கால்ஷீட்
"கருப்பு.....
......வெள்ளை
கருப்பு........
......மீண்டும் வெள்ளை...
லைட்ஸ் ஆன்.......
........லைட்ஸ் ஆஃப்
லைட்ஸ் ஆன்.......
.......லைட்ஸ் ஆஃப்"
கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!
"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???"
என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்......
இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்....
"ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??"
இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!
தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்...
"மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி....
நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் நடிக்கவைக்கும் எண்ணமில்லை என்று இயக்குனர் சுரேஷ் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிகப்பிரபலமான தயாரிப்பாளரான ரமணராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது...செய்தியைப்பார்த்தவுடன் ஏதேதோ ரசாயண மாற்றங்கள் நம்மாழ்வாரிடம்... சுந்தரைப்பார்த்து பெருமிதமாகப் புன்னகைக்கிறார்....
இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!
"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."
மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!
"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."
கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....
"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."
லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"
எழ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....மனிதர் இப்போதுதான் உணர்கிறார் தன்னுடைய கால்கள் முற்றிலுமாக செயலிழந்து போயிருப்பதை......சில நிமிடப் போராட்டம் பலனளிக்கவில்லை... அவரால் தன் உடலை அசைக்க இயலவில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் தலை சரித்து சிரித்தமுகமாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......
சுந்தர் பிறந்த போதே நம்மாழ்வார் பரபரப்பான நடிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. கதாநாயகனாக சிலபடங்களிலும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களிலும் நடித்துத் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் எப்பொழுதுமே உச்சத்திலிருந்தார்.
"சாதாரண வாழ்க்கை வாழும் சராசரி மனிதன் மிகக் கொடுத்துவைத்தவன், ஏனென்றால் அவன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிறான்!"
என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்........
"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இளமையிலிருந்தே ஆழமாக நம்பி வாழ்ந்து வந்த நம்மாழ்வார், தனது சாதனைக் களமான நடிப்பைத்தவிர வேறு எதிலுமே பொறுப்பாக இருந்ததில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் தந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தபோது, நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் தனது நேரத்தைத் தன் குடும்பத்தினர் பாழ்படுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்தளித்ததையும் சரி, பிறகு பெரிய நடிகனாகித் தான் கட்டிய மிகப்பெரிய வீட்டில் ஆசையாய்த் தன்னைப் பிரம்மாண்டமாய்ப் படம்பிடித்து வீட்டின் முகப்பில் மாட்டிய படத்தில், மாட்டிய அன்றே சிறுவனான தங்கைப்பையன் சுந்தர் மீசை வரைந்திட, அனைவரும் மிரண்டுபோய்க் காத்திருந்த போது வந்து பார்த்துவிட்டு "எனக்கு மீசைவெச்சா நல்லாதானிருக்கும்போல...." என்றுமட்டும் கூறிவிட்டு அலட்டிக் கொள்ளாமல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் சரி... உண்மையில் யாராலும் அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லைதான்...!!
சுந்தர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு மருத்துவர்களோடு ஏதோ சீரியஸாகப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இரண்டு நர்சுகள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்தர் நம்மாழ்வாரின் மிக அருகே சென்று அமர்ந்து அவர் முகத்தைப் பார்க்க......நம்மாழ்வாரின் கண்கள், சிரித்த முகமாய் இப்போதும் தன் மருமகனின் கண்களை ஆழமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன......மௌனத்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் போல...
அன்று காலையில் ஒரு பதினோரு மணியளவில் தயாரிப்பாளர் ரமணராஜனின் அலுவலகத்திற்கு இயக்குனர் சுரேஷ் வந்திருந்தார்..... அவர்களது கூட்டுமுயற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்படம் கிட்டத்தட்ட எண்பது சதவீதம் முடிந்துவிட்ட நேரத்தில், உண்மையிலேயே இப்போது நம்மாழ்வாருக்காகத்தான் படப்பிடிப்பு வேலைகள் காத்திருக்கின்றன..... இதரக் காட்சிகளெல்லாம் படமாகிவிட்ட வேளையில் தயாரிப்பாளரிடம், ரிலீஸ் மற்றும் அடுத்த படப்பிடிப்பு ஷெட்யூல் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்....
. "அவரோடத் தங்கச்சிப் பையன்தான் ஹாஸ்பிட்டல்ல அவரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்லமாட்டறாரு... டாக்டரை இன்னும் பார்க்க முடியலைனு சொல்றாங்க..எப்டினாலும் சரி நம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவார்னு நம்புறோம் சார்..."
என்று சுரேஷ் சொல்ல... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிரச்னையில்ல... எவ்வளவு நாள் ஆனாலும் சரி.. அவர் முழுசா குணமாகிட்டு வரட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உதவியாளரிடம்,
"அவர் என்னதான் மறுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்டல் செலவு முழுசும் நம்மளே செட்டில் பண்ணுற மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க.." என்று உத்தரவிடுகிறார்....
சுரேஷ் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாதபடி ரமணராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்..... பலவருட பரிச்சியமும் நட்பும் கொண்டவரான நம்மாழ்வாரைப் பற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்கடி நினைவலைகளில் சிக்கிக் கொள்கிறார் ரமணராஜன்....
தொழிலில் என்றுமே ஒரு சிரத்தையான காதல் உண்டு நம்மாழ்வாருக்கு... சிறிய நடிகராய் சிலகாலம் மட்டுமே இருந்தார், அந்தக்காலம்தொட்டு ஒருநாள்கூடப் படப்பிடிப்பு அவரால் தடங்கல் பட்டதே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர ஈடுபாட்டை அனைவரிடமும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோபம் கொள்வார்! உணர்ச்சிமயமான மனிதர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி நடிப்பார்..... களைப்பினால் தன் நடிப்பின் தரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவிதமான மனஅழுத்தம் அவரது நரம்பு மண்டலத்தை ரொம்பவே பாதித்து வந்தது... அதிலிருந்து விடுபட எப்போதுமே அவரது விரல்களுக்கிடையே சிகரெட் ஒன்று அவரைப் போலவே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! நள்ளிரவு முழுதும் தூக்கமில்லாததால் அதிகமாகவே குடிப்பார்.....
நான்கு வருடங்களுக்கு முன்.....ஒரு தீபாவளி தினம்..... நம்மாழ்வாரின் நான்கு படங்கள் அன்று ரிலீஸ்! இரண்டில் வில்லனாகவும், ஒன்றில் மிகவும் சாந்தமான மனிதராகவும் இன்னொன்றில் நாயகனின் பெரிய பணக்காரத் தந்தையாகவும் நடித்திருந்தார்... பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன, இந்நிலையில் அவர் கடந்த வருடம் நடித்திருந்த ஒரு நல்ல திரைப்படத்திற்காகத் தேசிய விருதுக்கு அவர் பெயர் இறுதிச்சுற்றில் பரிசீலிக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகியது... அதே நேரத்தில், மிகப்பெரிய நடிகர் ஒருவரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த நம்பர் ஒன் தயாரிப்பாளரான ரமணராஜன் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டிக்கேட்டார்... முதலில் இயக்குனர் வந்து கதை சொன்னபோது நம்மாழ்வார் தவிர்க்க எண்ணிய கதை அது.... இருப்பினும் ரமணராஜனுக்காக சம்மதித்தார் சில நிபந்தனைகளோடு....
"தேசியவிருது அறிவிப்பு: நம்மாழ்வார் சிறந்த நடிகர்!!" என்று அறிவித்தது ஒரு மாலை நாளிதழ்..... திடீரென்று வாழ்த்துமழை பெய்யத்தொடங்கியது நம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தான் தெரிவிக்கப்படவில்லை என்பதால் கொஞ்சம் சுதாரிப்புணர்வுடன்தான் அனைத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டிருந்தார் நம்மாழ்வார்... அடுத்த நாள் காலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாபெரும் நாயகனான ஒரு வடநாட்டு நடிகர் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்....பல சலசலப்புகள் எழுந்தன... அரசியல் காரணங்களும் கூறப்பட்டன...
நம்மாழ்வார் அதிகாலையில் அழைக்கப்பட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்சல் என்று புரொடக்ஷன் மேனேஜர் கூறினார்..தெளிவான காரணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் படத்தின் கதாநாயகன் திரைக்கதையில் நம்மாழ்வாருக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதன் விளைவாக திரைக்கதையில் மாற்றங்கள் நடந்து வருவதாகவும், காரணங்கள் கசிந்தன......இதெல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அரங்கேறிய வேளையும் விதமும் நம்மாழ்வாரை ரொம்பவே காயப்படுத்தியது.....
தன்னைச் சுற்றி இப்படி மாறி மாறி சம்பவங்கள் நடக்கும் வேளையில் படப்பிடிப்புத் தடைபட்டிருப்பதால் அவரின்மீது ஒரு பரபரப்பான தனிமை திணிக்கப்பட்டிருந்தது...... இந்த சூழ்நிலையில் ரமணராஜனை சந்தித்தார் நம்மாழ்வார்... இருதரப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்தங்கள் ஒரே படத்தினால்.... துரதிர்ஷ்டவசமாகப் பேச்சுவார்த்தையில் வார்த்தைகள் தடித்துப் போய்விட...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான கட்டத்தில்.... நீண்ட மௌனத்துக்குப்பின்.... நம்மாழ்வார்......
"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."
என்று சொல்லிவிட்டு அமைதியாக வெளியேறினார்... பலரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க... அவர் காரில் ஏறிச்செல்லும்வரை பதற்றமாக முறைத்திருந்தார் ரமணராஜன். காரில் வீடு செல்லும் வழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புயல் வீசப்போவதை உணர்ந்திருந்தாலும்... பல மைல்கற்களைக் கடந்துவிட்ட பயணமல்லவா... அதனால் அதிகம் அசரவில்லை... மேற்கொண்டு இவ்விஷயத்தில் மவுனம் காப்பது என்று முடிவெடுத்திருந்தார்...
"நம்மாழ்வார் படத்திலிருந்து அதிரடி நீக்கம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... சற்றும் எதிர்பாராதவிதமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிரபல பத்திரிக்கையொன்றில் விளக்கமும் வெளியாகியிருந்தது!! நம்மாழ்வரை வீழ்த்த ரமணராஜன் எடுத்திருந்த அஸ்திரம் வித்தியாசமானது...
"எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் நடிகரை வைத்துப் படம் எடுப்பது தனக்கு சாத்தியமில்லை!!"
என்று கூறியிருந்தார் ரமணராஜன்...
"சிறந்த நடிகரான நம்மாழ்வார் தனது உடல்நலனைப் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை, சொந்த வாழ்க்கையில் கவனமின்றி மன அழுத்தத்திற்கு ஆளானமையினால் போதைக்கு அடிமையாகி இப்போது கவலைக்கிடமான நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் பலகோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் இப்படி ரிஸ்க் எடுக்க முடியாது... வளர்ந்துவரும் நடிகர்கள் நம்மாழ்வாரின் கதையில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகவே திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....
சுந்தரின் அலைபேசிக்குத் தன் வீட்டிலிருந்தபடி அழைப்புக்கொடுத்தார் இயக்குனர் சுரேஷ் முதல்முறை மணி முழுதாக அடித்தும் பதில் இல்லை அடுத்தமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது!!... படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதால் தனிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த ஓய்வும் தேவையாகத்தானிருந்தது... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."நம்மாழ் சார்..!!" ......மறக்க முடியாத அந்த முதல் சந்திப்பு...!!
ரமணராஜனின் அறிக்கை வெளிவந்ததுதான் தாமதம்... நம்மாழ்வாரின் உடல்நிலையைப் பற்றி தினம்தினம் வதந்திகள்!! நடித்திருந்த இரண்டுபடங்கள் படுதோல்வியடைந்தன.....காட்சிகள் முற்றிலுமாக மாறிப்போய்..... நடிப்பில் ஊறித்திளைத்த கலைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில ஊறுகாய்ப் பாத்திரங்களுக்கு அழைக்கப்பட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்டர் இருளிலும் கழிக்கத் துவங்கினார்..... இரண்டுவருடங்கள் உருண்டோடிப் போயின.... அதீதமான மன அழுத்ததால் இயல்பான முதுமையுடன் உடல் நலம் இன்னும் கெட்டுப்போயிருந்தது, எனினும் உயிருடன்தானிருந்தார்!! அப்போது நம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இளம் இயக்குனர் வந்திருந்தார் தன் முதல்படத்திற்குக் கதையைத் தூக்கிக் கொண்டு!!!
"வேண்டாம்ப்பா...ஒருவேளை படம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப நஷ்டமாகிடும்... நீ வேற ஏதாவது ஆரோக்யமான ஆளை வெச்சு இந்தப் படத்தை எடுத்துக்கோ!!" கொஞ்சமும் ஆர்வமின்றி சொன்னார் நம்மாழ்....
"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவந்தது பதில்!!!
கதையைக் கேட்பதைத்தவிர வேறுவழியில்லை நம்மாழுக்கு!!
கதையைக்கேட்ட மாத்திரத்தில் நீண்ட நாட்களாக ஓய்ந்து கிடந்த பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன நடிகருக்குள்!! படம் ஆரம்பித்தது..... தனக்கே தனக்கான கதையாக உணர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டுத் தன் வாழ்நாளில் முதன்முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தன் சக்திகளையெல்லாம் சேகரித்துக்கொண்டுத் திரும்பி வந்து நடித்துக் கொடுத்தார்...... படம் மாபெரும் வெற்றி பெற்றது!!!! மீண்டும் உச்சத்தில் நம்மாழ்.... சுரேஷ் பெரும் பெயர்பெற்றுப்போனார்.... அதற்கு உடனடி அங்கீகாரம், சுரேஷின் அடுத்த படத்திற்குத் தயாரிப்பாளர் ரமணராஜன்!!! முக்கியப் பாத்திரத்தில் நம்மாழ்வார்.....! துவக்கவிழாவில் மரியாதையாக இருவரும் ஒருவருக் கொருவர் வணக்கம் வைத்துக்கொண்டார்கள்..... பரஸ்பரம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்கள் மேடையில்!!!! பாதிப்படம் முடிந்துவிட்ட வேளையில் மீண்டும் உடல்நலம் குன்றியமையால் அதே மருத்துவமனையில் மீண்டும் இப்போது நம்மாழ்வார்..... அவரது தங்கைப் பையன் சுந்தர்தான் அவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறார்.... நேற்றிரவு மருத்துவர்கள் சுந்தரிடம் சொன்னதை சுந்தர் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவேயில்லை....
மருத்துவமனையில்.... இன்னும் அதே பார்வை....ஆழமாக இருவரின் கண்களும் வெறித்துப் பார்த்தவண்ணமிருந்தன.... போதும் என்று எண்ணி ஒருமுறை கண்கலங்கிவிட்டு அந்த உணர்ச்சிமிகு கண்களை ஒரேயடியாகத் தனது கைகளால் மூடினான் சுந்தர் தன் மாமாவின் தலையை மடியில் தாங்கிக்கொண்டு....சிரித்தமுகமாகவே விடைபெற்றிருந்தார் நம்மாழ்வார் மொத்தமாக.....
பேரதிர்ச்சியடைந்தது திரையுலகம்... மிகவும் மரியாதையாக ஒருபுறம் எந்தவொரு தனிமனிதனும் பெருமைப் பட்டுக்கொள்ளுமளவு இறுதிசம்பவங்கள் நடந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய நம்மாழ்வாரின் முந்தைய படத்தின் தயாரிப்பாளர் தொடர்புகொள்ளப்பட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஒரு காட்சி அவரிடமிருந்து வாங்கப்பட்டது.... சிறிது நாட்களில் சில மாற்றங்களுடன் நம்மாழ்வாரின் கடைசிபடம் திரைக்குவந்தது..... படத்தினிடையே திடீரென்று நம்மாழ்வாரின் கதாபாத்திரம் மரணமெய்துவதாகக் கதை மாற்றப்பட்டிருந்தது.. ஒரு கட்டிலில் அசைவேயின்றி இறந்த சடலமாக உயிருடனிருந்தபோது அற்புதமாய் நடித்திருந்தார் நம்மாழ்வார் அந்த மிக நீளமான டேக்கில்.......
அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது.... பாராட்டுமழையில் நனைந்திருந்த சுரேஷ் தன் படுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி படுத்திருந்தார்... தூக்கம் வரமறுத்தது....ஒரு பிணமாக நம்மாழ்வார் நடித்திருந்த அந்த நெடிய காட்சி அவரை ரொம்பவே தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.......
"சுரேஷ், ஹாஸ்பிடல்ல என் உடம்புல மிச்சமிருந்த பேச்சு மூச்சு எல்லாத்தையும் தக்கவெச்சுக் கொண்டுவந்திருக்கேன், இன்னைக்கு அந்த எமொஷனல் சீனை எடுக்கப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் சிரித்துக்கொண்டே சொன்னார் நம்மாழ்வார்....
"இல்ல சார் இன்னைக்கு அந்த சீன் எடுக்க முடியாது.... கொஞ்சம் சிக்கல்...."
"என்னப்பா... ஏற்கெனவே ஷெட்யூல் படிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துடலாமே.." கெஞ்சலாகவே கேட்டார்......
ஏதேதோ காரணங்களை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்தக் காட்சி எடுக்கப்படவில்லை...அவர் ஆழ்ந்து உறங்குவதுபோல் சில பேட்ச்- அப் காட்சிகள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உணர்ச்சிபொங்க நடிக்கும் ஆர்வத்தில் தெம்புகூட்டி வந்திருந்தமையால் இப்படி அசைவின்றித் தூங்கும் காட்சியில் நடிக்க மிகவும் அசௌகரியப்பட்டார்.....மிக மிக நீண்ட காட்சியாக அது படமாக்கப்பட்டது.....
கட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவர் தூங்குவதைச் சுற்றி சுற்றிப் ப்டமெடுத்துக் கொண்டிருந்த கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம சார்... அப்டியே... ஜஸ்ட் ஒரு ஃபியூ செகன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே படமெடுக்க.......
"யோவ்! தூங்கத்தானயா செய்யுறேன் என்னமோ பிணமா நடிக்கிறமாதிரி சொல்லிக்கிட்டே இருக்க....?? அசையாம....அசையாமனு....சீக்கிரம் எடுங்கய்யா..!!"
நம்மாழ்வார் குரல் கரகரக்க....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அதற்குப்பின் தூக்கம் வரவேயில்லை அவருக்கு அன்றிரவு முழுதும்.......
6 comments:
சிறுகதை , நல்லா இருக்குங்க...... இரண்டு சிறு கதையை சேர்த்து எழுதிட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா...
நல்ல ப்ளோ.. பிரபு...
முடிவை யூகிக்க முடிந்தாலும்... வரிகள் சுவாரஸ்யத்தை கூட்டியே இழுத்து செல்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்
:)
ஒரே டேக்கில் வாசித்து முடித்தேன், அருமையான நடை. வாழ்த்துகள் பிரபு.
மனசுக்குள்ள என்னமோ பிசையுதுங்க
நன்றி சித்ரா அக்கா... எழுதுறது ஈஸி வாசிக்கிறது கஷ்டம்தான் :))
நன்றி கண்ணா.... ஃப்ளோ கரெக்டா வருமான்னு ரொம்ப பயந்திருந்தேன் இந்தக் கதையை எழுதியபோது உங்கள் கருத்துரை தைரியம் தருகிறது :)
@வி. பாலகுமார்..... ரொம்ப நன்றி நண்பா.... :)
மிக்க நன்றி விந்தைமனிதன்..... வருகைக்கும் ஊக்கத்துக்கும் :)
கதை மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!
Post a Comment