" நிறைகுடம் போலப் படம் ஒன்று வந்தால் ரசிகனுக்கு அது சுபதினம்.."
என்று ஒரு பழைய படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்... அதுபோல ஒரு சுபதினம்தான் நம் தமிழ்த் திரையுலகத்துக்கு 2007 ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள் !!
தமிழ்த்திரையின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் அன்று ஒரே நாளில் வெளிவந்தன...
ஒன்று... இயல்பான வியர்வை வாசனையில் செண்ட்டைத் தெளிக்காமல், யதார்த்தத்தையே இன்னும் படு யதார்த்தமாகக் காட்டித் திகைக்க வைத்த "பருத்திவீரன்".
இன்னொன்று.. வாழ்க்கையின் அழகை, ஆனந்தத்தை, இயல்பான புன்னகையை இரட்டிப்பாக இனிக்க இனிக்க வழங்கிய "மொழி".
"மொழி"யைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.... அப்போது அவர் ஆனந்த விகடனில் "சொல்லாததும் உண்மை" என்கிற தன் சுயசரிதம் போன்றதொரு தொடரை எழுதிவந்தார்.... அதில் "மொழி" வெளிவந்த வாரத்தில் அவர் சொல்லியிருந்தவை:
"ஒரு காலேஜுக்குப் பேசப் போயிருந்தேன்..... அப்போ அங்கே ஒரு பொண்ணு ஓடிவந்து...' இப்போ இருக்குற சினிமா போஸ்டர்ஸ்ல எல்லா ஹீரோக்களும் அரிவாள்ல ரத்தம் சொட்ட கோபமா முறைக்கிறாங்க, ஹீரோயின்கள் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி போஸ் தர்றாங்க... திரும்புற பக்கமெல்லாம் இந்த மாதிரிதான் போஸ்டர்ஸ், ஹோர்டிங்ஸ் இருக்குது... ஆனா "மொழி" பட போஸ்டர்ல எல்லோருமே மனசு விட்டுச் சிருக்கிறாங்க.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சார்... ஆல் தி பெஸ்ட்' நு சொல்லிட்டுப் போனா...... இருபது வயசு இளைஞர் கூட்டத்தில் ஒருத்தி.... எனக்கு அவளோட சந்தோஷம் பார்க்கப் பிடிச்சிருந்தது!!"
இதைப் படிக்கும்போது நமக்கும் அந்தப் பொண்ணு குறிப்பிடுகிற போஸ்டர் கண்முன் ஞாபகம் வரும்... ஏன்னா "சிரிப்பு" அவ்ளோ அழகான விஷயம்!! "மொழி" யின் போஸ்டர், ஹோர்டிங், விளம்பரங்கள், ஏன் டிவிடி கவர்களைக் கூட, கதாபாத்திரங்களின் இயற்கையான புன்னகைதான் அலங்கரித்திருந்தது..... திரையில் கதாபாத்திரங்கள் கபடின்றி சிரிக்கப் படத்தைப் பார்த்து சென்ற கூட்டமும் இன்முகத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறியது....!
"எனக்குப் படம் பார்த்த மாதிரியே இல்ல... ஏதோ ஒரு புத்தகத்தை ரசிச்சு வாசிச்சு முடிச்ச உணர்வு வந்திச்சு!!"
என்று கூறினான் படத்தைப் பார்த்துவிட்டு ஃபோன் பண்ண என் நண்பன் ஒருவன்!! ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிக்கைகளும், சேனல்களும்கூட கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டே "மொழி"யை விமர்சித்தன.....!!!
நான் "மொழி"யில் வியந்த ஒரு விஷயம்...
சினிமா என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் கூட்டுமுயற்சி... இதன் கேப்டனான இயக்குனரின் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு மற்ற கலைஞர்களும், டெக்னீஷியன்களும் தங்கள் திறமையால் திரைப்படத்துக்கு நயமாக மெருகேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலான விதி... இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கூட்டுமுயற்சியிலும் இது சாத்தியமாக வேண்டுமெனில் இயக்குனரின் கற்பனையானது ஒவ்வொரு கலைஞனின் மனத்திரையில் ஓடும்போதும் அவர் மூளையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் (இதை ஏதோவொரு டிவிடி யில் பார்த்தோமே... என்று ஞாபகப் படுத்தக்கூடாது!! ஹி..ஹி!!) ... அதனை உள்வாங்கிய நொடியில் இசையாய், ஒளியாய் அவரவர் மொழியில் பெயர்த்திட துடித்தால்தான் உண்மையில் அந்த கூட்டுமுயற்சி வெற்றிபெறுவது நியாயம்.... "மொழி"யைப் பொறுத்தவரை அந்த நியதி முழுமையாய் ஒருங்கேறிக் கைகூடியதுதான் வியந்து பார்க்க வைக்கிறது....
"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனுக்கு மொழியே தேவையில்லை..."
ராதாமோகனும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜும் படத்தின் கதையை சொல்லி முடித்ததுமே கவிஞர் வைரமுத்து உதிர்த்த வரிகளாம் இவை..... ராதாமோகன் கற்பனை செய்த, மவுன மொழிபேசும் "அர்ச்சனா"வை அப்போதே அவர் அள்ளி அரவணைத்து தன் தோளில் போட்டுக்கொண்டார் என்றுதானே அர்த்தம்!!
சாதாரணமாகக் காதல் வசனம் பேசும்போதே ஜோதிகாவின் கண்களும் முகமும் நாசியும் அவர் வாயோடு சேர்ந்து தானும் பேசிக்கொண்டிருக்கும்.... எனவே மவுனத்தாலே பேசவேண்டிய கதாபாத்திரத்துக்குள் உடலோடும் உயிரோடும் அவர் கலந்து போனதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.....ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஒரு "காக்க.. காக்க"வும் "சந்திரமுகி"யும் முத்தாய்ப்பாய் இந்த "மொழி"யும் வந்திருக்காவிடில் ஒரு சாதரண அழகிய பப்லி கேர்ளாகவே (Bubbly Girl) சூர்யாவோடு அவர் செட்டிலாகிவிட நேர்ந்திருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்!!
"மியூசிக்" எப்படி இருக்கும்? என்று கேட்டு ஸ்பீக்கர்களில் கைவைத்து அதன் அதிர்வுகளால் "இசை"யை உணரும் ஊமைப் பெண்ணாக அவர் நடித்த அந்தக் காட்சிதான் ஏனோ மனதில் ஒருமுறை வந்துபோனது அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது "முத்தழகி"க்குக் கிடைத்தற்காகக் கை தட்டிக் கொண்டிருந்தபோது!!
பக்கத்து ஸ்டேட்டின் ஆக்ஷன் ஹீரோ, இங்கு ஒரு சின்ன பாக்யராஜாகத் தன்னை செதுக்கிக்கொண்டு மந்தைவெளியில் மணிக்கு அறுபது கி.மீ வேகத்தில் ஓடி அந்த angry dog கிடம் கடி வாங்கும் நாயகன் பிருத்வி..... தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நம்மை லயித்து சிரிக்க வைத்த பிரகாஷ்ராஜ்...... பிருத்விராஜுக்கு சைகை மொழி கற்றுக் கொடுக்கும்போது உண்மையிலேயே அதுபோன்ற ஒரு குழந்தைக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஒரு டீச்சர் போலவே கணிவான உடல்மொழி காட்டிய ஸ்வர்ணமால்யா..... பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமையப் பெற்றிருந்தாலும், ஏதேதோ ஆங்கிள்களில் கேமராவை நகர்த்தி நகர்த்தியே அழகு செய்த குகன்.... வீடுகளையும், ஜோதிகாவின் அறையையும் அந்த அபார்ட்மெண்ட்டையும் ரம்மியமாய் அரங்கமைத்த கதிர்.... மௌனத்தை ஓர் இசையாகவும், இசையை ஒரு மொழியாகவும் ஆராதிக்கும் படத்துக்குத் தேர்ந்த மெட்டுக்களால் இசையமைத்த வித்யாசாகர்... என்று எல்லாருமே அற்புதமான இந்தக் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு ஒருங்கே மெருகேற்றிச் செதுக்கிக் கொடுத்த, நினைவில் நீங்கா செல்லுலாய்ட் கல்வெட்டு, டூயட் மூவீஸ் (கடன் வாங்கி) வழங்கிய இந்த அழகிய "மொழி"!!
பாதசாரிகள் ரோட்டைக் கடக்க ரோடுகளில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைக் கோடுகளை, ஆர்மோனியக் கட்டைகளாய், அதன் இசை கேட்க முடியாத ஜோதிகா உணர்வதும்.... அதே வாத்தியப் பின்னணி இசைக்கு பிருத்வி, பிரகாஷ்,ஸ்வர்ணமால்யா அழகாய் நடனமாடுவதும்.... ஒரு மௌனக் கவிதையாய் "காற்றின் மொழி.." பாடலில் படமாக்கப் பட்டிருக்கும் அந்தக் காட்சி... மேலே சொன்னக் கூட்டு முயற்சிக்கு ஒரு சோறு பதம்!! :)
நான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த "மொழி"யைப் பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்றொரு உணர்வு இருந்துவந்தது... இதோ எழுதிவிட்டேன்..... :) இன்னும் இதுபோல் ரசித்துப் பார்த்த ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கிறது சாத்தியம் இருந்தால் அந்தப் படங்களை சிலாகித்ததையும் பகிர்ந்து கொள்கிறேன்...
அன்புடன்...




