ஒரே ஒரு ச‌ச்சின்.. எத்த‌னை வினோத் காம்ப்ளிக‌ள்??



செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...

37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! ச‌ச்சின் ஒரு ச‌காப்த‌ம் என்றால் அவ‌ருட‌ன் இணையாய்க் கிள‌ம்பிய‌ காம்ப்ளி வெகுசீக்கிர‌ம் ம‌ற‌ந்துபோய் விட‌க் கூடிய‌ ஒரு வ‌ர‌லாறாகிப் போன‌த‌ற்கு முழுப்ப‌ங்கும் அவ‌ரையே சாரும்... ச‌ச்சினின் க‌தையைப் போல் காம்ப்ளியின் க‌தையும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து... இவ‌ர்க‌ளின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாட‌த்தையும் ப‌திய‌ முனைகிறேன்.....

குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!

ஆர‌ம்ப‌த்தில் த‌டுமாறினாலும் மிக‌விரைவில் ச‌ர்வ‌தேச‌ ஆடுக‌ள‌த்தைப் புரிந்துகொண்டு துடிப்பான‌ இளைஞ‌னாக‌ ஜொலிக்க‌த் தொட‌ங்கிய‌ காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" ச‌ச்சினும் இந்திய‌ அணியின் அப்போதைய‌ ர‌ஜினி-க‌ம‌ல் ஆனார்க‌ள்!! ஆஸ்திரேலியாவிட‌மும் பாகிஸ்தானிட‌மும் த‌வ‌றாம‌ல் ம‌ர‌ணஅடி வாங்கும் அன்றைய‌ இந்திய‌ அணியில் ஸ்ரீகாந்துட‌ன் சித்துவோ அல்ல‌து ர‌விசாஸ்திரியோ துவ‌க்க‌ ஆட்ட‌க்காரராக‌க் க‌ள‌மிற‌ங்குவ‌ர்... அதிர‌டி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து க‌ள‌மிற‌ங்குப‌வ‌ர் கேப்ட‌ன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட‌ நாட்க‌ளாக‌ ஆக்கிர‌மித்துவ‌ந்த‌ ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரிட‌மிருந்து ச‌ச்சினுக்கு முன்பாக‌வே ப‌றித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை ச‌ரிவிலிருந்து மீட்கும் வ‌லுவான‌ மிடிலஆர்டர் அஸ்திரமாகப் ப‌ல‌முறை புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.... அசார், காம்ப்ளி, ம‌ஞ்ச்ரேக்க‌ர் ஆகியோருக்கு அடுத்துக் க‌ள‌மிற‌ங்குவ‌தால் ச‌ச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்ப‌து ஓவ‌ருக்கு மேலான‌ அதிர‌டி ஆட்ட‌ம் ம‌ட்டுமே ஆட‌ முடிந்தது.... அந்த‌ நேர‌த்தில் இங்கிலாந்திற்கு எதிரான‌ ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று த‌ன் முத‌ல் ச‌த‌ம‌டித்துக் க‌ல‌க்கினார் காம்ப்ளி!!

த‌ட‌த‌ட‌வென‌ முன்னேறிய‌ காம்ப்ளி ச‌ச்சினை மெல்ல‌ மெல்ல‌ ஓவ‌ர்டேக் செய்து ஸ்டார் அவ‌தார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ எடுத்தாகிவிட்ட‌ நாட்க‌ளில் ச‌ச்சினும் காம்ப்ளியும் ப‌ங்குபெறும் பெப்ஸி விள‌ம்பரம் டிவிக்க‌ளில் மிக‌வும் ஹாட்டான‌து!! ஸ்பின்ன‌ர்க‌ளை ச‌மாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபார‌மான‌ ஃபுட் வொர்க் உல‌க‌ம் முழுவ‌தும் பிரிசித்து பெற்றுவ‌ந்த‌து... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவ‌ரில் காம்ப்ளி அனாய‌ச‌மாக‌ 22 ர‌ன்க‌ளை விளாசித்த‌ள்ளினார்.... 90க‌ளில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் ப‌ய‌ங்க‌ர‌ சுழ‌ல் அஸ்திர‌ம் என்ப‌தையும், அப்போதைய‌ ச‌ராச‌ரி ர‌ன்ரேட்க‌ள் 3 அல்ல‌து 4 ஆக‌த்தான் இருக்கும் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்! தொட‌ர்ந்து இர‌ண்டு இர‌ட்டை ச‌த‌ங்க‌ள் அடித்த‌ காம்ப்ளி கிட்ட‌த்த‌ட்ட‌ ச‌ச்சினை முந்திக்கொண்டு அணியில் த‌ன‌க்கென‌ ஓர் த‌னி இட‌த்தை முத்திரை வீர‌ராக‌ ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்ல‌வேண்டும்....

ம‌றுபுற‌ம் ச‌ச்சினுக்கோ தொட‌ர்ந்து சோத‌னைகள்... அருமையாக‌ ஆடிவ‌ந்தாலும் நிலையான‌ ஃபார்ம் இல்லாத‌து ச‌ச்சினுக்குப் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்துவ‌ந்தது. பெரும் எதிர்பார்ப்புக‌ளால் க‌டுமையான‌ அழுத்த‌த்தையும் அவர் ச‌ந்தித்து வ‌ந்தார்... இருப்பினும் த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் த‌ன் தொழிலில் ஆர்வ‌த்துட‌னும் சிர‌த்தையுட‌னும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌ச்சினுக்கு ஒரு நியூசிலாந்து ப‌ய‌ண‌த்தில் நீண்ட‌நாள் காத்திருந்த‌ துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ர் வாய்ப்பு கிடைக்க‌த் த‌ன்னை முழுமையாக‌ நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன்!! தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ஆடிவ‌ந்த‌ ச‌ச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு ச‌தம்கூட‌ அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டுவ‌ந்த‌ க‌ள‌ங்க‌த்தையும் துடைத்தார், கொழும்புவில் ந‌ட‌ந்த‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ராக‌ இற‌ங்கிய‌ ச‌ச்சின் த‌ன் ஒருநாள் போட்டியின் முத‌ல் ச‌த‌த்தைக் க‌ட‌ந்தார் அந்த‌ப் போட்டியில் 110 ர‌ன்க‌ளைக் குவித்திருந்தார்... அடுத்த‌டுத்து ச‌த‌ங்க‌ளைக் குவிக்கத் தொடங்கிய ச‌ச்சின் பின்னாளில் உல‌கில் யாருமே குவித்திராத‌ அள‌வுக்கு ச‌த‌ங்க‌ளைக் குவிப்பார் என்று அந்நாளில் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளே கூட‌ நினைத்திருக்க‌ மாட்டார்க‌ள்!!

ச‌ச்சினின் க‌வன‌மும் ஆர்வ‌மும் தொட‌ர்ந்து ர‌ன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த‌ அதேக‌ண‌ம் த‌ங்க‌ ந‌கைக‌ள் அதிக‌ம் அணிந்துகொள்ளும் ஆர்வ‌த்துக்காக‌ சில‌ ப‌த்திரிக்கைக‌ளில் க‌வ‌ர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... வித‌வித‌மான‌ கெட்-அப்க‌ளோடு ஆட‌ ஆர‌ம்பித்த‌ காம்ப்ளி ஷார்ட் பால்க‌ளுக்குத் (Short ball) தொட‌ர்ந்து இறையாக‌ ஆர‌ம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்க‌டி மாற்ற‌த் துவ‌ங்கிய‌ காம்ப்ளி க‌ல்லி பொஸிஷ‌னில் (Gully Slips) ப‌ல‌முறைத் தொட‌ர்ந்து த‌ன் விக்கெட்டைப் ப‌றிகொடுத்தும்கூட‌ப் பிர‌ச்னைக்குரிய‌ த‌ன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள‌வே இல்லை!!

1996ம் ஆண்டு வில்ஸ் உல‌க‌க்கோப்பை இந்தியாவில் ந‌ட‌ந்த‌போது காம்ப்ளி உள்ளிட்ட‌ப் ப‌ல‌வீர‌ர்க‌ளுக்குத் தெரியாது அது அவ‌ர்க‌ளின் த‌லையெழுத்தையே மாற்ற‌ப் போகிற‌து என்று!


தொட‌ரும்......


பி.கு

(ச‌ச்சினின் க‌தை இன்ஸ்பிரேஷ‌ன் என்றால் காம்ப்ளியின் க‌தை நம் அனைவ‌ருக்கும் ஒரு எச்ச‌ரிக்கைப் பாட‌ம்... திற‌மை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்த‌போதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாய‌க‌னாய்ப் மாறிப்போன‌து துர‌திர்ஷ்ட‌ம்!! அவ‌ர் க‌தை முன்னேற‌த் துடிக்கும் ஒவ்வொரு இளைஞ‌னுக்கும் ஓர் எச்ச‌ரிக்கை ம‌ணி... ச‌ச்சினிட‌ம் do's ஐயும் , காம்ப்ளியிட‌ம் dont's ஐயும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்!!)

ஷாருக்கானின் க‌ச‌ப்பான‌ அமெரிக்க‌ அனுப‌வ‌ம்!


உலகளாவிய பாலிவுட் ரசிகர்களின் "மோஸ்ட் வான்டட் ஹீரோ" ஷாரூக் கான் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டடு சோத‌னைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிறார்!!

விதிகளுக்கு உட்பட்ட சந்தேகக் காரணங்களால் இரண்டாம் கட்ட இமிகிரேஷன் சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டவர்களின் பட்டியலில் ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டமே!! மிகவும் பொதுப்படையான பெயரைக் கொண்டிருப்பதால் இரண்டாம் கட்ட குடியேற்ற சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்பது அமெரிக்க அதிகாரிகளின் விளக்கம்...ஆனால் "இதுவரைத் தன் வாழ்வில் "ஷா ருக்" எனும் பெயரில் வேறு எந்தவொரு மனிதரையும் நான் சந்தித்ததேயில்லை அப்படியிருக்க எப்படிப் பொதுவான பெயராகக் கருத முடியும்?" இது ஷாரூக்கின் வாதம்... பிரச்னை "ஷாரூக்" இல் இல்லை இரண்டாவது பெயர் "கான்" இல் தான் இருந்திருக்கிறது!!!

"என் பெயர் கான்"(My Name is Khan) இதுதான் கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தின் பெய‌ர்.... ஆனால் பாவ‌ம் இவர் பெயர் கான் என்று சந்தேகிக்கப் பட்டதாலேயே இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார் மிஸ்டர். கான்!!

அமெரிக்க அதிகாரிகளைச் சொல்லியும் குற்றமில்லைதான்... அனைத்து விஜயகாந்த் பட வில்லன்களின் பெயரும் அநேகமாகக் "கான்" என்றுதானே முடிந்துத் தொலைக்கிறது!! உல‌க‌ளாவிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ப் போர்க‌ளினால் ஒட்டுமொத்த‌மாக‌ ஒரு ம‌த‌த்தின் பெய‌ரால் ஒரு சமூகமே துன்புறுவ‌து வேத‌னையாக‌ இருந்தாலும் அதற்கான‌ பதிலைப் பாதிக்க‌ப்ப‌டும் பொதும‌க்க‌ள் அந்த ம‌தத்தின் பெய‌ரால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌டும் வ‌ன்முறையாள‌ர்க‌ளிட‌ம்தான் கேட்க‌ முடியும்...

ச‌ரி.. மாட்டிக்கொண்ட‌ ஷாருக்கிடம் வ‌ருவோம்.... ப‌ய‌ண‌ம் செய்த‌ பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான‌ம் ஏற்கென‌வே ஷாரூக்கின் ல‌க்கேஜ்க‌ளைக் கொண்டுவ‌ருவ‌தில் தாம‌த‌ம் நேர்ந்திருக்கிற‌து என‌வே நிச்சிய‌ம் நொந்து நூடுல்ஸாக‌த் தான் இமிகிரேஷ‌னுக்கே சென்றிருப்பார் ஷாருக்... அவ‌ரின் போர்ட்(Boarded) செய்ய‌ப்ப‌ட்ட‌ உட‌மைக‌ள் ம‌ட்டும‌ன்றி ஹேண்ட் ல‌க்கேஜ்க‌ளையும் கூட‌ சோத‌னை செய்திருக்கிறார்க‌ள் அதிகாரிக‌ள்... "நான் ஒரு ந‌டிக‌ன்... இங்கு அட்லாண்டிக் சிட்டியில் ஒரு ஷோ வுக்காக‌த்தான் வ‌ந்திருக்கிறேன்" என்று ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையைச் செய்துகொண்டிருக்கும் போது அப்பாவியாகப் புல‌ம்பியிருக்கிறார் "கிங் கான்"!!

"நான் மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டேன்... மிக‌வும் கோப‌மாக‌வும் எரிச்ச‌லாக‌வும் உண‌ர்ந்தேன்... ந‌ல்ல‌வேளை என் குடும்ப‌த்துட‌ன் நான் வ‌ர‌வில்லை, வ‌ந்திருந்தால் என்னென்ன‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆளாகியிருப்பேனோ!!... சுத‌ந்திர‌ தின‌த்தன்று எனது சுத‌ந்திர‌ இந்தியாவிலேயே நான் இருந்திருக்க‌லாம் போலும்!!" என்றெல்லாம் நொடித்துப் போய் இப்பொழுது முத்துதிர்த்திருக்கும் ஷாருக்... இவ்வாறு ந‌ட‌ப்ப‌து முத‌ன்முறைய‌ல்ல‌ எப்போதுமே அமெரிக்கா செல்லும்போது தான் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆட்ப‌டுவ‌தாக‌வும் முண‌கித் தீர்த்திருக்கிறார்....!!

ஷாரூக்கிற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்....

"அமெரிக்கா செல்லும்போதெல்லாமே நான் க‌டும் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆளாகிறேன்" என்று இப்பொழுது கதறும் பாலிவுட் பாட்ஷா... சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு பூச்சி ம‌ருந்து க‌ல‌ப்பு போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளால் பெப்ஸியை இந்தியாவில் த‌டை செய்ய‌க்கோரி மாண‌வ‌ர்க‌ளும் சுற்றுச்சூழ‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ளும் ஒட்டுமொத்த‌மாகக் கிள‌ர்ந்தெழுந்த‌போது இதே ஷாரூக் கான்,
"பெப்ஸியை இந்தியாவில் த‌டைசெய்தால் நான் அமெரிக்கா சென்று பெப்ஸி பான‌ங்க‌ளைப் ப‌ருகுவேன்!" என்று நிர‌ந்த‌ர பிராண்ட் அம்பாஸிடராக ஆண்டுதோறும் கூலி கொடுத்த‌ அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்காக‌ முந்திக்கொண்டு வ‌ந்து ஜால்ரா அடித்தார்... அடுத்த‌முறை மீண்டும் பெப்ஸிக்குப் பிர‌ச்னை வ‌ந்தால் தங்க‌ள் பெய‌ருக்குப் பின்னால் உள்ள‌ "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்க‌ளா ஷாருக் சார்??!!

டெயில் பீஸ்:

இதே அமெரிக்க‌ விமான‌த‌ள‌த்தில் "மொஹ‌ம‌த் குட்டி" என்ற‌ இய‌ற்பெய‌ர் தாங்கியதால் ந‌ம்ம‌ "த‌ள‌ப‌தி தேவராஜ்" ம‌ம்முட்டியும் இதேபோன்ற‌தொரு அசௌக‌ரிய‌த்துக்கு ஆளாகியிருக்கிறார் ஆனால் அவ‌ர் இதைப் ப‌ற்றி யாரிட‌மும் முணுமுணுத்துக் கொண்டிருக்க‌வில்லை.... உண‌ர்ச்சி வேக‌த்தில் உளறித்தள்ளும் ஷாருக்கைப் பொறுத்த‌வரை யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ஃப்ளாஷ்பேக்கால் சொல்லிழுக்குப் ப‌ட்டு!!

பேருந்துக்குள் வன்முறை


(குறிப்பு: இது நான்குபேர் உருட்டுக்கட்டையுடன் வழிமறித்து வண்டியேறி அட்டகாசம் செய்த வன்முறையல்ல... கதை, திரைக்கதை வசனமெழுதித் திரைத்துறையினருடன் போக்குவரத்துத் துறை இணைந்து வழக்கமாகவே பேருந்துகளில் அரங்கேற்றப்படுகின்ற ஒரு வன்முறை!!)

குடும்ப அலுவலாகச் சென்னை சென்றிருந்தேன்... அங்கிருந்து திரும்ப மதுரைக்கு வர எப்போதும் செல்லும் பிரபல தனியார் டிராவல்ஸின் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.. இதுவரை நான் அந்த டிராவல்ஸின் பஸ்ஸில் பயணித்தது எல்லாமே நள்ளிரவுப் பேருந்துகளில்தான்... அப்போதெல்லாமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இரு இருக்கை வரிசைகளுக்கு இடையே உயரத்தில் அமைதியாகத் தொங்கிக்கொண்டு வந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.... அவர்களது பேருந்துகளில் திரைப்படங்கள் போடுவதில்லைப் போலும் என்று தப்புக் கணக்கு போட்டவனாக எப்போதும் போல் அதே கம்பெனி பஸ்ஸில் இம்முறை மாலை 7 மணி பஸ்ஸில் பயணமானேன்...

இதுவரை சும்மாவே தொங்கிக்கொண்டு வந்தே நான் பார்த்த அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பயணம் ஆரம்பித்த‌ சில நிமிடங்களிலேயே உயிர்பெற்றது... ஓபனிங்கிலேயே பெருங்குரலெடுத்து மிரட்டத்துவங்கிய டிவிப்பொட்டியில் சிம்பு மற்றும் தனுஷ் குத்தாட்டம் போட்ட பாடல்கள் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.... இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமானதாக இருந்தும், சுதந்திர‌ இந்தியாவின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் பெற்ற குடிமகனாகிய நான் எனது சொந்த உரிமைகளின் பேரால் "பார்க்க வேண்டாம்" எனத் தவிர்த்திருந்த திரைப்படங்கள் இவை என்ற காரணத்தினால், இந்தப் பாடல்கள் எனக்குப் புதிதாக இருந்தன....

"சிலம்பாட்டம்" படத்தில் ஒருபாடலில் சிம்பு ஒரு கூட்டத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்... அவ்வப்போது சுற்றி ஆடுபவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சிம்பு மட்டும் நடுவே தனியாவர்த்தண நடனம் (?) செய்வதாகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.... சிம்பு முழங்காலில் நின்றுகொண்டு "வெடுக் வெடுக்" கென எழுந்து நிற்கிறார்.... பின்பு முழங்காலில் நின்றவாறே கைகளைப் பின்பக்கமாகத் தரையில் ஊன்றிக்கொண்டு இப்பொழுது கால்பாதங்களைத் தரையில் பதித்து, மல்லாந்த உடலைக் கை ஊன்றித் தாங்கிக் கொண்டு கால்களை மேலே உதறுகிறார்... பிறகு மீண்டும் "வெடுக் வெடுக்" என எழுந்து அமர்கிறார்.... பின்னணியில் அதிரடிக்கும் குத்தாட்ட இசை வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.... அந்த‌ ந‌ட‌ன‌க்காட்சியை என் ம‌ன‌துக்குள் இசையைத் தவிர்த்து 'ம்யூட்' செய்து பார்க்கையில்.... க‌டுமையான‌ ம‌ல‌ச்சிக்க‌லால் ப‌ல‌ச்சிக்க‌லுக்கு ஆளாகிவிட்ட‌ ஓர் இளைஞ‌ன் காலையில் ஃப்ரீயாக‌ப் போவதற்காக‌ மேற்கொள்ளும் க‌டும் பிர‌ய‌த்த‌ன‌ங்கள் இவை என்று டைட்டில் போட்டுக் காட்டினால் ந‌ம்பும் மாதிரியாக‌ இருந்த‌து!!

இவ்வாறாக‌ செங்க‌ல்ப‌ட்டு தாண்டி எங்கோ ஒரு மோட்டலில் சாப்பாடுக்காக‌ நிறுத்தினார்க‌ள்.... சாப்பிட்டு ஏறிய‌தும் அதே டி.வி மீண்டும் உயிர்பெற்று எழுந்த‌து!
இம்முறை ஒரு திரைப்ப‌ட‌ம்.... க‌லாநிதி மாற‌ன் வ‌ழ‌ங்கும், த‌னுஷ் ந‌டிக்கும் என்று பில்ட‌ப் கொடுத்து "ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தைப் போட்டார் டிரைவ‌ர்.... அடுத்த‌ சில‌ நொடிக‌ளிலேயே புரிந்தது இத்த‌னை நாள் இந்த‌ ப‌ஸ்ஸில் நான் அல‌ட்சிய‌மாக‌ப் பார்த்துவ‌ந்த‌ அந்த‌த் தொலைக்காட்சி இய‌ந்திர‌ம் தூங்கும் ஓர் மிருகம் என்று! அது விழித்துக் கொண்டால் என்னென்ன‌ அவ‌ல‌ங்க‌ளை உருவாக்கும் என்ப‌த‌ற்கு நான் க‌ண்ணால் க‌ண்ட ஒரு சாட்சியானேன்!!

"ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தை நான் பார்த்திருக்க‌வில்லை... ஆனால் அதுவொரு வெற்றிப் ப‌ட‌ம் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... வ‌ன்முறையாக‌ அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தேயாக‌ வேண்டுமென்று நிர்ப‌ந்திக்க‌ப் ப‌ட்ட‌தில் நான் பார்த்த‌வ‌ரை அப்ப‌ட‌த்தில் ச‌த்த‌த்தையும் ர‌த்த‌த்தையும் த‌விர‌ வேறெதுவுமே இல்லை! ஸ்பென்ஸ‌ர் ப்ளாஸாவிலும் ஆந்திராவின் ஒரு ப‌ப்ளிக் மார்க்கெட்டிலும் துப்பாக்கி ம‌ற்றும் வாள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் தாங்கிய‌ இர‌ண்டு ப‌டைக‌ள் பெரும்போர் புரிகின்ற‌ன‌... மூன்று நான்கு ர‌வுடிகளைப் போர்வீர‌ர்க‌ளுட‌னும் அர‌ண்ம‌னையோடும் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள்.... அட‌ எதுக்கு இந்த டுபாக்கூர் ப‌ட‌த்த‌ப் ப‌த்தி இவ்ளோ பேசிக்கிட்டு.... கேவ‌ல‌மான‌ ஒரு குப்பைப் ப‌ட‌ம் பாஸ்.... ப‌ஸ்ஸூக்குள்ள‌ ஏத்தி மூச்சுத் திண‌ற‌த் திண‌ற‌ முழுப் ப‌ட‌த்தையும் போட்டுக்காட்டித் திருச்சி வ‌ரைக்கும் சாவ‌டிச்சுட்டுதான் விட்டாங்க...

இப்போ மேட்ட‌ருக்கு வ‌ர்றேன்....

பேருந்துக‌ளுக்குள் க‌ண்டிப்பாக‌த் திரைப்ப‌ட‌ம் போட‌வேண்டுமா?

இது வியாபார‌ உல‌க‌ம்... ந‌ட‌ந்துகொண்டிருப்ப‌தோ "இல‌வ‌ச‌" யுக‌ம்....
வார‌ இத‌ழ் வாங்கினால் சிம்கார்டு இல‌வ‌ச‌ம்.... காஃபித்தூள் வாங்கினால் பாத்திர‌ம் துல‌க்கும் ஜெல் இல‌வ‌ச‌ம்... ஏன் வோட்டு போடுற‌துக்கு இல‌வ‌ச‌மா ஹாட்கேஷ் (hot cash) கொடுக்கும் அள‌வு வ‌ந்துவிட்ட‌ இந்த‌ உல‌கில் ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் இல‌வ‌ச‌மாக‌ ஒரு ப‌ட‌ம் போடுவ‌து சாதார‌ண‌ம்தான்... ஆனால் கோதுமை ரொட்டி வாங்கினால் ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் இல‌வ‌ச‌ம் என்று கையில் கொடுத்தால் ஓகே... ஆனால் வாங்குப‌வ‌ன் ச‌ர்க்க‌ரை நோயாளியாக‌ இருந்தாலும் கூட‌ கோதுமை ரொட்டி வாங்கிவிட்டாய் என்று இல‌வ‌ச‌ வாழைப்ப‌ழ‌த்தை வ‌ன்முறையாக‌ வாயில் திணித்தால்???... அதுபோன்ற‌தொரு ம‌னித‌ உரிமை மீற‌லாக‌த்தான் என‌க்குத் தெரிகிற‌து பேருந்துக்குள் இப்படி ம‌கா ச‌த்த‌மாக‌ப் ப‌ட‌ம் போட்டு மிர‌ட்டுவ‌து! "உன‌க்குப் பிடிக்குதோ பிடிக்க‌லையோ போடுற ப‌டத்த நீ பாத்துத்தான் ஆகணும்... என்ன‌து தூங்கிடுவியா??...அடீங்க்க‌... ம‌வ‌னே எங்க‌ ஹீரோ ப‌ற‌ந்து பறந்து தாவி... தார‌ த‌ப்ப‌ட்டையெல்லாம் தெறிக்க‌ வில்ல‌னை வ‌த‌ம் செய்யுற‌ ச‌வுண்டு எஃபெக்ட்ல‌ நீ எப்டி டா ராசா தூங்குவ‌!!" என்று க‌ண்ட‌க்டர் க‌லாய்க்காத‌ குறைதான்....

சரி... லீக‌லா ஒரு லா பாயிண்ட்டு வைக்கிறேன்..... எல்லா திரைப்ப‌ட‌ங்களிலும் டைட்டில் கார்டு போடுவ‌த‌ற்கு முன்பாக‌ ச‌ம்பிர‌தாய‌மாக‌ இன்றும் கூட‌ "யு" , "ஏ" , "யுஏ" என்றெல்லாம் சென்சார் போர்டு ச‌ர்டிஃபிகேட்டுக‌ள் போடுகிறார்க‌ள்.... 18 வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று (ஏட்டில் ம‌ட்டும்) சில‌ க‌ட்டுப்பாடுக‌ள் இன்றும் இருக்கிற‌து... அட்லீஸ்ட் இதை வெகுசில‌ வீட்டிலாவ‌து சில‌ பெற்றோர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள்.... இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ ஆபாச‌ம் வ‌ன்முறை என்று எந்த‌க் கட்டுப்பாடும் இல்லாம‌ல் ஏற‌க்குறைய‌ எல்லா ப‌ஸ்ஸிலுமே திருட்டு விசிடிக் க‌ளில் ப‌ட‌ம் போடுகிறார்களே.... ஆபாச‌ போஸ்ட‌ர்க‌ளில் சாய‌ம் அடிக்கும், தியேட்ட‌ர்க‌ளை உடைக்கும் ந‌ம‌து "க‌லாச்சார‌ பாதுகாவ‌ல‌ர்க‌ள்" இதையெல்லாம் க‌ண்ட‌தே இல்லையா???

ப‌ர்ச‌ன‌லாக‌ அன்றைக்கு நான் பேருந்தில் வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விப‌த்தில் ப‌லியான‌ உற‌வின‌ரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வ‌ந்து கொண்டிருந்தேன்... இப்ப‌டிப் ப‌ல‌ரும் ப‌ல‌ க‌வ‌லைக‌ளுட‌னும் நிம்ம‌தியான‌ ஒரு ப‌ய‌ண‌த்தைத் தேடி வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌லாம்... அந்த‌ வேளைக‌ளில் அத்துமீற‌லாக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ம்ப‌டியாக‌த் திணிப்ப‌து என்ன‌ ம‌னிதாபிமான‌மோ தெரிய‌வில்லை.....

பேருந்துக‌ளில் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு இல்லாம‌ல் இருக்க‌ வாத்திய‌ இசை இசைக்க‌லாம்... அல்ல‌து ப‌ய‌னுள்ள‌ சில‌ வீடியோக்க‌ளைக் கூட யாருக்கும் கஷ்டம் தராத வண்ணம் ஒளிப‌ர‌ப்ப‌லாமே.... அட‌... அப்போகூட‌ த‌மிழ‌னுக்கு சினிமாதான் வேணுமா?? அம‌ர‌ர் ஊர்திக‌ளிலும் ஆம்புல‌ன்சிலும் நான் ப‌ய‌ணித்த‌து இல்லை.. அதில் கூட‌ திரைப்ப‌ட‌ம் போடுகிறார்க‌ளா?? தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்க‌ள்...

பிர‌பு. எம்

"நன்று" என முடியும் குறள் - சிறுகதை

"சூரியன் மீதெல்லாம் கோபப் படுறதுல சத்தியமாஅர்த்தம் இல்லடா.... காம்டவுன் டா சுதன்!!"

தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வீறுகொண்டு எழுந்த‌ ஹை வோல்டேஜ் கோபத்துக்கு சடன் பிரேக் அடித்துத் துயில் முறித்தான் சுதன்!! லீவெடுத்துத்தூங்கும் போது ஏழுமணிக்கெல்லாம் சரியா மூஞ்சிலயே குறிவெச்சு வெயிலடித்து எழுப்பிவிட்டதால் சூரியன் மீது பொத்துக்கொண்டு வந்த கடுங்கோபம் அது!!

இந்த வாரத்தில் இதுவரைக் கடந்துள்ள நான்கு நாட்களில் இவ்வாறு சுதன் கட்டுப்படுத்தும் நானூற்று இருபத்து நான்காவது கோபம் இது என்பது பின் குறிப்பு!

வீட்டு சமையலறையில் தங்கை ஷாலினி கோதுமைப் பந்துகளை உருட்டித் தேய்த்துக் கொடுக்க அதைக் கொதிக்கும் எண்ணெயில் காட்டி வீங்கவைத்துப் பூரிகளாகச் சட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் "ஹோம் மேக்கரான" சுதனின் அம்மா!! சுதன் சிரித்தமுகமாய் "ஆ.. இன்னைக்கு பூரியா!!.. உடனே குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி சிரித்துவிட்டுப் போனது கொஞ்சமும் செயற்கையாக இல்லைதான்.... ஆனாலும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.... கோபக்கார அண்ணனின் இன்முகம் பார்த்து இரண்டு நிமிடம் திகைத்துப் போன ஷாலினி , "அடுத்த பூரிக்கு மாவெங்கடி??" என்று அம்மா கதறிய குரல் கேட்டுதான் இயல்பு நிலை அடைந்தாள்!

அமைதியாக பூரி சாப்பிட்டுவிட்டு... "அம்மா நீங்களும் கையோட இப்பவே சாப்பிட்ருங்க..." என்று கணிவாக சொல்லிவிட்டு " பக்கத்தில கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன் மா.... ஷாலினி உனக்கு ஏதோ புக் வாங்கணும்னு சொன்னியே.. என்னன்னு சொல்லு அண்ணன் வாங்கிட்டு வர்றேன்..." அக்கறையாய் கிளம்பிப் போன படு பொறுமையான சுதனைப் பார்க்கவே வியப்பாக இருந்தது அம்மாவுக்கும் ஷாலினிக்கும்!! ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள் ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!!

சுதனுக்கும் தன் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும்.... ஸாரி.... அவன் கஷ்டப்பட்டு ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றங்கள் அவனைச் சுற்றி எல்லோருக்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியாமல் இல்லை...... இனிமேல் தானொரு கோபக்கார சுதன் அல்ல... என்று அறிவிக்காத குறைதான்..... இந்த மாற்றங்களைப் பற்றியெல்லாம் வீட்டில் பேசவேண்டும் என்று சுதனுக்கு ஆசைதான்.... ஆனால்... யாருடன்?

அப்பாவிடம்?? " நோ.... அவர் கோபப்படுவதில் "சீனியர் சுதன்"

சரி.... அம்மாவிடம்?? .... " பேசலாம்தான் ஆனால் இதெல்லாம் அவர்களுக்குப் புரியாது"...

தங்கை....?? . "சே சே...சின்னப் பொண்ணு!!"

இப்படியெல்லாம் அவன் மனது ஒவ்வொருத்தர் பற்றியும் அனுமானம் சொன்னதால் யாரிடமும் பேசவில்லை... அதற்கும் ஒரு கோபம் மனதில் எழ,

" இது அவங்க சுபாவம்டா சுதன்... பொறுமையா போடா.... அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா!!"

என்று அட்வைஸ் பண்ணியது அவனுடன் அதிகம் பேசும் அவன் மனம்!! பொதுவாகவே அவர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்வதில்லை.... இதுவும் முக்கியமான ஒரு பின்குறிப்பு!

சுதனிடம் இந்த மாற்றமெல்லாம் நான்கு நாட்களாகத்தான்.... அதாவது சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பட்ட ஒரு குறிஞ்சிப் பூ மாற்றமிது!!! கடந்த ஞாயிரன்று ஓர் "ஆட்டோகிராஃப்" சந்திப்புக்கு அழைப்பு வந்திருந்தது சுதனுக்குப் பிரிந்து சென்ற தன் பள்ளி நண்பர்களிடமிருந்து!! பள்ளி நண்பர்கள் எல்லாரும் மீண்டும் அதே பள்ளியில் அதே ஆசிரியர்கள் முன்னிலையில் ஒன்று கூடி அந்தநாள் ஞாபகங்களை அசைபோட‌ ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் சுதனின் பள்ளித் தோழர்கள்....

" வர முயற்சி பண்றேன் டா.." தகவல் சொன்ன ஒரு நண்பனிடம் சுதன் இழுக்க......

"டேய்... பிரவீன் எல்லாம் அமெரிக்கால இருந்து வர்றான்டா... நம்மல்லாம் லோக்கல் ல இருந்துட்டே வரலன்னா நல்லா இருக்காதுடா...."

சொன்ன மாத்திரத்தில் சுதன், "அமெரிக்கால இருக்கிறவன் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கான்டா.... உள்ளூர்க்காரனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்..... விடுடா.. நான் முயற்சி பண்ணுறேன்னு சொல்றேன்ல !!" என்று கோபத்தில் ஃபோனை வைத்தேவிட்டான்....

"அமெரிக்கா"..... சுதனுக்குப் பிடிக்காத சில வார்த்தைகளில் அதுவும் ஒன்று!!

நான்கு வருடங்களாக அதே டெலிகாம் கம்பெனியில் அதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை...... நாளொன்றுக்குக் குறைந்தது நாற்பது கிலோமீட்டராவது தன் மோட்டார் பைக்கின் ஆக்ஸலேரேட்டரைத் தொழில் நிமித்தம் திருகும் சுதன் ஒரு கடின உழைப்பாளி.... இப்போது மட்டுமல்ல படிப்பிலும் கூட ஒரு கடுமையாக உழைக்கும் மாணவன்...... கஸ்டமர்களிடம் மட்டும் கோபத்தைக் காட்டமாட்டான்....மற்றபடி உடன் வேலைபார்ப்போருக்குக் கூட ஒரு "டெரர்" இமேஜ் தான் சுதன்மீது..... எங்கிருந்து எகிறி வரும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது ஆனால் கோபம் எறிந்து எழுந்துவிட்டால் கொட்டித்தீர்த்திடத் தெரியும் அவன் நாக்கிற்கு..... அவன் மனது கடந்த பல வருடங்களாக அவனையே " Mr. பெர்ஃபெக்ட்" விருதுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்துவருகின்றது!!

அந்த வெள்ளிக்கிழமை திடீரென எதிர்பாராத ஓர் அங்கீகாரம் அவனது இத்தனை நாள் உழைப்புக்குக் கிடைத்தது...... மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி விலிருந்து நேரே ஏரியா மேனேஜர் போஸ்டுக்குப் ப்ரமோஷன்!!! சம்பளத்திலும் நல்ல முன்னேற்றம்...... சந்தோஷத்தில் நிறைந்த மனது இப்போது ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவர்களின் மறு சங்கமத்திற்கு ஓர் ஏரியா மேனேஜராகச் செல்ல அனுமதித்தது!!

சாதாரணக் கோபங்களுடன்தான் விடிந்தது அன்றைய பொழுது .... பதவி உயர்வு பற்றி சுதன் தன் வீட்டில் சொல்லியிருக்க வில்லை...... ஏதோ புத்துணர்ச்சியோடு அவன் படித்த பள்ளி நோக்கி அன்று தன் ஸ்ப்ளண்டரை இயக்கினான்.... பேக்ரவுண்டில் "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே " என்று பி.ஜி.எம் எஃபெக்ட் எல்லாம் கேட்டது..... பழைய நினைவுகளை வாழ்ந்து பார்க்கும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை அவனிடம்!!!

அற்புதத் தருணமாக இருந்தது அது..... பழைய நண்பர்கள்... அதே இடம்..... ஒரு பொதுத்தேர்வு முடிந்த அன்று மெழுகுவர்த்தி கொளுத்திப் பிரிந்த கூட்டம்...... இன்று மீசை வைத்து அதே இடத்தில் மீண்டும் கூட்டமாய்!!!

கொஞ்சம் நரைத்திருந்தாலும் அதே ஆளுமை செபாஸ்டின் சாரிடம்!! பசங்க ஒவ்வொருத்தரிடமும் சில மாறாத தன்மைகளும் பல மாற்றங்களும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன........

ஒரு வகுப்புக்கு மூன்று "கார்த்திக்"குகள் இருந்தாக வேண்டுமே!! அவர்களின் வகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.... மூன்று மாணவர்களுக்கு ஒரே பெயர் "கார்த்திகேயன்" அதிலும் இருவருக்கு இனிஷியலும் ஒன்றாக அமைந்திருந்தது!! எனவே பட்டப்பெயர் தவிர வேறு வழியில்லாமல் போக...... சில பட்டப்பெயர் திலகங்கள் ஒன்றிணைந்து மூன்று கார்த்திகளுக்கும் அவர்களது உடல் பருமனிற்கேற்பப் பின்வருமாறு பட்டாபிஷேகம் செய்தார்கள்.... கொஞ்சம் ஒல்லியானவன் கார்த்திக் (Thick), ஒரு சுற்றுப் பெருத்தவன் கார்த்திக்கர் (thikcker), மற்றும் ரொம்பப் பெரியவர் கார்த்திக்கெஸ்ட் (Thickest!!)... ...

இப்போது பார்த்தபோது திக்கெஸ்ட் கார்த்திகேயன் வடக்கில் வேலை கிடைத்து சப்பாத்தி புண்ணியத்தில் கொஞ்சம் Thin ஆகியிருந்தார்..... திக்கு க்குத் திருமணமாகி திக்கரை விடக் கொஞ்சம் திக்காகிப் போயிருந்தார்!!! அவர்களுக்கு மாற்றுப் பட்டாபிஷேகங்கள் நடந்தன!!! அவர்களின் சின்னவயது ஹீரோவாக இருந்த செபாஸ்டியன் சார் அட்டெண்டன்ஸ் எடுத்து (!) அசத்தலாக ஓர் உரையாற்றினார்!! தொடர்ந்து பசங்க ஒவ்வொருவராக மேடையேறித் தங்கள் மறக்கமுடியாத பள்ளி நிகழ்வைப் பகிரத்தொடங்கினர்!!!

நடப்பதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு அதிகம் பங்குபெறாமல் இருந்தான் சுதன்.... மாணவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் எல்லாம் ரொம்ப சேட்டைக்காரர்களான ரோமியோ, பாண்டி, விஷ்ணு மற்றும் சிலரே திரும்பத் திரும்ப நினைவுகூறப்பட்டனர்!! நினைவுகூறுமளவு சுதனுக்கே தன்னைப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.... அதுசரி எப்பவுமே தானுண்டு தன் படிப்புண்டு என்றிருந்தால் என்னதான் நினைவிலிருக்கும்..... ஆனால் சுதனை மேற்கோள் காட்டி ஒரு ஃப்ளாஷ் பேக் பகிரப் பட்டது அந்த மேடையில் அவனை அதிகமாக ஆச்சர்யப்படுத்தி.........

சுதனுக்கு அடுத்த ரோல் நம்பர் மாணவன் சுந்தர பாண்டியன்..... சூனா பானா என்று அன்போடு அழைக்கப்படும் இப்போதைய சாஃப்ட் இன்ஞ்சினியரான சுந்தர பாண்டி தன்னுடைய நினைவுகளை சுவையோடு பகிர மேடையேறினார்.....

" நான் வாழ்க்கையில கடைசியா பரிச்சையில காப்பி அடிச்ச சம்பவம் அது!!" என்று ஆரம்பித்த சூனா பானா.....

" ஒரு தமிழ்ப் பரிட்சை.... அதிசியமா நான் நல்லா படிச்சிட்டு வேற போயிருந்தேன்..... நல்லாத்தான் எழுதிட்டு இருந்தேன்.... திருக்குறள் கேள்வி ஒண்ணு வந்திச்சு.... " நன்று" என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக என்று கேட்டிருந்தாங்க.... எனக்குக் கைக்கு எட்டுது ஆனா வாய்க்கு எட்டல..... ஏதோவொரு வேகத்துல முன்னால உக்காந்திருந்த சுதன் கிட்ட அந்தக் குறளைக் காண்பிக்க சொல்லிட்டேன்......

"இனரெறி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

என்கிற திருக்குறள் அது..... படிப்பாளி சுதன் வேகவேகமா எழுதிட்டு இருந்தவன் என்னை சட்டை பண்ணவேயில்லை..... "சுதன், அந்த திருக்குறள் ஸ்டார்ட்டிங் மட்டும் சொல்லுடா" ன்னு நான் தொடர்ந்து நச்சரிக்க...... "வெகுளாமை" கொஞ்சமும் தெரியாத‌ சுதன் வெகுண்டு எழுந்துட்டான்..... "பேப்பரக் குடு உனக்கும் நானே பரிச்சை எழுதித்தறேன்"னு அவன் கோபமாக் கத்த நான் கிழிஞ்சி போய்ட்டேன்!! அந்த நேரம் பாத்து சூப்பர்வைஸ் பண்ணிட்டு இருந்த தமிழ் வாத்தியார் பாத்துட்டாரு....... எல்லாம் முடிஞ்சுபோச்சுனு நினைச்ச நேரம்... அவர் வேகவேகமா ஓடிவந்து "என்னடா பிரச்னை" என்று பதற‌ நான் பயத்துல உண்மய சொல்லி அப்ரூவராகிட்டேன்..... கதை முடிஞ்சிச்சுடானு நான் இருந்த சமயம் அவர் திடீர்னு சிரிச்சுட்டாரு..... சுதனைப் பார்த்து " அடப்பாவி.. "வெகுளாமை நன்று" அப்படின்னு வள்ளுவர் சொன்ன குறளுக்கே இப்படி வெகுண்டு எழுறியே.... கோபத்தைக் குறைசுசுக்கோடா தம்பி... நீ கத்துனதை நம்ம ஹெட் மாஸ்டர் கேட்டுட்டா அப்புறம் எனக்கு இன்ரெறி தோய்ஞ்சுபோகும்டா!!!னு சொல்லி... என்பக்கம் திரும்பி " மவனே.... பரிச்சைல காப்பி அடிக்கக் கூடாதுனு வள்ளுவர் சொல்லியிருக்காரானு தெரியல இன்னொரு தடவ நீ பேசுறத பாத்தேன்....." என்று நாக்கைத் துருத்திக் காட்டிட்டு போயிட்டார்!!!....சத்தியமா சொல்லுறேன் அதுக்கப்புறம் நான் என் வாழ்க்கையில பரிச்சை எழுதும்போது பேசினது கூட கிடையாது..." என்று சொல்லி... "டேய் சுதன்.... உன்னையும் உன் கோபத்தையும் என்னால மறக்கவே முடியாதுடா" என்று சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.... கொஞ்சம் கூட இருக்கம் இல்லாமல் வாய்விட்டு சுதனும் சிரித்தான் மனமாற!!!

தொடர்ந்து எத்தனையோ சந்தோஷப் பரிமாற்றங்கள் அரங்கேற டவுசர் போட்ட காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வோடு.... மனக்கசப்புகளோ.... ஏற்றத்தாழ்வுகளோ கொஞ்சமுமின்றி... பாசமாகக் கண்ணீர்த்துளிகளுடன் ஆரத்தழுவி விடைபெற்றனர் அனைவரும்.... எல்லாருமே ஒரு நிறைவான மகிழ்வுடன் அங்கிருந்து சந்திப்பு முடிந்து கிளம்ப... கொஞ்சம் கலங்கியிருந்த கண்களுடன் சுதனும் தன் பைக்கை எடுக்கப் போனான்........ அவன் பைக்கை எடுக்க வழியில்லாமல் இரண்டு மூன்று சைக்கிள்கள் குறுக்கே நிறுத்தப் பட்டிருந்தன...!!!

அதிசியம்.... சுதனுக்குக் கோபம் வரவில்லை!! அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது....
" நன்று" என முடியும் அந்தக் குறளையும் அந்த நிகழ்வையும் நினைத்துப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டு மெதுவாக அந்த சைக்கிள்களை நகர்த்தி வைத்துவிட்டுத் தன் பைக்கை எடுத்துக் கிளம்பினான்.....

"இனறெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

சுதனுக்கு இந்தத் திருக்குறள் இப்போது நினைவில்லை ஆனால் அன்று பரிட்சையில் தெரியாமல் விழித்த சூனா பானாவுக்கு இன்றுவரை அடிபிறழாமல் நினைவிருப்பதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான்!!

"வெகுளாமை நன்று".... குறளின் இந்தக் கடைசி இரண்டு அடிகளுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிந்தது....." ஹ்ம்ம்ம்ம்..வெகுளின்னா கோபம்.... வெகுளாமை நன்று.... கோபப்படாம இருக்குறது நல்லது!!" மற்ற அடிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.... எவ்வளவோ முயன்றும் "தமிழ்" புரியவில்லை!!

"வள்ளுவருக்கு ஏன் இந்தப் பிடிவாதம்? நல்ல விஷயத்த எழவு புரியுற மாதிரி சொல்லிவெச்சாத்தான் என்னவாம்??!!" வெகுளாமை சொன்ன வள்ளுவரையே எறித்தது சுதனின் வெகுளி!!

"டேய் சுதன்..... டேய்.... இது ரொம்ப டூ மச்டா!! யாரைத் திட்டுற? திருவள்ளுவர்டா... கன்னத்துல போட்டுக்கோ!!"

கரெக்ட் !!... சுதனின் மனது பிரேக் அடித்த வாழ்க்கையின் முதல் கோபம் இதுதான்.... இப்படி ஆரம்பித்துதான் அடுத்த நான்கே நாட்களில் நான்கு செஞ்சுரிகளுக்கும் மேலான கோபத் தீக் கொழுந்துகளை கிடைக்கிற கேப்பில் எல்லாம் உள்புகுந்து ஊதி ஊதி அணைந்து வந்தது சுதனின் மனது!!!

பைக்கை நேரே ஓட்டிக்கொண்டிருக்கும் போது... மனது "கோபம்" எனும் டாபிக் கில் ஒரு பி.ஹெச்.டிக்கே அடிபோட்டுக்கொண்டு வந்தது!!.... "எப்படி நான் "கோபக்காரன்"னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்??" .........."ஏன் எனக்கு இவ்வளவு வேகமா கோபம் வருது???" ......... "
"எப்போ இருந்து நான் இப்படி கோபப் படுறேன்??.... எப்போ எல்லாம் கோபப்படுறேன்??" கேள்விகளில் கவனமிழந்து ஒரு நொடியில் "ஏலேய்... ரோட்டுல வண்டிய ஓட்டுடா" என ஒரு கோபக்குரல் வெளியிலிருந்து காதில் விழ்ந்தது... சுதனைத் தாண்டிச் சென்ற கார் காரனின் கோபம் அது!! " இப்படி மனச வேற எங்கேயோ வெச்சிக்கிட்டு பைக்கைத் தாருமாறா ஓட்டினா திட்டமாட்டானா??!!" முதன்முறையாக அடுத்தவனின் கோணத்திலிருந்தெல்லாம் சிந்தித்து அவன் மனம் அவனையே ஆச்சர்யப் படுத்தியது!!

அப்போது நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்த வலியை சுதன் ஒருகணம் அனுபவித்தான்!!!! ஆம்.... ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு....." யுரேகா.....யுரேகா!!!"

"கோபம் இந்த பாழாய்ப் போன கோபம்..... அடுத்தவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும்போது குறைகிறது..... அந்த குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்கிறபோது கோபம் காணாமலேயே போகிறது!!"

"ஆஹா... சுதன்.... சூப்பர்டா.... கலக்குறியே.... என்ன ஒரு கண்டுபிடிப்பு !!" என்கிற ரீதியில் சுதனின் மனம் சிலாகிக்கத் தொடங்கியது........ இப்படி யோசிக்கும் திற‌ன் அனைவ‌ருக்கும் இருந்தால் உல‌கில் கோப‌மே இருக்காது என‌ எண்ணிக்கொண்டான்!!

இப்போது யோசித்துப் பார்க்கும்போது சுதனின் உலகில் ஜனத்தொகை மிகவும் குறைவாகவே தோன்றியது மனதுக்கு.... அம்மா.... அப்பா.... தங்கை.... இவர்களிடம் இருக்கும் குறைகளை சகித்துக்கொண்டு (!) அந்தக் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொண்டாலே போதும் கோபம் என்னும் தீயினால் தன் வாழ்க்கை இனி புகையாது.... என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான்......

இந்தப் புதிய பதிவியுயர்வு வேலையின் அலைச்சல்களை முற்றிலும் களைந்து விடும்!! எனவே எரிச்சல் இருக்காது... மேலும்.... ஒரு முற்றிலுமான மாற்றம் காட்ட இந்த புதிய ஆரோக்யமானதொரு தொடக்கத்தை மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக‌ உணர்ந்தான் சுதன்!!

அவன் கன்னத்தை அவனே பிடித்து முத்திக்கொள்ளாத குறையாக (!) அடுத்தவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளும் முடிவெடுத்திருந்தான் "Mr. Perfect" சுதன்..... ஒருவாரம் லீவிற்க்குப்பின் புதிய பதவியில் டியூட்டி ஜாயின் செய்தால் போதும்.... நான்கு நாட்களாகிப் போனது...... கொழுந்துவிட்டு எழுந்த எத்தனையோ கோபங்களையெல்லாம் தடுத்து ஒருமுறை கூட வெடித்துச் சிதறாமல் உண்மையிலேயே கவனமாய்க் கச்சிதமாய் தன்னை நிதானமாக நிலை நிறுத்திக் கொண்டான்.....

குறைகள்..... எத்தனைக் குறைகள்.... ஆனால் அதையும் தாண்டி ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது!! இனிமேல் குறைகளைக் கண்ணோக்காமல் அந்த அன்பையே பிரதானப் படுத்திக் கொள்வோம் என்கிற ரேஞ்சில் ஒரு "சுதனானந்தாவாக" அவனையே அறியாமல் மெல்ல அவதாரம் தரித்துக் கொண்டிருந்தான்!!

ருசியாக நேரத்துக்கு சமைத்துப் போடுவதைத் தவிர வேறெதெவுமே அறியாத ஒரு அம்மா தனக்கு இருப்பதனால்தான் சுதனுக்குதான் எத்தனை குறைகள்.... ஆஃபீஸில் நடந்த‌ ஒரு விஷயத்தை சமையலறையில் ஆர அமர பகிர்ந்து கொள்ளமுடிகிறதா......

ஓர் இ‍மெயில் ஐடி இல்லாத கல்லூரி மாணவி அவன் தங்கை..... கோலப்புத்தகம் வாங்கிப் பத்துப் புள்ளிக் கோலம் போட ஃபோன் பன்ணி டிஸ்கஸ் செய்யும் தோழிகளை இந்த மாடர்ன் யுகத்தில் எப்படித்தான் அவள் தேடிக் கண்டுபிடித்தாளோ???

மகனுடன் கொஞ்சம் ஃப்ரண்ட்லியாகத்தான் பழகினால் என்ன இந்த அப்பாவுக்கு!! அச்சு அசலாக ஒரு தனுஷ் படத்தில் வரும் அப்பா கேரக்டரைப் பிரதிபலிக்கும் தந்தையாக இருக்கிறாரே!!!

எத்தனை எத்தனை குறைகள்.... அத்தனைக் குறைகளையும் ஏற்றுக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு அன்பாகவே நடந்துகொண்டிருந்தான் இந்த நாட்களில்........

புரமோஷன் விஷயத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தான்..... நேரம் பார்த்து ஜாலியாக சொல்லி சர்ப்ரைஸ் தர நினைத்திருந்தான் சுதன்......

வெள்ளிக்கிழமை....... அன்றைக்கு வாசலில் அட்டகாசமாக ஒரு கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி..... "உங்க அண்ணன் மேனேஜர் ஆகிட்டாருன்னு ஸ்பெஷல் கோலமா!!" அசால்டாகக் கேட்டுவிட்டுப் போனாள் சுதனின் உடன்பணிபுரிபவன் ஒருவனின் த‌ங்கை!! கோல‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் ஷாலினி.... "அம்மா...அம்மா... ந‌ம்ம‌ அண்ண‌னுக்கு...."
சொன்ன‌வாறே உள்ளே குதித்துச் சென்றாள்....

மாலைவீட்டுக்கு வ‌ந்த‌ சுத‌னிடம் எதுவும் தெரியாத‌துபோல்தான் அவ‌னுடைய‌ அம்மா ந‌ட‌ந்துகொண்டார்.... ஷாலினிக்கோ அந்தள‌வு ப‌க்குவ‌ம் கைகூடாம‌ல் கொஞ்ச‌ம் குறும்பாக‌வே சுத‌னிட‌ம் பேசிக்கொண்டிருன்தாள்..... ஏதோ வித்தியாச‌த்தை உண‌ர்ந்து கொண்டிருந்த‌ சுத‌னிட‌ம் ஷாலினி... ம‌றைத்து ம‌றைத்து வைத்திருந்த‌ ஒரு ச‌ந்தோஷ‌ செய்தியைத் த‌ன் influence(!)மூல‌ம் க‌ண்டுபிடித்துவிட்ட‌ பெருமையில் ஹீராயிஸ‌மாக‌ப் ப‌த‌வியுய‌ர்வு விஷ‌ய‌த்தைத் தாங்க‌ள் க‌ண்டுபிடித்துவிட்ட‌தாக‌ அறிவித்தாள் ஷாலினி! ஏதோ ஒரு சந்தோஷ‌த்துக்காக‌, ச‌ர்ப்ரைஸ் த‌ருவ‌த‌ற்காக‌ வைத்திருந்த‌ விஷ‌ய‌ம் லீக் ஆகிவிட்ட‌ ஏமாற்ற‌ம் மெதுவாக‌ கோப‌மாக‌ க‌ண‌ன்ற‌து அவ‌னுக்குள்..... த‌ன் அண்ண‌னுக்குள் ஏற்ப‌ட்டிருந்த‌ த‌லைகீழ் மாற்ற‌ங்க‌ளுக் கெல்லாம் இந்த‌ப் ப‌த‌வியுய‌ர்வுதான் கார‌ண‌ம் என்கிற‌ ரீதியில் ஷாலினி க‌மெண்ட் அடிக்க‌ வீட்டில் எல்லாரும் சிரிக்க‌(ச‌ந்தோஷ‌மாக‌த்தான்!) சுத‌னால் இம்முறைக் கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வே முடிய‌வில்லை.... வெடித்து சித‌றிவிட்டான் ஒருவார‌ம் இன்முக‌ம் காட்டிய‌ த‌ன் அண்ண‌ன் த‌ன்முக‌ம் காட்டிய‌தில் ப‌ய‌ந்தே போய்விட்டாள் ஷாலினி.... யாருமே எதிர்பார்த்திருக்க‌வில்லை சுத‌னின் கோப‌த்தை எத‌ற்குக் கோப‌ப்ப‌டுகிறான் என்ப‌தையும் யாரும் புரிந்திருக்க‌ வாய்ப்பில்லை... வ‌ழ‌க்க‌ம் போல் கோப‌த்தில் வார்த்தைக‌ளில் அமில‌ம் தெளித்து கொட்டித் தீர்த்த‌ ச‌த்த‌த்தில் வீட்டுச் சுவ‌ரின் காரைக‌ள் பெய‌ர்ந்திருக்கும்..... கோப‌த்தின் முடிவில் "விர்ர்ர்ர்ர்ர்...." என்று பைக் ச‌த்த‌ம் கேட்ட‌து வீட்டு வாச‌லில்.....

கொஞ்ச‌ தூர‌த்தில் ரோட்டோர‌த்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு ம‌ண‌ற்குவிய‌லில் அம‌ர்ந்திருந்தான் சுத‌ன்.... த‌ன் கோப‌த்தைக் கைவிட்ட‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ குறிப்பிட‌த்த‌க்க‌ ஒரு மாற்ற‌ம்.... தானாக‌வே த‌ன்னைப் ப‌ற்றிய‌ ஓர் உண்மையை உண‌ர்ந்து த‌ன்னையே மாற்றிக்கொள்வ‌த‌ன் ம‌க‌த்துவ‌த்தை அறியாத‌ இந்த‌க் கூட்ட‌ம் இங்கு என்னைப் பார்த்து சிரிக்கிற‌தே..... என்று த‌ன் ம‌ன‌திட‌ம் புல‌ம்பினான்.... முன்பு த‌ன் கோப‌த்தைக் கிண்ட‌ல் அடித்திருப்பார்க‌ள் இன்று தான் கோப‌ப்ப‌டாத‌த‌ற்குக் கேலியாய்க் கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்க‌ள்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... இவ‌ர்க‌ளுக்குத் தெரியுமா என் சிந்த‌னையின் ஆழ‌ம்??? இவ‌ர்க‌ளுக்குப் புரியுமா அவ‌ர்க‌ளின் குறைக‌ளோடு அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்வ‌தின் வ‌லி??????

"இதுவும் அவ‌ர்க‌ள‌து குறைதான் என‌ ஏற்றுக்கொள்வோம்" என‌ வேண்டா வெறுப்பாக‌ ம‌ன‌தை அமைதிப் ப‌டுத்திக்கொண்டு வீடு திரும்பினான்....

வீட்டில் நுழைந்தான்.... ஷாலினி ஏதோ ப‌டித்துக் கொண்டிருந்தாள்... அப்பா டிவியில் வ‌ழ‌க்க‌ம்போல் செய்திக‌ள் பார்த்துக் கொண்டிருந்தார்.... அம்மாவுக்கு ச‌மைய‌ல்!! க‌த்திக் குவித்துவிட்டு வீடு திரும்பிய‌ சுத‌ன் வீடு திரும்பிய‌தில் யாரும் புதிதாக‌ எதுவும் காட்டிக்கொள்ளாத‌து ஏனோ சுத‌னுக்கு இப்போது புதிதாக‌ இருந்த‌து!!


"சுத‌ன் வ‌ந்துட்டியா எங்கே ராத்திரி சாப்பாடுக்கு வ‌ந்திடாம‌ போயிடுவியோனு க‌வ‌லைல‌ இருந்தேன்.... பாய‌ச‌ம் ப‌ண்ணியிருக்கேன்யா.... உனக்கு வேலைல‌ ப்ர‌மோஷ‌ன் ஆன‌துக்கு... ஏய் ஷாலினி அண்ண‌னுக்கு ஒரு ட‌ம்ள‌ர் எடுத்துட்டுவா..... "

என்று ச‌க‌ஜ‌ம் காட்டிய‌ அம்மாவிட‌ம் மெல்ல‌ சென்று... "அம்மா.... நான் கோப‌ப்ப‌ட்டு இப்ப‌டி க‌த்தி ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணிட்டுப் போய் வ‌ந்திருக்கேன்... ஆனா நீங்க‌... நீங்க‌...எப்ப‌டி இவ்ளோ ச‌க‌ஜ‌மா.... என‌க்கு ஒண்ணும் புரிய‌ல‌ மா...." முத‌ன்முறையாக‌ வாழ்க்கையில் இப்ப‌டியெல்லாம் கேள்வி கேட்கிறான் சுத‌ன்.....

"இதுல‌ என்ன‌ய்யா இருக்கு.... ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு குண‌ம்... உன‌க்குக் கோப‌க்கார‌ சுபாவ‌ம்.... வீட்டுக்குள்ள‌ எல்லார் சுபாவ‌த்தையும் ப‌ழ‌கிட்டுப் போறதுதானே..... நீ சீக்கிர‌மா சூடு ஆறுற‌துக்குள்ள‌ அந்த‌ப் பாய‌ச‌த்த‌க் குடிச்சிடுப்பா.."

என்று சொல்லிவிட்டு சென்றார் சாதார‌ண‌மாக‌......

"ந‌ன்று" என‌ முடியும் குற‌ளுக்கு இன்னும் முழுமையாக‌ அர்த்த‌ம் தெரிய‌வில்லை சுத‌னுக்கு.... ஆனால் புரிந்த‌வ‌ரைப் போதுமான‌தாகத் தோன்றிய‌து இப்பொழுது..

"வெகுளாமை ந‌ன்று!!"

பிர‌பு. எம்

டெர்மினேட்டர் (The Terminator Series)


"I am back" இயந்திரக் குரலில் அர்னால்ட் ஆண்மையுடன் கர்ஜித்த இந்த வசனத்தை மறக்க முடியுமா?!!

But he's not going to be back anymore!! :-))

அதான் தலைவர் அரசியலில் போய் செட்டில் ஆகிவிட்டாரே! இருக்கட்டும்.... அவர் வாழட்டும் வளமுடன்...!

அர்னால்ட் இல்லாததால் டெர்மினேட்டரின் கதைத்தொடர்ச்சிக்கு அதிகம் பாதிப்பில்லைதான், எனினும் படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு "அர்னால்ட் ஸ்வார்சினேக்கர்" என்ற பெயரும் ,பேராண்மையுடன் மிரட்டும் அவரது ஸ்டில்லும் இல்லாமல் போனது பேரிழப்பே!

அர்னால்டுக்குப் பதிலாக சாம் வொர்த்திங்டன், அதிக சக்திவாய்ந்த ஒரு மனித இதயம் பொருந்திய இயந்திரமாகப் பதவியேற்று, (வழக்கத்துக்கு சற்று மாறான) ஒரு டெர்மினேட்டர் படம் வெளிவந்து ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது!

டெர்மினேட்டரின் கதைக்கு ஒரு சிறப்பம்சம் யாதெனில் முன்கதையோ, பின்கதையோ ஏதுமின்றி வெளிவந்துள்ள நான்கு பாகங்களில் எந்த ஒன்றை நாம் பார்த்தாலும் அந்த இரண்டரை மணி நேர சாகச மிரட்டல்களில் அதிக குழப்பமின்றிப் பங்குகொண்டு திளைக்க முடியும்! நான்கு பாகங்களுமே ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள்தான் என்றாலும் நான்கு படங்களின் திரைக்கதை அமைப்புமே, அந்தந்த பாகங்களில் முக்கியக் கதாபாத்திரங்களின் குறிக்கோள் என்ன, அதனை ஈடேற்றுவதற்கான‌ சவால்கள் என்ன என்று மிகத்தெளிவாக வரையறுத்துக் கூறுவதால், குழப்பமேயின்றி ஒரு ஹீரோ=வில்லன் சேஸிங் கதையாக, அதன் தனித்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் சாராம்சங்களில் மெய்மறந்து நாம் எந்தவொரு பாகத்தைப் பார்க்கையிலும் ரசிகனின் இரண்டரை மணிநேர த்ரில்லிற்குப் பஞ்சம் இருப்பதில்லை!

பாகம் 1, 2, 3.... என்று கதை சொல்லும் sequel திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்... அந்த வகையில் sequel களுக்கு ஏற்ற ஆழமும், போகிற போக்கில் சுவாரஸ்யம் குன்றிவிடாத‌ நீளமும் கச்சிதமாகக் கைவந்துள்ள‌ டெர்மினேட்டரின் கதையமைப்பு என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!

திரைப்படம் மற்றும் காட்சிகளின் பிரம்மாண்டத்தைத் தாண்டி டெர்மினேட்டரில் அடிநாதமாய் அமிழ்ந்து கிடக்கும் படத்தின் "கதைக் கரு" பிரம்மாண்ட‌மானது.... அந்த பிரம்மாண்டமான கற்பனையின் விஸ்தீரனத்தைதான் இங்கு பதிவிட விழைகிறேன்.... (கதை மற்றும் திரைக்கதைகளின் மீதுள்ள ஆர்வமிகுதியால்!)

T 1 = The Terminator (1984)

1984 ல் ஜான் கான்னர் எனும் ஒரு குழந்தை சாரா கான்னர் எனும் பெண்ணிடம் கருத்தரிக்கிறது கருவிலேயே அதை அழிக்க T- 600 எனும் மனித உருவிலான ஓர் இயந்திரம் ஏவப் படுகிறது எதிர்காலத்திலிருந்து!!

பிறக்கப் போகும் குழந்தையான ஜான் கான்னர் பின்னாட்களில் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கப் போகும் மாபெரும் போரில் மனிதகுலத்துக்குத் தலைமைதாங்கிப் போரை வழிநடத்தப் போகிறவன் என்பதால்தான் இயந்திரங்களின் இந்த ஏற்பாடு! ஜான் கான்னரைப் பிறக்குமுன்பே அழிக்க முதல் பாகத்தில், எதிர்காலத்திலிருந்து வருபவர் சாட்சாத் நம்ம‌ அர்னால்ட்தான்! அதனை முறியடித்து சாராவைக் காத்து ஜானைப் பிறக்க வைக்க அதே எதிர்காலத்திலிருந்து ஒரு "மனிதன்" ஏவப்படுகிறான் அவன் பெயர் கேய்ல் ரீஸ்.... ( திரையில் மைக்கேல் பெய்ன்)

முதல் பாகம் நடக்கும் 1984ஆம் வருடம், இயந்திரங்களை ஒன்றுகூட்டி மனிதர்களுக்கு எதிராக ஆட்டுவிக்கும் ஸ்கைநெட் தன் இயக்கத்தைத் தொடங்கியிருக்கவேயில்லை!! எதிர்கால உலகிலிருந்துதான் ஸ்கைநெட், ஜான் கான்னர்ஸை அழிக்க அர்னால்டை அனுப்பிவைத்திருக்கிறது...... கேய்ல் ரீஸை அனுப்பி வைப்பது "ரெஸிஸ்டன்ஸ்" என்று சொல்லப் படும் இயந்திரங்களுக்கெதிராக போர்செய்யும் மனிதவீரர்களின் அமைப்பு!! அதன் தலைவன் தான் பிறக்கப் போகும் ஜான் கான்னர்ஸ்!!! சாரா கான்னர் என்று பெயர் வைத்திருக்கும் அத்தனை பேரையும் "ஃபோன் புக்" மூலம் கண்டறிந்து வரிசையாகக் கொன்றுவரும் "ஃபோன் புக் கில்லராக" அர்னால்ட் மிரட்டிய முதல் பாகம் உலகம் முழுதும் வசூலை அள்ளியெடுத்தது...... இயந்திரம் அர்னால்டை முறியடித்து ஜான் கான்னர்ஸ் பூமியில் பிறக்கிறான்.....!!!! (தி டெர்மினேட்டர் வெளிவந்த ஆண்டு 1984!!)

T 2 -The Judgement Day (1991)

கொலைசெய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட "கில்லர் மெஷின்" அர்னால்டைக் கைப்பற்றி "ரெஸிஸ்டன்ஸ்" அதன் ஆதார புரோக்ராமையே மாற்றியமைத்துவிட, பத்து வயது நிரம்பிவிட்ட சிறுவனான ஜான்கான்னர்ஸை இப்பொழுது ஸ்கைநெட்டிடமிருந்து காப்பாற்றும் இயந்திரமாக வருகிறார் அர்னால்ட்!!! சக்கைபோடு போட்ட இரண்டாம் பாகமான ஜட்ஜ்மெண்ட் டே தான் டெர்மினேட்டர் சீரிசிலேயே (Series) தி பெஸ்ட் என்று சொல்லலாம்!!

ஜட்ஜ்மெண்ட் டேயில் கதை நிகழும் வருடம் 1995 (படம் வெளிவந்த ஆண்டு 1991!) பின்னாளில் ஸ்கைநெட்டால் அரங்கேற்றப் படப் போகும் மனிதகுல அழிவு நாள்தான் "ஜட்ஜ்மெண்ட் டே!" பத்துவயது சிறுவனான ஜானைக் கொல்ல ஸ்கை நெட் அனுப்பும் கை தேர்ந்த நவீன இயந்திரம் டி 1000 (திரையில் ராபர்ட் பாட்ரிக்) இம்முறை இளம் ஜானைக் காப்பாற்ற எதிர்காலத்திலிருந்து "ரெஸிஸ்டன்ஸ்" அனுப்பிவைப்பது ஜானைக் காப்பாற்ற மாற்றி புரோக்ராம் செய்யப்பட்ட அர்னால்டை!!! இந்த படத்தின் சிறப்பம்சம் வில்லனாக வரும் T- 1000 இயந்திரம்தான்!! ஒரு திரவ உலோகத் தன்மைகொண்ட இந்த இயந்திரம் மனித உருவெடுத்து வந்து அர்னால்டைப் படுத்தியெடுக்கும் அதகளம் அதி சுறுசுறுப்பானது!! முதல் பாகத்தில் கூறியிருந்த ஜட்ஜ்மென்ட் டே 1997ல் அரங்கேறுவது தடுத்து நிறுத்தப் படுகிறது..... சாரா கான்னர் தன் மகன் ஜானை இளமையிலிருந்தே பிற்காலத்தில் இயந்திரங்களிடையான போரில் மனிதகுலத் தலைவனுக்குரிய தகுதிகளுடன் வளர்த்துவருவார்...... அர்னால்டுடன் இணைந்து சாராவும் சிறுவன் ஜானும் போராடுவது சுவாரஸ்யம் நிறைந்த திரைத்திருவிழா!!

T 3 - The Rise of Machines (2003)

1997ல் தடுத்து நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறுவது 2004ல்!!! இதுதான் மூன்றாம் பாகமான "தி ரைஸ் ஆஃப் மெஷின்ஸ்"ன் க்ளைமாக்ஸ்!!! சாரா கான்னர் ரத்தப் புற்று நோயால் மரணித்துவிட, தன்னுடைய எதிர்கால பொறுப்புகளின் பளு அறிந்த ஜான் கான்னர் இப்போது இளைஞன்!! ஒரு ஃபோன் நம்பரோ, இ மெயிலோ, ஃபேஸ் புக் அக்கௌண்ட்டோ இல்லாத தலைமறைவு இளைஞனாக மறைந்து வாழும் ஜான் கான்னரைக் கொல்ல ஸ்கைநெட் அனுப்பி வைப்பது ஒரு சூப்பர் ஃபிகரை!! T-X என்று அழைக்கப்படும் மிகப் புதுமையான ஒரு இயந்திரமாக வரும் பெண் கிறிஸ்டினா லோக்கென்!! அவளை எதிர்க்கும் டெர்மினேட்டர் அர்னால்டோ பழமையான இயந்திரம்!! ஜான் கான்னரை இரண்டு இயந்திரங்களும் கண்டுகொண்டவுடனேயே தொடங்குகிறது ஆட்டம் (படம் ஆரம்பித்த முதல் கால்மணி நேரத்திலேயே ஆரம்பித்துவிடுவதுதான் திரைக்கதை மந்திரம்!!) ஜான் கான்னர் தன் துணைவியான கேட் (kate) டை சந்திப்பான்..... இவள்தான் உன் வருங்கால மனைவி என்று அசால்ட்டாக அர்னால்ட் சொல்வது ருசிகரமான கட்டம்....... வருங்காலத்திலிருந்து அர்னால்டை, இம்முறை ஜானைக் காப்பாற்ற அனுப்பிவைப்பதே கேட் தான் என்று அர்னால்ட் கூறுவார்..... அதுமட்டுமின்றி அப்பொழுது ஜான் கான்னர் உயிரோடு இல்லை என்பது ஷாக்!! ஒரு நவீன இயந்திரத்துடன் போராடும் பழைய இயந்திரமாக அர்னால்ட் செம அடி வாங்குவார்...... இறுதியில் ஜான் கான்னரையும் கேட்டையும் காக்கும் தன் கடமையில் அர்னால்ட் வெற்றிபெற்றாலும் உலகத்தின் அழிவை ஜானால் தடுக்க முடியாது!! இந்தப் பாகத்தில் ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறிவிடும்.......... அர்னால்ட் மிகவும் கஷ்டப்பட்டு அந்த அழகான வில்லியுடன் மோதுவது படுவேகத்தில் படத்தை நகர்த்திச் சென்றுவிடும் ஓர் எக்ஸ்பிரஸ் ஆக்ஷன் ட்ரீட்!!!

T 4 - The Salvation (2009)

டெர்மினேட்டர் வரிசையில் T 4 கொஞ்சம் சுமார் தான்!! அர்னால்ட் இடத்தை பூர்த்தி செய்வதன் இயலாமையைப் படம் தெளிவாக எதிரொலித்தது டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு... எனினும் திரையில் சில ஜாலங்கள் தெளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் McG!! கதை நடக்கும் ஆண்டு 2018.... இம்முறை கதை நிகழ்வதே எதிர்காலத்தில்தான்!! ஜான் கான்னர் ரெஸிஸ்டன்ஸில் ஒரு நட்சத்திரமாக இயங்கி இம்முறை ஸ்கை நெட்டுடன் ஒரு போரை அரங்கேற்றி வெற்றிபெறுகிறார்!! கதை சமகாலத்திலேயே நிகழும் ஒரு நேரடிப் போர்தான் என்றாலும் வழக்கமான டெர்மினேட்டர் கதை என்று "பிராண்ட்" பண்ணிக் காட்டுவதற்கோ என்னவோ இம்முறை ஸ்கைநெட் அழிக்கப் போகும் ஹிட்லிஸ்டில் ஜானுக்கு இரண்டாம் இடம் என்று ஒரு ட்வ்ஸ்ட் வைத்து முதலிடம் பெறுபவராக, முதல் பாகத்தில் 2030களிலிருந்து அனுப்பிவைக்கப் பட்ட, கெய்ல் ரீஸை அறிவிக்கிறார்கள்..... முதல் பாகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து வந்து ஜானின் தந்தை ஸ்தானம் எடுக்கும் கேய்ல் ரீஸை 2018ஆம் ஆண்டு காக்கத் துடிக்கிறார் ஜான் கான்னர்ஸ்!! (ரொம்பக் குழப்பம்தான்!!) மசாலா சேர்ப்பதற்காக இம்முறை இயந்திரமாக ஸ்கைநெட் தத்தெடுக்கும் சாம் வொர்த்திங்டன் தன்னை ஒரு மனிதன் என்று நம்பிக்கொண்டு ரெஸிஸ்டன்ஸ் , ஸ்கைநெட்டுடன் தொடுக்கும் போரில் ஜானுடன் இணைந்து மனிதர்களுக்காகப் போராடுகிறார்..... இறுதியில் போரில் மனிதர்கள் வெற்றிபெறுவது மட்டுமின்றி கேய்ல் ரீஸையும் ஜான் காப்பாற்றுகிறார்!!.... கடைசி சண்டையில் படுகாயம் அடையும் ஜான் கான்னர்ஸைக் காப்பாற்ற இயலாது என்று டாக்டரான மனைவி கேட் தவிக்க இயந்திர மனிதன் சாம் வொர்த்திங்டன் தன் மனித இதயத்தை ஜானுக்கு வழங்கும் செண்டிமெண்ட்டோடு முடிகிறது சால்வேஷன்........ அடுத்த பாகத்தை இயக்கப் போவதும் McG தான்... 2011ல் படப்பிடிப்பு துவங்கும் என்று இப்போதைக்கு எதிர்பார்க்கப் படுகிறது!!


இவ்வளவு பெரியதொரு பயணத்தைத் தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களாக கற்பனைக் குதிரைகளைத் தேரில் பூட்டி மிடுக்கு குறையாமல் இன்றும் வலம் வருவது டெர்மினேட்டரின் கிரியேட்டர்களை பிரமிப்புடன் கவனிக்க வைக்கிறதென்றால்..... அதன் வணிகம் அதையும் தாண்டி நம்மை மயக்கத்தில் ஆழ்த்துமளவு விசாலமானது!!! 80களில் யாரோ சில எழுத்தாளர்களுக்கு மற்றும் சில கிரியேட்டர்களின் மனதில் எங்கோ தோன்றிய ஒரு கற்பனை விதை நான்கு வெற்றித் திரைப்படங்களாக, இன்னும் சில தொலைக்காட்சித் தொடர்களாக (தொலைக்காட்சித் தொடரில் சாரா கான்னர் நாயகியாக வருவார்!!), ஹாட் வீடியோகேம்களாக, காமிக்ஸ்களாக பணத்தைக் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புகுந்து அள்ளி வருகிறது வேரூன்றி உலகெங்கும் விழுதுகள் பரப்பி!!!

கற்பனையில் இன்னொரு உலகையே படைத்து அதில் உயிர்களை உலவவிட்டு நிஜ உலகில் நட்சத்திரங்களாக, மில்லியனர்களாக‌ வெற்றி நடைபோடும் கலைஞர்களுக்கு வணக்கம்!! ஒரு கற்பனைக்கும் ஜீவனுள்ள ஒரு கதாபாத்திரப் படைப்புக்கும் எவ்வளவு வணிகமதிப்பு இருப்பதை நம் கலைஞர்களும் உணரவேண்டிய தருணமிது...... கேட்டால் அந்தளவு "பட்ஜெட்" இல்லை என்றுமட்டும்தான் சொல்வார்கள் படத்துக்கு பத்துகோடி சம்பளம் கொடுக்கும் நம் ஃபிலிம் மேக்கர்கள்!!!

- பிரபு .எம்

"தரிசனம்"- "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை



"தரிசனம்"- "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!

"இளமை"விகடனில் இரண்டாவது முறையாக என்னுடைய சிறுகதை வெளிவந்திருப்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். விகடனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்!! இதைப் போன்று பொது ஊடகங்களில் எழுத்துக்கள் பிரசுரமாகிற பொழுது பலரின் பார்வை நம் படைப்புகளில் படும் அரியதொரு வாய்ப்பு கிடைக்கின்றது.... தொடர்ந்து ஊக்கமளித்துவரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்!!


Click here to view the story


தரிசனம்


மாலை 5:30 மணியிருக்கும். அது ஒரு பரபரப்பான மாலை வேளையாகத்தான் இருந்தது, சிபிக்கு. அவன் படிக்க வேண்டுமென்பதற்காக அவனுடைய அப்பா வீட்டு மாடியில் கட்டித் தந்த பத்துக்குப் பத்து அளவிலான சிறிய அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது... ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்து உறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில் ஆகியன மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன.

மேசையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்களும், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக் கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி.
நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை!

ஒரு 10 மார்க் கணக்குக்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது. பதற்றம்... 'கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?', 'அதற்குள் இருட்டிவிட்டதே?' என மனம் பதை பதைக்கிறது.

அந்தக் கணக்குக்கு விடை தெரியவில்லை.

'நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான்
மறந்த விட்டேனா?' என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதிய தாளில் மீண்டும் எழுதத் துவங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன...

அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது
சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம்.

அந்தச் சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது! அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' இதே போல் அவ‌னுக்கு விசித்திர‌
த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அதுவ‌ரை அவ‌னுக்கு ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று...

திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான்.

சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து.

இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேன்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டு த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா
டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு
சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா சில விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.

சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ சிபி சார்.. எங்கே கிள‌ம்பிட்டார்?" என்று
கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன்.

அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம்
அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து.

"ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம், "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்," என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா... எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக் கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை, ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி! அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான்.

மெயின்ரோடு வ‌ந்த‌து... அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர் சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும். அந்த மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌ சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ம்தான், ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து...

அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான்... சுவ‌ரெங்கும் அவனது அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன! சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு.
மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும்
ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.

புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். "நீ
ந‌ம்ம‌ த‌லைவர் மாறியே இருக்கேடா!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை..

க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப் பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை... சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்!

"பார்த்துவிட்டுத்தான் போவோமே!" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் திடீரென அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், "உனக்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்!" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை...
புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை
திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து...

ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே?" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால்.

ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி...

பிர‌பு. எம்

நான் கடவுள் - "அஹ‌ம் பிர‌ம்மாஸ்மி"


ரொம்பவே காலம் கடந்துவிட்டது... எனினும் இப்பொழுதுதான் படத்தைக் காண நேர்ந்தது.... படம் வந்த சமயமே பார்த்திருந்தாலும் கூடக் கண்டிப்பாக விமர்சனம் எழுத எண்ணியிருக்க‌ மாட்டேன் இதேபோல சில தாக்கங்களை மட்டும்தான் பதிவிட முயன்றிருப்பேன்...

எப்போதும் செல்லும் கோயிலிலும், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்களிலும் அடிக்கடிப் பார்த்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பரிச்சியமானவர்கள் என்றுதான் கூறவேண்டும்! ஏனெனில் இப்போது நினைத்துப் பார்க்கையில் ஏதோவொரு விதமாக உடல் நெழிந்துபோய்க் கால்கள் விரிந்த நிலையில் அமர்ந்தவாறு ஒரு கையில் செருப்பு மாட்டித் தரையில் ஊன்றி நகர்ந்து நகர்ந்து பிச்சையெடுத்த ஓர் உருவம் அடிக்கடிப் பார்த்திருப்பதாகத் தெளிவாகத் தோன்றுகிறது மனதில்... முகம் நினைவில்லை ஆனால் ஊணம் அழுத்தமாக‌ நினைவிலிருக்கிறது!

மேலும்... முகம் முழுக்கச் சுருங்கிப்போன சர்ச்சு வாசல் பாட்டிகள்... கால்களில் கிள்ளிப் பிச்சை கேட்ட‌ பஸ் ஸ்டாண்ட் அழுக்குச் சிறுமி, சில வேளைகளில் நான் காஃபி வாங்கிக் கொடுத்திருக்கும் ஒரு பைத்தியக்காரன்.... (கடைக்காரன் தேங்காய்ச் செரட்டையில்தான் அவனுக்குக் காஃபி கொடுப்பான்) நன்றாகவே நினைவிருக்கிறது.... ஒரு கட்டத்தில் தினமும்கூடப் பார்த்திருக்கிறேன் இவர்களை....
வெவ்வேறு அலுவல்களில் அங்குமிங்கும் அலைகிறபொழுதுகளில் தவறாமல் குறுக்கே வந்து கண்ணில் தினமும் பட்டிருக்கிறார்கள் மேற்கூறிய மிகவும் பரிச்சியமானவ‌ர்க‌ள்!!

தினம்தினம் பார்த்திருந்தும், சில்லறை தானம் கூடத் தவறாமல் செய்திருந்தும், தாண்டிச் சென்றபின் ஒருகணம்கூட நினைத்துப் பார்த்ததில்லை இவர்களை... மொத்தமாக நினைத்துப் பார்க்க வைத்துவிட்டார் பாலா!!!

"அகோரி"கள் பற்றி முற்றிலும் அறிந்திருக்க‌வில்லை "நான் க‌ட‌வுள்" வெளிவ‌ரும்வ‌ரை... காசியையும் இவ்வ‌ள‌வு விரிவாக‌க் கண்டிருக்க‌வில்லை முந்தைய‌ ப‌திவுக‌ளில்... எரியும் பிண‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் ப‌ரிச்சிய‌ம் "பிதாம‌க‌ன்" புண்ணிய‌த்தில்!

நாம் ந‌ன்க‌றிந்த‌ பிச்சைக்கார‌ர்கள்.... அதேவேளையில் அறியப்படாத‌ அவ‌ர்க‌ளின் உல‌கம்.... வேற்றுகிர‌க‌வாசிக‌ளைவிடத் தூர‌மான‌ அகோரி சாமியார்கள்.... சாவுட‌ன் வாழ்வு ச‌ங்க‌மிக்கும் அவர்களின் புதிர் உல‌கம்... எல்லாம் சேர்த்து புனைந்த‌ திரைக்க‌தை...

ம‌ர‌ண‌த்தைத் த‌ண்ட‌னையாக‌ வ‌ழ‌ங்கும் அதிகார‌ம் ப‌டைத்த‌ நாய‌க‌ர்க‌ள் புதித‌ல்ல‌ ந‌ம‌க்கு..
ம‌ர‌ண‌த்தை வ‌ர‌மாக‌வும் வ‌ழ‌ங்கும் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" ருத்ர‌ன் வேறொரு உலகிலிருந்து (இருக்குமிடம் மட்டும் காசி) ந‌ம் உல‌கில் புகுந்து நம் காதுக‌ளில் விழாத சில கொடூர ஓல‌ங்க‌ளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் த‌ன் வழியை நோக்கி சென்றுகொண்டேயிருக்கிறார் உச்ச‌க் காட்சியில்!!

கண்ணில்லாத‌ இள‌ம்பெண்.... பாட்டுப்பாடி யாச‌க‌ம் செய்ப‌வ‌ள்.... அவ‌ளை ஒரு சிங்க‌த்தின் கூண்டில் போட்டிருந்தால் அடித்துக் கிழித்து உண்ண‌ப்பட்டாலும் ஒருவேளைக்கு உண‌வாகி அத்தோடு செமித்துப் போயிருப்பாள்... ப‌ண‌ம் ம‌ற்றும் காம‌ப் ப‌சிக்குத் த‌ப்பித்துப் பார்வையுமின்றி அனாதையாய் ஓடி ஓடி சீர‌ழிந்திருக்க‌ மாட்டாள்...துர‌த்திய‌வ‌னையும்.... அவ‌ளை முற்றிலுமாய் சிறைப்பிடித்து வைத்திருந்த‌ எம‌காத‌க‌னையும் அடித்தே கொன்று ந‌ர‌க‌த்துக்குத் தாரைவார்க்கிறார் பின்... அவ‌ளுக்கும் அதே ம‌ர‌ண‌த்தை -ஆனால் இம்முறை "வரமாய்"க் கொடுத்து, மீண்டுமிந்த‌ பூமியில் பிறக்கும் "அதிகபட்ச‌ த‌ண்ட‌னையையும்" ர‌த்து செய்துவிட்டுப் போகிறார் அகோரி சாமியார்!!

ருத்ர‌ன் விஷ‌மிக‌ளை வ‌த‌ம் செய்த‌தோடு சென்றிருந்தால் வெறும் "க‌ட‌வுளாக‌த்" தான் போயிருப்பார்... மேற்கொண்டு பூஜாவை "வ‌ர்தான்" செய்த‌தன் மூலம் பிரம்மப் படைத்தலின் பிழையொன்றை நீக்கிவிட்டு செல்கிறார் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" என்று உருமிக்கொண்டு!!... நம் ப‌ச்சாதாப‌த்துக்கோ க‌ழிவிர‌க்க‌த்துக்கோ கோரிக்கை வைத்து ஒரு ம‌ர‌ணத்துடன் ப‌ட‌த்தை முடிக்க‌வில்லை.... படைத்தவனின் பிழைக‌ளால் த‌விக்கும் உயிர்க‌ளின் ஓல‌த்தைக் கேட்க‌ ந‌ம்மிடம் நாதியில்லை என்று முக‌த்தில் அறைந்து ஒரு "கொலை"யுட‌ன் முடித்திருக்கிறார்.....

ந‌ம்மைப் பாகிஸ்தான் தீவிர‌வாதிக‌ளிட‌மிருந்தும் லோக்க‌ல் தாதாக்க‌ளிட‌மிருந்தும் தொட‌ர்ந்து காத்துவ‌ருவ‌தில் பிசியாக‌ இருக்கும் ந‌ம‌து வ‌ழ‌க்க‌மான‌ நாய‌க‌ர்க‌ளை டிஸ்ட‌ர்ப் செய்யாம‌ல் வேறொரு உல‌க‌த்திலிருந்து ஆர்யாவை அழைத்துவ‌ந்த‌திலேயே சொல்ல‌வ‌ந்த‌தை சொல்லிமுடித்துவிட்டார் பாலா..... கதாபாத்திர‌ங்க‌ள் யாவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாத கமலஹாசனின் ஒரே ஒரு ப‌டம் தானே "பேசும் ப‌ட‌ம்" என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து! பேசாமல் பேசிவிடுவ‌து பாலாவுக்கும் ஒன்றும் அந்நிய‌மான‌த‌ல்ல‌.... "வார்த்தை த‌வ‌றி விட்டாய்.." என்று பின்புல‌த்தில் ராஜா உருக வாழ்வு முற்றிலும் சூன்ய‌மாகிப் போய்விட்ட‌தை ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல் மொட்டை "சேது" பாண்டிம‌ட‌ம் வ‌ண்டியில் ஏறுமுன்பு ஒருமுறைத் த‌லைதிருப்பிப் பார்ப்பானே... அதை வ‌ச‌ன‌ங்க‌ளால் பேசிவிட‌ முடியுமா?? "என‌க்குத் தெரியும் மா.." என்று ம‌ட்டும் சொல்லிவிட்டு விஷ‌ம் க‌ல‌ந்த‌ சோற்றை மொத்த‌மாக உண்டு ம‌டியும் "நந்தா"வுக்கும் வ‌ச‌னங்கள் தேவைப் ப‌ட‌வில்லை..... வெட்டியான் சித்தனும் ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல்தான் அவ‌னுல‌கை ந‌ம‌க்குப் புரிய‌வைத்தான்... ஆனால் இங்கு எத‌ற்காக‌ இந்த‌க் குருட்டுப் பிச்சைக்காரி ம‌ட்டும், அவ‌ள் ர‌ண‌ங்க‌ளின் வேதனையை மொத்த‌மாக‌ நாம் உள்வாங்கிக் கொண்ட‌பின்னும், நீளமாய்ப் பேசுகிறாள் என்ப‌து ம‌ட்டும்தான் புரிய‌வில்லை... பாலாவுக்கு வ‌ச‌ன‌ங்க‌ள் தேவையா!

நான்கு வ‌ருட‌ங்க‌ள் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டதையும் ஆர்யா என்கிற கமர்ஷியல் ஹீரோவின் கால்ஷீட் விரைய‌மாகி விட்ட‌தையும் இணைத்துதான் பெரும்பாலான‌ விம‌ர்சன‌ங்க‌ள் வெளிவ‌ந்திருந்த‌ன‌... "சிவாஜி தி பாஸ்" வெளிவந்த‌ போது "இவ்வள‌வு செல‌வு தேவையா?" என்றும்... "நான் க‌ட‌வுள்" ப‌ட‌த்துக்கு "இவ்வ‌ள‌வு நாள் எடுத்திருக்க‌ வேண்டுமா?" என்றும் கேள்விக‌ள் ப‌ர‌வ‌லாக‌ முளைத்த‌ன‌.... கேட்ட‌வ‌ர்க‌ள் பார்வையாள‌ர்க‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும்தான்.... உண்மையில் கேட்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் த‌யாரிப்பாளர்களும் ஆர்யாவும்தானே... அவ‌ர்க‌ளுக்கில்லாத‌ ச‌ங்க‌ட‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்ப‌தும் புரிய‌வில்லை.....

விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளை வைத்து ம‌ட்டும்தான் பாலா ப‌ட‌ம் எடுப்பாரா? என்று கேட்டால்.... பாலாவும் எடுக்க‌வில்லையென்றால் பிச்சைக்கார‌னையும் வெட்டியானையும் on duty ல் ம‌ட்டும்தானே நாம் பார்த்திருப்போம்... ந‌ம‌து கேம‌ராவின் வெளிச்ச‌ம் கொஞ்ச‌ம் ஊடுறிவியும் பாய‌ட்டுமே!

வாழ வழியில்லாதவர்களை வாழ‌ அனும‌திக்கும் குண‌த்தை பூமி இழ‌ந்து நாளாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டும் நித‌ர்ச‌ன‌மாக‌ப் புரிகிற‌து.... விளைவுக‌ள் புரிய‌வில்லை!!

பிர‌பு. எம்