அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!
ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின் இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....
அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ ஃப்ளாஷ்பேக்ஸ்......
கருத்தரங்கைப் பொறுத்தவரை நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!
டாக்டர் ஷாலினி....
பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான் இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேடமாட்டோம்...
ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே பத்து மார்க் கிடைக்குது!!!
கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால், என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...
சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக" அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....
கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!
"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!
குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண் தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற, சிகிச்சை அளிக்கிற பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!
Hats off to you ma'am!!
Dr. ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க வீட்டு பிஞ்சுகளுக்காக...!!
குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...
குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....
இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....
பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....
குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும் இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)
எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....
அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு, இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!
மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)
இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....
வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...
பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....
அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,