நான் கடவுள் - "அஹ‌ம் பிர‌ம்மாஸ்மி"


ரொம்பவே காலம் கடந்துவிட்டது... எனினும் இப்பொழுதுதான் படத்தைக் காண நேர்ந்தது.... படம் வந்த சமயமே பார்த்திருந்தாலும் கூடக் கண்டிப்பாக விமர்சனம் எழுத எண்ணியிருக்க‌ மாட்டேன் இதேபோல சில தாக்கங்களை மட்டும்தான் பதிவிட முயன்றிருப்பேன்...

எப்போதும் செல்லும் கோயிலிலும், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்களிலும் அடிக்கடிப் பார்த்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பரிச்சியமானவர்கள் என்றுதான் கூறவேண்டும்! ஏனெனில் இப்போது நினைத்துப் பார்க்கையில் ஏதோவொரு விதமாக உடல் நெழிந்துபோய்க் கால்கள் விரிந்த நிலையில் அமர்ந்தவாறு ஒரு கையில் செருப்பு மாட்டித் தரையில் ஊன்றி நகர்ந்து நகர்ந்து பிச்சையெடுத்த ஓர் உருவம் அடிக்கடிப் பார்த்திருப்பதாகத் தெளிவாகத் தோன்றுகிறது மனதில்... முகம் நினைவில்லை ஆனால் ஊணம் அழுத்தமாக‌ நினைவிலிருக்கிறது!

மேலும்... முகம் முழுக்கச் சுருங்கிப்போன சர்ச்சு வாசல் பாட்டிகள்... கால்களில் கிள்ளிப் பிச்சை கேட்ட‌ பஸ் ஸ்டாண்ட் அழுக்குச் சிறுமி, சில வேளைகளில் நான் காஃபி வாங்கிக் கொடுத்திருக்கும் ஒரு பைத்தியக்காரன்.... (கடைக்காரன் தேங்காய்ச் செரட்டையில்தான் அவனுக்குக் காஃபி கொடுப்பான்) நன்றாகவே நினைவிருக்கிறது.... ஒரு கட்டத்தில் தினமும்கூடப் பார்த்திருக்கிறேன் இவர்களை....
வெவ்வேறு அலுவல்களில் அங்குமிங்கும் அலைகிறபொழுதுகளில் தவறாமல் குறுக்கே வந்து கண்ணில் தினமும் பட்டிருக்கிறார்கள் மேற்கூறிய மிகவும் பரிச்சியமானவ‌ர்க‌ள்!!

தினம்தினம் பார்த்திருந்தும், சில்லறை தானம் கூடத் தவறாமல் செய்திருந்தும், தாண்டிச் சென்றபின் ஒருகணம்கூட நினைத்துப் பார்த்ததில்லை இவர்களை... மொத்தமாக நினைத்துப் பார்க்க வைத்துவிட்டார் பாலா!!!

"அகோரி"கள் பற்றி முற்றிலும் அறிந்திருக்க‌வில்லை "நான் க‌ட‌வுள்" வெளிவ‌ரும்வ‌ரை... காசியையும் இவ்வ‌ள‌வு விரிவாக‌க் கண்டிருக்க‌வில்லை முந்தைய‌ ப‌திவுக‌ளில்... எரியும் பிண‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் ப‌ரிச்சிய‌ம் "பிதாம‌க‌ன்" புண்ணிய‌த்தில்!

நாம் ந‌ன்க‌றிந்த‌ பிச்சைக்கார‌ர்கள்.... அதேவேளையில் அறியப்படாத‌ அவ‌ர்க‌ளின் உல‌கம்.... வேற்றுகிர‌க‌வாசிக‌ளைவிடத் தூர‌மான‌ அகோரி சாமியார்கள்.... சாவுட‌ன் வாழ்வு ச‌ங்க‌மிக்கும் அவர்களின் புதிர் உல‌கம்... எல்லாம் சேர்த்து புனைந்த‌ திரைக்க‌தை...

ம‌ர‌ண‌த்தைத் த‌ண்ட‌னையாக‌ வ‌ழ‌ங்கும் அதிகார‌ம் ப‌டைத்த‌ நாய‌க‌ர்க‌ள் புதித‌ல்ல‌ ந‌ம‌க்கு..
ம‌ர‌ண‌த்தை வ‌ர‌மாக‌வும் வ‌ழ‌ங்கும் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" ருத்ர‌ன் வேறொரு உலகிலிருந்து (இருக்குமிடம் மட்டும் காசி) ந‌ம் உல‌கில் புகுந்து நம் காதுக‌ளில் விழாத சில கொடூர ஓல‌ங்க‌ளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் த‌ன் வழியை நோக்கி சென்றுகொண்டேயிருக்கிறார் உச்ச‌க் காட்சியில்!!

கண்ணில்லாத‌ இள‌ம்பெண்.... பாட்டுப்பாடி யாச‌க‌ம் செய்ப‌வ‌ள்.... அவ‌ளை ஒரு சிங்க‌த்தின் கூண்டில் போட்டிருந்தால் அடித்துக் கிழித்து உண்ண‌ப்பட்டாலும் ஒருவேளைக்கு உண‌வாகி அத்தோடு செமித்துப் போயிருப்பாள்... ப‌ண‌ம் ம‌ற்றும் காம‌ப் ப‌சிக்குத் த‌ப்பித்துப் பார்வையுமின்றி அனாதையாய் ஓடி ஓடி சீர‌ழிந்திருக்க‌ மாட்டாள்...துர‌த்திய‌வ‌னையும்.... அவ‌ளை முற்றிலுமாய் சிறைப்பிடித்து வைத்திருந்த‌ எம‌காத‌க‌னையும் அடித்தே கொன்று ந‌ர‌க‌த்துக்குத் தாரைவார்க்கிறார் பின்... அவ‌ளுக்கும் அதே ம‌ர‌ண‌த்தை -ஆனால் இம்முறை "வரமாய்"க் கொடுத்து, மீண்டுமிந்த‌ பூமியில் பிறக்கும் "அதிகபட்ச‌ த‌ண்ட‌னையையும்" ர‌த்து செய்துவிட்டுப் போகிறார் அகோரி சாமியார்!!

ருத்ர‌ன் விஷ‌மிக‌ளை வ‌த‌ம் செய்த‌தோடு சென்றிருந்தால் வெறும் "க‌ட‌வுளாக‌த்" தான் போயிருப்பார்... மேற்கொண்டு பூஜாவை "வ‌ர்தான்" செய்த‌தன் மூலம் பிரம்மப் படைத்தலின் பிழையொன்றை நீக்கிவிட்டு செல்கிறார் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" என்று உருமிக்கொண்டு!!... நம் ப‌ச்சாதாப‌த்துக்கோ க‌ழிவிர‌க்க‌த்துக்கோ கோரிக்கை வைத்து ஒரு ம‌ர‌ணத்துடன் ப‌ட‌த்தை முடிக்க‌வில்லை.... படைத்தவனின் பிழைக‌ளால் த‌விக்கும் உயிர்க‌ளின் ஓல‌த்தைக் கேட்க‌ ந‌ம்மிடம் நாதியில்லை என்று முக‌த்தில் அறைந்து ஒரு "கொலை"யுட‌ன் முடித்திருக்கிறார்.....

ந‌ம்மைப் பாகிஸ்தான் தீவிர‌வாதிக‌ளிட‌மிருந்தும் லோக்க‌ல் தாதாக்க‌ளிட‌மிருந்தும் தொட‌ர்ந்து காத்துவ‌ருவ‌தில் பிசியாக‌ இருக்கும் ந‌ம‌து வ‌ழ‌க்க‌மான‌ நாய‌க‌ர்க‌ளை டிஸ்ட‌ர்ப் செய்யாம‌ல் வேறொரு உல‌க‌த்திலிருந்து ஆர்யாவை அழைத்துவ‌ந்த‌திலேயே சொல்ல‌வ‌ந்த‌தை சொல்லிமுடித்துவிட்டார் பாலா..... கதாபாத்திர‌ங்க‌ள் யாவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாத கமலஹாசனின் ஒரே ஒரு ப‌டம் தானே "பேசும் ப‌ட‌ம்" என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து! பேசாமல் பேசிவிடுவ‌து பாலாவுக்கும் ஒன்றும் அந்நிய‌மான‌த‌ல்ல‌.... "வார்த்தை த‌வ‌றி விட்டாய்.." என்று பின்புல‌த்தில் ராஜா உருக வாழ்வு முற்றிலும் சூன்ய‌மாகிப் போய்விட்ட‌தை ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல் மொட்டை "சேது" பாண்டிம‌ட‌ம் வ‌ண்டியில் ஏறுமுன்பு ஒருமுறைத் த‌லைதிருப்பிப் பார்ப்பானே... அதை வ‌ச‌ன‌ங்க‌ளால் பேசிவிட‌ முடியுமா?? "என‌க்குத் தெரியும் மா.." என்று ம‌ட்டும் சொல்லிவிட்டு விஷ‌ம் க‌ல‌ந்த‌ சோற்றை மொத்த‌மாக உண்டு ம‌டியும் "நந்தா"வுக்கும் வ‌ச‌னங்கள் தேவைப் ப‌ட‌வில்லை..... வெட்டியான் சித்தனும் ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல்தான் அவ‌னுல‌கை ந‌ம‌க்குப் புரிய‌வைத்தான்... ஆனால் இங்கு எத‌ற்காக‌ இந்த‌க் குருட்டுப் பிச்சைக்காரி ம‌ட்டும், அவ‌ள் ர‌ண‌ங்க‌ளின் வேதனையை மொத்த‌மாக‌ நாம் உள்வாங்கிக் கொண்ட‌பின்னும், நீளமாய்ப் பேசுகிறாள் என்ப‌து ம‌ட்டும்தான் புரிய‌வில்லை... பாலாவுக்கு வ‌ச‌ன‌ங்க‌ள் தேவையா!

நான்கு வ‌ருட‌ங்க‌ள் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டதையும் ஆர்யா என்கிற கமர்ஷியல் ஹீரோவின் கால்ஷீட் விரைய‌மாகி விட்ட‌தையும் இணைத்துதான் பெரும்பாலான‌ விம‌ர்சன‌ங்க‌ள் வெளிவ‌ந்திருந்த‌ன‌... "சிவாஜி தி பாஸ்" வெளிவந்த‌ போது "இவ்வள‌வு செல‌வு தேவையா?" என்றும்... "நான் க‌ட‌வுள்" ப‌ட‌த்துக்கு "இவ்வ‌ள‌வு நாள் எடுத்திருக்க‌ வேண்டுமா?" என்றும் கேள்விக‌ள் ப‌ர‌வ‌லாக‌ முளைத்த‌ன‌.... கேட்ட‌வ‌ர்க‌ள் பார்வையாள‌ர்க‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும்தான்.... உண்மையில் கேட்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் த‌யாரிப்பாளர்களும் ஆர்யாவும்தானே... அவ‌ர்க‌ளுக்கில்லாத‌ ச‌ங்க‌ட‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்ப‌தும் புரிய‌வில்லை.....

விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளை வைத்து ம‌ட்டும்தான் பாலா ப‌ட‌ம் எடுப்பாரா? என்று கேட்டால்.... பாலாவும் எடுக்க‌வில்லையென்றால் பிச்சைக்கார‌னையும் வெட்டியானையும் on duty ல் ம‌ட்டும்தானே நாம் பார்த்திருப்போம்... ந‌ம‌து கேம‌ராவின் வெளிச்ச‌ம் கொஞ்ச‌ம் ஊடுறிவியும் பாய‌ட்டுமே!

வாழ வழியில்லாதவர்களை வாழ‌ அனும‌திக்கும் குண‌த்தை பூமி இழ‌ந்து நாளாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டும் நித‌ர்ச‌ன‌மாக‌ப் புரிகிற‌து.... விளைவுக‌ள் புரிய‌வில்லை!!

பிர‌பு. எம்

4 comments:

saji said...

very gud post

துளசி கோபால் said...

//வாழ வழியில்லாதவர்களை வாழ‌ அனும‌திக்கும் குண‌த்தை பூமி இழ‌ந்து நாளாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டும் நித‌ர்ச‌ன‌மாக‌ப் புரிகிற‌து.... //

சரியான பஞ்ச்!!

KADUVETTI said...

mmmmmmmmmmm

ஆடிப்பாவை said...

எனக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் குறிப்பிடத்தக்க படம் நான் கடவுள்..
அதில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரம் உள்ளது உன்னிடத்தில்
என்னும் பாடலடிகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

Post a Comment