Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts

இது விவசாய நாடல்லவா....!!



இந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி! (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான்!)

சண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம்  நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...

புஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ  மதுரை) வந்துகொண்டிருந்தேன்...  இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...

வீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...!!
.
காற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....

"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல.."

எனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்!!

அப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான்  புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று!!

கிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை,  பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எடுத்தியம்பும்வரை!!

காணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....!

" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா....."

" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே.." (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை!!)

ப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)

" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக??..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்...."

" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே...."

ஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்!!

பேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் "வயலும் வாழ்வும்" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு!! (ஞாபகம் இருக்குதா??!!)

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை"

பொருள்:  உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்
 ஏர்த்தொழிலே சிறந்த்து!!

அன்புடன்,