ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்


இந்திய ஆங்கிலம் பேசும் இந்தத் திரைப்படம்தான் சென்ற வருடத்தின் சிறந்த ஹாலிவுட் படம்!! 1927 லிருந்து வழங்கப்படும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுப் பட்டியலில் இறுதியில் 2008ல் ஏ ஆர் ரஹ்மான் என்ற பெயரும் நிலைத்து இடம்பிடித்து விட்டது.... ஓர் அற்புத வரலாறு நாம் வாழும் நாளில் அரங்கேறிய ஒரு திருப்தி.... "எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!!"

"கவுன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி இரண்டாம் பாகம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமிதாப் பச்சனை விகடன் பேட்டி கண்டது நினைவிருக்கிறது.... அதில் ஒரு கேள்வி அமிதாப்பிடம் கேட்கப்பட்டது... "இந்நிகழ்ச்சியில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பவர் "யூனிவர்சிடி சேலஞ்ச்" போன்ற நிகழ்ச்சிகளைக் கொடுத்து அசத்திய சித்தார்த்தபாசு, இருப்பினும் தீயணைப்பு வண்டி என்ன நிறம்?? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டு அதற்குப் பச்சை, மஞ்சள் என்று சாய்ஸும் கொடுக்கப் படுகிறதே??"

அதற்கு அமிதாப்பின் பதில்: "க்ரோர்பதி நிகழ்ச்சி ஒரு க்விஸ் ஷோ இல்லை..கேம் ஷோ!! எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படி கேள்விகள் இதில் இருக்கும். இருக்க வேண்டும்! ஏதோ அறிவாளிகளுக்கான நிகழ்ச்சியென்று தோன்றிவிட்டால், அதன் சுவாரஸ்யமே போய்விடும். ஓரளவு பொதுவிஷயங்களில் ஆர்வமிருந்தாலே போதும் ஹாட்சீட்டில் அமரலாம், அப்படி அமர்பவர்களுக்குக் கொஞ்சம் "மசாலா" இருந்தால் க்ரோர்பதியும் ஆகலாம்.. அதுதான் ஃபார்முலா!!"

ஸ்லம்டாக் பார்த்து முடித்த கணமே மனதில் தோன்றியது அமிதாப்பின் இந்த பதில்தான்! சேரியில் பிறந்த ஜமால் போன்ற ஓர் இளைஞன் இத்தகைய ஒரு மெகா ஷோவில் அறிவுஜீவிகள் யாவரும் நெருங்கவியலாத கடைசி கட்டம் வரை வந்து வெற்றியும் பெற்றதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் படத்தைத் துவக்கி முடிவில் D) It's Written என்று முடிக்கும்போது ஒரு நிறைவை உணரமுடிகிறது அதற்கே ஒரு ஸ்பெஷல் விருது தரலாம்.....

மில்லியனராவதற்குப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்... அந்தப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்கு?? பதினான்காயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் சரிதான் அல்லது விதிவசத்தாலோ எதனாலோ கேட்கப்படுகிற அந்த அசல் பதினான்கு கேள்விகளுக்கும் பதில்தெரிந்திருந்தாலும் சரிதானே!! வாழ்க்கைத் தன் மீது கிறுக்கிப் போட்டப் பாடங்களைத் தவிர வேறெதையுமே படித்திராத ஓர் இளம் காதலனுக்கு அந்த வாழ்க்கையே தந்த பரிசு, மில்லிய‌ன் டால‌ர் ம‌திப்புள்ள‌ சில‌ ப‌தில்க‌ளை அவ‌ன் ம‌ன‌தில் போகிற‌ போக்கில் வ‌லியுட‌ன் ப‌ச்சைக் குத்திவைத்த‌து!!
எல்லா குழ‌ந்தைக‌ளுக்குமே பிடித்த‌து த‌ண்ணீரில் முங்கி விளையாடுவ‌து... க‌ள்ள‌மின்றி க‌ப‌ட‌மின்றித் த‌ண்ணீரில் முங்கி விளையாடிக்கொண்டிருகும் வேளையில் சிறுவ‌ர்கள் ச‌லீமும் ஜ‌மாலும் நிச்சய‌மாக‌ உண‌ர்ந்திருக்க‌ மாட்டார்க‌ள் இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் அர்த்த‌மில்லாத‌ கேவ‌ல‌மான‌ ஒரு ம‌த‌ச்ச‌ண்டையில் த‌ங்க‌ள் தாய் பலியாக‌ப்போகிறாள் என்று.... பார்வையாள‌ர்க‌ளாகிய‌ நாமும்தான்!! உயிர்க்கொல்ல‌ வ‌ல்ல‌ கொடூர‌ ஆயுத‌ங்க‌ளைத் தாங்கிய‌ தாடிவைத்த‌ த‌டிய‌ர்க‌ள் பெருங்குரலெடுத்து ர‌த்த‌வெறியோடு ம‌க்க‌ளை நோக்கி ஓடிவ‌ந்தால் இந்தியாவில் 'க‌ல‌வ‌ர‌ம்' என்பார்க‌ள், என்ப‌தை முற்றிலும் அய‌ல்நாட்டு இய‌க்குன‌ர் டேனியேல் கூட‌ அறிந்துகொண்டுள்ளார்!! அவ‌ர் வாயிலாக‌ இன்று உலக‌மே அறிந்துகொண்டிருக்கும் ஆளுக்கொருவித‌மாக‌! அந்த‌ இள‌ம்தாயின் முக‌த்திலேயே அறைகிற‌து வ‌லிய‌தொரு உருட்டுக்க‌ட்டை அவ‌ளின் உயிரை அங்கேயே வாங்கிக்கொண்டு... அவ‌ள் பிஞ்சு ம‌க‌ன்க‌ளின் பூவிழிக‌ளின் வாச‌லிலேயே சுருண்டு விழுந்து உயிர்துற‌க்கிறாள் அந்த‌ப் பெண்.... தொட‌ரும் அந்த‌க் க‌ல‌வ‌ர‌த்தின் அத‌க‌ள‌த்தில் நிதான‌மிழ‌க்கும் ஒரு சாமானிய‌னின் க‌ண்க‌ளாக‌வே மாறி சுழ‌ன்ற‌டித்து ஒளிப்ப‌திவு செய்திருக்கும் ஆஸ்க‌ர் வென்ற‌ கேமரா நிலைகுத்தி நிற்ப‌து த‌ன‌து வ‌ல‌துகையில் வில்லொன்றை வைத்துக்கொண்டு திறுதிறு வென்று விழித்துக்கொண்டிருக்கும் ஒரு குட்டி "இராம‌ன்" மீது!! (இராம‌வேஷ‌ம் போட்டு அந்த‌ சிறுவ‌ன் உங்க‌ள் தெருக்க‌ளில் என்ன‌ செய்து கொண்டிருக்கிறான்?? என்று கேட்டார் த‌மிழ் தெரிந்த‌ வெளிநாட்ட‌வ‌ர் ஒருவ‌ர்... அவ‌ன் 'யாச‌க‌ம்' செய்கிறான் என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடர்ந்தேன் அவ‌ருக்கு அந்த‌ வார்த்தைக்கு நிச்சிய‌ம் அர்த்தம் தெரியாது என்று ம‌ன‌துக்குள் உறுதிப் ப‌டுத்திக்கொண்டு!!) அதுவே மில்லிய‌ன‌ர் விளையாட்டில் ஜமாலுக்கு ஒரு கேள்வியின் ப‌திலாகிற‌து..!! இவ்வாறு அநாதையாகிப் போகிற‌ ஜ‌மாலைத் த‌த்தெடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம்போல‌க் குப்பைத்தொட்டிக‌ள்தான்.... குப்பைத்தொட்டியின் பராம‌றிப்பில் வ‌ள‌ர்கிற‌ சிறுவ‌ர் சிறுமிக‌ளைக் க‌ண்டெடுத்துப் பிச்சைக்கார‌ர்க‌ளாக‌ ந‌வீன‌ப்ப‌டுத்துகிறான் (!) ஒரு கிராத‌க‌ன். ந‌ன்றாக‌ப் பாட‌த்தெரிந்த‌ ஒரு சிறுவ‌னின் கண்க‌ளில்.... அந்த‌க் காட்சியின் கொடூர‌த்தை விவ‌ரிக்க‌ ம‌ன‌மில்லை... குருட‌னாக்க‌ப்ப‌டும் அந்த‌க் குழ‌ந்தைபாடும் பாட‌ல் அங்கிருந்து த‌ப்பித்து செல்லும் ஜ‌மாலுக்கு இன்னொரு மில்லிய‌ன‌ர் கேள்விக்கு ப‌திலாகிற‌து!! குருட்டுப் பிச்சைக்கார‌னாக‌ upgrade செய்ய‌ப்ப‌ட்ட அதே சிறுவ‌ன் பின்னாளில் ஓர் அமெரிக்க‌ டால‌ரை முக‌ர்ந்து பார்த்து அதிலிருக்கும் பெஞ்ச‌மின் ஃப்ராங்க்ளினை ஜ‌மாலுக்கு அறிமுக‌ம் செய்து வைக்கிறான் அடுத்த‌ கேள்விக்கு அவன் சரியான‌ ப‌தில்சொல்ல‌!!

ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ கேள்விக‌ளுக்கான‌ பொக்கிஷ‌ ப‌தில்க‌ளை எழுதிவைத்துவிட்டால் அழிந்துவிடுமோ என்று.... ஒவ்வொன்றையும் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ இள‌ம் நெஞ்சில் நெருப்பால் ப‌திக்கிற‌து ஜமாலின் வாழ்க்கை!! ஒவ்வொரு கேள்வியின்போதும் அது தொட‌ர்பான‌ அழுத்த‌மான‌ நிக‌ழ்வுக‌ள் காட்சிகளாய் விரிய, தொய்வின்றி ந‌க‌ர்ந்துகொண்டே செல்கிற‌து ப‌ட‌ம்..... வ‌லுவான‌ க‌ற்பனையை ஆதார‌மாக‌க் கொண்டு அழுத்தம் திருத்த‌மான‌ திரைக்கதையால் படத்தை அத‌ன் வ‌லியோடும் வேக‌த்தோடும் ப‌ட‌ம்பிடித்துத் த‌ந்திருக்கிறார்க‌ள்... க‌டைசி கேள்விக்குப் ப‌தில் தெரிவ‌த‌ற்கு முன்பே வெற்றியாள‌னாகி விடுகிறான் ஜமால்... ஏனெனில் அவ‌ன‌து இல‌க்கு அந்த‌ப் ப‌ண‌மில்லை... காத‌ல்! த‌ன் காத‌லி ல‌த்திக்கா நிச்சிய‌ம் அந்த‌ நிக‌ழ்ச்சியைக் காண்பாள் என்ப‌தால்தானே அவ‌ன் அந்த‌ நிக‌ழ்ச்சியில் க‌லந்துகொள்ள‌வே த‌ன்னை நிர்ப‌ந்தித்துக் கொள்கிறான்...!! இவ்வாறு க‌தையில் க‌டைசிவரை சிலிர்க்க‌ வைக்கும் சுவார‌ஸ்ய‌ங்க‌ள் உண்டென்றால் திரைக்கதையில் அவ்வ‌ப்போது உண‌ர்வுக‌ளில் தீ ப‌ற்றவைக்கும் ர‌சாய‌ண‌ங்க‌ளும் ஏராள‌ம்!! இல்லாம‌லா ஆஸ்கார் வ‌ரை வென்றிருக்கும்!!

அமிதாப் ப‌ச்ச‌ன் மீதுள்ள‌ அள‌வில்லாத‌ அபிமான‌ம் குட்டிப்பைய‌ன் ஜ‌மாலை ம‌ல‌க்குழியில் குதித்து மேனிமுழுவ‌தும் ம‌ல‌ம்பூசி ஓட‌வைப்ப‌து எல்லாம் ரொம்ப‌வே மிகையான‌ க‌ற்ப‌னை... சிறுவ‌ன் ஒருவ‌ன் குருட‌னாக்க‌ப் ப‌டுவ‌து குரூர‌மான‌ ஒரு ப‌திவு... மேலும் இன்னும் இர‌ண்டே கேள்விக‌ளுக்குப் ப‌தில் சொல்லிடும் வேளையில் மில்லிய‌ன‌ராக‌ப் போகும் "ஸ்ல‌ம்டாக்" ஜ‌மாலைப் போட்டி ந‌ட‌த்தும் அணில்க‌பூரின் ச‌ந்தேக‌த்தின் அடிப்ப‌டையில் போலீஸ் கைது செய்வ‌துகூட‌ப் ப‌ரவாயில்லை... ஆனால் அங்கு அவ‌னுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் தேர்ட் (3rd) டிகிரி ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப‌ ஓவ‌ராக‌த் தோன்றிய‌து... ஒரு கேம் ஷோவில் க‌ள்ள‌ ஆட்ட‌மே ஆடினாலும் கூட‌ போட்டி முடியும் முன்ன‌மே போலீஸ் த‌லையிட்டு உண்மையைக் கொண்டுவர ஜமாலை இரவுமுழுதும் அடித்துத் துன்புறுத்துவார்களாம்.... ஒருவேளை அமெரிக்காவில் இப்ப‌டியெல்லாம் அப‌த்த‌ங்க‌ள் சாத்திய‌ம் போல‌!!

தன் இசையால் இரண்டு ஆஸ்கார்கள் வென்று ந‌ம்மை ம‌கிழ்ச்சிக் க‌ட‌லில் ஆழ்த்தியிருக்கும் ந‌ம் இசைப்புய‌ல்தான் இந்த‌ப் ப‌ட‌த்துக்குப் பின்னாலிருந்து முழுக்க இசை வழங்கியிருக்கிறார் என்று எளிதில் கிரகித்துவிட இயலாத அளவுக்குப் பிலிம்சுருளின் இருபுற‌மும் ஒட்டியிருக்கும் ஒலியாக, காட்சிக‌ள் சொல்லும் கதையை இசையால் ஒருபுற‌ம் அதன் உணர்வோடு மொழிபெய‌ர்த்திருக்கிறார் ரஹ்மான் த‌ன் அடையாள‌த்தை முற்றிலும் மறைத்துக்கொண்டு!! ஆனால் "ஜெய் ஹோ!" பாட‌லுக்கு இத்த‌னை அங்கீகார‌த்தை ச‌ர்வ‌தேச‌ சினிமா உல‌க‌ம் கொடுத்திருக்கிற‌து என்றால் ந‌ம்ம‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ர‌ஹ்மான் கொடுத்திருக்கும் ஏராள‌மான‌ அபூர்வ‌ராக‌ங்க‌ளுக்கு ஹாலிவுட் என்னென்ன‌ த‌ந்திருக்க‌ வேண்டியிருக்கும்!!

க‌டைசியாக‌..... இந்த‌ப்ப‌ட‌ம் இந்திய‌ர்க‌ள் இருவ‌ருக்கு ஆஸ்கார் வாங்கிக்கொடுத்திருந்தாலும்... இந்தியாவை ச‌ர்வ‌தேச‌ அர‌ங்கில் கொஞ்ச‌ம் அசிங்க‌ப் ப‌டுத்திவிட்ட‌தாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ர் கொதிக்கிறார்க‌ள்... உண்மைதான்... சேரிக‌ளின் ந‌டுவே குப்பை மேடுக‌ளிலும் விபச்சார‌ விடுதிக‌ளிலும்தான் கேம‌ரா இந்தியா எனும் அடையாள‌த்தை பெரும்பாலும் ப‌திவாக்கியிருக்கிற‌து.... "ஸ்ல‌ம்டாக்" என்ற‌ சொல்லுக்கு மும்பையின் உண்மையான‌ ஸ்ல‌ம்களிலிருந்து எதிர்ப்புக் குர‌ல் வ‌ந்த‌தும் இய‌ல்புதான்...

நான் நினைத்த‌து என்ன‌வென்றால்.... சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாக‌ நாய்க‌ள் அல்ல‌.... இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!!


பிர‌பு. எம்

11 comments:

Mahalingam said...

Prabu, One more good Post!! I really liked the last few lines of your review!!

Shankar said...

Woh ! nice to read very gud tamil which not used nowadys...Still more to go..Keep it up !!!

varun said...

"ஜெய் ஹோ!" பாட‌லுக்கு இத்த‌னை அங்கீகார‌த்தை ச‌ர்வ‌தேச‌ சினிமா உல‌க‌ம் கொடுத்திருக்கிற‌து என்றால் ந‌ம்ம‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ர‌ஹ்மான் கொடுத்திருக்கும் ஏராள‌மான‌ அபூர்வ‌ராக‌ங்க‌ளுக்கு ஹாலிவுட் என்னென்ன‌ த‌ந்திருக்க‌ வேண்டியிருக்கும்!!"

இந்த‌ வ‌ரி இந்திய‌ன் ஒவ்வொருவ‌னின் உள்ள‌த்திலும் ஓடியிருக்கும். இது வ‌ரை ர‌ஹ்மான் த‌ந்த‌ இசை பொக்கிஷ‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ ப‌ரிசாக‌ ம‌ட்டுமே என்னால் பார்க்க‌ முடிகிற‌து.த‌விர‌ 'ஜெய் ஹோ' பாட‌லுக்கு ம‌ட்டும் கிடைத்த‌ பாராட்டாக‌ இதை பார்க்க‌ முடிய‌வில்லை.


"‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍நான் நினைத்த‌து என்ன‌வென்றால்.... சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாக‌ நாய்க‌ள் அல்ல‌.... இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!"


இது தான் பிர‌பு உண்மை.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..
I am really proud of you...

SurveySan said...

////இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!!////

perfect finish!
jai ho!

:)

புருனோ Bruno said...

கடத்தல்காரர்களை / கொள்ளைக்காரர்களை மையமாக வைத்து படம் எடுக்கும் போது அது இந்தியாவை அசிங்கப்படுத்தியதாக கூறாதவர்கள் (முக்கியமாக இந்திக்காரர்கள்) இந்த படத்தை மட்டும் அந்த கோணத்தில் விமர்சிப்பது தென்னிந்தியர்கள் பெற்ற ஆஸ்கார் மேல் உள்ள கடுப்பினால் தானா

அதிலும் தீவார், சோலை, டான் போன்ற இந்திய கலாச்சாரங்களை பிரதிபலித்து !! இந்தியாவை பெருமைப்படுத்தும் !! படங்களில் நடித்த அமிதாப் இந்த படத்தை விமர்சித்தது நகைச்சுவையின் உச்சக்கட்டம் :) :)

புருனோ Bruno said...

உங்கள் விமர்சணம் அருமையாக உள்ளது

தமிழ் பிரியன் said...

நல்ல விமர்சனம்!

பிரபு . எம் said...

ந‌ண்ப‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளுக்கு ந‌ன்றி!!

ஜெஸிலா said...

முரண்கள் இருந்தாலும் முடிவு அற்புதம். வாழ்த்துகள்.

Anonymous said...

பிரபு தங்களின் தமிழ் நடை மிக சிறப்பாக உள்ளது. "எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!!", சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!! என்ற வாசகங்கள் வாசகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

"ஸ்லாம்டோக் மில்லேனியர்" பற்றிய எனது சில வரிகள்:

நமது கவிஞர் வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்" நாவலை எனது நினைவில் மலர வைக்கின்றது இந்த "ஸ்லாம்டோக் மில்லேனியர்". சில நேரங்களில் சில மனிதர்கள் நம் வாழ்வில் நாம் அறிந்தோ அறியாமலோ குறுக்கே நுழைகிறார்கள்; ஒவ்வொருவரும் நம் வாழ்வின் ஒரு அத்தியாயம்; நமது வெற்றியில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். அவர்களின் அனுபவங்கள் நமது வாழ்வின் பாடங்கள் என்பதை விளக்கும் கதை "ஸ்லாம்டோக் மில்லேனியர்".

இதில் இன்னொரு விசயத்தினையும் பார்க்க வேண்டும். ஒரே சேரியில் வாழும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஒப்பிடுகள். ஒருவர் எப்படி வேண்டும் என்றாலும் வாழும் வகை; இன்னொருவர் இப்படிதான் வாழ வேண்டும் என்று வாழ்பவர். இறுதியில் எந்த முறை வெற்றி அடைகின்றது என்பதுதான் இந்தக் கதையின் உட்கருத்தாக இருக்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு மனிதனின் வெற்றி தோல்வி அவனது கொள்கையே அன்றி வேறில்லை. "it is written" இதுதான் விதி. வாழ்கை நெறி தவறிய இளைஞன் எப்படி விழ்கிறான்; எந்தத் தருணத்திலும் நெறி பிசக்காமல் வாழும் இளைஞன் எப்படி வாழ்கிறான் என்பதை வெகு அழகாகக் காட்டி உள்ளார்கள். ஒவ்வொரு முறையும் அதுவே ஜமாலின் வெற்றிக்கு சான்றாக அமைகிறது. தர்மம் தலை காக்கின்றது. அவனிடம் தன்மான உணர்ச்சியும் உண்மையும் நிறைந்து உள்ளது என்பதை நிருபிக்கவே அந்தப் போலீசாரின் விசாரணை.

ஒவ்வொரு வேளையிலும் உண்மையான முயற்சி வெற்றி பெறும் என்பதை நிருப்பிப்பது இந்தக் கதை. இந்தப் படத்தில் இந்தியவைக் அசிங்க படுத்தவில்லை சேரி மக்களின் வாழ்க்கையினை அம்பல படுத்தி உள்ளார்கள் என்பதே உண்மை.
இந்தியாவின் கடைநிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரம் பற்றி கதி கலங்க செய்யும்போது அதை எப்படி நிவர்த்தி செய்ய தோன்றுகிறதே அன்றி அதை அசிங்கபடுத்துவதாக எண்ணத் தோன்றவில்லை. ஏனெனில் கடவுளே சேரியில்தான் யாசகம் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கே அந்த நிலை என்றால் மானுடர்களாகிய நமது நிலை என்ன?? ஒரு வேளை கடவுள் பூமியின் அமைதிக்காகக் கையேந்துகிறரோ?

சிவகாமி

Kk said...

Prabhu anna...super

Post a Comment