2010 : புதுசு கண்ணா புதுசு...!!


31 12 2009 23:59:57
31 12 2009 23:59:58
31 12 2009 23:59:59


01 01 2010 00:00:00

இந்த நொடி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது!! 

வான வேடிக்கைகள்... தூரத்து வெடி முழக்கம்... அதற்கு இணையாக பக்கத்து சர்ச்ச்சுகளின் கோஷம்..!! 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே "சகலகலாவல்லவன்" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார்!! பைக்கில் "வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்" என்று ஹேப்பி நியூ இயர் சொன்னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் "இன்று முதல்" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள்!! (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு!!)

எங்கும் மகிழ்ச்சி... செல்ஃபோன் சிணுங்கல்கள்... எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப்போக பூமி சலனமில்லாமல் அடுத்த ரவுண்டைத் துவங்கிவிட்டது!! 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர்!! என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம்!! :)

கைமேல் 365 புத்தம் புதிய நாட்கள்... புதிய சிந்தனைகள்... மகிழ்வான துவக்கம்.... நல்ல வார்த்தைகள்... ஆசீர்வாதங்கள்... ஜனவரியில் வெயிலும் அதிகம் எறித்திடாத‌ வசந்தகாலம்... எனவே, நேற்று இரவு வரை அதிருப்தியிலும் தோல்வியிலும் வலித்திருந்தாலும்... மென்மையாக ஒரு புதிய துவக்கத்தைப் புதிய காலண்டரின் கவரைக் கிழித்துச் சுவரில் மாட்டி இனிதே துவங்கலாம் முதலிலிருந்து இன்று!!  

விடிந்தவுடன்... டிவிப் பெட்டியின் அர்த்தமற்ற "சிறப்பு நிகழ்ச்சிகளை"ப் பார்க்காமல், நம் வாழ்வில் இந்த வருடம் "மோஸ்ட் ப்ராபப்ளி " நடக்கப் போகும் "சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு"த் தயாராவோமாக‌..... !!  

இந்த வருடம் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று சிரத்தையாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.... முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய புத்தகங்களை நீண்ட காலமாய்த் தேக்கி வைத்திருக்கிறேன்... வாசிக்காமலும், பாதி வாசித்தும்!! நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும்!! பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் செய்கிறேனா என்று!! :)  

இந்தப் புதுவருஷம் நம்ம எல்லாரும் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியயும் நம் முனைப்பில் தெளிவும்.... இலக்குகளை நோக்கி உழைக்கப் போதுமான நேரமும், அத்தியாவசியமான மன நிம்மதியும் பெற்று, வெற்றிகளில் மயங்கிடாது, தோல்விகளில் துவண்டிடாது... இந்தப் புத்தாண்டு பிறப்புதின மகிழ்ச்சி அதிர்வுகளை இந்த ஆண்டு முழுதுமாக நாம் அனைவருமே எதிரொலித்திருப்போமாக!! :)  

ரொம்பவே சத்தமாக சொல்லிக்கொள்கிறேன்...
"ஹை எவரிப்டி ஐ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்" 
பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்..... பப்பாய்ங்....!! :)  

அன்புடன்,


2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...



"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன!!  

"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு!!" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை!! நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது!!

எல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது!! ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....  

அதற்குமுன் ஒரு விஷயம்....

இந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... "வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... " என்பதுதான் அது... !! 

ஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்!! 

இனி சில வெற்றிகளும் தோல்விகளும்...  

ஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :

"ரோஜா" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் "சாதிச்சுட்டப்பா.." என்கிற ரீதியில் பேசியபோது.. "இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் "உயிரே" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், " இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல!" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்!!  

ரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது! விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் "வெற்றிகள்" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது!! அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்!! 

முதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்!!.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு!! வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்!! :) 

ரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது!!  

சன் பிக்சர்ஸ்!! - __________ வெற்றி  :

"கலாநிதி மாறன் வழங்கும்" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன!! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை..!! அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் "வெற்றி" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான்!! ஆனால் அதையும் தாண்டி "கனவு தொழிற்சாலை" , "கலைக்குடும்பம்" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்!!  

இதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி "புலி உருமுது... புலி உருமுது.. " என்று மிரட்டிக் கொண்டிருக்கும்!!) 

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" - அழகிய வெற்றி :

(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்!!  

ரசித்துப் பார்த்தவை : " பசங்க", " யாவரும் நலம்" , "உன்னைப்போல் ஒருவன்" , " நாடோடிகள்" , "ஈரம்" மற்றும் சில..  

கொடுமைகள் : "கந்தசாமி", "வில்லு", "வேட்டைக்காரன்", "அயன்", "ஆதவன்", "படிக்காதவன்", "எஸ் எம் எஸ்" மற்றும் பல....)  

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள்!! (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது!!)  

"பசங்க" : 
தயாரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு!! சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி!! உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்!!  

யாவரும் நலம்: "அயன்" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்..... 

"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்"  என்று தோன்றியது!  

ஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான்!! நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், "திரைக்கதை" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்!! :)  

விஜய் - தொடர் தோல்வி  :

2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்  

"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன.."  

ஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது!! 
ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே "ஸ்டார்" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன்!! " நாளைய தீர்ப்பு" துவங்கி "காலமெல்லாம் காத்திருப்பேன்" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்!! எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்!! 

"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு "வில்லு", "வேட்டைக்காரன்" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, "தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா.." என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009!!  

தன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்!! 

ராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி

ஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... !! ஹி ஹி

ஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது "ரஜினி ஒரு பலூன்.. "டொப்" அதன் காற்றைப் போக்கியாச்சு" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை "எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்" என்பதுதான்!! 

"சூரியன்" சுட்டு விட்டால் "அன்பு சகோதிரி" , "சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும்? என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது!! விளைவு...மாம்பழம் சீசனிலாமல் தவிக்கிறது.... 

ஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....  

2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை!! பார்ப்போம்!! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....  

அழகிரி - போட்டியில்லா வெற்றி

சினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி!!

2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை!! 

காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா?? ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா?? என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்!! 

கட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு!!  

தோணி - ஆரோக்யமான வெற்றி

ப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல்!! கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும்!! இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்தை மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்!!  

இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்!!


புத்தாண்டு வாழத்துக்களுடன்,



அஜீத் & மீடியா


சென்றவார விகடனில் கவனித்த ஒரு பகுதி........ 

"பில்ட் அப் வேண்டாம்.: அஜீத் எச்சரிக்கை"  

சென்ற வாரத்துக்கான விகடனின் விளம்பரங்கள் அனைத்திலுமே இந்தக் கட்டுரை ஹைலைட் செய்யப் பட்டிருந்தது.... ரஜினியின் அட்டைப்படம் வேறு.....ஆக‌ இந்தவாரம் விகடன் செம சேல்ஸ்தான்.... என்று நினைத்துக் கொண்டு விகடனைத் திறந்தேன்....  

"என்ன... மறுபடியும் அஜீத் "எச்சரிக்கைகள்" விடுக்க ஆரம்பித்து விட்டாரா??"  

என எண்ணிதான் அந்தப் பேட்டியைப் படித்தேன்... படித்தபின் தலையில்தான் அடித்துக்கொள்ளத் தோணியது..... அது அஜீத்தின் பேட்டியே அல்ல!!! "அசல்" பட‌ இயக்குனர் சரணின் பேட்டி!!  

சரி அஜீத் ஏதேனும் "எச்சரிக்கை" விடுத்திருக்கிறார் என்று சரணாவது சொல்லியிருக்கிறாரா ?? என்று பார்த்தால் அதுவும் இல்லை....சரணையாவது தனிப்பட்ட முறையில் அஜீத் எச்சரித்திருக்கிறாரா என்றால் அப்படியும் இல்லை...... அட விடுங்க.... அஜீத் தன்னிடம் சொன்னதாக சரண் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகளையே பாருங்க......  

// 'மக்கள்ல ஒருத்தனா என்னைக் காட்டுங்க. ப்ளீஸ்.... அநாவசியமான பில்ட் -அப் வேண்டாம்'னு என் தோள் மேல கை போட்டுச் சொன்னார் அஜீத்.//  

இது எப்படி பாஸ் "எச்சரிக்கை" ஆகும்??? பாவம் மனிதர் ஃப்ரண்ட்லியாக ஒரு வேண்டுகோள்தானே வைத்திருக்கிறார்....

பொதுவாகவே கவனித்திருக்கிறேன்........ சிலகாலம் முன்பு , எங்கெல்லாம் அஜீத்தின் பேட்டி வெளிவருகிறதோ.. அதற்குக் கீழ் எப்போதுமே "அஜீத் ஆவேசம்"...... "அஜீத் குமுறல்".... "உருமல்".... "எச்சரிக்கிறார் அஜீத்...... கொதிக்கிறார் அஜீத்" என்றெல்லாம் tags இருக்கும்..... அந்த பேட்டிகளையெல்லாம் படித்ததாக நினைவு இல்லை.......... ஆனால் ஒருமுறை சேனல் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவரிடமே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.... அதற்கு அவர்....  

" நானும் கவனித்திருக்கிறேன்... ஆனால் அந்தப் பேட்டிகளின் தலைப்புதான் அப்படிச் சொல்லும் அதையே உள்ளே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா.... அது ஒரு குமுறலாகவோ, எச்சரிக்கையாகவோ, ஆவேச உரையாகவோ இருக்காது.... நார்மலாதான் பேசியிருப்பேன்....சினிமா ஜர்னலிசத்துக்கு பரபரப்பு அவசியம் ஸோ நான் அவங்கள சொல்லி ஒண்ணும் இல்ல!!"

என்று ரொம்பவே பக்குவமாக, கேஷுவலாகச் சொன்னார் அஜீத்!! அவரின் அந்தப் பேச்சும் அணுகுமுறையும் என்னைக் கவர்ந்திருந்த‌ காரணத்தினால்தான் இந்த "எச்சரிக்கை"யைப் படித்ததும் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்...  

இந்தியக் கிரிக்கெட் அணியின் Assertive Captain (Sometimes Aggressive too!!) சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் கேரியரிலும் அவர் பேசியவற்றாலும், பேசியவ‌ற்றில் ரெண்டு மூன்று ஸ்பூன்கள் 'மிர்ச்சி' சேர்த்து மீடியாக்கள் ரிப்போர்ட் செய்ததாலுமே பல சிரமங்களுக்கு ஆளானார்.... சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... ஆனால் கங்குலி மீடியாக்களிடம் often over exposed.... ஆனால் அஜீத்தோ அந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ்ட்தான்.... ஆனாலும் இருவருமே மீடியாக்களுக்கு எக்குத்தப்பாகத் தீணி போட்டவர்கள்!!

எது எப்படியோ... மீடியா என்னும் வார்த்தையின் அர்த்தம் "ஊடகம்".... "ஒலி"க்கு ஊடகம் காற்று... தாங்கிச் செல்ல காற்று எனும் "ஊடகம்" இருந்தால்தான் மலைமேல் நின்று கத்தினாலும் நம் ஒலி ஊருக்குக் கேட்கும்... பத்திரிக்கை, டி.வி போன்ற ஊடகங்கள் எல்லாம் காற்றைப் போலத்தான் செலிபரிட்டிகளுக்கு!! தான் தாங்கிவரும் செய்தி உண்மையா? பொய்யா? சாதகமா? பாதகமா? என்றெல்லாம் காற்றுக்குத் தெரியாது. (ஆனால் காற்று, தன்னிடம் சொன்னதை என்றும் திரித்து சொல்லாதுதான்!!!) கேட்கும் நம் காதுகள்தான் பகுத்துப் பார்க்க (பார்த்துத் தொலைய) வேண்டும்....  

அடுத்து "அஜீத் கர்ஜனை" என்று ஒரு பேட்டி வந்தாலும் நிச்சியம் வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் அது உண்மையான "கர்ஜனை"யா?? என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான்!! ஆக எப்ப‌டி பாத்தாலும் அவர்கள் வியாபாரம் சக்சஸ்தான்.....!!  

ஆகமொத்தம் தமிழனுக்கு........ மெய்ப்பொருள் காண்பது "செலவு"!!
ஹ்ம்ம்ம்ம்.... என்னா வில்லத்தனம் :)  

(பிரபலங்களின் பேட்டிகளை விரும்பிப் படிப்பதும், Perrsonality Watching கிலும் ரொம்பவே ஈடுபாடு எனக்கு... அந்த வகையில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்....)


அன்புடன்,


"மொழி" போல் ஒரு திரைப்படம்....!!



" நிறைகுடம் போலப் படம் ஒன்று வந்தால் ரசிகனுக்கு அது சுபதினம்.." 

என்று ஒரு பழைய படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்... அதுபோல ஒரு சுபதினம்தான் நம் தமிழ்த் திரையுலகத்துக்கு 2007 ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள் !!

தமிழ்த்திரையின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் அன்று ஒரே நாளில் வெளிவந்தன... 

ஒன்று... இயல்பான வியர்வை வாசனையில் செண்ட்டைத் தெளிக்காமல், யதார்த்தத்தையே இன்னும் படு யதார்த்தமாகக் காட்டித் திகைக்க வைத்த‌ "பருத்திவீரன்". 

இன்னொன்று.. வாழ்க்கையின் அழகை, ஆனந்தத்தை, இயல்பான புன்னகையை இரட்டிப்பாக இனிக்க இனிக்க வழங்கிய "மொழி".

"மொழி"யைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.... அப்போது அவர் ஆனந்த விகடனில் "சொல்லாததும் உண்மை" என்கிற தன் சுயசரிதம் போன்றதொரு தொடரை எழுதிவந்தார்.... அதில் "மொழி" வெளிவந்த வாரத்தில் அவர் சொல்லியிருந்தவை: 

"ஒரு காலேஜுக்குப் பேசப் போயிருந்தேன்..... அப்போ அங்கே ஒரு பொண்ணு ஓடிவந்து...' இப்போ இருக்குற சினிமா போஸ்டர்ஸ்ல எல்லா ஹீரோக்களும் அரிவாள்ல ரத்தம் சொட்ட கோபமா முறைக்கிறாங்க, ஹீரோயின்கள் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி போஸ் தர்றாங்க... திரும்புற பக்கமெல்லாம் இந்த மாதிரிதான் போஸ்டர்ஸ், ஹோர்டிங்ஸ் இருக்குது... ஆனா "மொழி" பட போஸ்டர்ல எல்லோருமே மனசு விட்டுச் சிருக்கிறாங்க.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சார்... ஆல் தி பெஸ்ட்' நு சொல்லிட்டுப் போனா...... இருபது வயசு இளைஞர் கூட்டத்தில் ஒருத்தி.... எனக்கு அவளோட சந்தோஷம் பார்க்கப் பிடிச்சிருந்தது!!"

இதைப் படிக்கும்போது நமக்கும் அந்தப் பொண்ணு குறிப்பிடுகிற போஸ்டர் கண்முன் ஞாபகம் வரும்... ஏன்னா "சிரிப்பு" அவ்ளோ அழகான விஷயம்!! "மொழி" யின் போஸ்டர், ஹோர்டிங், விளம்பரங்கள், ஏன் டிவிடி கவர்களைக் கூட, கதாபாத்திரங்களின் இயற்கையான புன்னகைதான் அலங்கரித்திருந்தது..... திரையில் கதாபாத்திரங்கள் கபடின்றி சிரிக்கப் படத்தைப் பார்த்து சென்ற கூட்டமும் இன்முகத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறியது....!  

"எனக்குப் படம் பார்த்த மாதிரியே இல்ல... ஏதோ ஒரு புத்தகத்தை ரசிச்சு வாசிச்சு முடிச்ச உணர்வு வந்திச்சு!!"  
என்று கூறினான் படத்தைப் பார்த்துவிட்டு ஃபோன் பண்ண என் நண்பன் ஒருவன்!! ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிக்கைகளும், சேனல்களும்கூட கவனமாகத் தேர்ந்தெடுத்த‌ வார்த்தைகளைக் கொண்டே "மொழி"யை விமர்சித்தன.....!!!

நான் "மொழி"யில் வியந்த ஒரு விஷயம்...  

சினிமா என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் கூட்டுமுயற்சி... இதன் கேப்டனான இயக்குனரின் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு மற்ற கலைஞர்களும், டெக்னீஷியன்களும் தங்கள் திறமையால் திரைப்படத்துக்கு நயமாக மெருகேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலான விதி... இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கூட்டுமுயற்சியிலும் இது சாத்தியமாக வேண்டுமெனில் இயக்குனரின் கற்பனையானது ஒவ்வொரு கலைஞனின் மனத்திரையில் ஓடும்போதும் அவர் மூளையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் (இதை ஏதோவொரு டிவிடி யில் பார்த்தோமே... என்று ஞாபகப் படுத்தக்கூடாது!! ஹி..ஹி!!) ... அதனை உள்வாங்கிய நொடியில் இசையாய், ஒளியாய் அவரவர் மொழியில் பெயர்த்திட‌ துடித்தால்தான் உண்மையில் அந்த கூட்டுமுயற்சி வெற்றிபெறுவது நியாயம்.... "மொழி"யைப் பொறுத்தவரை அந்த நியதி முழுமையாய் ஒருங்கேறிக் கைகூடியதுதான் வியந்து பார்க்க வைக்கிறது.... 

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனுக்கு மொழியே தேவையில்லை..." 

ராதாமோகனும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜும் படத்தின் கதையை சொல்லி முடித்ததுமே கவிஞர் வைரமுத்து உதிர்த்த வரிகளாம் இவை..... ராதாமோகன் கற்பனை செய்த, மவுன மொழிபேசும் "அர்ச்சனா"வை அப்போதே அவர் அள்ளி அரவணைத்து தன் தோளில் போட்டுக்கொண்டார் என்றுதானே அர்த்தம்!! 

சாதாரணமாகக் காதல் வசனம் பேசும்போதே ஜோதிகாவின் கண்களும் முகமும் நாசியும் அவர் வாயோடு சேர்ந்து தானும் பேசிக்கொண்டிருக்கும்.... எனவே மவுனத்தாலே பேசவேண்டிய கதாபாத்திரத்துக்குள் உடலோடும் உயிரோடும் அவர் கலந்து போனதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.....ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஒரு "காக்க.. காக்க"வும் "சந்திரமுகி"யும் முத்தாய்ப்பாய் இந்த "மொழி"யும் வந்திருக்காவிடில் ஒரு சாதரண அழகிய‌ பப்லி கேர்ளாகவே (Bubbly Girl) சூர்யாவோடு அவர் செட்டிலாகிவிட‌ நேர்ந்திருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்!! 

"மியூசிக்" எப்படி இருக்கும்? என்று கேட்டு ஸ்பீக்கர்களில் கைவைத்து அதன் அதிர்வுகளால் "இசை"யை உணரும் ஊமைப் பெண்ணாக அவர் நடித்த அந்தக் காட்சிதான் ஏனோ மனதில் ஒருமுறை வந்துபோனது அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது "முத்தழகி"க்குக் கிடைத்தற்காகக் கை தட்டிக் கொண்டிருந்தபோது!!

பக்கத்து ஸ்டேட்டின் ஆக்ஷன் ஹீரோ, இங்கு ஒரு சின்ன பாக்யராஜாகத் தன்னை செதுக்கிக்கொண்டு மந்தைவெளியில் மணிக்கு அறுபது கி.மீ வேகத்தில் ஓடி அந்த angry dog கிடம் கடி வாங்கும் நாயகன் பிருத்வி..... தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நம்மை லயித்து சிரிக்க வைத்த பிரகாஷ்ராஜ்...... பிருத்விராஜுக்கு சைகை மொழி கற்றுக் கொடுக்கும்போது உண்மையிலேயே அதுபோன்ற ஒரு குழந்தைக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஒரு டீச்சர் போலவே கணிவான உடல்மொழி காட்டிய ஸ்வர்ணமால்யா..... பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமையப் பெற்றிருந்தாலும், ஏதேதோ ஆங்கிள்களில் கேமராவை நகர்த்தி நகர்த்தியே அழகு செய்த குகன்.... வீடுகளையும், ஜோதிகாவின் அறையையும் அந்த அபார்ட்மெண்ட்டையும் ரம்மியமாய் அரங்கமைத்த கதிர்.... மௌனத்தை ஓர் இசையாகவும், இசையை ஒரு மொழியாகவும் ஆராதிக்கும் படத்துக்குத் தேர்ந்த மெட்டுக்களால் இசையமைத்த வித்யாசாகர்... என்று எல்லாருமே அற்புதமான இந்தக் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு ஒருங்கே மெருகேற்றிச் செதுக்கிக் கொடுத்த, நினைவில் நீங்கா செல்லுலாய்ட் கல்வெட்டு, டூயட் மூவீஸ் (கடன் வாங்கி) வழங்கிய இந்த அழகிய "மொழி"!! 

பாதசாரிகள் ரோட்டைக் கடக்க ரோடுகளில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைக் கோடுகளை, ஆர்மோனியக் கட்டைகளாய், அதன் இசை கேட்க முடியாத‌ ஜோதிகா உணர்வதும்.... அதே வாத்தியப் பின்னணி இசைக்கு பிருத்வி, பிரகாஷ்,ஸ்வர்ணமால்யா அழகாய் நடனமாடுவதும்.... ஒரு மௌனக் கவிதையாய் "காற்றின் மொழி.." பாடலில் படமாக்கப் பட்டிருக்கும் அந்தக் காட்சி... மேலே சொன்னக் கூட்டு முயற்சிக்கு ஒரு சோறு பதம்!! :)  

நான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த "மொழி"யைப் பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்றொரு உணர்வு இருந்துவந்தது... இதோ எழுதிவிட்டேன்..... :) இன்னும் இதுபோல் ரசித்துப் பார்த்த ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கிறது சாத்தியம் இருந்தால் அந்தப் படங்களை சிலாகித்ததையும் பகிர்ந்து கொள்கிறேன்... 

அன்புடன்...