"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!விகடனின் வலைதளத்தில் "யூத்ஃபுல் விகடன்"ல் இன்று என்னுடைய "ஏகநாயகி" சிறுகதை வெளிவந்துள்ளது!! "கிரேட்" பகுதியில் வெளியிட்டிருக்கும் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!! ஒரு பொது ஊடகத்தில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை...
என்னுடைய வலைப்பதிவிற்கு வருகை தந்து என்னுடைய எழுத்துக்களை உங்கள் கருத்துரைகளால் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்!!Click here to view the story in Vikatan.com ஏகநாயகிமாடிவீடுகளில் குடியிருப்பவர்களின் மனநிலையைக் கண்டிப்பாகப் படிக்கட்டுகள் வெளிக்காட்டிவிடுகின்றன! அவர்கள் ஏறுகிற மற்றும் இறங்குகிற விதங்கள் அவர்களது அப்போதைய மன உணர்வுகளை நிச்சியம் பிரதிபலித்துவிடும்.
ஞாயிற்றுக்கிழமை...
காபியுடன் செய்தித்தாள் புரட்ட நேரம் தரும் ஒரேநாள். வீட்டு வாசலில் அமர்ந்து அன்றைக்கு டி.வியில் என்ன படம் என்று பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீட்டு வசந்தனின் உற்சாகத்தை "சொத்... சொத்"தென்று சுரத்தையே இன்றி வினோத் படியிறங்கும் விதம் கொஞ்சம் சீண்டிப்பார்த்தது...
தொங்கிய தோள்களுடன் வினோத் படியிறங்கும் கோலத்தைத் தனது திரைப்படத் தேடலை ஒரு நிமிடம் ஒத்திவைத்து ஏறிட்டார். வினோத் அந்த 'நடையழகு' மாறாமல் பைக்கை எடுக்க, பின்னேயே... படிக்கட்டில் இப்போது அவன் மனைவி. கிட்டத்தட்ட வாரநாட்களில் வேலைக்குப் போகும் அதே ஒப்பனை, படியிறங்கும் வேகம் மட்டும் கொஞ்சம் குறைச்சல். சின்னதொரு பதற்றத்துடன் வினோத்தையே பார்த்த வண்ணம் படியிறங்கி வசந்தனைக் கடக்கிறாள். பைக் ஸ்டார்ட் ஆகிறது... மனைவி பின்னிருக்கையில் அமரப் பயணம் தொடங்கியது... கணவன் மனைவி முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவேயில்லை. வசந்தன் எதையோ புரிந்து கொள்கிறார்... தனது தேடலைத் தொடர்கிறார்!
வாரநாட்களின் நெரிசலின்றி சாலைகள் கொஞ்சம் மூச்சுவாங்கிக் கொள்வது போல் தன் அகலத்தைப் பரப்பி வாகனங்களுக்குத் தாரளமாய் இடம் கொடுத்திருந்தன. வினோத் மிகவும் இருக்கமாக அமர்ந்திருக்கிறான். மௌனமாகவே அமர்ந்திருந்த மனைவி வண்டியின் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் தன் முன்புறம் உள்ள கணவனின் முகத்தைத் தேடினாள். எதிர்க்காற்றில் கேசம் கலைந்து, முகத்திலடிக்கும் புழுதிக்காகக் கண்களை இடுக்கிக் கொண்டுத் தன் பாரத்தை சுமக்கும் வலியோடு வண்டியோட்டும்
வினோத்தின் முகத்தைப் பார்க்க அவளுக்கு மிகவும் பாவமாக இருந்தது.
வினோத்தால் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளமுடியாது. அவனது எதிர்பார்ப்புகளும் மிகப்பெரிதாக இருக்காது. சின்னச்சின்ன சராசரி எதிர்பார்ப்புகள்தான் அவனுடையது. ஆனால் அவை நிறைவேறாதபோது மிகவும் உடைந்துபோவான். அவ்வாறு உடைந்துபோய் விடுவதை மறைக்கவும் அவன் அதிகம் முனைவதில்லை. அவனது வேதியியல் மாற்றங்கள் யாவும் வெளிப்படையாகவே தெரியும். அதனாலேயே வினோத் முகத்தின் கவலை ரேகைகள் அவன் மனைவிக்கு உள்ளே ஊடுறுவி வலியை ஏற்படுத்தின...
ஒருவாறாகப் பயணம் முடியும் நிலையை அடைந்தது. இதோ இந்த சாலையின் வலதுபக்கத்தில்தான் மீராவின் வீடு உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் அதுவும் ஒன்று, அதனைக் கடக்க வேண்டி இடதுகையால் பைக்கைத் தாங்கிக் கொண்டுக் கஷ்டப்பட்டு வலதுகையை நீட்டி சிக்னல் செய்தவாறே ரோட்டின் வலப்புறம் வினோத் இறங்க... "நான் கை காட்டுறேன்... நீங்க விடுங்க.." என்று பயணத்தை முடித்து வைத்தாள் மனைவி.
மீரா வீட்டு வாசலில் பைக்கிலிருந்து இறங்கி, "ஈவினிங் நானே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்துடறேன், நீங்க சிரமப்பட வேண்டாம்" எனக்கூற, வினோத் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு... "போன் பண்ணு... நானே வந்து பிக் அப் செஞ்சுக்கிறேன்... ஆட்டோவெல்லாம் வேண்டாம்" எனக்கூறிக்கொணடே இறுக்கம் தளராமல் பைக்கைத் திருப்பிக் கிளம்பினான். அவன் தலைமறையும் வரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீராவின் வீடு நோக்கித் திரும்பினாள்.
வீட்டுமாடி ஜன்னல் வழியாக, "ஹாய்..! என்னப்பா இவ்ளோ லேட்டா வர்றே?" என வரவேற்ற மீராவைப் பார்த்துப் புன்னகைத்தவாறே வீட்டினுள் நுழைந்தாள்.
"உடன் பணிபுரியும் நெருக்கமான தோழி இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்கிறாள், அலுவலகத் தோழிகள் அனைவரும் கலந்துகொள்ளும் பார்ட்டியை எப்படிப் புறக்கணிப்பது? கொஞ்சம் புரிஞ்சுக்கோடா புருஷா!" என மனதுக்குள் நினைத்துக் கொண்டே விருந்தில் ஐக்கியமானாள் திருமதி. வினோத்!
"கிடைக்கிற ஒருநாள் விடுமுறையையும் இப்படி கமிட் பண்ணிக்கிட்டா, வீட்டுவேலைகளை எப்போதான் பார்ப்பது?" என்று தன்பக்க நியாயத்தை நினைத்துக் கொண்டே பைக்கைப் பள்ளத்துக்குள் விட்டான் வினோத்.
சரியான பள்ளம்... நலலவேளை கீழே விழவில்லை. என்ஜின் அணைந்துவிட்டது. இருகால்களையும் தரையில் ஊன்றி பலம்திரட்டி வண்டியைப் பள்ளத்திலிருந்து மீட்கிறான். சுற்றிமுற்றி அனைவரும் அவனைப் பார்த்தவாறே கடந்து செல்வதைப் பார்க்கக் கொஞ்சம் கூசியது. ஒருவழியாகப் பள்ளத்தைக் கடந்தாகி விட்டது. அதுவரை மனதில் மையம் கொண்டிருந்த ஒரு விரைப்பு இளகியது.
இயல்பு நிலையடைந்தவுடன், "எதற்காக இத்தனை இறுக்கம்?" என்கிற ரீதியில் எதுவுமே தெரியாமல் ஏதோ பாதியிலிருந்து கதை படிக்கும் ஒரு வாசகனைப் போல் அவன் மனம் அவனையே கேட்டது!
வினோத்துக்கு நிச்சியமாக ஒரு "இடைவேளை" தேவைப்பட்டது. ஆஹா... அருகிலேயே ஒரு டீக்கடை. பைக்கை ஓரமாக
நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று பெஞ்சில் அமர்ந்தான். சூடாக பாய்லர், அருகே தளதளவென கொதிக்கும் பால், வடிகட்டியில் புது டிக்காஷன்...
அந்த நறுமணத்தை ஒருமுறை முகர்ந்து முடிக்கும் முன்னேயே சுடச்சுட நுறைபொங்கக் கண்ணாடி தம்ளரில் தேநீர் முகமருகே நீட்டப்பட்டது.
வாங்கிப் பருகப் பருகப் புது ரத்தம் சுரப்பது போன்ற ஓர் உணர்வு...
இன்னும் இளமையாக உணர்ந்தான். தன் கல்லூரிக்கால நினைவலைகளில் மூழ்கினான்.
ஸ்வேதா... அந்த இனிய நாட்களின் நாயகி! திருமணத்துக்குப் பிறகுதான் மனிதனுக்கு வாழ்வில் முடியுதிர்காலங்கள் நிகழ்கின்றன. அதுபோன்ற நேரத்தில் இதுபோல வாழ்வில் வந்துபோன சில வசந்தகாலங்களை நினைத்து மனதாறிக்கொள்வது வினோத்தின் வழக்கம். அவன் வாழ்வின் வசந்தகாலம் என்றாலே அது ஸ்வேதாவுடனான காதல்காலம் தான்!!
டீயை ருசித்து முடித்துப் பயணம் தொடர பைக்கைப் பார்த்தான், இப்பொழுது வண்டி புதிதாய்த் தெரிந்தது. ஏறியமர்ந்தான் ஒரேமிதியில் வண்டி ஸ்டார்ட் ஆனது. வண்டிக் கண்ணாடியில் முகம்பார்த்தான். சற்று நேரத்திற்குமுன் அவன் மனைவி தன் கணவனின் அகத்தின் அழகை முகத்தில் பார்த்த அதே கண்ணாடி... வினோத்திற்கு இப்பொழுது அதில் ஸ்வேதாவின் முகம் தெரிந்தது.
கூந்தல் பறக்க சுடிதாரில் இளமையாக வினோத்தின் பின்னால் ஸ்வேதா அமர்ந்து வலம் வந்த அந்தக்காலம் இப்போது அந்தக் கண்ணாடியில் தெரிந்தது.
ஸ்வேதாவோடு உற்சாகமாய் பைக்கை வீடு நோக்கி செலுத்தினான். வீடு வந்துவிட்டது.
வசந்தன் இன்னும் செய்திதாளைப் புரட்டி முடிக்கவில்லை. இம்முறை வினோத் இரண்டிரண்டு படிகளாகத்தாவி வேகமாக வீட்டை அடைந்தான். கதவு திறந்ததும் அலங்கோலமாய் பொருட்கள் இறைஞ்சிக்கிடந்தன. மனைவி மீது கடும் வெறுப்பு வந்து முட்டியது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான், காலை பதினோரு மணி. ஒருமுறை உடல் கோணி நெட்டிமுறித்துவிட்டு வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையில் இறங்கினான். முன்னதாக அது பலநாள் ஒத்திவைப்புக்குப் பின் இவ்வார இறுதியில் இருவரும் இணைந்து செய்வதாகத் திட்டமிடப் பட்டிருந்த வேலை!
சனிக்கிழமை... மனைவிக்கு வழக்கம் போல் பணிவிடுப்பு கிடைக்கவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்று வேலையை முடித்தாக வேண்டிய கட்டாயம். இன்றைக்குள் வீட்டை சீர்படுத்திவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தான் வினோத். அது நன்கு தெரிந்தும் மீராவின் விருந்துக்கு சென்றதை நினைக்க நினைக்க வினோத்துக்கு வெறுப்பு கொப்பளித்தது.
அத்தனை கோபத்தையும் செயலில் காட்டிப் படுவேகமாகப் பொருட்களை ஒழுங்கு வைத்தான் வினோத். பெரும்பாலும் ஓர் ஒழுங்கற்று சிதறிக்கிடந்தது அவன் மனைவியின் பொருட்கள்தான். அதிலும் குறிப்பாக அவளது அலங்காரப் பொருட்கள்தான்! வேலையின் சோர்வு தெரியாமலிருக்க கூட சேர்ந்து பாடிக்கொண்டிருந்தது எப்.எம் ரேடியோ.
"நேரம் இப்பொழுது பன்னிரண்டு மணி நாற்பது நிமிடம்."
பெருங்களைப்பாக உணர்ந்தான் வினோத். இதற்குமேல் தனியாக இந்த வேலையை செய்ய முடியாது என்ற நிலையை அடைந்தகணம் அவன் கண்ணில் ஒரு குட்டிப் பை பட்டது. பலநாட்களாக அவன் பொதிந்து வைத்திருந்த பொக்கிஷம் அது!
ஸ்வேதாவின் நினைவுகளைத்தான் பொதிந்து வைத்திருந்தான் அந்தப் பைக்குள்!
அவனைப் பொறுத்தவரை அவை அவனது காதலின் நினைவுச்சின்னங்கள் அல்ல, அவனது காதலின் அடையாளங்கள், காதலித்ததன் அர்த்தங்கள்!
அவன் அதை மறைத்தோ, ஒளித்தோ வைத்திருக்கவில்லை. அடிக்கடி அதை அவன் எடுத்துப் பார்ப்பதுண்டு. உள்ளே வழக்கம்போல் ஸ்வேதாவின் பழைய கைக்குட்டைகள், காலி நெயில் பாலிஷ் பாட்டில்கள், ஹேர் கிளிப்புகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் தொட்டுப்பார்த்தான். அவை ஒவ்வொன்றும் அவனுக்கொரு கதைசொல்லும் போலும். உள்ளே பாதிப்புகைத்த சிகரெட் துண்டு ஒன்று கிடைந்தது. ஸ்வேதாவுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் கிடையாது. அது ஸ்வேதாவுக்குப் பிடிக்காது என்று வினோத் மங்களம் பாடிய கடைசி சிகரெட்!
அதுமுதல் இன்றுவரை வினோத் புகைபிடித்தது கிடையாது. இப்படித் தோண்டத் தோண்டக் கிடைத்தப் புதையல்களுக்கு அடியில் ஆழத்தில் ஒரு கவர். அது ஒரு கல்யாணப் பத்திரிக்கை. அதைத் திறக்கிறான். வினோத்-ஸ்வேதாவின் திருமண அழைப்பிதழ் ஒரு பளபளப்பான காஸ்ட்லி கார்டில் அச்சிடப்பட்டிருந்தது.
ஏதேதோ நினைவலைகளில் மூழ்கியவனாக அதை அப்படியே ஒருமுறை தன் விரல்களால் வருடினான். அதற்கும் ஆழத்தில் ஒரு புகைப்படம். அதில் மணக்கோலத்தில் வினோத் மற்றும் ஸ்வேதா அருகருகே நின்றிருந்தனர். வினோத்திற்குத் தன்னுள்ளார்ந்த காதலை உயிர்ப்பித்ததோர் உணர்வு. அதில் அதிக நேரம் லயித்திருப்பதைத் தடங்கல் செய்தது காலிங்பெல் சத்தம். கதவைத் திறந்தான்... அங்கு ஸ்வேதா நிற்கிறாள்..!
வினோத் அவளை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
"உங்களைத் தனியா இங்கே விட்டுட்டு என்னால அங்கே பார்ட்டியில் நிம்மதியா கலந்துக்கவே முடியல. அதான் பாதியிலேயே ஓர் ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன். ஐம் ஸோ ஸாரி வினோத்!" புன்முறுவலுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் திருமதி. ஸ்வேதா வினோத்!
பிரபு. எம்
5 comments:
கதையோட்டம் நல்லா இருக்கு,
எழுத்து நல்லா வந்திருக்கு.
வாழ்த்துக்கள்
//மாடிவீடுகளில் குடியிருப்பவர்களின் மனநிலையைக் கண்டிப்பாகப் படிக்கட்டுகள் வெளிக்காட்டிவிடுகின்றன! அவர்கள் ஏறுகிற மற்றும் இறங்குகிற விதங்கள் அவர்களது அப்போதைய மன உணர்வுகளை நிச்சியம் பிரதிபலித்துவிடும். //
ஆரம்பமே அசத்தல், பொறுங்கள்... முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்.
Superb Story prabu...
follower option? include it boss..
அந்தக் கடைசி ட்விஸ்ட் நல்லா இருக்கு நண்பா.. எத்தனை பேர் இன்னைக்கு கல்யாணத்திற்கு பிறகும் லவ் பண்றாங்க? நல்ல கரு.. வாழ்த்துக்கள்.
Post a Comment