"மொழி" போல் ஒரு திரைப்படம்....!!



" நிறைகுடம் போலப் படம் ஒன்று வந்தால் ரசிகனுக்கு அது சுபதினம்.." 

என்று ஒரு பழைய படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்... அதுபோல ஒரு சுபதினம்தான் நம் தமிழ்த் திரையுலகத்துக்கு 2007 ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள் !!

தமிழ்த்திரையின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் அன்று ஒரே நாளில் வெளிவந்தன... 

ஒன்று... இயல்பான வியர்வை வாசனையில் செண்ட்டைத் தெளிக்காமல், யதார்த்தத்தையே இன்னும் படு யதார்த்தமாகக் காட்டித் திகைக்க வைத்த‌ "பருத்திவீரன்". 

இன்னொன்று.. வாழ்க்கையின் அழகை, ஆனந்தத்தை, இயல்பான புன்னகையை இரட்டிப்பாக இனிக்க இனிக்க வழங்கிய "மொழி".

"மொழி"யைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.... அப்போது அவர் ஆனந்த விகடனில் "சொல்லாததும் உண்மை" என்கிற தன் சுயசரிதம் போன்றதொரு தொடரை எழுதிவந்தார்.... அதில் "மொழி" வெளிவந்த வாரத்தில் அவர் சொல்லியிருந்தவை: 

"ஒரு காலேஜுக்குப் பேசப் போயிருந்தேன்..... அப்போ அங்கே ஒரு பொண்ணு ஓடிவந்து...' இப்போ இருக்குற சினிமா போஸ்டர்ஸ்ல எல்லா ஹீரோக்களும் அரிவாள்ல ரத்தம் சொட்ட கோபமா முறைக்கிறாங்க, ஹீரோயின்கள் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி போஸ் தர்றாங்க... திரும்புற பக்கமெல்லாம் இந்த மாதிரிதான் போஸ்டர்ஸ், ஹோர்டிங்ஸ் இருக்குது... ஆனா "மொழி" பட போஸ்டர்ல எல்லோருமே மனசு விட்டுச் சிருக்கிறாங்க.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சார்... ஆல் தி பெஸ்ட்' நு சொல்லிட்டுப் போனா...... இருபது வயசு இளைஞர் கூட்டத்தில் ஒருத்தி.... எனக்கு அவளோட சந்தோஷம் பார்க்கப் பிடிச்சிருந்தது!!"

இதைப் படிக்கும்போது நமக்கும் அந்தப் பொண்ணு குறிப்பிடுகிற போஸ்டர் கண்முன் ஞாபகம் வரும்... ஏன்னா "சிரிப்பு" அவ்ளோ அழகான விஷயம்!! "மொழி" யின் போஸ்டர், ஹோர்டிங், விளம்பரங்கள், ஏன் டிவிடி கவர்களைக் கூட, கதாபாத்திரங்களின் இயற்கையான புன்னகைதான் அலங்கரித்திருந்தது..... திரையில் கதாபாத்திரங்கள் கபடின்றி சிரிக்கப் படத்தைப் பார்த்து சென்ற கூட்டமும் இன்முகத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறியது....!  

"எனக்குப் படம் பார்த்த மாதிரியே இல்ல... ஏதோ ஒரு புத்தகத்தை ரசிச்சு வாசிச்சு முடிச்ச உணர்வு வந்திச்சு!!"  
என்று கூறினான் படத்தைப் பார்த்துவிட்டு ஃபோன் பண்ண என் நண்பன் ஒருவன்!! ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிக்கைகளும், சேனல்களும்கூட கவனமாகத் தேர்ந்தெடுத்த‌ வார்த்தைகளைக் கொண்டே "மொழி"யை விமர்சித்தன.....!!!

நான் "மொழி"யில் வியந்த ஒரு விஷயம்...  

சினிமா என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் கூட்டுமுயற்சி... இதன் கேப்டனான இயக்குனரின் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு மற்ற கலைஞர்களும், டெக்னீஷியன்களும் தங்கள் திறமையால் திரைப்படத்துக்கு நயமாக மெருகேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலான விதி... இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கூட்டுமுயற்சியிலும் இது சாத்தியமாக வேண்டுமெனில் இயக்குனரின் கற்பனையானது ஒவ்வொரு கலைஞனின் மனத்திரையில் ஓடும்போதும் அவர் மூளையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் (இதை ஏதோவொரு டிவிடி யில் பார்த்தோமே... என்று ஞாபகப் படுத்தக்கூடாது!! ஹி..ஹி!!) ... அதனை உள்வாங்கிய நொடியில் இசையாய், ஒளியாய் அவரவர் மொழியில் பெயர்த்திட‌ துடித்தால்தான் உண்மையில் அந்த கூட்டுமுயற்சி வெற்றிபெறுவது நியாயம்.... "மொழி"யைப் பொறுத்தவரை அந்த நியதி முழுமையாய் ஒருங்கேறிக் கைகூடியதுதான் வியந்து பார்க்க வைக்கிறது.... 

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனுக்கு மொழியே தேவையில்லை..." 

ராதாமோகனும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜும் படத்தின் கதையை சொல்லி முடித்ததுமே கவிஞர் வைரமுத்து உதிர்த்த வரிகளாம் இவை..... ராதாமோகன் கற்பனை செய்த, மவுன மொழிபேசும் "அர்ச்சனா"வை அப்போதே அவர் அள்ளி அரவணைத்து தன் தோளில் போட்டுக்கொண்டார் என்றுதானே அர்த்தம்!! 

சாதாரணமாகக் காதல் வசனம் பேசும்போதே ஜோதிகாவின் கண்களும் முகமும் நாசியும் அவர் வாயோடு சேர்ந்து தானும் பேசிக்கொண்டிருக்கும்.... எனவே மவுனத்தாலே பேசவேண்டிய கதாபாத்திரத்துக்குள் உடலோடும் உயிரோடும் அவர் கலந்து போனதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.....ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஒரு "காக்க.. காக்க"வும் "சந்திரமுகி"யும் முத்தாய்ப்பாய் இந்த "மொழி"யும் வந்திருக்காவிடில் ஒரு சாதரண அழகிய‌ பப்லி கேர்ளாகவே (Bubbly Girl) சூர்யாவோடு அவர் செட்டிலாகிவிட‌ நேர்ந்திருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்!! 

"மியூசிக்" எப்படி இருக்கும்? என்று கேட்டு ஸ்பீக்கர்களில் கைவைத்து அதன் அதிர்வுகளால் "இசை"யை உணரும் ஊமைப் பெண்ணாக அவர் நடித்த அந்தக் காட்சிதான் ஏனோ மனதில் ஒருமுறை வந்துபோனது அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது "முத்தழகி"க்குக் கிடைத்தற்காகக் கை தட்டிக் கொண்டிருந்தபோது!!

பக்கத்து ஸ்டேட்டின் ஆக்ஷன் ஹீரோ, இங்கு ஒரு சின்ன பாக்யராஜாகத் தன்னை செதுக்கிக்கொண்டு மந்தைவெளியில் மணிக்கு அறுபது கி.மீ வேகத்தில் ஓடி அந்த angry dog கிடம் கடி வாங்கும் நாயகன் பிருத்வி..... தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நம்மை லயித்து சிரிக்க வைத்த பிரகாஷ்ராஜ்...... பிருத்விராஜுக்கு சைகை மொழி கற்றுக் கொடுக்கும்போது உண்மையிலேயே அதுபோன்ற ஒரு குழந்தைக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஒரு டீச்சர் போலவே கணிவான உடல்மொழி காட்டிய ஸ்வர்ணமால்யா..... பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமையப் பெற்றிருந்தாலும், ஏதேதோ ஆங்கிள்களில் கேமராவை நகர்த்தி நகர்த்தியே அழகு செய்த குகன்.... வீடுகளையும், ஜோதிகாவின் அறையையும் அந்த அபார்ட்மெண்ட்டையும் ரம்மியமாய் அரங்கமைத்த கதிர்.... மௌனத்தை ஓர் இசையாகவும், இசையை ஒரு மொழியாகவும் ஆராதிக்கும் படத்துக்குத் தேர்ந்த மெட்டுக்களால் இசையமைத்த வித்யாசாகர்... என்று எல்லாருமே அற்புதமான இந்தக் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு ஒருங்கே மெருகேற்றிச் செதுக்கிக் கொடுத்த, நினைவில் நீங்கா செல்லுலாய்ட் கல்வெட்டு, டூயட் மூவீஸ் (கடன் வாங்கி) வழங்கிய இந்த அழகிய "மொழி"!! 

பாதசாரிகள் ரோட்டைக் கடக்க ரோடுகளில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைக் கோடுகளை, ஆர்மோனியக் கட்டைகளாய், அதன் இசை கேட்க முடியாத‌ ஜோதிகா உணர்வதும்.... அதே வாத்தியப் பின்னணி இசைக்கு பிருத்வி, பிரகாஷ்,ஸ்வர்ணமால்யா அழகாய் நடனமாடுவதும்.... ஒரு மௌனக் கவிதையாய் "காற்றின் மொழி.." பாடலில் படமாக்கப் பட்டிருக்கும் அந்தக் காட்சி... மேலே சொன்னக் கூட்டு முயற்சிக்கு ஒரு சோறு பதம்!! :)  

நான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த "மொழி"யைப் பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்றொரு உணர்வு இருந்துவந்தது... இதோ எழுதிவிட்டேன்..... :) இன்னும் இதுபோல் ரசித்துப் பார்த்த ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கிறது சாத்தியம் இருந்தால் அந்தப் படங்களை சிலாகித்ததையும் பகிர்ந்து கொள்கிறேன்... 

அன்புடன்...

27 comments:

ஷாகுல் said...

நல்ல பதிவு.

உங்க பிளாக்ல மால்வேர் இருப்பதாக கூகிள் குரோம் சொல்லுதுங்கோ.

பிரபு . எம் said...

நன்றி ஷாகுல்.... :)

நானும் கவனித்தேன்...கூகுள் க்ரோம் பொய் சொல்லுதுங்க!! :)
இனிமேல் அப்படி வராது.. Issue Resolved.

அக்பர் said...

விமர்சனம் அருமை.

அக்பர் said...

word verification ‍‍ ஐ எடுத்துவிடவும்

பிரபு . எம் said...

வணக்கம் அக்பர்...
கருத்துரைக்கு ரொம்ப நன்றி.. :)

word verification??? புரியல நண்பா என்ன சொல்றீங்கன்னு.....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மொழி ஒரு அருமையான படம்

விமர்சனம் நல்லாருக்கு

பிரபு . எம் said...

நன்றி ஸ்டார்ஜன்...

Very nice meeting you :)

பிரபு . எம் said...

//word verification ‍‍ ஐ எடுத்துவிடவும்//

Word Verification எடுத்தாச்சு பாஸ் :-)
இனிமேல் ஃப்ரீயா கருத்துரை சொல்லலாம்...

Toto said...

ரொம்ப‌ அழ‌கா எழுதியிருக்கீங்க‌.. என‌க்கு எம்.எஸ்.பாஸ்க‌ர் க‌தாபாத்திர‌ம் ரொம்ப‌ பிடிச்சிருந்தது. இனிமையான‌ ப‌ட‌ம்.

-Toto
www.pixmonk.com

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா நான் ஒரு சினிமாக்காரன். நானே இதுவரை அந்தப் படத்தை 37 தடவைப் பார்த்து இருக்கேன்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம் அது.

பகிர்தலுக்கு நன்றி.

சின்ன அம்மிணி said...

எனக்கு ரொம்ப பிடித்த படம் மொழி. பலமுறை பார்த்திருக்கிறேன். எல்லா கதாபாத்திரங்களும் அழகாக செதுக்கப்பட்டிருக்கும் படம்.

♠ ராஜு ♠ said...

சூப்பரா எழுதியிருக்கீங்க பாஸ்.
ஒரே மூச்சுல படிச்சுட்டேன். செம Flow.

sridhar sona said...

உண்மையான, உணர்வுபூர்வமான உங்களது அனுபவத்தை அழகான வார்தைகளில் அருமையாக சொல்லியிறுக்கும் பிரபு அண்ணாவுக்கு .......என் வாழ்த்துக்கள்.
ஆம் அண்ணா வாழ்கையில் சிரிப்பு என்பது மிகவும் அழகான விசயம், அதுவும் உங்களுடைய சிரிப்புக்கு பல நண்பர்கள் உண்டு அதில் நானும் ஒருவன் என்பது மிக்க மகிழ்ச்சி.

பிரபு . எம் said...

//ரொம்ப‌ அழ‌கா எழுதியிருக்கீங்க‌.. என‌க்கு எம்.எஸ்.பாஸ்க‌ர் க‌தாபாத்திர‌ம் ரொம்ப‌ பிடிச்சிருந்தது. இனிமையான‌ ப‌ட‌ம்.//

நன்றி TOTO...
அடடா... நான் எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரத்தைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டேனே!
ஆத்மார்த்தமான பாத்திரப் படைப்பு அது...
பிரம்மானந்தமும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம்...

பிரபு . எம் said...

37 தடவைப் பார்த்தீங்களா!! :)
நான் கூட சோர்வாக உணரும்போதெல்லாம் விரும்பிப் பார்க்கத் தேர்ந்தெடுப்பது "மொழி"யைத் தான்...
உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி அப்துல்லா... :)

பிரபு . எம் said...

//சூப்பரா எழுதியிருக்கீங்க பாஸ்.
ஒரே மூச்சுல படிச்சுட்டேன். செம Flow//

Thank you so much Raju :)

பிரபு . எம் said...

@சின்ன அம்மிணி

வணக்கம் அக்கா...
உண்மை அக்கா...கதாபாத்திரங்களின் நேர்த்தியான செதுக்கல்தான் மொழியை ஒரு புத்தகமாக, ஒரு கல்வெட்டாக, தவிர்க்க முடியாத ஒரு படைப்பாக நிலைநிறுத்தியிருக்கிறது

பிரபு . எம் said...

Thank you Sridhar :)

Anonymous said...

arumayana padam. arumayana padhivu

பிரபு . எம் said...

Thank you Friend...

கார்க்கி said...

மொழி மிக சிறந்த படமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மற்ற படஙக்ளில் இருப்பதாக அந்த மாணவி சொன்ன விஷயங்களில் சில பிரகாஷ்ராஜின் படங்களிலும் உண்டு. அழகிய தீயேவில் இரட்டை அர்த்த வசனங்கள், நாளை என்ற படத்தில் ரத்தமென எல்லாம் உண்டு. அவர் மட்டும் புண்ணிய ஆத்மா போல பேசுவதுதான் இடறுகிறது.

வைரமுத்துவின் தீவிர ரசிகன் நான். ஆனால் நீங்கள் சொன்ன வரிகள் உருது கவிதையின் தழுவல். இருந்தாலும் மெட்டுக்கேற்ப சரியான வார்த்தைகளில் எழுதியதில் நிற்கிறார் வைரமுத்து.

உங்க எழுத்து நன்றாக இருக்கிறது. புனைவு ஏதாவது முயற்சிக்கலாமே

பிரபு . எம் said...

வணக்கம் கார்க்கி...

உங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி..

உங்களுடைய கருத்தை ஏற்கிறேன்.... வன்முறையும், இரட்டை அர்த்த வசனங்களும் அவர் படங்களில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அந்த மாணவியின் பாராட்டுதலுக்கு அவர் முழுமையாகப் பெருமிதம் கொள்ள முடியாது... ஆனால் "மொழி" யை வழங்கியதற்கு அவருக்கு அந்த மாணவியின் வாழ்த்து தகும் என்று நினைக்கிறேன்... ஏனெனில் முற்றிலும் யதார்த்தமான மனித உணர்வுகளாலே மட்டும்தானே அஃது புனையப் ப்ட்டிருந்தது......

ஓ! அந்த வரிகள் உருது மொழிக் கவிதையா!! எனக்குத் தெரியாது.... பகிர்தலுக்கு நன்றி...
படத்தின் கதையை செல்லி முடித்ததுமே இவ்வரிகளை வைரமுத்து சொன்னார் என்று ராதாமோகனின் பேட்டியில் படித்தேன் அதைத் தான் எழுதியிருந்தேன்.... பிறமொழிக் கவிதைகள் நான் படித்ததில்லை... கவிதைகளில் உங்கள் ஆழமான தேடல் தெரிகிறது.. Great..

//உங்க எழுத்து நன்றாக இருக்கிறது. புனைவு ஏதாவது முயற்சிக்கலாமே//

நன்றி.....என் சிறுகதைகளை வெளியிடத்தான் பதிவுலகிற்கு வந்தேன்... அவ்வப்போது புனைவுகளையும் பதிக்கிறேன்... நிச்சியம் புதிய புனைவு ஒன்றை விரைவில் எழுத முயற்சிக்கிறேன்...

ரொம்ப நன்றி கார்க்கி.... உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி....

Let's keep in touch.. :)

கார்க்கி said...

நிச்சயம் மொழிக்காக அந்த ஒட்டுமொத்த டீமையுமே பாராட்டலாம். தவறில்லை. ஆனால் அதற்காக ஆக்‌ஷன் படம் எடுப்பவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்பது போல் அடிக்கடி பிரகாஷ்ராஜ் சொல்வது வேதனையானது. இங்கே சினிமா ஒரு வணிகம். பணம் போட்டவர்கள் எடுத்தாக வேண்டும். இன்னும் drilldown செய்து பார்த்தால், அது போன்ற படங்களில் நடிக்காமல் பிரகாஷ்ராஜால் மொழி தயாரித்திருக்க முடியுமா?

இந்த வரிகள் மட்டுமல்ல, ஜீன்ஸீல் வரும் “பெண்னே உனது மெல்லிடைப் பார்த்தே” என்று தொடங்கும் வரிகளும் கஜல் கவிதையே. ”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ” என்பது போன்ற வைர வரிகள் எழுத அவருக்கு இப்போதெல்லாம் வாய்ப்பு கிடைப்பதில்லை. இருந்தாலும் காலத்திற்கேறப மாறி இப்படி எழுதுகிறார்

அஃறினையின் கடவுள் நான்
காமுற்ற தெய்வம் நான்
சின்னஞ்சிருசின் இதயம் தின்னும்
சிலிக்கான் சிங்கம் நான்.

அதுதான் வைரமுத்து.

கார்க்கி said...

இன்னொரு விஷயம். உங்கள் பதிவுகள் படிக்காமல் புனைவுகள் முயற்சிக்கலாமே என்று சொல்லிவிட்டேன்.மன்னிக்க. இங்கேயே 11 சிறுகதைகள் இருக்கின்றன. படித்துவிட்டு சொல்கிறேன் சகா.. :)))

பிரபு . எம் said...

//ஆக்‌ஷன் படம் எடுப்பவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்பது போல் அடிக்கடி பிரகாஷ்ராஜ் சொல்வது வேதனையானது//

முற்றிலும் உண்மை... ஏன் "மொழி" பட வெற்றி விழாவிலேயே, ஆக்ஷன் மற்றும் வணிக ரீதியிலான பொழுதுபோக்குப் படங்களின் மூலம் கிடைக்கும் வெற்றியெல்லாம் "அசிங்கமான வெற்றி" என்கிற ரீதியில் ஆளாளுக்குப் பேசி முகம் சுளிக்க வைத்தார்கள்.... உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்... ரசிகனால் பெருவாரியாக ரசிக்கப் படுவதுதான் வெற்றி... தரமான வெற்றி என்று வேண்டுமானால் வகை பிரிக்கலாமேயொழிய நிச்சியம் அழகான வெற்றி.. அசிங்கமான வெற்றி என்றெல்லாம் கிடையாது... பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் ஆக்ஷன் படங்களை ஓர் அருவருப்பாகச் சாடுவதை நானும் ஏற்கவில்லை...

ரொம்ப சரி.... அந்தக்காலத்து வைரமுத்து இப்போதெல்லாம் அதிகம் பளிச்சிடுவதில்லை.... "கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா..." என்று அரிதாகத்தான் சிலிர்க்க வைக்கிறார் (இதுவும் அவரது சொந்தக் கற்பனை என்றுதான் இன்றளவும் நம்புகிறேன்..!) தாங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் கவிதை அழகு :)

Nikath said...

When I was reading the whole critics of Mozhi by you I was able to sense a director growing there. I am very happy that you are taking your style of writing in critics in a director point of view. Critics were good.
Honestly speaking I felt you should have spoken more about the film itself [not technically]. I am not talking about Jothika, Prithvi, Prakashraj or Swarnamalya or anybody else I am talking about the story itself. For example the view of the Archana towards life. teh view of a normal person [like characters played by Prithvi, prakashraj, swarnamalya etc] towards life. Because I know you haven't given your 100% critics here. I didn't find the usual flavor which Prabu is capable of.

Nikath said...

Hey Prabu, Nikath is my pet name.... this is Taj... You would see comments by me in the name of Nikath....

Post a Comment