சென்ற இடுகையின் தொடர்ச்சி....
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சச்சின், காம்ப்ளியின் சொந்த மண்ணாம் வான்கடே மைதானத்தில்... இந்தியா தோல்வியடைந்த இந்தப் போட்டியில் சச்சின் கடுமையாகப் போராடி 90ரன்கள் குவித்தார் காம்ப்ளியோ டக்-அவுட் ஆகிவிட்டு அலட்சியமாகப் பெவிலியன் திரும்பினார்.... கடும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிகப்படியான விமர்சனத்துக்குத் தினம் ஆளாகிவந்த காம்ப்ளி தான் ஒரு சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போலக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தது தேர்வுக் குழுவினரைக் கூட எரிச்சலுக்குள்ளாக்கியது... ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....
அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வரலாற்றின் கருப்புதினமாக, இலங்கைக் கெதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தைப் பதிவுசெய்தது.... இந்தியா வெறும் 120 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கடுப்படைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட, காம்ப்ளி கண்ணீர் சிந்தி அழுதவாறே மைதானத்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்வியடைந்தது.... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இத்தனை பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதைத் தொடர்ந்து கடுமையான சில முடிவுகளைத் தேர்வுக்குழு எடுக்கத் தயாரானது.... "குட் ஸ்டூடண்ட்" ஆக எல்லார் நன்மதிப்புகளையும் பெற்றிருந்த "நம்பிக்கை நட்சத்திரம்" சச்சின் அணியின் கேப்டன் ஆனார்... அனைத்துத் தரப்பினரின் கோபம் மட்டும் அவநம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த காம்ப்ளி அணியிலிருந்தே நீக்கப்பட்டார்...
அந்த சூழ்நிலையில் கூட விழித்துக்கொண்டு உத்வேகத்துடன் செயல்பட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வந்திருக்கலாம் ஆனால் அவரோ ஃபோர் ஸ்க்யர், செவன் அப் என விளம்பரங்களில் தன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அலட்சியத்தின் மொத்த உருவாகிப் போன காம்ப்ளிக்குக் கடைசிவரைக் கைகொடுத்தது உண்மை நண்பனாக இருந்த சச்சின்தான். காம்ப்ளிக்காகத் தொடர்ந்து போராடி மீண்டும் அணியில் இடம் வாங்கிக் கொடுத்தார்... பலனில்லை... பின்னொரு கட்டத்தில் காம்ப்ளி பழைய சேட்டைகளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான ஆட்டக்காரராக சச்சின் கொடுத்த தைரியத்தில் அணியில் இண்டிபெண்டன்ஸ் கப், சஹாரா கப், பாகிஸ்தான் பயணம் என வந்துகொண்டிருந்த போது... துரதிர்ஷ்டவசமாக ஓர் ஆட்டத்தில் பந்தைத் தடுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துடன் முடிந்துபோனது அவரது கிரிக்கெட் வாழ்க்கை.... கங்குலி, டிராவிட், ராபின் சிங் என இவர் இடத்துக்கு வந்தவர்கள் தொழிலில் மிகுந்த சிரத்தையாகத் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளக் காம்ப்ளியோ தன் ஒழுங்கீன நடவடிக்கைகளால் அற்புதமான திறமையையும், கடின உழைப்பையும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், நண்பன் சச்சின் கடைசிவரை கொடுத்த ஊக்கத்தையும் எல்லாவற்றவையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவங்கி அந்த விழாவிலேயே தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவதாக எவ்விதப் பரபரப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!
ஒரு தோற்றுப்போன ஒருவனைப் பற்றி, ஒரு சாதாரணப் பெட்டிச் செய்தியை எதற்கு இவ்வளவு விரிவாக எழுதவேண்டும் என்று நிச்சியம் தோன்றலாம்... அதற்கான காரணம்.... நம்மிடையே ஓரிரு சச்சின்களைத் தான் காணமுடியும் ஆனால் கிட்டத்தட்ட நம் எல்லோருக்குள்ளுமே எண்ணற்ற வினோத் காம்ப்ளிகள் இருக்கிறார்கள்.... வாழ்வில், இலக்கில் கவனமின்றி, சின்னச் சின்னக் களிப்புகளில் கவனமிழந்து நம்முன் நாமே வைத்து நடக்கத் துவங்கிய இலக்கு நோக்கிய பயணங்களில் பிசகும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க வேண்டிய விளையாட்டு வீரர் நமது வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் கதையிலிருந்து பாடம் கற்றுப் பல சச்சின்கள் பல்வேறு துறைகளிலும் உருவாக வேண்டும்.... சுகவாசம் பழகிவிட்டால் வாழ்வில் வனவாசம் வந்தே தீரும் என்று எங்கெருந்தோ மவுன சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....
அவரின் எதிர்கால செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வாழ்த்துவோம்!
பிரபு எம்
4 comments:
சூப்பர்
Thank you Shabi :)
Excellent finishing touch :)
Thank you Karthick..
Post a Comment