சச்சினும் ரஹ்மானும்....!!






ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது  இரட்டை சதத்தைப் பார்த்து ரசித்தீர்களா!! :)

ஆஸ்காரையும் தாண்டி ரஹ்மான் கிராமியையும் வென்றதுவந்தது போல இருந்ததா!!!

நமது வாழ்வின் நாயகர்கள் அவர்கள் வாழ்வில் ஜெயிக்கும்போது ஏதோ நாமே ஜெயித்ததைப் போல் உணர்கிறோமே....  துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறோமே....இந்த உணர்வுக்கு.... ஒரு ரசிகனின் இந்த‌ மானசீக உறவிற்குப் பெயர்தான் என்ன!!

இன்றைக்கு சச்சின் ஹெல்மெட்டைக் கழற்றி இருகைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்த தருணத்தில் அவர் வீட்டில் என்னென்ன கொண்டாட்டங்கள் நடந்திருக்கும் என்பதை என் வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன்!! :)

நூற்றைம்பதைக் கடந்தபின்னர் கொஞ்ச நேரத்திலேயே  முதுகை வளைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.... அவரின் முதுகுவலிதான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே!! தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் "ஐயோ" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக!!! இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் "எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது!!" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா???!! :)

"இந்த இரட்டை சதத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு மனதால் உடனிருந்த இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" 

என இன்றைய‌ ஆட்டம் முடிந்ததும் சொன்னாரே சச்சின் அதுதான் இதற்கெல்லாம் பதில்!!!

சாதனைகளை யெல்லாம் மீறிய சாதனையாய் இரட்டை சதமடித்துவிட்டு இன்று அமைதியாய் பரிசுகளையும் பாராட்டுகளையும் அள்ளிச்சென்ற‌ சச்சினும் சரி..... ஆஸ்காரையும், கிராமியையும் அலேக்காக அள்ளிக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து அடுத்த படத்துக்கு ட்யூன் போட்ட‌ ரஹ்மானும் சரி... அவர்கள் வாழ்வில் அவர்கள் உழைத்தார்கள்.... அவர்களே வென்றார்கள்...."அவ்வளவுதான்" என உடனே அடுத்தக் கட்டத்துக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்!!!.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே....  நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா!! அல்லது அவர்களின் கனவுகளை நமது கண்களில் பொருத்திக்கொண்டு தூங்கச் செல்வதாலா!!

சத்தியமாக இது ஒரு நெகடிவ் பதிவல்ல ..... சச்சினும் ரஹ்மானும் என் வாழ்வின் ஆதர்ஷ நாயகர்கள்.... இருவரின் மெல்லிய குரல்கள்..... இணக்கமான உடல்மொழி..... வெற்றிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டும் மாறாத மேன்மை.....சர்ச்சைகளுக்கு சாதனைகளால் பதில் தரும் வீரம்.....வாழ்க்கையில் சிறிதும் அகலாத சீரியஸ்னஸ்..... சிறிதும் பிசகாத வார்த்தைகள்......தொழிலில் விட்டுக்கொடுக்காத சிம்ம‌த்தனம்..... அந்த கம்பீரம்..... தன்னம்பிக்கை..... இன்னும்கூட சொல்லிக்கொண்டே போவேன்...... ஏழு எட்டு வயதில் இவர்களைப் பார்த்து உயர்ந்த புருவங்கள்... இன்றும் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து நிற்கிறது இவர்களின் சிலிர்க்க வைக்கும் சாதனைகளுக்கு!!!

சச்சினையும் ரஹ்மானையும் அவர்களிடமிருக்கும் ஏதோவொன்று இருவரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்து வியக்க வைக்கிறது என்னை!!!

எவ்வளவு உண்டாலும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமென்று.... அடங்காது பசித்துக் கிடக்கும் இந்த சிங்கங்களின் ரசிகன் என்பதையே பெருமிதமாக உணர்கிற அதே சமயம்...." வாழ்வில் எப்போதும் பசித்திரு!!" எனப் பெருங்குரலெடுத்து அதிரும் இவர்களின் கம்பீர கர்ஜனையையும் மனதுக்குள் ஆழ ஒலிப்பதிவு செய்துகொள்வோமாக!!

இந்தவொரு சாதனை உண்மையில் மகத்தானது... 36 வயதில் முழுதும் தானே ஓடி எடுத்த முத்தான ரன்கள் இவை...
சச்சினின் இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கை ஓர் இரட்டை சதத்தால் மீண்டும் புதிதாய்த் தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..... ரசிகர்கள் அனைவருக்கும் தன் சாதனையை அர்ப்பணித்த தலைவன் இருக்கிறான் இன்றும் அப்படியே!!! :)




ரஹ்மானின் பாடலால் சச்சினை வாழ்த்துவோம் "ஜெய் ஹோ!!!!"



அன்புடன்,

என்னது.....?? கிஸ் தி டம்மியா!!!




சமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)

 தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...!!

என் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு!! ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்..... 

சரி...விஷயத்துக்கு வருகிறேன்....

என் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்!! :(

தமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் "தமிழ்"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, " இளைய நிலா பொழிகிறதே.." பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... "டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த‌ இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக‌!! இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.... 

போதாதற்கு ...... "வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்..." என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்.... 

அதற்கு அவளோ வெறுப்பில்.... " உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி...." (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...!!!

"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு????" 

ரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் "டாமில்" தங்கை கொடுத்த விளக்கம்....

"அவரு பேரு என்ன‌ .... "வயிரமுத்து"... வயிரை எதுக்கு முத்தணும்??... வொய் டூ கிஸ் தி  டம்மி??!! ஹி ஹி.... ஃபன்னி நேம்!!"

ஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் "டாமில்" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்!!! :))) 

வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))

பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!

அன்புடன்,

இது விவசாய நாடல்லவா....!!



இந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி! (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான்!)

சண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம்  நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...

புஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ  மதுரை) வந்துகொண்டிருந்தேன்...  இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...

வீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...!!
.
காற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....

"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல.."

எனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்!!

அப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான்  புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று!!

கிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை,  பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எடுத்தியம்பும்வரை!!

காணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....!

" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா....."

" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே.." (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை!!)

ப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)

" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக??..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்...."

" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே...."

ஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்!!

பேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் "வயலும் வாழ்வும்" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு!! (ஞாபகம் இருக்குதா??!!)

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை"

பொருள்:  உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்
 ஏர்த்தொழிலே சிறந்த்து!!

அன்புடன்,

ஃபெவிகால் விளம்பரங்கள்...




பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (!)
 ஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா!! :))



இதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்!!

கோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்!!)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...!!



ஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி!! இதெல்லாம் உச்சக்கட்ட சேட்டை!!



எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான்!! ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம்!! கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...



கேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...



இன்னும் ஒன்று...



இன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே "ஸ்டிக்கி" தீமிற்காக!!
ஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க!! எல்லாமே ஆரோக்யமான கற்பனைகள்!!

ஃபெவிகால் பற்றி யோசித்தபோது... "ஒட்டு" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....
யாராவது கடையில் சென்று, " ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா?? நேரடியாக "ஃபெவிகால்" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம்!! அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது!! (இதேபோல் இன்னொரு உதாரணம் "டால்டா" என்று அழைக்கப்படும் வணஸ்பதி!!)


ஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ!!


ஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன!!

எனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் "ஃபேர் அன்டு லவ்லி" விளம்பரம்தான்!! அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்)  திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு "ஃபேர் அண்டு லவ்லி" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்!!

"சைண்ட் கோபைன்" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....

மேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின்னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)

ஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் "ஃபெவிகாலு"க்கு வாழ்த்துக்கள்!!!!


மகிழ்வுடன்,

இது சேவாக் ஸ்டைல் :-)



"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்...."

இப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும்  அலட்சியமாய்  இடைமறித்து "ஹலோ....சப்ப மேட்டர்..." என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்!!!

டெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்!!)

சச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு "டூப்" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்!!

ஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....

" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்..." என்று,  இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது "வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது" என்று குட்டையைக் குழப்பினார்!!

பொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க்கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி!! நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்!!

எனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் "திமிர்" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய  இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே!!
கேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது!! அதை முன்கூட்டியே அறிவிப்பதில் "தவறு" என்று என்ன இருக்கிறது??

மேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை!!
கேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் "டம்மி பீஸா"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?

 "வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை  வீழ்த்த முடியாது" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி!! (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்!) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!!

 I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

ப்ரியமுடன்,

குழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்

அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!

ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின்  இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....

அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ   ஃப்ளாஷ்பேக்ஸ்......

கருத்தரங்கைப் பொறுத்தவரை  நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!

டாக்டர் ஷாலினி....

பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது  ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான்  இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...

ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே  பத்து மார்க் கிடைக்குது!!!
 கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால்,  என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த  அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...

சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக‌"  அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....

கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு  மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!

"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!

குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண்  தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட  விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!

Hats off to you ma'am!!

Dr.  ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...!!

குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...

குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....

இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....

பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....

குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும்  இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட  இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....

அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு,  இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!

மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)

இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....

வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...

பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....

அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,