The Shawshank Redemption (1994)


The Shawshank Redemption

படம் வெளிவந்த ஆண்டு: 1994
இயக்கம்: Frank Darabont
க‌தை: Stephen King
ந‌டிப்பு: Tim Robbins, Morgan Freeman

இதோ இந்த நொடி, பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.... இன்றும் இரவும் பகலும் ஏற்பட்டதால் இதை நான் நம்புகிறேன்.... ஜன்னலுக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று இன்றும் ஓர் அங்குலமாவது வளர்ந்திருக்கும்... பாத்ரூமில் வாழும் சிலந்தி இன்றும் தன் எச்சிலால் தனது கூட்டின் கட்டுமானத்தில் மேலும் ஒரு வரிசைப் பின்னியிருக்கும்.... சுற்றுவது தன் தொழில் என்று பூமிக்கும், வளர்வது தன் தொழில் என்று மரத்துக்கும், உறைவிடம் அமைப்பது தன் தொழில் என்று சிலந்திக்கும் தெளிவாகத் தெரியும்... சுற்றி என்ன நடந்தாலும்... எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் தன் தொழிலை அவை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.... தங்கள் இலக்குகளை மறந்திடப் போவதில்லை....!! சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது....?? நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல....!! இலக்கை அடைந்து வெற்றிகொண்டபின் செயல்களுக்குக் காரணங்கள் கிடைக்கலாம் பார்வையாளனுக்கு!!

"இலக்கு" எனும் முக்கியத்துவம் வாய்ந்த‌ வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அறுதியிடும் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் அல்ல.... தியேட்டரில் அரங்கு நிறைந்து ஓடாத இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று ஆர்ப்பரித்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த உச்சக்காட்சியில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மயிரும் எழுந்துநின்று புல்லரித்துதான் அடங்கியிருக்கும்!!

ஷாஷாங்க் சிறைச்சாலையில் சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஸ்மக்ளர், "ரெட்" என்று படத்தில் அழைக்கப்படும் மார்கன் ஃப்ரீமேனுக்கு "பரோலில்" வெளிவர அனுமதி தொடர்ந்து மறுக்கப் படுகிறது.... அதே வேளையில் (கள்ளக்)காத‌ல‌னுட‌ன் உல்லாச‌மாக‌ இருக்கும் ம‌னைவியையும் அவள் காதலனையும் போதையில் சுட்டுக்கொன்ற‌தாக‌ கௌர‌வ‌மான‌ "பேங்க‌ர்" (Banker) டிம் ராபின்ஸ் அதே சிறைச்சாலையில் இர‌ண்டு ஆயுள்த‌ண்ட‌னைக‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ அனுப‌விக்க‌ ச‌ட்ட‌த்தால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டு குற்ற‌வாளிக‌ளுட‌ன் ஷாஷாங்க் சிறைச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.....

இந்த‌ ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளிலேயே....ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்த‌ல‌ங்களான "சிறைச்சாலைகள்" எல்லாம் யாரோ குற்ற‌வாளிக‌ளுக்கு ம‌ட்டும்தான், என்று "ந‌ல்ல‌வ‌ர்"க‌ளாக‌ ஒதுங்கிக்கொள்ளும் நமக்கு, நம்மைப் போலவே ஒரு சாதாரணமான, கவுரவமான மனிதன்(டிம் ராபின்ஸ்) உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்ட குற்றத்துக்காக‌ அந்த‌ சாத்தான்க‌ளின் தேச‌த்துக்குள் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ குடிம‌க‌னாய் ஒரு கைதி வேடம் தரிக்கும்போது, அந்தக் காட்சிக‌ளின் ரிய‌லிசம்.... சிறை ம‌ற்றும் வாழ்வின் அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ளை எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் ஒருமுறை நினைத்துப் பார்க்க‌ வைக்கிறது நம்மையும் ஒரு குற்றவாளியாய், அந்த வலியுடன்..!

மனிதக் கனவுகள் எல்லாம் நீர்த்துப்போகும் ஜெயில் ஒன்றில் சுமார் முப்ப‌தாண்டுகால‌ த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் தன் வாழ்வின் எதிர்காலத்தைக் க‌ன‌வு காண்கிறான்...!!! அதுவும்... மெக்ஸிகோவின் எழில்வாய்ந்த‌ ப‌சிஃபிக் பெருங்க‌ட‌லோர‌ம் சென்று செழிப்பாய் இயற்கையோடு இணைந்து ம‌னித‌ர்க‌ள் அண்டாத ஓர் அழ‌கு வாழ்வு வாழ்வ‌து, என்று ஒரு கலர் கனவு....!!

"இல‌க்கு" மற்றும் "க‌ன‌வு" .... அடிக்க‌டி ஒன்றாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் இந்த‌ இருவேறு வார்த்தைக‌ளின் அர்த்தரீதியிலான வித்தியாச‌ங்க‌ளை நான் விரும்பிப் படித்த‌ ஒரு ம‌ன‌வ‌ள‌ நூலில் பின்வருமாறு ப‌டித்திருக்கிறேன்.....


"இல‌க்கு" என்பது...... ச‌ரியான‌ திட்ட‌மிடுதல், அறிவாற்றல், மற்றும் உழைப்பின் ப‌ல‌னாய் ஒருவ‌ன் நியாய‌மாய்த் தன் வாழ்நாளில் அடைய‌க்கூடியதாய்க் கிரகிக்கும் தூர‌ம்..

"க‌ன‌வு"... தொடுவான‌ங்க‌ளையும் தாண்ட‌க்கூடிய‌... லாஜிக் தேவைப்ப‌டாத‌... காரிய‌மாற்றிக் காட்ட‌ வேண்டாத‌ சௌக‌ரிய‌ம்...!!! கனவுலகிலேயே வெற்றிகளையும் களிப்புகளையும் ஏன் சாதனைகளைக் கூட‌ அனுபவிப்பதும் சாத்தியம்!!

இங்கு இந்த சிறைக்கைதி தன் "கடலோற‌ ச‌ந்தோஷ வாழ்வு" என்னும் க‌னவையே ஓர் இல‌க்காக, அதாவ‌து நியாய‌மாக‌த் த‌ன் திட்ட‌மிட‌லாலும், அறிவாலும், கடின‌ உழைப்பாலும் அடைந்துவிட‌க் கூடிய‌ ல‌ட்சிய‌மாக‌க் கொண்டு யாரும் க‌ன‌விலும் நினைத்துப்பார்க்க‌த் துணியாத‌தை... விடாம‌ல் முய‌ன்று நிஜ‌த்தில் சாதித்துக்காட்டும் அதிசிய‌ம்தான் ப‌ட‌ம்!!!

சிறைவாழ்வின் ஆர‌ம்ப‌ இன்ன‌ல்க‌ள்.... ஜெயில் சிநேக‌ம்.... ஜெயிலுக்குள் இருந்துகொண்டே வெளிஉல‌கத் தொட‌ர்பால் உள்ளே "வியாபார‌ம்" ந‌ட‌த்தும் சுவார‌ஸ்ய‌ம்..... ஜெயில‌ர், வார்டன்க‌ளின் காட்டுவாசி ம‌னோபாவ‌ம்..... என்று உருளும் ப‌ட‌த்தில்....

சிறைக்குள்ளேயே, கைதிகள் கேட்கும் "அதிசியப் பொருள்"களை சிறைச்சுவர்களையும் தாண்டிய தன் செல்வாக்கின் (!) மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் "Rock Hammer" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி....!! அடுத்த சில காட்சிகளில் சிறு சிறு கல்பொம்மைகள் அவ‌ர் செல்லின் ஜ‌ன்ன‌ல் க‌ம்பியிடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கும்!!!!

ஒருக‌ட்ட‌த்தில், த‌ன் வ‌ருடாந்திர‌ வ‌ருமான‌ வ‌ரியைத் தாக்க‌ல் செய்ய‌க் குழ‌ம்பும் ஜெயில‌ருக்குத் த‌ன் அபார‌மான‌ Banking திற‌மையால் அந்த‌ வ‌ருட‌த்துக்கு "Tax Free" ப‌ண்ணித்த‌ருகிறார் டிம் ராபின்ஸ்.... அந்த‌ப் புக‌ழ் ஜெயிலெங்கும் ப‌ர‌வ‌.... ஜெயிலின் நூல‌க‌த்தில் லைப்ர‌ரிய‌ன் வேலை த‌ர‌ப்ப‌ட்டு அங்கேயிருந்த‌வாறு போலீஸ்கார‌ர்க‌ளுக்கு வ‌ருமான‌ வ‌ரி ஆலோச‌கராக‌க் கிள‌ப்புகிறார் டிம்.... தனி அறையும், ஜெயிலில் தன் அறைச்சுவரில் மார்லின் ம‌ன்றோ புகைப்ப‌ட‌ம் ஒட்டிக்கொள்ளும் ச‌லுகையும் இல‌வ‌ச‌ இணைப்பாகக் கிடைக்கிற‌து!!

கொம்பு முளைத்த‌ சாத்தானாய் ஜெயிலின் வார்ட‌ன்.... கைதிக‌ளின் உழைப்பைத் த‌ன் சொந்த‌ லாப‌த்துக்கான‌ ஒரு க‌ட்டுமான‌ வேலைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ப் ப‌ண‌த்தை "வெள்ளைப் ப‌ண‌மாக‌" வெளியே சேர்க்க (Money Laundering) அடிமை டிம் ராபின்ஸின் மாஸ்டர் ப்ளானை உப‌யோகிக்க முன்வ‌ருகிறான்.... டிம் ராபின்ஸின் திட்ட‌ப்ப‌டி Randall Stephens எனும் இல்லாத ஒரு ம‌னிதன் பேரில் வெளுப்பான‌ ப‌ண‌ம் சேமிக்க‌ப் ப‌டுகிற‌து.....

டிம் ராபின்ஸின் தொட‌ர் முய‌ற்சியால் ஒரு க‌ட்ட‌த்தில் நாட்டின் சிறந்த‌ ஜெயில் நூல‌க‌மாக‌ டிம் ராபின்ஸால் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ நூல‌க‌ம் தேர்வாகிற‌து!!

கிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ள் ஓடிப்போகிற‌து.....இப்போது டிம்மின் அறையில் ம‌ர்லினுக்குப் ப‌தில் அப்போதைய லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி ரேச்சுல் வெல்க் கின் க‌வ‌ர்ச்சிப்ப‌ட‌ம் ஒட்டப்ப‌ட்டுள்ள‌து!!! அடிக்க‌டி ந‌ண்ப‌ன் மார்க‌ன் ஃப்ரீமேனிட‌ம் த‌ன்னுடைய‌ ப‌சிபிக் க‌ட‌லோர‌க் க‌ன‌வு வாழ்க்கையை ர‌சித்துக் கதைக்கிறார் டிம் ராபின்ஸ்..... Money Laundering வெற்றிக‌ர‌மாய்த் தொடர்ந்துகொண்டிருக்கத்.... திடீர் திருப்ப‌மாக‌... இன்னொரு கைதி ஒருவன் மூல‌ம் உண்மையில் த‌ன் ம‌னைவியை சுட்டுக்கொன்ற‌து டிம் இல்லை என்று போதையில் தான் கொன்ற‌தாக‌ ந‌ம்பும் டிம்முக்கு ஆதார‌ப் பூர்வ‌மாக‌த் தெரியவருகிறது...!!

வார்ட‌னிட‌ம் கெஞ்சுகிறார் தன் விடுத‌லைக்காக‌.... ஆனால் த‌வ‌றான வழியில், இர‌ட்டை ஆயுள் கைதி டிம்மின் உட‌ந்தையுட‌ன் பெரும்ப‌ண‌ம் பார்த்திருக்கும் வார்டனோ அவ்வ‌ள‌வு சுல‌ப‌மாக‌ மாட்டிக்கொள்ள‌ விரும்பாம‌ல் டிம்மை ஓர் இருட்ட‌றையில் அடைத்து மேலும் த‌ன‌க்கு ப‌ண‌ம் ஈட்ட‌ உத‌வுமாறு துன்புருத்துகிறான்... அதும‌ட்டுமின்றி.. டிம்முக்கு ஆத‌ர‌வாக‌ சாட்சி சொல்ல‌ முன்வ‌ந்த‌ அந்த‌ இள‌ம்கைதியை வார்ட‌ன் மற்றும் ஜெயில‌ர் இணைந்து கொன்றும் விடுகிறார்க‌ள்....

முடிந்துபோன‌ அத்தியாய‌மாய் மீண்டும் வார்டனுக்கு ஆதரவாய்த் த‌ன் க‌ருப்புப் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ச் ச‌ம்ம‌திக்கும் டிம் ராபின்ஸ் திடீரென்று ஒருநாள் காலையில் அந்த‌ச் சிறையில் இருந்து காணாம‌ல் போகிறார்!!!

அவ‌ரின் அறையில் இர‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் எப்ப‌டி மாய‌மாக‌ ம‌றைந்திருக்க‌க் கூடும்??? என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து!!! க‌ற்க‌ளில் சிற்ப‌ம் செதுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டும் "உளி" கொண்டு குடைந்த‌ சுர‌ங்கப்பாதை அது!!

ஒரு குண்டூசியைவிடக் கொஞ்சமே வ‌லிமையான‌ கூர் ஆயுத‌ம் அந்த‌க் க‌ல்லுளி.. அதைவைத்து இத்த‌னை நீள‌மான‌ ஒரு சுர‌ங்க‌த்தை உருவாக்க‌க் குறைந்தது முந்நூறு ஆண்டுக‌ள் ஆகும் என்று கூறுவார் ப‌ட‌த்தின் "Story Narrotor"!!! ஆனால் டிம் ராபின்ஸ், வந்த நாள்தொட்டு, இர‌வெல்லாம் தூங்காம‌ல்..... சுமார் இருப‌து ஆண்டுகாலம் விடாம‌ல் தோண்டி அந்த சுர‌ங்க‌ப்பாதை அமைத்திருப்பார்......

அந்த‌ சுர‌ங்க‌த்தில் ஊர்ந்து ஊர்ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு கிரிக்கெட் பிட்ச்சின் தூர‌த்திலான..... கைதிக‌ளின் ம‌ல‌ம் ம‌ற்றும் சிறுநீர் வெளியேறும் செப்டிக் டேங்க்கில் மூச்சு விட‌முடியாத‌ கொடூர‌ துர்நாற்ற‌த்தினிடையே த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து வெளிஉல‌கை அடைவார் டிம்!!!

ஒரு ம‌ழையில் த‌ன்னைக் க‌ழுவிக்கொண்டு ஜெயில் வார்ட‌னின் ஊழ‌லுக்கு ஏதுவாய்த் தான் உருவாக்கி வைத்திருக்கும் நிழ‌ல் ம‌னித‌ன் Randall Stephensஆக‌ அவ‌தார‌ம் த‌ரித்து அவ‌ன்பேரில் போட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ல‌ மில்லிய‌ன் டால‌ர்க‌ளைத் த‌ன‌தாக்கிக் கொண்டு மெக்ஸிகோ நாட்டின் ப‌சிஃபிக் கோஸ்ட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருப்பார் டிம் ராபின்ஸ்........

ஊழல் வெளியாகிவிட அவமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னையே இரையாக்கிக் கொள்கிறான் வார்டன்!!!

சிறு உளியின் கூர்முனையால் சுவ‌ற்றைச் சுர‌ண்டி மெல்ல‌ மெல்லத் தான் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளையே சாத்திய‌மாக்கிவிட்ட‌ ஜெயில் ந‌ண்ப‌ன் டிம் ராபின்ஸிட‌மிருந்து ஒரு ம‌ட‌ல் வ‌ருகிற‌து மார்க‌ன் ஃப்ரீமேனுக்கு!!! த‌ன் க‌ன‌வுப் பிர‌தேச‌த்தை ந‌ண்ப‌ன் அடைந்துவிட்டான் என்று அறிந்துகொள்ளும் ஃப்ரீமேனுக்கு நாற்ப‌து ஆண்டுகால‌ம் சிறைக்குப் பிற‌கு தொட‌ர்ந்து ம‌றுக்க‌ப்ப‌டும் "ப‌ரோல்" கிடைக்க‌ மெக்ஸிகோவுக்குப் ப‌ய‌ண‌மாகிறார் ஜெயில் சிநேக‌ம் தேடி.....

ப‌சிஃபிக் க‌ட‌ற்க‌ரையில் இரு ந‌ண்ப‌ர்க‌ளும் க‌ட்டித் த‌ழுவிக்கொள்ள‌ ம‌யிர்க்கூச்சரிய‌ முடிகிற‌து The Shawshank Redemption!!!

இன்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுத்துப் ப‌யிலும் என்போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் இன்னும் ப‌த்து அல்ல‌து இருப‌து முப்ப‌து ஆண்டுகளுக்கு மனதுக்குள் "மெகா கனவுகள்" வைத்திருக்கலாம்.... "கனவை" அதன் வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் தெளிவு ப‌டுத்திக்கொண்டால் இல‌க்கும் க‌ன‌வும் ச‌ங்க‌மிக்கும் வாழ்விய‌ல் அதிசிய‌ம் சாத்தியமாகும் என்று சாட்சி ப‌க‌ரும் பட‌ம் இது!!

ஏற்கெனவே எழுதியிருப்பது போல் வெறும் மேல்தோலின் மயிர்க்கால்களுடன் சாகசம் புரியும் வெகுஜனப் படங்களைவிட, இதைப்போல் அம் மயிர்க்கால்களினூடே உள்ளிறங்கி செல்களில் செய்தி பதித்திடும் படங்கள்தான் என்னை மேலும் மேலும் கவர்கிறது.... அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படம் எனக்கு!!



17 comments:

சின்ன அம்மிணி said...

மிஸ்டிக் ரிவரும் பாத்துடுங்க.

Anonymous said...

This is one of the excellent movies that I've ever seen. Your review was really good. Keep it up friend.

கிரி said...

அருமையான படம் ... அவர் வார்டனை ஏமாற்றும் காட்சியும் சிறப்பாக இருக்கும்.

மு.இரா said...

நாணும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். ஆணால் நீங்கள் விளவாரியாக எழுதி விட்டீர்கள். நன்றி.
மனது வைத்தால் எதுவும் முடியும், மூளையை உபயோகியுங்கள்.... என்று உரைப்பது போல இந்த படம் இருக்கும்.

பிரபு . எம் said...

//மிஸ்டிக் ரிவரும் பாத்துடுங்க//

கண்டிப்பா அக்கா.... (இப்படி அழைக்கலாம்தானே!!)
பார்த்துட்டு சொல்லுறேன்.....
வ‌ருகைக்கு ரொம்ப‌ ந‌ன்றி :)

பிரபு . எம் said...

//This is one of the excellent movies that I've ever seen. Your review was really good. Keep it up friend.//

Thank you very much friend....
Yes friend.. its an awesome movie... :)

பிரபு . எம் said...

//அருமையான படம் ... அவர் வார்டனை ஏமாற்றும் காட்சியும் சிறப்பாக இருக்கும்.//

ஆமாம்.... அதேபோல தற்கொலை செய்துகொள்ளும் அந்த லைப்ரரியன் தாத்தா பற்றியும் நீளம் கருதி எழுதமுடியவில்லை..... வருகைக்கு நன்றி நண்பா.. :)

பிரபு . எம் said...

//நாணும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். ஆணால் நீங்கள் விளவாரியாக எழுதி விட்டீர்கள். நன்றி.
மனது வைத்தால் எதுவும் முடியும், மூளையை உபயோகியுங்கள்.... என்று உரைப்பது போல இந்த படம் இருக்கும்.//

இந்தக் கருத்தை வலியுறுத்த எடுத்துக் கையாளப்பட்ட களமும், கதையும் உண்மையில் சிலிர்க்க வைக்கும் ஓர் அனுபவம்...

நன்றி நண்பா :)

ramalingam said...

imdbயில் டாப் 250ல் நெம்பர் 1ல் இந்தப் படம் இருக்கிறது. stephen kingன் இந்தப் படத்தை நீங்கள் ரசி
த்திருந்தால் அவரது dolores clairborneஐயு
ம் பார்த்து விடு
ங்கள்.

பிரபு . எம் said...

// stephen kingன் இந்தப் படத்தை நீங்கள் ரசி
த்திருந்தால் அவரது dolores clairborneஐயு
ம் பார்த்து விடுங்கள்//


stephen king மற்றும் இதே Frank Darabont, அவர்களின் கூட்டணியில் உருவான " The Green Mile" பார்த்து ரசித்திருக்கிறேன்... "dolores clairborne"ஐ நிச்சியமாகப் பார்க்க விழைகிறேன்... மிகவும் நன்றி :)

சின்ன அம்மிணி said...

//கண்டிப்பா அக்கா.... (இப்படி அழைக்கலாம்தானே!!)//

கண்டிப்பா, சொல்ல மறந்துட்டனே, Mystic River ல டிம் ராபின்ஸ் தான்

பினாத்தல் சுரேஷ் said...

90% படம் சோகமாகச் செல்லும் - திடுதிப்பென மகிழ்ச்சியாக மாறும். எல்லாவற்றுக்கும் பொயட்டிக் ஜஸ்டிஸ் கிடைக்கும்.. இந்த திடுதிப் திருப்பத்தை வேறெப்படத்திலும் கண்டதில்லை. அருமையான படம்.

பிரபு . எம் said...

//90% படம் சோகமாகச் செல்லும் - திடுதிப்பென மகிழ்ச்சியாக மாறும். எல்லாவற்றுக்கும் பொயட்டிக் ஜஸ்டிஸ் கிடைக்கும்.. இந்த திடுதிப் திருப்பத்தை வேறெப்படத்திலும் கண்டதில்லை. அருமையான படம்//

என்னையும் இந்தப் படத்தில் ஆட்கொண்ட விஷயம் இதுதான் சுரேஷ்.....
ரொம்பவே பாதித்தது இந்தத் திரைப்படம் அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த மகிழ்ச்சிகரமான திருப்பத்தின் அதிர்வு இன்றுவரை அகலவில்லை...

நன்றி சுரேஷ் :)

D.R.Ashok said...

அருமையான ஆய்வு.. எனக்கும் இது பிடித்த படம் :)

பிரபு . எம் said...

நன்றி அசோக்...

ரொம்பவே அழகான படம்... அந்த மெசேஜ் அற்புதமானது...!! :)

பிரசன்னா said...

வரிகளை சிக்கனமாக உபயோகித்து மிகச்சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.. சிறந்த படம், சிறப்பான பதிவு :)
படம் பார்த்த உணர்வை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் :))

பிரபு . எம் said...

நன்றி நண்பா...

நான் பார்க்கும்போது சரியாகக் கவனிக்காத விஷயங்களைக்கூட மிக நுணுக்கமாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்....
மிக்க நன்றி :)

Post a Comment