Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

சச்சினும் ரஹ்மானும்....!!






ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது  இரட்டை சதத்தைப் பார்த்து ரசித்தீர்களா!! :)

ஆஸ்காரையும் தாண்டி ரஹ்மான் கிராமியையும் வென்றதுவந்தது போல இருந்ததா!!!

நமது வாழ்வின் நாயகர்கள் அவர்கள் வாழ்வில் ஜெயிக்கும்போது ஏதோ நாமே ஜெயித்ததைப் போல் உணர்கிறோமே....  துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறோமே....இந்த உணர்வுக்கு.... ஒரு ரசிகனின் இந்த‌ மானசீக உறவிற்குப் பெயர்தான் என்ன!!

இன்றைக்கு சச்சின் ஹெல்மெட்டைக் கழற்றி இருகைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்த தருணத்தில் அவர் வீட்டில் என்னென்ன கொண்டாட்டங்கள் நடந்திருக்கும் என்பதை என் வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன்!! :)

நூற்றைம்பதைக் கடந்தபின்னர் கொஞ்ச நேரத்திலேயே  முதுகை வளைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.... அவரின் முதுகுவலிதான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே!! தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் "ஐயோ" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக!!! இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் "எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது!!" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா???!! :)

"இந்த இரட்டை சதத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு மனதால் உடனிருந்த இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" 

என இன்றைய‌ ஆட்டம் முடிந்ததும் சொன்னாரே சச்சின் அதுதான் இதற்கெல்லாம் பதில்!!!

சாதனைகளை யெல்லாம் மீறிய சாதனையாய் இரட்டை சதமடித்துவிட்டு இன்று அமைதியாய் பரிசுகளையும் பாராட்டுகளையும் அள்ளிச்சென்ற‌ சச்சினும் சரி..... ஆஸ்காரையும், கிராமியையும் அலேக்காக அள்ளிக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து அடுத்த படத்துக்கு ட்யூன் போட்ட‌ ரஹ்மானும் சரி... அவர்கள் வாழ்வில் அவர்கள் உழைத்தார்கள்.... அவர்களே வென்றார்கள்...."அவ்வளவுதான்" என உடனே அடுத்தக் கட்டத்துக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்!!!.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே....  நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா!! அல்லது அவர்களின் கனவுகளை நமது கண்களில் பொருத்திக்கொண்டு தூங்கச் செல்வதாலா!!

சத்தியமாக இது ஒரு நெகடிவ் பதிவல்ல ..... சச்சினும் ரஹ்மானும் என் வாழ்வின் ஆதர்ஷ நாயகர்கள்.... இருவரின் மெல்லிய குரல்கள்..... இணக்கமான உடல்மொழி..... வெற்றிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டும் மாறாத மேன்மை.....சர்ச்சைகளுக்கு சாதனைகளால் பதில் தரும் வீரம்.....வாழ்க்கையில் சிறிதும் அகலாத சீரியஸ்னஸ்..... சிறிதும் பிசகாத வார்த்தைகள்......தொழிலில் விட்டுக்கொடுக்காத சிம்ம‌த்தனம்..... அந்த கம்பீரம்..... தன்னம்பிக்கை..... இன்னும்கூட சொல்லிக்கொண்டே போவேன்...... ஏழு எட்டு வயதில் இவர்களைப் பார்த்து உயர்ந்த புருவங்கள்... இன்றும் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து நிற்கிறது இவர்களின் சிலிர்க்க வைக்கும் சாதனைகளுக்கு!!!

சச்சினையும் ரஹ்மானையும் அவர்களிடமிருக்கும் ஏதோவொன்று இருவரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்து வியக்க வைக்கிறது என்னை!!!

எவ்வளவு உண்டாலும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமென்று.... அடங்காது பசித்துக் கிடக்கும் இந்த சிங்கங்களின் ரசிகன் என்பதையே பெருமிதமாக உணர்கிற அதே சமயம்...." வாழ்வில் எப்போதும் பசித்திரு!!" எனப் பெருங்குரலெடுத்து அதிரும் இவர்களின் கம்பீர கர்ஜனையையும் மனதுக்குள் ஆழ ஒலிப்பதிவு செய்துகொள்வோமாக!!

இந்தவொரு சாதனை உண்மையில் மகத்தானது... 36 வயதில் முழுதும் தானே ஓடி எடுத்த முத்தான ரன்கள் இவை...
சச்சினின் இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கை ஓர் இரட்டை சதத்தால் மீண்டும் புதிதாய்த் தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..... ரசிகர்கள் அனைவருக்கும் தன் சாதனையை அர்ப்பணித்த தலைவன் இருக்கிறான் இன்றும் அப்படியே!!! :)




ரஹ்மானின் பாடலால் சச்சினை வாழ்த்துவோம் "ஜெய் ஹோ!!!!"



அன்புடன்,

இது சேவாக் ஸ்டைல் :-)



"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்...."

இப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும்  அலட்சியமாய்  இடைமறித்து "ஹலோ....சப்ப மேட்டர்..." என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்!!!

டெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்!!)

சச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு "டூப்" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்!!

ஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....

" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்..." என்று,  இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது "வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது" என்று குட்டையைக் குழப்பினார்!!

பொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க்கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி!! நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்!!

எனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் "திமிர்" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய  இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே!!
கேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது!! அதை முன்கூட்டியே அறிவிப்பதில் "தவறு" என்று என்ன இருக்கிறது??

மேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை!!
கேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் "டம்மி பீஸா"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?

 "வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை  வீழ்த்த முடியாது" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி!! (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்!) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!!

 I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

ப்ரியமுடன்,

ஒரே ஒரு சச்சின்..எத்தனை வினோத் காம்ப்ளிகள்?? -- 2



சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி....

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டி ச‌ச்சின், காம்ப்ளியின் சொந்த‌ ம‌ண்ணாம் வான்க‌டே மைதான‌த்தில்... இந்தியா தோல்விய‌டைந்த‌ இந்த‌ப் போட்டியில் ச‌ச்சின் க‌டுமையாக‌ப் போராடி 90ர‌ன்க‌ள் குவித்தார் காம்ப்ளியோ ட‌க்-அவுட் ஆகிவிட்டு அல‌ட்சிய‌மாக‌ப் பெவிலிய‌ன் திரும்பினார்.... க‌டும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிக‌ப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌த்துக்குத் தின‌ம் ஆளாகிவ‌ந்த‌ காம்ப்ளி தான் ஒரு சாதார‌ண‌மான‌ குடும்ப‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர் என்ப‌தையெல்லாம் ம‌ற‌ந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போல‌க் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த‌து தேர்வுக் குழுவின‌ரைக் கூட‌ எரிச்ச‌லுக்குள்ளாக்கிய‌து... ஜிம்பாப்வேக்கு எதிரான‌ ஆட்ட‌த்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....

அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வ‌ர‌லாற்றின் க‌ருப்புதின‌மாக‌, இல‌ங்கைக் கெதிராக‌ ஈட‌ன் கார்ட‌ன் மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆட்ட‌த்தைப் ப‌திவுசெய்த‌து.... இந்தியா வெறும் 120 ர‌ன்க‌ளுக்கு 8 விக்கெட்டுக‌ள் இழ‌ந்த‌ நிலையில் க‌டுப்ப‌டைந்த‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌க‌ளையில் ஈடுப‌ட‌, காம்ப்ளி க‌ண்ணீர் சிந்தி அழுத‌வாறே மைதான‌த்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்விய‌டைந்த‌து.... ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் அர‌ங்கில் இத்த‌னை பெரிய‌ அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌தைத் தொட‌ர்ந்து க‌டுமையான‌ சில‌ முடிவுக‌ளைத் தேர்வுக்குழு எடுக்கத் த‌யாரான‌து.... "குட் ஸ்டூட‌ண்ட்" ஆக‌ எல்லார் ந‌ன்ம‌திப்புக‌ளையும் பெற்றிருந்த‌ "ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்" ச‌ச்சின் அணியின் கேப்ட‌ன் ஆனார்... அனைத்துத் த‌ர‌ப்பின‌ரின் கோப‌ம் ம‌ட்டும் அவ‌ந‌ம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த‌ காம்ப்ளி அணியிலிருந்தே நீக்க‌ப்ப‌ட்டார்...

அந்த‌ சூழ்நிலையில் கூட‌ விழித்துக்கொண்டு உத்வேக‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வ‌ந்திருக்க‌லாம் ஆனால் அவ‌ரோ ஃபோர் ஸ்க்ய‌ர், செவ‌ன் அப் என‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் த‌ன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அல‌ட்சிய‌த்தின் மொத்த‌ உருவாகிப் போன‌ காம்ப்ளிக்குக் க‌டைசிவ‌ரைக் கைகொடுத்த‌து உண்மை ந‌ண்ப‌னாக‌ இருந்த‌ ச‌ச்சின்தான். காம்ப்ளிக்காக‌த் தொட‌ர்ந்து போராடி மீண்டும் அணியில் இட‌ம் வாங்கிக் கொடுத்தார்... ப‌ல‌னில்லை... பின்னொரு க‌ட்ட‌த்தில் காம்ப்ளி ப‌ழைய‌ சேட்டைக‌ளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான‌ ஆட்ட‌க்கார‌ராக‌ ச‌ச்சின் கொடுத்த‌ தைரிய‌த்தில் அணியில் இண்டிபெண்ட‌ன்ஸ் க‌ப், ச‌ஹாரா க‌ப், பாகிஸ்தான் ப‌ய‌ண‌ம் என‌ வ‌ந்துகொண்டிருந்த‌ போது... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ ஓர் ஆட்ட‌த்தில் ப‌ந்தைத் த‌டுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துட‌ன் முடிந்துபோன‌து அவ‌ர‌து கிரிக்கெட் வாழ்க்கை.... க‌ங்குலி, டிராவிட், ராபின் சிங் என‌ இவ‌ர் இட‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொழிலில் மிகுந்த‌ சிர‌த்தையாக‌த் த‌ங்க‌ள் இட‌த்தைத் த‌க்க‌வைத்துக் கொள்ள‌க் காம்ப்ளியோ த‌ன் ஒழுங்கீன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் அற்புத‌மான‌ திற‌மையையும், க‌டின‌ உழைப்பையும், ர‌சிக‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளையும், நண்பன் ச‌ச்சின் க‌டைசிவ‌ரை கொடுத்த‌ ஊக்க‌த்தையும் எல்லாவ‌ற்ற‌வையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவ‌ங்கி அந்த‌ விழாவிலேயே த‌ன் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவ‌தாக‌ எவ்வித‌ப் ப‌ர‌ப‌ர‌ப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!

ஒரு தோற்றுப்போன‌ ஒருவ‌னைப் ப‌ற்றி, ஒரு சாதார‌ண‌ப் பெட்டிச் செய்தியை எத‌ற்கு இவ்வ‌ள‌வு விரிவாக‌ எழுத‌வேண்டும் என்று நிச்சிய‌ம் தோன்றலாம்... அத‌ற்கான‌ கார‌ண‌ம்.... ந‌ம்மிடையே ஓரிரு ச‌ச்சின்க‌ளைத் தான் காண‌முடியும் ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம் எல்லோருக்குள்ளுமே எண்ண‌ற்ற‌ வினோத் காம்ப்ளிக‌ள் இருக்கிறார்க‌ள்.... வாழ்வில், இல‌க்கில் க‌வ‌ன‌மின்றி, சின்ன‌ச் சின்ன‌க் க‌ளிப்புக‌ளில் க‌வ‌ன‌மிழ‌ந்து ந‌ம்முன் நாமே வைத்து நட‌க்க‌த் துவ‌ங்கிய‌ இல‌க்கு நோக்கிய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் பிச‌கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க‌ வேண்டிய‌ விளையாட்டு வீர‌ர் ந‌ம‌து வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் க‌தையிலிருந்து பாட‌ம் க‌ற்றுப் ப‌ல‌ ச‌ச்சின்க‌ள் ப‌ல்வேறு துறைக‌ளிலும் உருவாக‌ வேண்டும்.... சுக‌வாசம் ப‌ழ‌கிவிட்டால் வாழ்வில் வ‌ன‌வாச‌ம் வ‌ந்தே தீரும் என்று எங்கெருந்தோ ம‌வுன‌ சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....

அவ‌ரின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ வாழ்த்துவோம்!

பிர‌பு எம்

ஒரே ஒரு ச‌ச்சின்.. எத்த‌னை வினோத் காம்ப்ளிக‌ள்??



செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...

37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! ச‌ச்சின் ஒரு ச‌காப்த‌ம் என்றால் அவ‌ருட‌ன் இணையாய்க் கிள‌ம்பிய‌ காம்ப்ளி வெகுசீக்கிர‌ம் ம‌ற‌ந்துபோய் விட‌க் கூடிய‌ ஒரு வ‌ர‌லாறாகிப் போன‌த‌ற்கு முழுப்ப‌ங்கும் அவ‌ரையே சாரும்... ச‌ச்சினின் க‌தையைப் போல் காம்ப்ளியின் க‌தையும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து... இவ‌ர்க‌ளின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாட‌த்தையும் ப‌திய‌ முனைகிறேன்.....

குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!

ஆர‌ம்ப‌த்தில் த‌டுமாறினாலும் மிக‌விரைவில் ச‌ர்வ‌தேச‌ ஆடுக‌ள‌த்தைப் புரிந்துகொண்டு துடிப்பான‌ இளைஞ‌னாக‌ ஜொலிக்க‌த் தொட‌ங்கிய‌ காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" ச‌ச்சினும் இந்திய‌ அணியின் அப்போதைய‌ ர‌ஜினி-க‌ம‌ல் ஆனார்க‌ள்!! ஆஸ்திரேலியாவிட‌மும் பாகிஸ்தானிட‌மும் த‌வ‌றாம‌ல் ம‌ர‌ணஅடி வாங்கும் அன்றைய‌ இந்திய‌ அணியில் ஸ்ரீகாந்துட‌ன் சித்துவோ அல்ல‌து ர‌விசாஸ்திரியோ துவ‌க்க‌ ஆட்ட‌க்காரராக‌க் க‌ள‌மிற‌ங்குவ‌ர்... அதிர‌டி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து க‌ள‌மிற‌ங்குப‌வ‌ர் கேப்ட‌ன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட‌ நாட்க‌ளாக‌ ஆக்கிர‌மித்துவ‌ந்த‌ ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரிட‌மிருந்து ச‌ச்சினுக்கு முன்பாக‌வே ப‌றித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை ச‌ரிவிலிருந்து மீட்கும் வ‌லுவான‌ மிடிலஆர்டர் அஸ்திரமாகப் ப‌ல‌முறை புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.... அசார், காம்ப்ளி, ம‌ஞ்ச்ரேக்க‌ர் ஆகியோருக்கு அடுத்துக் க‌ள‌மிற‌ங்குவ‌தால் ச‌ச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்ப‌து ஓவ‌ருக்கு மேலான‌ அதிர‌டி ஆட்ட‌ம் ம‌ட்டுமே ஆட‌ முடிந்தது.... அந்த‌ நேர‌த்தில் இங்கிலாந்திற்கு எதிரான‌ ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று த‌ன் முத‌ல் ச‌த‌ம‌டித்துக் க‌ல‌க்கினார் காம்ப்ளி!!

த‌ட‌த‌ட‌வென‌ முன்னேறிய‌ காம்ப்ளி ச‌ச்சினை மெல்ல‌ மெல்ல‌ ஓவ‌ர்டேக் செய்து ஸ்டார் அவ‌தார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ எடுத்தாகிவிட்ட‌ நாட்க‌ளில் ச‌ச்சினும் காம்ப்ளியும் ப‌ங்குபெறும் பெப்ஸி விள‌ம்பரம் டிவிக்க‌ளில் மிக‌வும் ஹாட்டான‌து!! ஸ்பின்ன‌ர்க‌ளை ச‌மாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபார‌மான‌ ஃபுட் வொர்க் உல‌க‌ம் முழுவ‌தும் பிரிசித்து பெற்றுவ‌ந்த‌து... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவ‌ரில் காம்ப்ளி அனாய‌ச‌மாக‌ 22 ர‌ன்க‌ளை விளாசித்த‌ள்ளினார்.... 90க‌ளில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் ப‌ய‌ங்க‌ர‌ சுழ‌ல் அஸ்திர‌ம் என்ப‌தையும், அப்போதைய‌ ச‌ராச‌ரி ர‌ன்ரேட்க‌ள் 3 அல்ல‌து 4 ஆக‌த்தான் இருக்கும் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்! தொட‌ர்ந்து இர‌ண்டு இர‌ட்டை ச‌த‌ங்க‌ள் அடித்த‌ காம்ப்ளி கிட்ட‌த்த‌ட்ட‌ ச‌ச்சினை முந்திக்கொண்டு அணியில் த‌ன‌க்கென‌ ஓர் த‌னி இட‌த்தை முத்திரை வீர‌ராக‌ ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்ல‌வேண்டும்....

ம‌றுபுற‌ம் ச‌ச்சினுக்கோ தொட‌ர்ந்து சோத‌னைகள்... அருமையாக‌ ஆடிவ‌ந்தாலும் நிலையான‌ ஃபார்ம் இல்லாத‌து ச‌ச்சினுக்குப் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்துவ‌ந்தது. பெரும் எதிர்பார்ப்புக‌ளால் க‌டுமையான‌ அழுத்த‌த்தையும் அவர் ச‌ந்தித்து வ‌ந்தார்... இருப்பினும் த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் த‌ன் தொழிலில் ஆர்வ‌த்துட‌னும் சிர‌த்தையுட‌னும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌ச்சினுக்கு ஒரு நியூசிலாந்து ப‌ய‌ண‌த்தில் நீண்ட‌நாள் காத்திருந்த‌ துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ர் வாய்ப்பு கிடைக்க‌த் த‌ன்னை முழுமையாக‌ நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன்!! தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ஆடிவ‌ந்த‌ ச‌ச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு ச‌தம்கூட‌ அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டுவ‌ந்த‌ க‌ள‌ங்க‌த்தையும் துடைத்தார், கொழும்புவில் ந‌ட‌ந்த‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ராக‌ இற‌ங்கிய‌ ச‌ச்சின் த‌ன் ஒருநாள் போட்டியின் முத‌ல் ச‌த‌த்தைக் க‌ட‌ந்தார் அந்த‌ப் போட்டியில் 110 ர‌ன்க‌ளைக் குவித்திருந்தார்... அடுத்த‌டுத்து ச‌த‌ங்க‌ளைக் குவிக்கத் தொடங்கிய ச‌ச்சின் பின்னாளில் உல‌கில் யாருமே குவித்திராத‌ அள‌வுக்கு ச‌த‌ங்க‌ளைக் குவிப்பார் என்று அந்நாளில் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளே கூட‌ நினைத்திருக்க‌ மாட்டார்க‌ள்!!

ச‌ச்சினின் க‌வன‌மும் ஆர்வ‌மும் தொட‌ர்ந்து ர‌ன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த‌ அதேக‌ண‌ம் த‌ங்க‌ ந‌கைக‌ள் அதிக‌ம் அணிந்துகொள்ளும் ஆர்வ‌த்துக்காக‌ சில‌ ப‌த்திரிக்கைக‌ளில் க‌வ‌ர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... வித‌வித‌மான‌ கெட்-அப்க‌ளோடு ஆட‌ ஆர‌ம்பித்த‌ காம்ப்ளி ஷார்ட் பால்க‌ளுக்குத் (Short ball) தொட‌ர்ந்து இறையாக‌ ஆர‌ம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்க‌டி மாற்ற‌த் துவ‌ங்கிய‌ காம்ப்ளி க‌ல்லி பொஸிஷ‌னில் (Gully Slips) ப‌ல‌முறைத் தொட‌ர்ந்து த‌ன் விக்கெட்டைப் ப‌றிகொடுத்தும்கூட‌ப் பிர‌ச்னைக்குரிய‌ த‌ன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள‌வே இல்லை!!

1996ம் ஆண்டு வில்ஸ் உல‌க‌க்கோப்பை இந்தியாவில் ந‌ட‌ந்த‌போது காம்ப்ளி உள்ளிட்ட‌ப் ப‌ல‌வீர‌ர்க‌ளுக்குத் தெரியாது அது அவ‌ர்க‌ளின் த‌லையெழுத்தையே மாற்ற‌ப் போகிற‌து என்று!


தொட‌ரும்......


பி.கு

(ச‌ச்சினின் க‌தை இன்ஸ்பிரேஷ‌ன் என்றால் காம்ப்ளியின் க‌தை நம் அனைவ‌ருக்கும் ஒரு எச்ச‌ரிக்கைப் பாட‌ம்... திற‌மை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்த‌போதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாய‌க‌னாய்ப் மாறிப்போன‌து துர‌திர்ஷ்ட‌ம்!! அவ‌ர் க‌தை முன்னேற‌த் துடிக்கும் ஒவ்வொரு இளைஞ‌னுக்கும் ஓர் எச்ச‌ரிக்கை ம‌ணி... ச‌ச்சினிட‌ம் do's ஐயும் , காம்ப்ளியிட‌ம் dont's ஐயும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்!!)