நான் கடவுள் - "அஹ‌ம் பிர‌ம்மாஸ்மி"


ரொம்பவே காலம் கடந்துவிட்டது... எனினும் இப்பொழுதுதான் படத்தைக் காண நேர்ந்தது.... படம் வந்த சமயமே பார்த்திருந்தாலும் கூடக் கண்டிப்பாக விமர்சனம் எழுத எண்ணியிருக்க‌ மாட்டேன் இதேபோல சில தாக்கங்களை மட்டும்தான் பதிவிட முயன்றிருப்பேன்...

எப்போதும் செல்லும் கோயிலிலும், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்களிலும் அடிக்கடிப் பார்த்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பரிச்சியமானவர்கள் என்றுதான் கூறவேண்டும்! ஏனெனில் இப்போது நினைத்துப் பார்க்கையில் ஏதோவொரு விதமாக உடல் நெழிந்துபோய்க் கால்கள் விரிந்த நிலையில் அமர்ந்தவாறு ஒரு கையில் செருப்பு மாட்டித் தரையில் ஊன்றி நகர்ந்து நகர்ந்து பிச்சையெடுத்த ஓர் உருவம் அடிக்கடிப் பார்த்திருப்பதாகத் தெளிவாகத் தோன்றுகிறது மனதில்... முகம் நினைவில்லை ஆனால் ஊணம் அழுத்தமாக‌ நினைவிலிருக்கிறது!

மேலும்... முகம் முழுக்கச் சுருங்கிப்போன சர்ச்சு வாசல் பாட்டிகள்... கால்களில் கிள்ளிப் பிச்சை கேட்ட‌ பஸ் ஸ்டாண்ட் அழுக்குச் சிறுமி, சில வேளைகளில் நான் காஃபி வாங்கிக் கொடுத்திருக்கும் ஒரு பைத்தியக்காரன்.... (கடைக்காரன் தேங்காய்ச் செரட்டையில்தான் அவனுக்குக் காஃபி கொடுப்பான்) நன்றாகவே நினைவிருக்கிறது.... ஒரு கட்டத்தில் தினமும்கூடப் பார்த்திருக்கிறேன் இவர்களை....
வெவ்வேறு அலுவல்களில் அங்குமிங்கும் அலைகிறபொழுதுகளில் தவறாமல் குறுக்கே வந்து கண்ணில் தினமும் பட்டிருக்கிறார்கள் மேற்கூறிய மிகவும் பரிச்சியமானவ‌ர்க‌ள்!!

தினம்தினம் பார்த்திருந்தும், சில்லறை தானம் கூடத் தவறாமல் செய்திருந்தும், தாண்டிச் சென்றபின் ஒருகணம்கூட நினைத்துப் பார்த்ததில்லை இவர்களை... மொத்தமாக நினைத்துப் பார்க்க வைத்துவிட்டார் பாலா!!!

"அகோரி"கள் பற்றி முற்றிலும் அறிந்திருக்க‌வில்லை "நான் க‌ட‌வுள்" வெளிவ‌ரும்வ‌ரை... காசியையும் இவ்வ‌ள‌வு விரிவாக‌க் கண்டிருக்க‌வில்லை முந்தைய‌ ப‌திவுக‌ளில்... எரியும் பிண‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் ப‌ரிச்சிய‌ம் "பிதாம‌க‌ன்" புண்ணிய‌த்தில்!

நாம் ந‌ன்க‌றிந்த‌ பிச்சைக்கார‌ர்கள்.... அதேவேளையில் அறியப்படாத‌ அவ‌ர்க‌ளின் உல‌கம்.... வேற்றுகிர‌க‌வாசிக‌ளைவிடத் தூர‌மான‌ அகோரி சாமியார்கள்.... சாவுட‌ன் வாழ்வு ச‌ங்க‌மிக்கும் அவர்களின் புதிர் உல‌கம்... எல்லாம் சேர்த்து புனைந்த‌ திரைக்க‌தை...

ம‌ர‌ண‌த்தைத் த‌ண்ட‌னையாக‌ வ‌ழ‌ங்கும் அதிகார‌ம் ப‌டைத்த‌ நாய‌க‌ர்க‌ள் புதித‌ல்ல‌ ந‌ம‌க்கு..
ம‌ர‌ண‌த்தை வ‌ர‌மாக‌வும் வ‌ழ‌ங்கும் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" ருத்ர‌ன் வேறொரு உலகிலிருந்து (இருக்குமிடம் மட்டும் காசி) ந‌ம் உல‌கில் புகுந்து நம் காதுக‌ளில் விழாத சில கொடூர ஓல‌ங்க‌ளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் த‌ன் வழியை நோக்கி சென்றுகொண்டேயிருக்கிறார் உச்ச‌க் காட்சியில்!!

கண்ணில்லாத‌ இள‌ம்பெண்.... பாட்டுப்பாடி யாச‌க‌ம் செய்ப‌வ‌ள்.... அவ‌ளை ஒரு சிங்க‌த்தின் கூண்டில் போட்டிருந்தால் அடித்துக் கிழித்து உண்ண‌ப்பட்டாலும் ஒருவேளைக்கு உண‌வாகி அத்தோடு செமித்துப் போயிருப்பாள்... ப‌ண‌ம் ம‌ற்றும் காம‌ப் ப‌சிக்குத் த‌ப்பித்துப் பார்வையுமின்றி அனாதையாய் ஓடி ஓடி சீர‌ழிந்திருக்க‌ மாட்டாள்...துர‌த்திய‌வ‌னையும்.... அவ‌ளை முற்றிலுமாய் சிறைப்பிடித்து வைத்திருந்த‌ எம‌காத‌க‌னையும் அடித்தே கொன்று ந‌ர‌க‌த்துக்குத் தாரைவார்க்கிறார் பின்... அவ‌ளுக்கும் அதே ம‌ர‌ண‌த்தை -ஆனால் இம்முறை "வரமாய்"க் கொடுத்து, மீண்டுமிந்த‌ பூமியில் பிறக்கும் "அதிகபட்ச‌ த‌ண்ட‌னையையும்" ர‌த்து செய்துவிட்டுப் போகிறார் அகோரி சாமியார்!!

ருத்ர‌ன் விஷ‌மிக‌ளை வ‌த‌ம் செய்த‌தோடு சென்றிருந்தால் வெறும் "க‌ட‌வுளாக‌த்" தான் போயிருப்பார்... மேற்கொண்டு பூஜாவை "வ‌ர்தான்" செய்த‌தன் மூலம் பிரம்மப் படைத்தலின் பிழையொன்றை நீக்கிவிட்டு செல்கிறார் "அக‌ம் பிர‌ம்மாஸ்மி" என்று உருமிக்கொண்டு!!... நம் ப‌ச்சாதாப‌த்துக்கோ க‌ழிவிர‌க்க‌த்துக்கோ கோரிக்கை வைத்து ஒரு ம‌ர‌ணத்துடன் ப‌ட‌த்தை முடிக்க‌வில்லை.... படைத்தவனின் பிழைக‌ளால் த‌விக்கும் உயிர்க‌ளின் ஓல‌த்தைக் கேட்க‌ ந‌ம்மிடம் நாதியில்லை என்று முக‌த்தில் அறைந்து ஒரு "கொலை"யுட‌ன் முடித்திருக்கிறார்.....

ந‌ம்மைப் பாகிஸ்தான் தீவிர‌வாதிக‌ளிட‌மிருந்தும் லோக்க‌ல் தாதாக்க‌ளிட‌மிருந்தும் தொட‌ர்ந்து காத்துவ‌ருவ‌தில் பிசியாக‌ இருக்கும் ந‌ம‌து வ‌ழ‌க்க‌மான‌ நாய‌க‌ர்க‌ளை டிஸ்ட‌ர்ப் செய்யாம‌ல் வேறொரு உல‌க‌த்திலிருந்து ஆர்யாவை அழைத்துவ‌ந்த‌திலேயே சொல்ல‌வ‌ந்த‌தை சொல்லிமுடித்துவிட்டார் பாலா..... கதாபாத்திர‌ங்க‌ள் யாவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாத கமலஹாசனின் ஒரே ஒரு ப‌டம் தானே "பேசும் ப‌ட‌ம்" என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து! பேசாமல் பேசிவிடுவ‌து பாலாவுக்கும் ஒன்றும் அந்நிய‌மான‌த‌ல்ல‌.... "வார்த்தை த‌வ‌றி விட்டாய்.." என்று பின்புல‌த்தில் ராஜா உருக வாழ்வு முற்றிலும் சூன்ய‌மாகிப் போய்விட்ட‌தை ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல் மொட்டை "சேது" பாண்டிம‌ட‌ம் வ‌ண்டியில் ஏறுமுன்பு ஒருமுறைத் த‌லைதிருப்பிப் பார்ப்பானே... அதை வ‌ச‌ன‌ங்க‌ளால் பேசிவிட‌ முடியுமா?? "என‌க்குத் தெரியும் மா.." என்று ம‌ட்டும் சொல்லிவிட்டு விஷ‌ம் க‌ல‌ந்த‌ சோற்றை மொத்த‌மாக உண்டு ம‌டியும் "நந்தா"வுக்கும் வ‌ச‌னங்கள் தேவைப் ப‌ட‌வில்லை..... வெட்டியான் சித்தனும் ஒரு வார்த்தைக் கூட‌ப் பேசாம‌ல்தான் அவ‌னுல‌கை ந‌ம‌க்குப் புரிய‌வைத்தான்... ஆனால் இங்கு எத‌ற்காக‌ இந்த‌க் குருட்டுப் பிச்சைக்காரி ம‌ட்டும், அவ‌ள் ர‌ண‌ங்க‌ளின் வேதனையை மொத்த‌மாக‌ நாம் உள்வாங்கிக் கொண்ட‌பின்னும், நீளமாய்ப் பேசுகிறாள் என்ப‌து ம‌ட்டும்தான் புரிய‌வில்லை... பாலாவுக்கு வ‌ச‌ன‌ங்க‌ள் தேவையா!

நான்கு வ‌ருட‌ங்க‌ள் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டதையும் ஆர்யா என்கிற கமர்ஷியல் ஹீரோவின் கால்ஷீட் விரைய‌மாகி விட்ட‌தையும் இணைத்துதான் பெரும்பாலான‌ விம‌ர்சன‌ங்க‌ள் வெளிவ‌ந்திருந்த‌ன‌... "சிவாஜி தி பாஸ்" வெளிவந்த‌ போது "இவ்வள‌வு செல‌வு தேவையா?" என்றும்... "நான் க‌ட‌வுள்" ப‌ட‌த்துக்கு "இவ்வ‌ள‌வு நாள் எடுத்திருக்க‌ வேண்டுமா?" என்றும் கேள்விக‌ள் ப‌ர‌வ‌லாக‌ முளைத்த‌ன‌.... கேட்ட‌வ‌ர்க‌ள் பார்வையாள‌ர்க‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும்தான்.... உண்மையில் கேட்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் த‌யாரிப்பாளர்களும் ஆர்யாவும்தானே... அவ‌ர்க‌ளுக்கில்லாத‌ ச‌ங்க‌ட‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்ப‌தும் புரிய‌வில்லை.....

விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளை வைத்து ம‌ட்டும்தான் பாலா ப‌ட‌ம் எடுப்பாரா? என்று கேட்டால்.... பாலாவும் எடுக்க‌வில்லையென்றால் பிச்சைக்கார‌னையும் வெட்டியானையும் on duty ல் ம‌ட்டும்தானே நாம் பார்த்திருப்போம்... ந‌ம‌து கேம‌ராவின் வெளிச்ச‌ம் கொஞ்ச‌ம் ஊடுறிவியும் பாய‌ட்டுமே!

வாழ வழியில்லாதவர்களை வாழ‌ அனும‌திக்கும் குண‌த்தை பூமி இழ‌ந்து நாளாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டும் நித‌ர்ச‌ன‌மாக‌ப் புரிகிற‌து.... விளைவுக‌ள் புரிய‌வில்லை!!

பிர‌பு. எம்

"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!



"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!


விகடனின் வலைதளத்தில் "யூத்ஃபுல் விகடன்"ல் இன்று என்னுடைய "ஏகநாயகி" சிறுகதை வெளிவந்துள்ளது!! "கிரேட்" பகுதியில் வெளியிட்டிருக்கும் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!! ஒரு பொது ஊடகத்தில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை...

என்னுடைய வலைப்பதிவிற்கு வருகை தந்து என்னுடைய எழுத்துக்களை உங்கள் கருத்துரைகளால் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்!!


Click here to view the story in Vikatan.com

ஏகநாயகி

மாடிவீடுகளில் குடியிருப்பவர்களின் மனநிலையைக் கண்டிப்பாக‌ப் படிக்கட்டுகள் வெளிக்காட்டிவிடுகின்றன! அவர்கள் ஏறுகிற மற்றும் இறங்குகிற விதங்கள் அவர்களது அப்போதைய மன உணர்வுகளை நிச்சியம் பிரதிபலித்துவிடும்.

ஞாயிற்றுக்கிழமை...

காபியுடன் செய்தித்தாள் புரட்ட நேரம் தரும் ஒரேநாள். வீட்டு வாசலில் அமர்ந்து அன்றைக்கு டி.வியில் என்ன படம் என்று பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீட்டு வசந்தனின் உற்சாகத்தை "சொத்... சொத்"தென்று சுரத்தையே இன்றி வினோத் படியிறங்கும் விதம் கொஞ்சம் சீண்டிப்பார்த்தது...

தொங்கிய தோள்களுடன் வினோத் படியிறங்கும் கோலத்தைத் தனது திரைப்படத் தேடலை ஒரு நிமிடம் ஒத்திவைத்து ஏறிட்டார். வினோத் அந்த 'நடையழகு' மாறாமல் பைக்கை எடுக்க, பின்னேயே... படிக்கட்டில் இப்போது அவன் மனைவி. கிட்டத்தட்ட வாரநாட்களில் வேலைக்குப் போகும் அதே ஒப்பனை, படியிறங்கும் வேகம் மட்டும் கொஞ்சம் குறைச்சல். சின்னதொரு பதற்றத்துடன் வினோத்தையே பார்த்த வண்ணம் படியிறங்கி வசந்தனைக் கடக்கிறாள். பைக் ஸ்டார்ட் ஆகிறது... மனைவி பின்னிருக்கையில் அமரப் பயணம் தொடங்கியது... கணவன் மனைவி முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவேயில்லை. வசந்தன் எதையோ புரிந்து கொள்கிறார்... தனது தேடலைத் தொடர்கிறார்!

வாரநாட்க‌ளின் நெரிச‌லின்றி சாலைக‌ள் கொஞ்ச‌ம் மூச்சுவாங்கிக் கொள்வ‌து போல் த‌ன் அக‌ல‌த்தைப் ப‌ர‌ப்பி வாக‌ன‌ங்க‌ளுக்குத் தார‌ள‌மாய் இட‌ம் கொடுத்திருந்த‌ன‌. வினோத் மிக‌வும் இருக்க‌மாக‌ அம‌ர்ந்திருக்கிறான். மௌன‌மாக‌வே அம‌ர்ந்திருந்த‌ ம‌னைவி வ‌ண்டியின் பின்புற‌ம் பார்க்கும் க‌ண்ணாடியில் த‌ன் முன்புற‌ம் உள்ள‌ க‌ண‌வ‌னின் முக‌த்தைத் தேடினாள். எதிர்க்காற்றில் கேச‌ம் க‌லைந்து, முக‌த்தில‌டிக்கும் புழுதிக்காக‌க் க‌ண்க‌ளை இடுக்கிக் கொண்டுத் த‌ன் பார‌த்தை சும‌க்கும் வ‌லியோடு வ‌ண்டியோட்டும்
வினோத்தின் முக‌த்தைப் பார்க்க‌ அவ‌ளுக்கு மிக‌வும் பாவ‌மாக‌ இருந்த‌து.

வினோத்தால் ஏமாற்ற‌ங்க‌ளைத் தாங்கிக் கொள்ள‌முடியாது. அவ‌ன‌து எதிர்பார்ப்புக‌ளும் மிக‌ப்பெரிதாக‌ இருக்காது. சின்ன‌ச்சின்ன‌ ச‌ராச‌ரி எதிர்பார்ப்புக‌ள்தான் அவ‌னுடைய‌து. ஆனால் அவை நிறைவேறாத‌போது மிக‌வும் உடைந்துபோவான். அவ்வாறு உடைந்துபோய் விடுவ‌தை ம‌றைக்க‌வும் அவ‌ன் அதிக‌ம் முனைவ‌தில்லை. அவ‌ன‌து வேதியிய‌ல் மாற்ற‌ங்க‌ள் யாவும் வெளிப்ப‌டையாக‌வே தெரியும். அத‌னாலேயே வினோத் முக‌த்தின் க‌வ‌லை ரேகைக‌ள் அவ‌ன் ம‌னைவிக்கு உள்ளே ஊடுறுவி வ‌லியை ஏற்ப‌டுத்தின‌...

ஒருவாறாக‌ப் ப‌ய‌ண‌ம் முடியும் நிலையை அடைந்த‌து. இதோ இந்த சாலையின் வ‌ல‌துப‌க்க‌த்தில்தான் மீராவின் வீடு உள்ள‌து. ந‌க‌ரின் பிர‌தான சாலைக‌ளில் அதுவும் ஒன்று, அத‌னைக் க‌ட‌க்க‌ வேண்டி இட‌துகையால் பைக்கைத் தாங்கிக் கொண்டுக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வ‌ல‌துகையை நீட்டி சிக்ன‌ல் செய்த‌வாறே ரோட்டின் வ‌ல‌ப்புற‌ம் வினோத் இற‌ங்க‌... "நான் கை காட்டுறேன்... நீங்க‌ விடுங்க‌.." என்று ப‌ய‌ண‌த்தை முடித்து வைத்தாள் ம‌னைவி.

மீரா வீட்டு வாச‌லில் பைக்கிலிருந்து இற‌ங்கி, "ஈவினிங் நானே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வ‌ந்துட‌றேன், நீங்க‌ சிர‌ம‌ப்பட வேண்டாம்" என‌க்கூற‌, வினோத் த‌லையை ம‌ட்டும் ஆட்டிக்கொண்டு... "போன் ப‌ண்ணு... நானே வ‌ந்து பிக்‍ அப் செஞ்சுக்கிறேன்... ஆட்டோவெல்லாம் வேண்டாம்" என‌க்கூறிக்கொண‌டே இறுக்க‌ம் த‌ள‌ராம‌ல் பைக்கைத் திருப்பிக் கிள‌ம்பினான். அவ‌ன் த‌லைம‌றையும் வ‌ரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீராவின் வீடு நோக்கித் திரும்பினாள்.

வீட்டுமாடி ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌, "ஹாய்..! என்ன‌ப்பா இவ்ளோ லேட்டா வ‌ர்றே?" என வர‌வேற்ற‌ மீராவைப் பார்த்துப் புன்ன‌கைத்த‌வாறே வீட்டினுள் நுழைந்தாள்.

"உட‌ன் ப‌ணிபுரியும் நெருக்க‌மான‌ தோழி இர‌ண்டு நாட்க‌ளில் அமெரிக்கா செல்கிறாள், அலுவ‌ல‌க‌த் தோழிக‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்துகொள்ளும் பார்ட்டியை எப்ப‌டிப் புற‌க்க‌ணிப்ப‌து? கொஞ்ச‌ம் புரிஞ்சுக்கோடா புருஷா!" என ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டே விருந்தில் ஐக்கிய‌மானாள் திரும‌தி. வினோத்!

"கிடைக்கிற‌ ஒருநாள் விடுமுறையையும் இப்ப‌டி க‌மிட் ப‌ண்ணிக்கிட்டா, வீட்டுவேலைக‌ளை எப்போதான் பார்ப்ப‌து?" என்று த‌ன்ப‌க்க‌ நியாய‌த்தை நினைத்துக் கொண்டே பைக்கைப் ப‌ள்ள‌த்துக்குள் விட்டான் வினோத்.

ச‌ரியான‌ ப‌ள்ள‌ம்... ந‌ல‌ல‌வேளை கீழே விழ‌வில்லை. என்ஜின் அணைந்துவிட்ட‌து. இருகால்க‌ளையும் த‌ரையில் ஊன்றி ப‌ல‌ம்திர‌ட்டி வ‌ண்டியைப் ப‌ள்ள‌த்திலிருந்து மீட்கிறான். சுற்றிமுற்றி அனைவ‌ரும் அவ‌னைப் பார்த்த‌வாறே க‌ட‌ந்து செல்வ‌தைப் பார்க்க‌க் கொஞ்ச‌ம் கூசிய‌து. ஒருவ‌ழியாக‌ப் ப‌ள்ளத்தைக் க‌ட‌ந்தாகி விட்ட‌து. அதுவ‌ரை ம‌ன‌தில் மைய‌ம் கொண்டிருந்த ஒரு விரைப்பு இள‌கிய‌து.

இய‌ல்பு நிலைய‌டைந்த‌வுட‌ன், "எத‌ற்காக‌ இத்த‌னை இறுக்க‌ம்?" என்கிற‌ ரீதியில் எதுவுமே தெரியாம‌ல் ஏதோ பாதியிலிருந்து க‌தை ப‌டிக்கும் ஒரு வாச‌கனைப் போல் அவ‌ன் ம‌ன‌ம் அவ‌னையே கேட்ட‌து!

வினோத்துக்கு நிச்சிய‌மாக‌ ஒரு "இடைவேளை" தேவைப்ப‌ட்ட‌து. ஆஹா... அருகிலேயே ஒரு டீக்க‌டை. பைக்கை ஓர‌மாக‌
நிறுத்திவிட்டு க‌டைக்குள் சென்று பெஞ்சில் அம‌ர்ந்தான். சூடாக‌ பாய்ல‌ர், அருகே த‌ள‌த‌ள‌வென‌ கொதிக்கும் பால், வ‌டிக‌ட்டியில் புது டிக்காஷ‌ன்...

அந்த‌ ந‌றும‌ண‌த்தை ஒருமுறை முக‌ர்ந்து முடிக்கும் முன்னேயே சுட‌ச்சுட நுறைபொங்க‌க் க‌ண்ணாடி த‌ம்ள‌ரில் தேநீர் முக‌ம‌ருகே நீட்ட‌ப்ப‌ட்ட‌து.

வாங்கிப் ப‌ருக‌ப் ப‌ருக‌ப் புது ர‌த்த‌ம் சுர‌ப்ப‌து போன்ற‌ ஓர் உண‌ர்வு...

இன்னும் இளமையாக‌ உண‌ர்ந்தான். த‌ன் க‌ல்லூரிக்கால‌ நினைவ‌லைக‌ளில் மூழ்கினான்.

ஸ்வேதா... அந்த‌ இனிய‌ நாட்க‌ளின் நாய‌கி! திரும‌ண‌த்துக்குப் பிற‌குதான் ம‌னித‌னுக்கு வாழ்வில் முடியுதிர்கால‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌. அதுபோன்ற‌ நேர‌த்தில் இதுபோல வாழ்வில் வ‌ந்துபோன‌ சில‌ வ‌ச‌ந்த‌கால‌ங்க‌ளை நினைத்து ம‌ன‌தாறிக்கொள்வ‌து வினோத்தின் வ‌ழ‌க்க‌ம். அவ‌ன் வாழ்வின் வ‌ச‌ந்த‌கால‌ம் என்றாலே அது ஸ்வேதாவுட‌னான‌ காத‌ல்கால‌ம் தான்!!

டீயை ருசித்து முடித்துப் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ பைக்கைப் பார்த்தான், இப்பொழுது வ‌ண்டி புதிதாய்த் தெரிந்த‌து. ஏறிய‌ம‌ர்ந்தான் ஒரேமிதியில் வ‌ண்டி ஸ்டார்ட் ஆன‌து. வ‌ண்டிக் க‌ண்ணாடியில் முக‌ம்பார்த்தான். ச‌ற்று நேர‌த்திற்குமுன் அவ‌ன் ம‌னைவி த‌ன் க‌ண‌வ‌னின் அக‌த்தின் அழ‌கை முக‌த்தில் பார்த்த‌ அதே க‌ண்ணாடி... வினோத்திற்கு இப்பொழுது அதில் ஸ்வேதாவின் முக‌ம் தெரிந்த‌து.

கூந்த‌ல் ப‌ற‌க்க‌ சுடிதாரில் இள‌மையாக‌ வினோத்தின் பின்னால் ஸ்வேதா அம‌ர்ந்து வ‌ல‌ம் வந்த அந்த‌க்கால‌ம் இப்போது அந்த‌க் க‌ண்ணாடியில் தெரிந்த‌து.

ஸ்வேதாவோடு உற்சாக‌மாய் பைக்கை வீடு நோக்கி செலுத்தினான். வீடு வ‌ந்துவிட்டது.

வசந்தன் இன்னும் செய்திதாளைப் புரட்டி முடிக்கவில்லை. இம்முறை வினோத் இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌த்தாவி வேக‌மாக‌ வீட்டை அடைந்தான். க‌த‌வு திற‌ந்த‌தும் அல‌ங்கோல‌மாய் பொருட்க‌ள் இறைஞ்சிக்கிட‌ந்த‌ன‌. ம‌னைவி மீது க‌டும் வெறுப்பு வ‌ந்து முட்டிய‌து. கைக்க‌டிகார‌த்தில் ம‌ணி பார்த்தான், காலை ப‌தினோரு ம‌ணி. ஒருமுறை உட‌ல் கோணி நெட்டிமுறித்துவிட்டு வீட்டை ஒழுங்குப‌டுத்தும் வேலையில் இற‌ங்கினான். முன்ன‌தாக‌ அது ப‌ல‌நாள் ஒத்திவைப்புக்குப் பின் இவ்வார‌ இறுதியில் இருவ‌ரும் இணைந்து செய்வ‌தாக‌த் திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌ வேலை!

ச‌னிக்கிழ‌மை... ம‌னைவிக்கு வ‌ழ‌க்க‌ம் போல் ப‌ணிவிடுப்பு கிடைக்க‌வில்லை என்ப‌தால் ஞாயிற்றுக்கிழ‌மையான இன்று வேலையை முடித்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். இன்றைக்குள் வீட்டை சீர்ப‌டுத்திவிட‌ வேண்டும் என்று உறுதியாக‌ இருந்தான் வினோத். அது நன்கு தெரிந்தும் மீராவின் விருந்துக்கு சென்ற‌தை நினைக்க‌ நினைக்க‌ வினோத்துக்கு வெறுப்பு கொப்ப‌ளித்த‌து.
அத்தனை கோப‌த்தையும் செய‌லில் காட்டிப் ப‌டுவேக‌மாக‌ப் பொருட்களை ஒழுங்கு வைத்தான் வினோத். பெரும்பாலும் ஓர் ஒழுங்க‌ற்று சித‌றிக்கிட‌ந்த‌து அவ‌ன் ம‌னைவியின் பொருட்க‌ள்தான். அதிலும் குறிப்பாக‌ அவ‌ள‌து அல‌ங்கார‌ப் பொருட்க‌ள்தான்! வேலையின் சோர்வு தெரியாம‌லிருக்க‌ கூட‌ சேர்ந்து பாடிக்கொண்டிருந்த‌து எப்.எம் ரேடியோ.

"நேர‌ம் இப்பொழுது ப‌ன்னிர‌ண்டு ம‌ணி நாற்ப‌து நிமிட‌ம்."

பெருங்க‌ளைப்பாக‌ உண‌ர்ந்தான் வினோத். இத‌ற்குமேல் த‌னியாக‌ இந்த‌ வேலையை செய்ய‌ முடியாது என்ற‌ நிலையை அடைந்த‌க‌ண‌ம் அவ‌ன் க‌ண்ணில் ஒரு குட்டிப் பை ப‌ட்ட‌து. ப‌ல‌நாட்க‌ளாக‌ அவ‌ன் பொதிந்து வைத்திருந்த‌ பொக்கிஷ‌ம் அது!

ஸ்வேதாவின் நினைவுக‌ளைத்தான் பொதிந்து வைத்திருந்தான் அந்தப் பைக்குள்!

அவ‌னைப் பொறுத்த‌வ‌ரை அவை அவ‌ன‌து காத‌லின் நினைவுச்சின்ன‌ங்க‌ள் அல்ல‌, அவ‌ன‌து காத‌லின் அடையாள‌ங்க‌ள், காத‌லித்த‌த‌ன் அர்த்த‌ங்க‌ள்!

அவ‌ன் அதை ம‌றைத்தோ, ஒளித்தோ வைத்திருக்கவில்லை. அடிக்க‌டி அதை அவ‌ன் எடுத்துப் பார்ப்ப‌துண்டு. உள்ளே வ‌ழ‌க்க‌ம்போல் ஸ்வேதாவின் ப‌ழைய‌ கைக்குட்டைக‌ள், காலி நெயில் பாலிஷ் பாட்டில்க‌ள், ஹேர் கிளிப்புக‌ள் எல்லாம் இருந்த‌ன‌. அவ‌ற்றையெல்லாம் தொட்டுப்பார்த்தான். அவை ஒவ்வொன்றும் அவ‌னுக்கொரு க‌தைசொல்லும் போலும். உள்ளே பாதிப்புகைத்த‌ சிக‌ரெட் துண்டு ஒன்று கிடைந்த‌து. ஸ்வேதாவுக்குப் புகைபிடிக்கும் ப‌ழ‌க்க‌ம் கிடையாது. அது ஸ்வேதாவுக்குப் பிடிக்காது என்று வினோத் ம‌ங்க‌ள‌ம் பாடிய‌ க‌டைசி சிக‌ரெட்!

அதுமுதல் இன்றுவ‌ரை வினோத் புகைபிடித்த‌து கிடையாது. இப்படித் தோண்ட‌த் தோண்ட‌க் கிடைத்த‌ப் புதைய‌ல்க‌ளுக்கு அடியில் ஆழ‌த்தில் ஒரு க‌வ‌ர். அது ஒரு க‌ல்யாண‌ப் பத்திரிக்கை. அதைத் திற‌க்கிறான். வினோத்-ஸ்வேதாவின் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ஒரு ப‌ள‌ப‌ள‌ப்பான‌ காஸ்ட்லி கார்டில் அச்சிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

ஏதேதோ நினைவ‌லைக‌ளில் மூழ்கிய‌வ‌னாக‌ அதை அப்ப‌டியே ஒருமுறை த‌ன் விர‌ல்க‌ளால் வ‌ருடினான். அத‌ற்கும் ஆழ‌த்தில் ஒரு புகைப்ப‌ட‌ம். அதில் ம‌ண‌க்கோல‌த்தில் வினோத் ம‌ற்றும் ஸ்வேதா அருக‌ருகே நின்றிருந்தன‌ர். வினோத்திற்குத் த‌ன்னுள்ளார்ந்த‌ காத‌லை உயிர்ப்பித்த‌தோர் உண‌ர்வு. அதில் அதிக‌ நேர‌ம் ல‌யித்திருப்ப‌தைத் த‌ட‌ங்க‌ல் செய்த‌து காலிங்பெல் ச‌த்த‌ம். க‌த‌வைத் திற‌ந்தான்... அங்கு ஸ்வேதா நிற்கிறாள்..!

வினோத் அவ‌ளை ச‌ற்றும் எதிர்பார்த்திருக்க‌வில்லை.

"உங்க‌ளைத் த‌னியா இங்கே விட்டுட்டு என்னால‌ அங்கே பார்ட்டியில் நிம்ம‌தியா க‌ல‌ந்துக்க‌வே முடிய‌ல‌. அதான் பாதியிலேயே ஓர் ஆட்டோ பிடிச்சு வ‌ந்துட்டேன். ஐம் ஸோ ஸாரி வினோத்!" புன்முறுவ‌லுட‌ன் வீட்டிற்குள் நுழைந்தாள் திரும‌தி. ஸ்வேதா வினோத்!

பிரபு. எம்

பாட்டி கதை (சிறுகதை பாகம் -3)

வேக‌வேக‌மாகத் திரும‌ண‌ வீடாக‌க் க‌ளைக‌ட்ட‌த் துவ‌ங்கியிருந்தது ஜீவாவின் வீடு!!... வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ கையோடு அப்பா திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாகிறார்.... அம்மா அழைப்பித‌ழ்க‌ளின் ஓர‌ங்களுக்கு மஞ்சள் இட்டுக் கொண்டிருக்கிறார்... இதோ அடுத்த‌ வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டிலேயே நிச்சிய‌தார்த்த‌ விழா.... தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து வார‌ம் திரும‌ணம்!!!.... பரீட்சை முடிந்து நாளைக்கே அஞ்சலி வ‌ந்துவிடுவாள் அவர்கள் வீட்டுக்கு!! அடுத்த இரண்டு நாட்க‌ளில் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் இனிதே ந‌ட‌க்க‌ப்போகிற‌து.... ஜீவாவுக்கோ, வீட்டில் இல்லையென‌த் தெரிந்தும் அந்த வெறுமையில் பாட்டியைத் தேடுகின்ற‌ன‌ க‌ண்க‌ள்...

ஒரு கார் ஷோரூமிலிருந்து அழைப்பு வ‌ருகிற‌து ஜீவாவின் அலைபேசிக்கு...அவர்களின் லேட்டஸ்ட் மாடல் காரை "டெஸ்ட் டிரைவ்" செய்துபார்ப்ப‌த‌ற்கு இன்று மாலை ஷோரூமிற்கு வ‌ர‌லாம் என்று க‌ண்ணியமாக‌ அழைப்பு விடுக்கிறார்க‌ள்!!

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

ஓட்டுந‌ர் இன்றித் தன் கம்பெனி காரை இம்முறை தானே பாட்டிவீடு நோக்கி ஓட்டிச்சொல்லும் ஜீவா சிரித்துக் கொள்கிறான் தன் பாட்டியை நினைத்து!!

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

அஞ்ச‌லியிடம் ஆரோக்ய‌மாய் சவாலை ஏற்றுக்கொண்ட‌ ஜீவா தீர்க்கமாக உள்செல்கிறான் தன் பிரியமான பாட்டி வீட்டுக்குள்!!

இம்முறை எல்லாமே முன்பே திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌து... தயாராக‌ இருந்த‌ பாட்டியை மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌க் காரின் முன்னிருக்கையில் அம‌ர‌ வைத்துப் பாசமாய் ஸீட் பெல்ட் பொருத்திவிடுகிறான் பேர‌ன்... ச‌ரியான‌ அள‌வில் குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ காரில் பாட்டியின் முகபாவங்களைக் க‌வ‌னித்த‌வாறே காரை அலுங்காமல் செலுத்துகிறான் ஜீவா!!! அமைதியாய்.. வசதியான இருக்கையில் "ஜம்" மென்று கம்பீரமாய் அம‌ர்ந்து வ‌ரும் பாட்டி அந்த‌ காரின் சொகுசான‌ வ‌ச‌திக‌ளைப் புதிதாக‌ப் பார்க்கிறார்...!! தென்ற‌ல்போல‌ மெலிதான‌ குளிர்ச்சியை இத‌மாய்த் தெளிக்கும் ஏசி... சுவாச‌த்துக்குச் சுக‌மாய் கார் ஃப்ரெஷ்ன‌ரின் வாச‌ம்..... பூப்போல‌ இய‌ங்கும் கிய‌ரும், ப‌வர் ஸ்டியரிங்கும்..... கொஞ்ச‌மும் இரைச்சலின்றி ப‌ள்ள‌ம் மேடுக‌ளில் அமுங்கிக் கொடுத்து அமைதியாய் ஊர்ந்து செல்லும் அந்த ஊர்தியின் உள்புற‌ அழ‌கை அதிகம் அசையாமல் க‌ண்க‌ளை மட்டும் உருட்டிப் புதிதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி, அப்போது "இளைய நிலா.... பொழிகிறதே...!!" என இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.... வ‌ண்டியை ஓட்டிக்கொண்டே ஓர‌க்கண்ணால் தன் பாட்டியை ஒரு குழந்தையாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜீவா!!... ஊரைவிட்டு வெளியேறிய‌து வாக‌ன‌ம்..... ஜீவா வேக‌மெடுக்க‌ ... இய‌ல்பாய் க‌ண்க‌ள் சொருகித் தூங்கிப்போனார் பாட்டிய‌ம்மா!! ராஜ‌ச‌ய‌ண‌ம்!! :)

முன்ன‌தாக.... ஜீவா த‌ன் பாட்டியிட‌ம் தான் ஏதோவொரு காரை வாங்கி ஏமாற‌த் தெரிந்த‌தாக‌வும் இப்போதுதான் தெளிவ‌டைந்து விட்ட‌தாக‌வும் கூறினான்.... பாட்டியின் ம‌கிழ்ச்சி குறையுமுன்பே.... ஜீவா, " எல்லா க‌ம்பெனிகாரர்களூம் எங்க‌ காரை வாங்குங்கனு ஒரே தொந்த‌ர‌வு பாட்டிம்மா..... உங்க‌ பேர‌ன் ஏமாறுவானா!! தெளிவா சொல்லிட்டேன் என் பாட்டி ச‌ம்ம‌த‌ம் சொல்லுற‌ காரைத்தான் நான் வாங்க‌ப்போறேன்னு!!"... கொஞ்ச‌ம் இடைவெளிவிட்டு மெதுவாக‌ " அத‌னால‌ நாளைக்கு ந‌ம்ம‌ ரெண்டுபேரும் சிட்டில‌ இருக்குற‌ எல்லா கார் ஷோரூமுக்கும் போறோம்!!" நைஸாக சொருகிய‌ ஜீவா.....எந்த‌வொரு ப‌திலுக்கும் பாட்டி த‌யாராகும் முன்பே " நாளைக்கே பாட்டிம்மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்திட‌ணும்.... உங்க‌ ஒரே பேர‌னுக்கு ந‌ட‌க்க‌ப்போற‌ ஒரே க‌ல்யாணம் இது.." என்று எப்ப‌டியோ சிரிக்க‌ வைத்துப் பேசிப்பேசிப் பாட்டியைத் த‌ன் ப‌க்க‌ம் மெல்ல‌ ந‌க‌ர்த்தினான்!!!

சுகமான பயணத்தில் தூங்கிப்போன‌ பாட்டி க‌ண்விழித்த‌போது கண்முன்னே முற்றிலும் ஒரு புதிய‌ உல‌க‌ம் ப‌ர‌ப‌ர‌வென‌ இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.... கிழ‌க்கு நோக்கி மேலேறித் திடுமென‌ வ‌ட‌கிழ‌க்கில் வ‌ளையும் ஒரு ஃப்ளைஓவ‌ரில் அனாய‌ச‌மாக‌ காரை வளைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.... இப்போது பாட்டிக்கு வண்டியின் வேக‌ம் புல‌ப்ப‌டுகிற‌து.... ப்ளைஓவ‌ரின் மேலேயிருந்து ஜ‌ன்ன‌லில் த‌லைக்குக்கீழே ரோட்டின் இருபுற‌மும் நகர இட‌மின்றி அடைத்துக்கொண்டு முன்னேறும் நூற்றுக்க‌ண‌க்கான‌ கார்க‌ளும் ப‌ஸ்க‌ளும் அந்த‌ இடைவெளிக‌ளிலும் க‌ப‌டியாடும் வித்தியாச‌மான‌ பைக்குக‌ளையும் பார்க்க‌த் த‌லைசுற்றிய‌து பாட்டிக்கு.... நான்கு ரோடுக‌ள் ச‌ந்திக்கும் ஒரு பிர‌ம்மாண்ட‌ சிக்ன‌லில் முத‌ல்வ‌ரிசையில் அவ‌ர்க‌ள் கார் நிற்கிற‌து..... சுற்றிமுற்றி நாற்புற‌மும் ஆக்ஸ‌லேட்ட‌ர்க‌ளை முறுக்கிக் கொண்டுக் காத்திருக்கும் அவ‌ச‌ர‌ம் ஒரு போர்க்க‌ள‌த் தோற்ற‌த்தைக் கொடுத்த‌து பாட்டிய‌ம்மாவுக்கு!! குழ‌ப்ப‌மான‌ சிக‌ப்பு ப‌ச்சை ஒளிவிளையாட்டில் வேகமாய்ப் ப‌ங்குபெறும் பாத‌சாரிகளையும்... அஸ்த‌ம‌ன‌ வேளையின் கோப‌மான‌ ஹார்ன‌க‌ளிலும் உண்மையிலேயே கொஞ்ச‌ம் கிறுகிறுத்துப் போன‌ பாட்டிய‌ம்மா.... இந்த‌த் திடீர் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் ஒவ்வாம‌ல் கொஞ்ச‌ம் உட‌ல்குறுக்கிக் க‌ஷ்ட‌மாய்த் த‌ன் கைகளால் காதுக‌ளை மூடிக்கொள்ள‌ப் போனார்.... அப்போது அருகிலிருந்த‌ கிய‌ர் மாற்றும் கரம் பாட்டியின் கையைப் பாச‌மாய்ப் ப‌ற்றிக்கொண்ட‌து!!! முற்றிலும் புதிய‌ சூழ‌லில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ப் பாச‌மான‌ அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் தான் தூக்கிவ‌ள‌ர்த்த‌ பேர‌னுடைய‌து என்று ம‌ன‌ம் அறிந்த‌ க‌ண‌ம் சில்லிடும் ஓர் அற்புத‌மான‌ உண‌ர்வை அனுபவித்தார் பாட்டிய‌ம்மா.... ப‌ட்ட‌ண‌த்து மிர‌ட்ட‌லைச் ச‌ந்திக்கும் புதுத்தெம்போடு இப்போது, ர‌க‌ர‌க‌மாய் மின் விள‌க்குக‌ள் க‌லர்க்கோல‌ம் போட்டிருக்கும் பட்டணத்து மாலை அழ‌கை ர‌சிக்க‌த் துவ‌ங்கினார் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே!!!

த‌ரையிலிருந்து பிர‌ம்மாண்ட‌மாய் எழுந்து நின்ற‌ ஒரு கார் ஷோ‍ரூமில் கால்ப‌தித்து இற‌ங்கினார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... முத‌ல்நாள் ஸ்கூல்செல்லும் பிள்ளைபோல் புதிதான‌ அந்த‌ சூழ‌லில் பாட்டிம்மா முற்றிலும் சர‌ண‌டைந்துவிட்டதோர் உட‌ல்மொழியை வெளிப்ப‌டுத்தித் த‌ய‌ங்கி ஒடுங்கி நின்றார்... பாட்டியின் சின்னச் சின்ன‌ அசைவுக‌ளைக் கூட‌ இப்போது மொழிபெய‌ர்க்க‌த் தெரிந்துகொண்ட‌ ஜீவா... காரிலிருந்து இற‌ங்கிக் கொஞ்ச‌ம் குறுகி நின்ற‌ பாட்டியின் தோள்பிடித்து உள் அழைத்துச் சென்றான்..... "ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" என்று அல‌ட்டிக்கொள்ளும் பெரும் ஷோரூம் அது!! ஸ்டுடியோ எஃபெக்டில் மிர‌ட்ட‌லாய் அழ‌க‌ழ‌கு கார்க‌ள் பேராண்மையுடன் கம்பீரமாய் மின்னொளியில் ஜொலித்துக்கொண்டு ட‌ய‌ரூன்றி(!) நின்றுகொண்டிருக்கின்றன‌..... "ஹலோ ஐம் சீதாராமன்" என்று தானாக‌வே ஜீவாவிடம் அறிமுக‌மாகிக்கொண்டார் ஓர் எக்ஸிகியூட்டிவ்!! ப‌டுஸ்மார்ட்டான‌ ஓப‌னிங் கொடுத்துக் கை குலுக்கிக் கொண்ட‌ அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் த‌ன் தொழில்வாழ்வின் வித்தியாச‌மான‌தொரு சோத‌னையை சந்திக்க‌ப்போவ‌தை அப்போது உண‌ர்ந்திருக்க வாய்ப்பில்லை!!!

மார்க்கெட்டின் அதிர‌டி என்ட்ரியான அவர்களின் புதிய கார் ஒன்றின் அருகே ஜீவாவையும் பாட்டியையும் அழைத்துச் சென்றார் சீதாராமன்... "யூ ஸீ.." என்று ஜீவாவை நோக்கித் தங்க‌ள் வாக‌ன‌த்தைப் பற்றிப் பேச‌ ஆர‌ம்பித்த‌வ‌ரை.... இடைம‌றித்து "ஸாரி பாஸ், இங்கே என் பாட்டிதான் க‌ஸ்ட‌மர்.. நான் ஜஸ்ட் டிரைவர்தான்! அவ‌ங்க‌ளுக்கு எந்த‌ கார் பிடிக்குதோ அதைத்தான் வாங்க‌ப்போறோம்... ஸோ நீங்க அவங்ககிட்டயே பேசுறதுதான் கரெக்ட் !!" என்று நட்பாக சொல்லிவிட்டுப் பாட்டிய‌ருகே சென்றுப் ப‌வ்விய‌மாய்த் தோள்க‌ளைப் ப‌ற்றிக்கொண்டு "இந்த‌க் காரைப் பார்க்க‌லாமா பாட்டிம்மா?!!" என்று சொல்லி மெல்ல‌ ந‌க‌ர்ந்தான்!!

எதிர்பார்த்திராத‌த் த‌ன் புது வாடிக்கையாளரைப் பார்த்துப் புன்னகைத்துத் த‌ன் "டை"(tie)யை ஒருமுறை ச‌ரிசெய்துகொண்டார் சீதாராம‌ன்... சிரித்த‌முக‌மாய்த் த‌ங்க‌ள் காரின் டெக்னிக்க‌ல் ப்ள‌ஸ்பாயிண்டுக‌ளைப் பாட்டிக்கு ஏற்ற‌ மொழியில் எடுத்துச்சொல்ல‌த் த‌யாரானார்... அருகில் ஓர் ஓர‌மாய் சென்று அம‌ர்ந்துவிட்ட‌ப் பேர‌னை ஒருமுறை இத‌மாய்ப் பார்த்துவிட்டுப் பாட்டி மெல்ல‌ அந்த‌க் காரின் அருகே கொஞ்ச‌ம் முன்னேறி த‌ய‌க்க‌த்தோடு அதைத் தொட்டுப் பார்த்தார்!! "ஸாலிட் பாடி... ஹைட்ராலிக் ச‌ஸ்பென்ஷ‌ன்ஸ்..... ஹ்ம்ம்ம்ம்.. எப்ப‌டிச் சொல்ற‌து!!" என்று சீதாராம‌ன் த‌ன‌க்குள் மென‌க்கெடுவதையும்.... அவ‌ர் கூறுவ‌தைப் புரிந்துகொள்ள‌ அதிக‌ம் முய‌ற்சிக்காம‌ல் த‌ன் "point of view"ல் காரையே சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டியையும் கொஞ்ச‌ம் வில‌கியிருந்து க‌ண்டு ர‌சிக்கையில் ஜீவாவுக்குக் க‌விதைக‌ள் தோன்றிய‌து ம‌ன‌துக்குள்!!! இறுதியில் "ஃபீல் ஃப்ரீ அம்மா...." என்று சிரித்துப் பாட்டியைக் காருக்குள் அம‌ர்ந்து பார்க்க‌ப் ப‌ணித்த‌ சீதார‌ம‌னுக்கு உத‌வ ஓர் அழகான, குட்டைப் பாவாடை இள‌ம்பெண்ணும் சேர்ந்துகொண்டாள்!! பாட்டிய‌ம்மாவைப் பாந்த‌மாய் அழைத்துக் காருக்குள் அம‌ர‌வைத்தார்க‌ள்... ஸீட்பெல்ட் பாட்டிக்குப் பொருத்திக்காட்ட‌ அந்த‌ இள‌ம்பெண் உத‌வ, அவளின் மிக்ச் சிக்கனமான உடையை வித்தியாச‌மாக‌ப் பாட்டி பார்த்த‌ பார்வை தூர‌த்திலிருந்து பார்த்த‌ ஜீவாவுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து!!! பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார் பாட்டிய‌ம்மா!! க‌டைசியாக‌ இத‌னை ஒத்த‌ ம‌ற்ற‌ கார்களுட‌னான‌ ஒப்பீடு ம‌ற்றும் ப‌ல‌ப்ப‌லத் த‌க‌வ‌ல்க‌ள் அட‌ங்கிய‌ ப‌ள‌ப‌ள‌ பாம்ப்ளெட்டுக‌ளைப் பாட்டியிட‌ம் கொடுத்து விடைகொடுத்தார்க‌ள் பாச‌மாக‌!!!

"முத‌லாளிய‌ம்மா"வை ம‌ரியாதைப் புன்ன‌கையுட‌ன் காரில் மீண்டும் அலுங்காம‌ல் அம‌ர‌வைத்து ஜீவா வ‌ண்டியை செலுத்தினான் அடுத்த‌ ஷோரூமுக்குள்!!! அடுத்த‌டுத்து மூன்று கார் ஷோரூம்க‌ளுக்கு ர‌க‌ளையான‌ அதிர‌டி விஜ‌ய‌ம் கொடுத்துவிட்டப் பாட்டிய‌ம்மா க‌ளைப்படைந்து விடும்முன்பாக‌வே த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வ‌ர்க‌ளை எப்போதும் அழைத்துச் செல்லும் ரெஸ்டாரெண்டில் ஏற்கென‌வே 'புக்' செய்து வைத்திருந்த‌ டேபிளில் பாட்டியை அம‌ர‌வைத்து ஆர்ட‌ர் செய்த‌ ஸ்பெஷ‌ல் உண‌வுக‌ளையெல்லாம் தானே பாட்டிக்குப் ப‌ரிமாறினான்!! பல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கிராமத்தில், பாட்டிக்குக் குட்டிப் பேரனாய்க் க‌ழித்த‌ பொழுதுக‌ளுட‌ன் இன்று அவ‌ன் ம‌ன‌ம் அடைந்த‌ திருப்தியும் சேர்ந்துகொண்ட‌து..... மென்மையான‌ கைக‌ளால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவ‌தை அவ‌ர் கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! ம‌ண‌ம‌க‌ள் தான் விள‌க்கேற்றும் வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்துவிட்ட‌தாக‌க் குறுந்த‌க‌வ‌ல் வந்தது அஞ்ச‌லியிட‌மிருந்து!!!
வீடுநோக்கி ப‌ற‌ந்தார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... கார்ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ க‌ண‌க்க‌ற்ற‌ ப‌ள‌பள‌ ஃபாம்ப்ளெட்டுகள், நோட்டீசுக‌ளையெல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்தி சிர‌த்தையாய்த் த‌ன் பையில் வைத்துக்கொண்டார் பாட்டி!!

பார்த்த மாத்திர‌த்திலேயே அஞ்ச‌லியைப் பிடித்துப்போன‌து பாட்டிக்கு!! த‌ன் சொந்த‌ப் பாட்டியைப் போன்றேதான் ந‌ம் பாட்டிய‌ம்மாவையும் பார்த்தாள் அஞ்ச‌லி.... அஞ்ச‌லியின் த‌ந்தையும் ஜீவாவின் அப்பா ராஜ‌கோபால‌னும் முன்பே ந‌ண்ப‌ர்க‌ள் அத‌னால் சிர‌ம‌மின்றி எளிதில் ஒட்டிக்கொள்ள‌ முடிகிற‌து அஞ்ச‌லிக்கு!! அதிக‌ம் ப‌ரிச்சிய‌மில்லாத‌ ஜீவாவுட‌னும் இப்போது "ஃபோன் ஃபிரெண்ட்" ஆகிவிட்டாள் அல்ல‌வா!!! சிறிது நேர‌ம் அனைவ‌ரும் வீட்டு ஹாலில் அம‌ர்ந்து பேசிக் கொண்டிருந்தார்க‌ள் அஞ்ச‌லியைக் காக்க‌ வைத்துவிட்டு பாட்டியுட‌ன் சுற்றிக்கொண்டிருக்கும் ம‌க‌ன்மேல் கொஞ்ச‌ம் அதிருப்தி கொண்டிருந்தார் ராஜ‌கோபால‌ன்....!!! எவ்வ‌ள‌வு அன்பு செலுத்தினாலும் அதைப் புரிந்துகொள்ளாம‌ல் அல‌ட்சிய‌ம் செய்வ‌துதான் த‌ன் தாயின் வாடிக்கையென்று அவ‌ரை எண்ண வைத்திருந்தது தன் தாய்மீதான‌ அவருடைய‌ இத்த‌னை நாள் கோப‌ம்!!! நேர‌ம் அதிக‌மாகிப் போய்விட‌ ஜீவாவும் அஞ்ச‌லியும் பாட்டிக்கென்று ஏற்கெனவே ஜீவா த‌ன் வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த‌ அறையில் மெத்தையில் ப‌டுக்க‌வைத்துக் க‌ம்ப‌ளியால் பொதிந்து விட்டார்க‌ள்..... நிம்ம‌தியாக‌ப் ப‌டுத்துத் தூங்குமாறு ப‌ணித்த ஜீவா ஏற்கென‌வே பாட்டியிட‌ம் சொல்லிவிட்டான்... அவ‌ர் தேர்வு செய்யும் காரைத்தான் வாங்க‌ப் போவ‌தாக‌!!!

அஞ்ச‌லியும் ஜீவாவும் பாட்டியைத் துயில‌விட்டுத் த‌த்த‌ம் அறைக‌ளுக்கு ந‌க‌ர்ந்தார்க‌ள் "ஸ்வீட் ட்ரீம்ஸ்" சொல்லிவிட்டு!! த‌ன் ம‌னைவியுட‌ன் பாட்டி அறைக்கு அருகில் சென்ற‌ ராஜ‌கோபால‌ன் த‌ன் தாயின் குண‌த்தைப் ப‌ற்றித் த‌ன‌க்கு ந‌ன்கு தெரியும் என்று த‌ன் ம‌னைவியிட‌ம் சொல்லிக்கொண்டு.... ஜீவா சிர‌த்தையோடு ப‌ஞ்ச‌னையும் க‌ம்ப‌ளியும் கொடுத்துப் பாச‌மாய்ப் ப‌டுக்க‌வைத்த‌தை உதாசின‌ப்ப‌டுத்திவிட்டு நிச்சிய‌ம் இந்நேர‌ம்‌ த‌ன் தாய் த‌ரையில் பாயை விரித்துப் ப‌டுத்திருப்பார் என்று ம‌னைவியிட‌ம் "பெட்"(bet) வைத்துக்கொள்ளாத‌ குறையாய் பாட்டியை மெதுவாக‌ப் பார்த்தார்க‌ள்.... ச‌ரியாக‌வே க‌ணித்திருந்தார் ம‌க‌ன் த‌ன் தாயை!! ப‌டுக்கையில் பாட்டியைக் காண‌வில்லை!! கீழே தரையில் ஒரு மெல்லிய‌ விரிப்பில்தான் போர்த்திப் ப‌டுத்திருந்தார் பாட்டிய‌ம்மா..... ஆனால் அவ‌ர் தூங்கியிருக்க‌வில்லை.... த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக‌ பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுக‌ளையெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிக‌ சிர‌த்தையாய்ப் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்குக் கொஞ்சம் இடுங்கிக் கொண்டு!!!.... பேச வார்த்தையின்றி மௌன‌மாக‌த் த‌ன் அறைக்குச் சென்றார் க‌ண்க‌ல‌ங்கிப்போன ராஜ‌கோபால‌ன் .....

பாட்டியும் அஞ்ச‌லியும் வீட்டிலிருக்க‌ ஆன‌ந்த‌மாய்க் க‌ழிந்த‌து விடிந்த‌ அந்த‌ப் புதுப் பொழுது!!! அடுத்த‌ நாள் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் நாளை ம‌றுநாள்!! திரும‌ண‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பும் இல்லாம‌ல் இல்லை ஜீவாவுக்கு!! ஏதேதோ ச‌ந்தோஷ‌ அலைய‌டித்திட‌ வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ ஜீவாவிட‌ம் அன்று இர‌வு பாட்டி தான் தேர்வு செய்த‌ காரைக் கொடுத்தார்!!! ஆச்ச‌ர்யமாக... ச‌ரியாக‌ அது ஜீவா ஏற்கென‌வே த‌ன் ம‌ன‌துக்குள் வாங்க‌ நினைத்திருந்த‌ மாடலாக அமைந்திருந்தது.... அஞ்ச‌லிக்குப் பிடித்த‌ க‌ரும்ப‌ச்சை நிறத்திலேயே தேர்வு செய்திருந்தார் பாட்டிய‌ம்மா!!!

மூளைக் க‌ல‌ப்பில்லாது முழுக்க‌ முழுக்க‌ இத‌ய‌ப்பூர்வ‌மான‌ ஒரு ப‌ரிசோத‌னையில் அபார‌ வெற்றி க‌ண்டுவிட்ட திருப்தியை ஜீவா உண‌ர்ந்தான்... எப்ப‌டி இப்ப‌டி ஓர் அதிசிய‌ம் சாத்தியமானது? என்று ம‌னம் கேட்ட‌போது இந்தக் கேள்வியைக் கால‌ம்காலத்துக்கும் மனதுக்குள் கேட்டுக்கொண்டு விய‌ந்துகொள்ள‌லாம்... என்று தோன்றியது!!! த‌ட‌த‌ட‌வெனத் திட்ட‌ங்க‌ள் தீட்டினான் ச‌ந்தோஷ‌த்தைக் கொண்டாடித் தீர்த்திட‌!! பாட்டியிட‌ம் சென்று இன்று மாலை குடும்ப‌த்தோடு தாத்தா க‌ட்டிய‌ குல‌தெய்வ‌க் கோவிலுக்கு புதுக்காரில் முத‌ல்ப‌ய‌ண‌ம் என‌க் கூறினான்.... ஆயிர‌ம் யோச‌னைக‌ள் தோன்றியிருந்தாலும் பாட்டியை மகிழ்விக்க‌ இதுதான் மிக‌ச்சிற‌ந்த‌தாய்த் தோன்றிய‌து!!! அஞ்ச‌லியிட‌ம் ம‌ட்டுமின்றித் த‌ன் த‌ந்தையிட‌மும் த‌ன் சந்தோஷ‌த்தையெல்லாம் முழுமையாய் சுத‌ந்திர‌மாய்ப் ப‌கிர்ந்துகொள்ளமுடிகிறபொழுது பல வருட மன இறுக்கங்கள் முற்றிலுமாய்த் தளர்ந்ததுபோனது போல் ஓர் உணர்வு.... இன்று(முதல்) அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது வீட்டில் பாட்டியிருப்பார்!!!

தன்பாட்டியின் நினைவினாலோ என்னவோ அஞ்சலி பாட்டியம்மாவுடனேயேதான் தனது பெரும்பாலானத் பொழுதுகளை செலவிட்டுக் கொண்டிருந்தாள்... "பாட்டிம்மா... சந்தோஷமா இருக்கீங்களா?" என்று அடிக்கடி அஞ்சலி கேட்டுக்கொண்டே இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன...!! ஜீவா இந்த இரண்டு நாட்களும் வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செய்துகொண்டேயிருந்தான்.... பாட்டி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்கக் கேட்கத் தனியே இத்தனை வருடங்கள் அந்தக் கிராமத்துவீட்டில் என்ன செய்திருந்திருப்பார் இந்த நேரங்களில் என்று கிரஹித்துப் பார்க்க முயற்சித்த‌வனாயிருந்தான்!!! ஜீவாவால் நிச்சியம் அதை உணர முடியாது என்று பாட்டிம்மாவுக்குத் தெரியும்... பேரனுக்காக சிறைபட்டிருக்கிறார் இம்முறை..... தன் அறையைவிட்டுப் பாட்டி வெளியே வரவேயில்லை... அந்த மாடிவீட்டு அறையிலிருக்கும் ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே கீழே பார்த்தவண்ணமாகவே இருந்தார்.... தனக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட உயரத்தைக் கணக்கிடுவதாக இருந்தது அந்தப் பார்வை... அந்த உயரம் ஏன் பாட்டியைத் துன்புறுத்துகிறது என்று புரியவில்லை.... காலையில் எழுந்ததுமுதலே உடலில் ஏதோவொரு உஷ்ணத்தை உணர்ந்து கொண்டேயிருந்தார் பாட்டியம்மா..... கார் பயணம்... ஜன்னல்வழியே பார்த்த புது பரபரப்புகள்.... கார் ஷோரூம்கள்.... புதுஇடத்துக்குப் பழக்கமில்லாது போதிய தூக்கமின்றி இடைவிழித்த இமைகள்.... அமர்ந்திருக்கும்போது கூட நகர்வதுபோலவே உணர்ந்தார்.... ஏதேதோ படபடப்புகளை உணர்ந்தார்... என்னவென்றே தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுப்போன பாட்டியம்மா வீட்டில் செய்வதுபோல் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துபார்த்தார்.... தாத்தா பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த சுவர் தந்த ஆறுதல் ஸ்பரிசத்தை இந்த சுவர்களால் தர இயலவில்லை... அஞ்சலியிடம் சொல்லியிருந்தால் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருப்பார்கள்....... தன் உடலுக்குள் இதுவரைப் பழக்கப்பட்டிருக்காதப் புதுவகை அழுத்த்தை உணர்ந்த பாட்டியம்மாவுக்கு உடல் வியர்க்கத் துவங்கியது... தனது பையைக் கண்களால் துழாவ ஆரம்பித்தார்......

ஜீவாவுக்கு வீட்டிலிருந்து அழைப்பு... கோபமாய் ராஜகோபாலன்..... ஆசைஆசையாய் அன்புமகன் போட்ட திட்டங்கள் அனைத்தும் காரணமின்றி தவிடுபொடி ஆன ஆற்றாமை மகன்மீதே கோபமாய் வெடித்தது...... மீண்டும் அதே கதை.... பாட்டி வீட்டில் இல்லை..... கிளம்பிவிட்டார்...

குழம்பிப்போன ஜீவா.... நிதானமாக அஞ்சலியை அழைத்தான்.... அஞ்சலியின் பேச்சின்மூலம் பாட்டியின் பதற்றத்தை ஓரளவு உணரமுடிந்தது ஜீவாவுக்கு... அஞ்சலியிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் தன் பையைத் தூக்கிக்கொண்டு... ஆனால் ஏன்???

"பாட்டியம்மா.... பாட்டியம்மா... டிக்கெட் எடுத்தாச்சா??? பாட்டீ.... பாட்டியம்மா!!"
கண்டெக்டர் அழைக்கத் திடுக்கிட்டுத் திரும்பினார் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி.... கை நடுங்க சுருக்குப் பையிலிருந்து பணமெடுக்கத் தடுமாறியதைப் பார்த்தவர்கள்... "கூட யாரும் வரலியாம்ம்மா??" என்று விசாரிக்கத் துவங்கினார்கள்.... தண்ணீர் கொடுத்தார்கள்... தன் மஞ்சள்பையின் கைப்பிடியைத் கையில் பிடித்துத் திருகிக்கொண்டே வந்தார் பயணம் முடியுமட்டும் பதற்றத்தின் வெளிப்பாடாய்... நல்லவேளை அதிக தூரமில்லை..... மிகுந்த தயக்கத்துடன் இறக்கிவிட்டார்கள் பாட்டியம்மாவை அவர் கிராமத்தில்.... உச்சிவெயிலில் உடல்வியர்த்த‌ப் பாட்டிக்கு வீடுபோய் சேர்ந்துவிட்டால்போதுமென இருந்தது..... மளிகைக்கடைக்காரர் ஷண்முகம் தன் டிவிஎஸ்50 யில் எங்கோ சென்றுகொண்டிருந்தார்.... மூச்சிரைக்க நகர்ந்து கொண்டிருந்த பாட்டி உதவிக்கு அழைப்பதை உணர்ந்தவர்.... அருகில் சென்றார்..... நிலையைப் புரிந்து வேகமானவரிடம் வேறெதுவும் வேண்டாம்... வீட்டுக்குச் செல்லமட்டும் தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பாட்டி... பாட்டி சொல்லை மீறமுடியாமல், பின்னால் அமர்ந்திருந்த கடைப்பையனை இறக்கிவிட்டு பாட்டியைத்தன் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு சோடா வாங்கிக்கொடுத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டுதான் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றார்....

பெருமூச்செறிந்து வீட்டுமையத்தில் தரையில் அமர்ந்தார் பாட்டி.... புடவைத்தலைப்பால் முகத்தின் வியர்வையை ஒற்றி எடுத்தார்..... சுவரில் சாய்ந்து சிறிது நேரம் களைப்பாற முயற்சித்தார்..... இன்னும்கூட காதுகளில் காரின் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது..... ஏதோவொரு படபடப்பு மார்புக்குள்..... தன் செய்கையைப் பேரன் இந்நேரம் அறிந்திருப்பானா???? என்ற எண்ணம் அதீதமான‌ அழுத்தத்துடன் இரத்ததை நரம்புகளுக்குள் செலுத்தியது...... தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று அறிந்துவிட்ட பாட்டியம்மா கடுங்காப்பியில் சுக்கு தட்டி அருந்தலாம் என்று அடுப்பங்கரைக்குத் தட்டுத்தடுமாறி சென்றார்..... சட்டியில் நீரைவார்த்து சுக்கு தட்டிப்போட்டு அடுப்பில் வைத்தவருக்கு கிறுகிறுத்தது தலை.... தலைக்குமேலே விட்டத்தில் கரிபிடித்த சுவர் கார்ஷோரூமில் அண்ணார்ந்து பார்த்த ஒளிவிளக்குகளால் அடுக்கப்பட்ட மேல்சுவர் போல் தோற்றமளித்தது பாட்டியின் தலை சுற்றிய பார்வைக்கு..... சுவரில் சாய்ந்துகொண்ட பாட்டியம்மாவுக்கு சரியாக‌ இதயத்திலேயே கணமாக ரீங்கரித்தது அந்த ஹார்ன் சத்தம்.....கால்கள் நடுங்கத்துவங்கின பாட்டியம்மாவுக்கு.... வாசலில் கார் நிறுத்தப்படுகிறது....

"பாட்டிம்ம்மா........."

அன்பான துடிப்போடு வீட்டிற்குள் பாட்டியைத் தேடும் ஜீவாவின் குரல்..... சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்ட தன்னைத் தேடிவந்திருக்கும் பேரனைப் பார்த்துப் பெரும்பதற்றம் கொண்டார் பாட்டி..... கையிலிருந்த சட்டியைப் பொத்தென்றுத் தரையில் போட்டு பேரனைப் பார்த்து பயந்துபோன பாவனையில் வாய்க்குழறத் துவங்கினார்..... செயலிழந்த ஜீவா, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாலும்...... சற்றும் தாமதிக்காமல் வேகமாக முன்னேறி அப்படியே ஆதரவாய்த் தன் உடலோடு அரவணைத்துக்கொண்டான் பதறும் பாட்டியை!!!!

இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலையை வருடிக் கொடுத்தவனிடம் "பாட்டிய மன்னிச்சுருப்பா... மன்னிச்சிடுப்பா" வாய்க் குழறிச் சொல்லிக்கொண்டிருந்தார் உஷ்ணம் தணியாமல்..... படுவேகமாய்ப் பட பட பட வெனக் கலவரமாய் அதிரும் பாட்டியின் இதயத்துடிப்பை அந்த அணைப்பிலேயே உணர்ந்தான் ஜீவா.... நிலையை மிகவிரைவில் புரிந்துகொண்டு... காதுக்குள் ரகசியமாய் "பாட்டிம்மாவை நான் எதுக்கு மன்னிக்கனும்??? என் பாட்டி எந்தத் தப்பும் செய்யலையே..... நான்தான் தப்பு செய்யப்போனேன்...... கோபம் இருந்தாதானே மன்னிக்கனும்.... எனக்குதான் கோபமே இல்லையே.... சத்தியமா எனக்குக் கோபமே இல்லையே.... " என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே பேரன் அழுத்தமாய் சீரான இடைவெளியில் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டிருக்கையில் நதியலைபோல் நிதானமாகத் துடித்திடும் பேரனின் இதயத்தை அதே அணைப்பிலேயே இப்போது பாட்டியம்மா உணர்ந்தார்.... நடுங்கிய கைகள் பேரனின் கைகளை முடிந்தவரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.... அதிரடித்துத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சாந்தியடைத்துவங்கியது....... மெதுவாக....மெதுவாக இதோ இப்போது இரண்டு இதயங்களும் ஒரே வேகத்தில் துடிக்கின்றன!!! இயல்பு நிலையை அடைவார் என்று பாட்டி நினைத்திருக்கவில்லை.... படபடப்பின்றிக் கண்கள் தெளிந்த நேரம் அஞ்சலி சுடசுடக் காஃபி கொடுத்தாள்....!! நிதானமாகப் பருகிய பாட்டியம்மாவுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த புதுக்காரைக் காட்டினார்கள் ஜீவாவும் அஞ்சலியும்...."முதன்முதல்ல குலசாமி கோயிலுக்குத்தான் போகணும்னு கிளம்பி வந்திருச்சு உங்க‌ பேரனுக்கு நீங்க‌ வாங்கிக்கொடுத்த கார்!!!..... நீயும் தாத்தாவும் தான் எங்களுக்குக் குலசாமி.... வேற யாரும் இல்ல எங்களுக்கு.. உம்மேல போய் நான் கோபப் படுவேனா பாட்டிம்மா!!!! எனக்கு பாட்டியும் வேணும்... பாட்டிவீடும் வேணும்.... பாட்டி நீங்க இங்க இருந்தாதானே எனக்கு பாட்டிவீடு னு ஓர் இடம் உலகத்துல இருக்கும்.... நீங்க எனக்கு வேணும் பாட்டிம்மா... நீங்க ரொம்ப நாளைக்கு வேணும்...சந்தோஷமா வேணும்... எனக்கு அதுமட்டும்தான் வேணும்!!" எப்படியோ கூறிமுடித்தான் ஜீவா.....

மெல்ல மெல்லப் பாட்டி இப்போ back to form!!!!

பேரனுக்கும் அஞ்சலிக்கும் காருக்கும் சுற்றிப்போட்டுத் திலகமிட்டுக் "குலசாமி கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போங்கப்பா!!" என்று சிரத்தையாய் விடைகொடுத்தார் பாட்டிம்மா!!! புதுக்காரில் ஜீவா பயணம் துவங்க... ரோடு முடியும்வரை பாட்டிக்குக் கையசைத்து விடைபெற்ற அஞ்சலி... "எப்படி பாட்டி கரெக்டா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச காரை செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க????" என்று கேட்டாள்.... ஜீவா ஒருகணம் புன்னகைத்துவிட்டு "அதான் பெரியவங்க... அவங்களுக்கு எப்பவுமே தெரியும்போல நம்ம விருப்பு வெறுப்பு தேவை ஆசை யெல்லாம்!! நம்ம பாட்டி தாத்தா ஆனப்புறம்தான் புரியும்னு நினைக்கிறேன் அந்தப் பாசம்!!!" என்று கூறிமுடித்தான்......

"அம்மாடி...நீயாவது புரிஞ்சுக்கோடா என் கண்ணு.... உலகம் தெரியாம இந்தக் கிழவி அவங்க தாத்தா வெச்சிருந்த காரையே வாங்கிடுப்பானு சொல்லிட்டேன் அதுக்காக நான் சொல்லுற காரைத்தான் வாங்குவேன்னு பிடிவாதமா இருக்கான் என் பேரன்.... நான் கிழவிம்மா... அந்தக்காலம்... கிராமம்... எனக்கு எதுவும் தெரியாது.... இந்தப் பேப்பர் எல்லாம் படிச்சுப்பாத்து ஒண்ணுமே புரியலமா இந்தக்கிழவிக்கு..... சும்மா ஒண்ணு வாங்கிப்போட இது அஞ்சு பத்து விளையாட்டில்ல.... உன்னக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன் கண்ணு இதுல உனக்கும் ஜீவாவுக்கும் பிடிச்ச காரு எதுனு சொல்லு நான் அதையே ஜீவாகிட்ட சொல்லிடுறேன் எனக்குப் பிடிச்ச காரும் அதுதான்னு!!!" எவ்வளவோ மறுத்தும் வேறுவழியின்றி பாட்டிக்கு அடி பணிந்த அஞ்சலி ஜீவாவிடம் சொல்லவில்லை இந்த ரகசியத்தை!!!

காரோட்டும் கணவனை ஒருமுறை தலைகோதிவிட்டுச் சிரிக்க ஜீவாவும் சிரித்தான் திருப்தியாக!!!!


முற்றும்


பிரபு. எம்