன்.... மாணவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் எல்லாம் ரொம்ப சேட்டைக்காரர்களான ரோமியோ, பாண்டி, விஷ்ணு மற்றும் சிலரே திரும்பத் திரும்ப நினைவுகூறப்பட்டனர்!! நினைவுகூறுமளவு சுதனுக்கே தன்னைப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.... அதுசரி எப்பவுமே தானுண்டு தன் படிப்புண்டு என்றிருந்தால் என்னதான் நினைவிலிருக்கும்..... ஆனால் சுதனை மேற்கோள் காட்டி ஒரு ஃப்ளாஷ் பேக் பகிரப் பட்டது அந்த மேடையில் அவனை அதிகமாக ஆச்சர்யப்படுத்தி.........

சுதனுக்கு அடுத்த ரோல் நம்பர் மாணவன் சுந்தர பாண்டியன்..... சூனா பானா என்று அன்போடு அழைக்கப்படும் இப்போதைய சாஃப்ட் இன்ஞ்சினியரான சுந்தர பாண்டி தன்னுடைய நினைவுகளை சுவையோடு பகிர மேடையேறினார்.....

" நான் வாழ்க்கையில கடைசியா பரிச்சையில காப்பி அடிச்ச சம்பவம் அது!!" என்று ஆரம்பித்த சூனா பானா.....

" ஒரு தமிழ்ப் பரிட்சை.... அதிசியமா நான் நல்லா படிச்சிட்டு வேற போயிருந்தேன்..... நல்லாத்தான் எழுதிட்டு இருந்தேன்.... திருக்குறள் கேள்வி ஒண்ணு வந்திச்சு.... " நன்று" என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக என்று கேட்டிருந்தாங்க.... எனக்குக் கைக்கு எட்டுது ஆனா வாய்க்கு எட்டல..... ஏதோவொரு வேகத்துல முன்னால உக்காந்திருந்த சுதன் கிட்ட அந்தக் குறளைக் காண்பிக்க சொல்லிட்டேன்......

"இனரெறி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

என்கிற திருக்குறள் அது..... படிப்பாளி சுதன் வேகவேகமா எழுதிட்டு இருந்தவன் என்னை சட்டை பண்ணவேயில்லை..... "சுதன், அந்த திருக்குறள் ஸ்டார்ட்டிங் மட்டும் சொல்லுடா" ன்னு நான் தொடர்ந்து நச்சரிக்க...... "வெகுளாமை" கொஞ்சமும் தெரியாத‌ சுதன் வெகுண்டு எழுந்துட்டான்..... "பேப்பரக் குடு உனக்கும் நானே பரிச்சை எழுதித்தறேன்"னு அவன் கோபமாக் கத்த நான் கிழிஞ்சி போய்ட்டேன்!! அந்த நேரம் பாத்து சூப்பர்வைஸ் பண்ணிட்டு இருந்த தமிழ் வாத்தியார் பாத்துட்டாரு....... எல்லாம் முடிஞ்சுபோச்சுனு நினைச்ச நேரம்... அவர் வேகவேகமா ஓடிவந்து "என்னடா பிரச்னை" என்று பதற‌ நான் பயத்துல உண்மய சொல்லி அப்ரூவராகிட்டேன்..... கதை முடிஞ்சிச்சுடானு நான் இருந்த சமயம் அவர் திடீர்னு சிரிச்சுட்டாரு..... சுதனைப் பார்த்து " அடப்பாவி.. "வெகுளாமை நன்று" அப்படின்னு வள்ளுவர் சொன்ன குறளுக்கே இப்படி வெகுண்டு எழுறியே.... கோபத்தைக் குறைசுசுக்கோடா தம்பி... நீ கத்துனதை நம்ம ஹெட் மாஸ்டர் கேட்டுட்டா அப்புறம் எனக்கு இன்ரெறி தோய்ஞ்சுபோகும்டா!!!னு சொல்லி... என்பக்கம் திரும்பி " மவனே.... பரிச்சைல காப்பி அடிக்கக் கூடாதுனு வள்ளுவர் சொல்லியிருக்காரானு தெரியல இன்னொரு தடவ நீ பேசுறத பாத்தேன்....." என்று நாக்கைத் துருத்திக் காட்டிட்டு போயிட்டார்!!!....சத்தியமா சொல்லுறேன் அதுக்கப்புறம் நான் என் வாழ்க்கையில பரிச்சை எழுதும்போது பேசினது கூட கிடையாது..." என்று சொல்லி... "டேய் சுதன்.... உன்னையும் உன் கோபத்தையும் என்னால மறக்கவே முடியாதுடா" என்று சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.... கொஞ்சம் கூட இருக்கம் இல்லாமல் வாய்விட்டு சுதனும் சிரித்தான் மனமாற!!!

தொடர்ந்து எத்தனையோ சந்தோஷப் பரிமாற்றங்கள் அரங்கேற டவுசர் போட்ட காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வோடு.... மனக்கசப்புகளோ.... ஏற்றத்தாழ்வுகளோ கொஞ்சமுமின்றி... பாசமாகக் கண்ணீர்த்துளிகளுடன் ஆரத்தழுவி விடைபெற்றனர் அனைவரும்.... எல்லாருமே ஒரு நிறைவான மகிழ்வுடன் அங்கிருந்து சந்திப்பு முடிந்து கிளம்ப... கொஞ்சம் கலங்கியிருந்த கண்களுடன் சுதனும் தன் பைக்கை எடுக்கப் போனான்........ அவன் பைக்கை எடுக்க வழியில்லாமல் இரண்டு மூன்று சைக்கிள்கள் குறுக்கே நிறுத்தப் பட்டிருந்தன...!!!

அதிசியம்.... சுதனுக்குக் கோபம் வரவில்லை!! அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது....
" நன்று" என முடியும் அந்தக் குறளையும் அந்த நிகழ்வையும் நினைத்துப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டு மெதுவாக அந்த சைக்கிள்களை நகர்த்தி வைத்துவிட்டுத் தன் பைக்கை எடுத்துக் கிளம்பினான்.....

"இனறெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

சுதனுக்கு இந்தத் திருக்குறள் இப்போது நினைவில்லை ஆனால் அன்று பரிட்சையில் தெரியாமல் விழித்த சூனா பானாவுக்கு இன்றுவரை அடிபிறழாமல் நினைவிருப்பதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான்!!

"வெகுளாமை நன்று".... குறளின் இந்தக் கடைசி இரண்டு அடிகளுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிந்தது....." ஹ்ம்ம்ம்ம்..வெகுளின்னா கோபம்.... வெகுளாமை நன்று.... கோபப்படாம இருக்குறது நல்லது!!" மற்ற அடிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.... எவ்வளவோ முயன்றும் "தமிழ்" புரியவில்லை!!

"வள்ளுவருக்கு ஏன் இந்தப் பிடிவாதம்? நல்ல விஷயத்த எழவு புரியுற மாதிரி சொல்லிவெச்சாத்தான் என்னவாம்??!!" வெகுளாமை சொன்ன வள்ளுவரையே எறித்தது சுதனின் வெகுளி!!

"டேய் சுதன்..... டேய்.... இது ரொம்ப டூ மச்டா!! யாரைத் திட்டுற? திருவள்ளுவர்டா... கன்னத்துல போட்டுக்கோ!!"

கரெக்ட் !!... சுதனின் மனது பிரேக் அடித்த வாழ்க்கையின் முதல் கோபம் இதுதான்.... இப்படி ஆரம்பித்துதான் அடுத்த நான்கே நாட்களில் நான்கு செஞ்சுரிகளுக்கும் மேலான கோபத் தீக் கொழுந்துகளை கிடைக்கிற கேப்பில் எல்லாம் உள்புகுந்து ஊதி ஊதி அணைந்து வந்தது சுதனின் மனது!!!

பைக்கை நேரே ஓட்டிக்கொண்டிருக்கும் போது... மனது "கோபம்" எனும் டாபிக் கில் ஒரு பி.ஹெச்.டிக்கே அடிபோட்டுக்கொண்டு வந்தது!!.... "எப்படி நான் "கோபக்காரன்"னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்??" .........."ஏன் எனக்கு இவ்வளவு வேகமா கோபம் வருது???" ......... "
"எப்போ இருந்து நான் இப்படி கோபப் படுறேன்??.... எப்போ எல்லாம் கோபப்படுறேன்??" கேள்விகளில் கவனமிழந்து ஒரு நொடியில் "ஏலேய்... ரோட்டுல வண்டிய ஓட்டுடா" என ஒரு கோபக்குரல் வெளியிலிருந்து காதில் விழ்ந்தது... சுதனைத் தாண்டிச் சென்ற கார் காரனின் கோபம் அது!! " இப்படி மனச வேற எங்கேயோ வெச்சிக்கிட்டு பைக்கைத் தாருமாறா ஓட்டினா திட்டமாட்டானா??!!" முதன்முறையாக அடுத்தவனின் கோணத்திலிருந்தெல்லாம் சிந்தித்து அவன் மனம் அவனையே ஆச்சர்யப் படுத்தியது!!

அப்போது நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்த வலியை சுதன் ஒருகணம் அனுபவித்தான்!!!! ஆம்.... ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு....." யுரேகா.....யுரேகா!!!"

"கோபம் இந்த பாழாய்ப் போன கோபம்..... அடுத்தவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும்போது குறைகிறது..... அந்த குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்கிறபோது கோபம் காணாமலேயே போகிறது!!"

"ஆஹா... சுதன்.... சூப்பர்டா.... கலக்குறியே.... என்ன ஒரு கண்டுபிடிப்பு !!" என்கிற ரீதியில் சுதனின் மனம் சிலாகிக்கத் தொடங்கியது........ இப்படி யோசிக்கும் திற‌ன் அனைவ‌ருக்கும் இருந்தால் உல‌கில் கோப‌மே இருக்காது என‌ எண்ணிக்கொண்டான்!!

இப்போது யோசித்துப் பார்க்கும்போது சுதனின் உலகில் ஜனத்தொகை மிகவும் குறைவாகவே தோன்றியது மனதுக்கு.... அம்மா.... அப்பா.... தங்கை.... இவர்களிடம் இருக்கும் குறைகளை சகித்துக்கொண்டு (!) அந்தக் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொண்டாலே போதும் கோபம் என்னும் தீயினால் தன் வாழ்க்கை இனி புகையாது.... என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான்......

இந்தப் புதிய பதிவியுயர்வு வேலையின் அலைச்சல்களை முற்றிலும் களைந்து விடும்!! எனவே எரிச்சல் இருக்காது... மேலும்.... ஒரு முற்றிலுமான மாற்றம் காட்ட இந்த புதிய ஆரோக்யமானதொரு தொடக்கத்தை மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக‌ உணர்ந்தான் சுதன்!!

அவன் கன்னத்தை அவனே பிடித்து முத்திக்கொள்ளாத குறையாக (!) அடுத்தவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளும் முடிவெடுத்திருந்தான் "Mr. Perfect" சுதன்..... ஒருவாரம் லீவிற்க்குப்பின் புதிய பதவியில் டியூட்டி ஜாயின் செய்தால் போதும்.... நான்கு நாட்களாகிப் போனது...... கொழுந்துவிட்டு எழுந்த எத்தனையோ கோபங்களையெல்லாம் தடுத்து ஒருமுறை கூட வெடித்துச் சிதறாமல் உண்மையிலேயே கவனமாய்க் கச்சிதமாய் தன்னை நிதானமாக நிலை நிறுத்திக் கொண்டான்.....

குறைகள்..... எத்தனைக் குறைகள்.... ஆனால் அதையும் தாண்டி ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது!! இனிமேல் குறைகளைக் கண்ணோக்காமல் அந்த அன்பையே பிரதானப் படுத்திக் கொள்வோம் என்கிற ரேஞ்சில் ஒரு "சுதனானந்தாவாக" அவனையே அறியாமல் மெல்ல அவதாரம் தரித்துக் கொண்டிருந்தான்!!

ருசியாக நேரத்துக்கு சமைத்துப் போடுவதைத் தவிர வேறெதெவுமே அறியாத ஒரு அம்மா தனக்கு இருப்பதனால்தான் சுதனுக்குதான் எத்தனை குறைகள்.... ஆஃபீஸில் நடந்த‌ ஒரு விஷயத்தை சமையலறையில் ஆர அமர பகிர்ந்து கொள்ளமுடிகிறதா......

ஓர் இ‍மெயில் ஐடி இல்லாத கல்லூரி மாணவி அவன் தங்கை..... கோலப்புத்தகம் வாங்கிப் பத்துப் புள்ளிக் கோலம் போட ஃபோன் பன்ணி டிஸ்கஸ் செய்யும் தோழிகளை இந்த மாடர்ன் யுகத்தில் எப்படித்தான் அவள் தேடிக் கண்டுபிடித்தாளோ???

மகனுடன் கொஞ்சம் ஃப்ரண்ட்லியாகத்தான் பழகினால் என்ன இந்த அப்பாவுக்கு!! அச்சு அசலாக ஒரு தனுஷ் படத்தில் வரும் அப்பா கேரக்டரைப் பிரதிபலிக்கும் தந்தையாக இருக்கிறாரே!!!

எத்தனை எத்தனை குறைகள்.... அத்தனைக் குறைகளையும் ஏற்றுக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு அன்பாகவே நடந்துகொண்டிருந்தான் இந்த நாட்களில்........

புரமோஷன் விஷயத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தான்..... நேரம் பார்த்து ஜாலியாக சொல்லி சர்ப்ரைஸ் தர நினைத்திருந்தான் சுதன்......

வெள்ளிக்கிழமை....... அன்றைக்கு வாசலில் அட்டகாசமாக ஒரு கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி..... "உங்க அண்ணன் மேனேஜர் ஆகிட்டாருன்னு ஸ்பெஷல் கோலமா!!" அசால்டாகக் கேட்டுவிட்டுப் போனாள் சுதனின் உடன்பணிபுரிபவன் ஒருவனின் த‌ங்கை!! கோல‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் ஷாலினி.... "அம்மா...அம்மா... ந‌ம்ம‌ அண்ண‌னுக்கு...."
சொன்ன‌வாறே உள்ளே குதித்துச் சென்றாள்....

மாலைவீட்டுக்கு வ‌ந்த‌ சுத‌னிடம் எதுவும் தெரியாத‌துபோல்தான் அவ‌னுடைய‌ அம்மா ந‌ட‌ந்துகொண்டார்.... ஷாலினிக்கோ அந்தள‌வு ப‌க்குவ‌ம் கைகூடாம‌ல் கொஞ்ச‌ம் குறும்பாக‌வே சுத‌னிட‌ம் பேசிக்கொண்டிருன்தாள்..... ஏதோ வித்தியாச‌த்தை உண‌ர்ந்து கொண்டிருந்த‌ சுத‌னிட‌ம் ஷாலினி... ம‌றைத்து ம‌றைத்து வைத்திருந்த‌ ஒரு ச‌ந்தோஷ‌ செய்தியைத் த‌ன் influence(!)மூல‌ம் க‌ண்டுபிடித்துவிட்ட‌ பெருமையில் ஹீராயிஸ‌மாக‌ப் ப‌த‌வியுய‌ர்வு விஷ‌ய‌த்தைத் தாங்க‌ள் க‌ண்டுபிடித்துவிட்ட‌தாக‌ அறிவித்தாள் ஷாலினி! ஏதோ ஒரு சந்தோஷ‌த்துக்காக‌, ச‌ர்ப்ரைஸ் த‌ருவ‌த‌ற்காக‌ வைத்திருந்த‌ விஷ‌ய‌ம் லீக் ஆகிவிட்ட‌ ஏமாற்ற‌ம் மெதுவாக‌ கோப‌மாக‌ க‌ண‌ன்ற‌து அவ‌னுக்குள்..... த‌ன் அண்ண‌னுக்குள் ஏற்ப‌ட்டிருந்த‌ த‌லைகீழ் மாற்ற‌ங்க‌ளுக் கெல்லாம் இந்த‌ப் ப‌த‌வியுய‌ர்வுதான் கார‌ண‌ம் என்கிற‌ ரீதியில் ஷாலினி க‌மெண்ட் அடிக்க‌ வீட்டில் எல்லாரும் சிரிக்க‌(ச‌ந்தோஷ‌மாக‌த்தான்!) சுத‌னால் இம்முறைக் கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வே முடிய‌வில்லை.... வெடித்து சித‌றிவிட்டான் ஒருவார‌ம் இன்முக‌ம் காட்டிய‌ த‌ன் அண்ண‌ன் த‌ன்முக‌ம் காட்டிய‌தில் ப‌ய‌ந்தே போய்விட்டாள் ஷாலினி.... யாருமே எதிர்பார்த்திருக்க‌வில்லை சுத‌னின் கோப‌த்தை எத‌ற்குக் கோப‌ப்ப‌டுகிறான் என்ப‌தையும் யாரும் புரிந்திருக்க‌ வாய்ப்பில்லை... வ‌ழ‌க்க‌ம் போல் கோப‌த்தில் வார்த்தைக‌ளில் அமில‌ம் தெளித்து கொட்டித் தீர்த்த‌ ச‌த்த‌த்தில் வீட்டுச் சுவ‌ரின் காரைக‌ள் பெய‌ர்ந்திருக்கும்..... கோப‌த்தின் முடிவில் "விர்ர்ர்ர்ர்ர்...." என்று பைக் ச‌த்த‌ம் கேட்ட‌து வீட்டு வாச‌லில்.....

கொஞ்ச‌ தூர‌த்தில் ரோட்டோர‌த்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு ம‌ண‌ற்குவிய‌லில் அம‌ர்ந்திருந்தான் சுத‌ன்.... த‌ன் கோப‌த்தைக் கைவிட்ட‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ குறிப்பிட‌த்த‌க்க‌ ஒரு மாற்ற‌ம்.... தானாக‌வே த‌ன்னைப் ப‌ற்றிய‌ ஓர் உண்மையை உண‌ர்ந்து த‌ன்னையே மாற்றிக்கொள்வ‌த‌ன் ம‌க‌த்துவ‌த்தை அறியாத‌ இந்த‌க் கூட்ட‌ம் இங்கு என்னைப் பார்த்து சிரிக்கிற‌தே..... என்று த‌ன் ம‌ன‌திட‌ம் புல‌ம்பினான்.... முன்பு த‌ன் கோப‌த்தைக் கிண்ட‌ல் அடித்திருப்பார்க‌ள் இன்று தான் கோப‌ப்ப‌டாத‌த‌ற்குக் கேலியாய்க் கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்க‌ள்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... இவ‌ர்க‌ளுக்குத் தெரியுமா என் சிந்த‌னையின் ஆழ‌ம்??? இவ‌ர்க‌ளுக்குப் புரியுமா அவ‌ர்க‌ளின் குறைக‌ளோடு அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்வ‌தின் வ‌லி??????

"இதுவும் அவ‌ர்க‌ள‌து குறைதான் என‌ ஏற்றுக்கொள்வோம்" என‌ வேண்டா வெறுப்பாக‌ ம‌ன‌தை அமைதிப் ப‌டுத்திக்கொண்டு வீடு திரும்பினான்....

வீட்டில் நுழைந்தான்.... ஷாலினி ஏதோ ப‌டித்துக் கொண்டிருந்தாள்... அப்பா டிவியில் வ‌ழ‌க்க‌ம்போல் செய்திக‌ள் பார்த்துக் கொண்டிருந்தார்.... அம்மாவுக்கு ச‌மைய‌ல்!! க‌த்திக் குவித்துவிட்டு வீடு திரும்பிய‌ சுத‌ன் வீடு திரும்பிய‌தில் யாரும் புதிதாக‌ எதுவும் காட்டிக்கொள்ளாத‌து ஏனோ சுத‌னுக்கு இப்போது புதிதாக‌ இருந்த‌து!!


"சுத‌ன் வ‌ந்துட்டியா எங்கே ராத்திரி சாப்பாடுக்கு வ‌ந்திடாம‌ போயிடுவியோனு க‌வ‌லைல‌ இருந்தேன்.... பாய‌ச‌ம் ப‌ண்ணியிருக்கேன்யா.... உனக்கு வேலைல‌ ப்ர‌மோஷ‌ன் ஆன‌துக்கு... ஏய் ஷாலினி அண்ண‌னுக்கு ஒரு ட‌ம்ள‌ர் எடுத்துட்டுவா..... "

என்று ச‌க‌ஜ‌ம் காட்டிய‌ அம்மாவிட‌ம் மெல்ல‌ சென்று... "அம்மா.... நான் கோப‌ப்ப‌ட்டு இப்ப‌டி க‌த்தி ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணிட்டுப் போய் வ‌ந்திருக்கேன்... ஆனா நீங்க‌... நீங்க‌...எப்ப‌டி இவ்ளோ ச‌க‌ஜ‌மா.... என‌க்கு ஒண்ணும் புரிய‌ல‌ மா...." முத‌ன்முறையாக‌ வாழ்க்கையில் இப்ப‌டியெல்லாம் கேள்வி கேட்கிறான் சுத‌ன்.....

"இதுல‌ என்ன‌ய்யா இருக்கு.... ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு குண‌ம்... உன‌க்குக் கோப‌க்கார‌ சுபாவ‌ம்.... வீட்டுக்குள்ள‌ எல்லார் சுபாவ‌த்தையும் ப‌ழ‌கிட்டுப் போறதுதானே..... நீ சீக்கிர‌மா சூடு ஆறுற‌துக்குள்ள‌ அந்த‌ப் பாய‌ச‌த்த‌க் குடிச்சிடுப்பா.."

என்று சொல்லிவிட்டு சென்றார் சாதார‌ண‌மாக‌......

"ந‌ன்று" என‌ முடியும் குற‌ளுக்கு இன்னும் முழுமையாக‌ அர்த்த‌ம் தெரிய‌வில்லை சுத‌னுக்கு.... ஆனால் புரிந்த‌வ‌ரைப் போதுமான‌தாகத் தோன்றிய‌து இப்பொழுது..

"வெகுளாமை ந‌ன்று!!"

பிர‌பு. எம்

1 comments:

Anonymous said...

The story is beautifully written Prabu. you have very nicely and smartly played with Sutan's Cycological and emotional changes that keep the heat on till the end. I kept laughing all the way through and I couldn't stop myself reading.. I t was so interesting. YOu kept the comcept roll oaround the Thirulural I would say end part of the thiryukural that's great.:)

But I was little disappointed at the end. Probably I am used to the beautiful, interesting and twisted ends of your stories. I expected in this story that at the end again you will have a play with Sutan's emotions when his mother says "everybody have a unique character, and I also have one that is keeping my pace with other's emotions and adjusting to them". at that time I felt Sutan will check his perfection thinking he is not only the person who adjusts with others. Where in his mother herself is a very good example of this particular Thirukural. Though he didn't understand the Thirukural completely, I thought he would ultimately realize in his mother the following saying-

"Save thy soul from burning Ire
Thought tortured like the touch of fire"

It is the equivalent saying in English for this thirukural in English.

I am sure there is another way to interpret this story - in simple words Sutan has just taken the first step towards the change - and he would have been perfect [which he assumes to be now] if he would have understood this Thirukural.

Whatever the interpretation is again I feel the end should have been more interesting. I feel something was missing at the end.

Hats of to your writing. It is really enjoying. Keep writing.

Taj :)

Post a Comment