பாட்டி கதை (சிறுகதை - பாகம் 2)

சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி.......

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!! எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்?? என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!!! சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைக்கிறது.... மறுமுனையில் அஞ்சலி!! "சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??" ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!! ஜீவாவோ, "ராஜா மாதிரி இருக்க வேண்டிய என் பேர‌ன் இப்படி நகர வாழ்வில் சிக்கித் தவிக்கிறானே!!" என்று தனக்காகப் பாட்டி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை எப்ப‌டிப் புரியவைப்பேன் நான்??? என்று ம‌ன‌துக்குள் குழ‌ம்பிக் கொண்டிருந்தான்!!!!

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்து போய்விட்டான் ஜீவா!!! அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!! 'சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???' என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி,

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!! பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!! அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!! அதோடு விடாமல் பாட்டி, ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!! "என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!" என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவா அறிந்திருக்கவில்லை!!... ஜீவாவின் க‌ம்பெனியில் அவ‌னுக்குக் கார் எல்லாம் கொடுத்திருக்கிறார்களே... அட.. அந்த‌ப் பைய‌னையும்தான் ஒரு பெரிய‌ வ‌ண்டியில் வைத்து சக மெக்கானிக்குகளுடன் வேலைக்கு தின‌மும் அழைத்துப் போகிறார்களே!!!

எக்க‌ச்ச‌க்க‌மாய் Damage ஆகிப்போயிருக்கும் தன் ஜீவாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி, இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!! இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் இது த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......

இர‌வுநேர‌த் த‌னிமை ஜீவாவுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து.... தின‌மும் இர‌வில் த‌ன் த‌னி அறையில் ம‌ன‌துக்குப் பிடித்த‌மான‌ ச‌ங்கீத‌த்தைத் த‌ன‌க்கு ம‌ட்டும் கேட்கும் ர‌க‌சிய‌ ஒலிய‌ள‌வில் கேட்டுக்கொண்டே தன் ம‌ன‌துட‌ன் கொஞ்சதூரம் "வாக்கிங்" போய்தான் தூக்க‌த்தைப் பிடிப்பான்... இன்று போகும் பாதையின் தூர‌ம் அதிக‌மாக‌ப் புல‌ப்ப‌டுகிற‌து!!
"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...???.... இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட‌ ப‌ட‌ம் அது!!
அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் அவ‌ர்!! அந்த‌ப் பெருமையை இன்றும் பாட்டி ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் த‌ன் ஊருக்குள்!! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!! "தாத்தாவின் அந்த‌க் கார் இப்போது எங்கே??" கேள்விக்கு ஜீவாவிடம் போதுமான தகவல் இல்லை!... தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிற‌துபுகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்ட‌லிக் ர‌த‌ம்!! கம்பெனி காரில் சென்றதைவிட சொந்த‌மாய் வாங்கிய‌ காரில் சென்று பாட்டி வீட்டுவாச‌லில் இற‌ங்கியிருந்தால் தன் பேர‌னின் செழிப்பை நிச்சிய‌ம் உண‌ர்ந்து உள‌ம் ம‌கிழ்ந்துபோயிருப்பார் பாட்டி என்று உறுதியாக‌த் தெரிந்த‌து ம‌ன‌துக்கு!!! இந்தத் திடீர் சிந்த‌னை மின்ன‌லில் ஜீவாவின் உள்ளுண‌ர்வுக‌ள் பிர‌காச‌ம‌டைந்த‌ன‌!!! ச‌ந்தையின் ச‌மீப‌த்தைய‌ ஆட‌ம்ப‌ரக் கார்களைக்கூட‌ சொந்த‌மாக்கிக் கொள்ளுமள‌வு வாங்கும் திற‌னுள்ள‌ ஜீவா பாட்டி ம‌ற்றும் கார் க‌ன‌வுக‌ளுட‌ன் தூங்கிப்போனான்!!

வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை!! வங்கிக‌ள் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் (க‌தைக்க‌ள‌த்தில் recission-ன் தாக்க‌ம் இல்லை!!)திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!! அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!
"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!

"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??" ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...
"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!" சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!

முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா!!! மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று... "உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!" என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.... ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி... குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம், தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்க‌ளைத் தாங்கிய‌ மோட்டார் இத‌ழ்களைக் காட்ட‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!" என்று சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும் அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி!!! ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி , "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!" என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... அந்த அப்பாவி மனுஷியோட மனச இன்னும் கொஞ்சம் ஆழமா படிக்க‌ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்!!!"... என்றும் பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ பேச்சுத்திற‌னால், தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் அஞ்ச‌லி.. "இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!" என்று க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை ஜீவா ஏற்றுக்கொண்டான்!!!

பிரபு. எம்
தொட‌ரும்.....

(மூன்றாவ‌து பாக‌த்தில் முடிவ‌டையும்!)

பாட்டி க‌தை (சிறுக‌தை - பாக‌ம் 1)

அழகான அதிகாலை....அருகில் உள்ள‌ கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிற‌து.... ஒரு சின்ன‌ பீப்பாய் நீர் பாய்ந்து வ‌ந்து ம‌ண்ணை நனைக்க .....ம‌ழைபெய்தால் கிளம்பும் ம‌ண்வாச‌னை ப‌ர‌வுகிறது... சாண‌த்தோடு க‌ரைத்த‌ நீரால் அந்த‌ ம‌ண்ணை மெழுகுகிறார் வாச‌ல்தெளிக்கும் அந்த‌ப் பாட்டிய‌ம்மா!!! தோல்சுருங்கி மென்மையான‌ ந‌ர‌ம்புக‌ள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... த‌சைக‌ளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்ற‌ன‌ அந்தக் கைக‌ள்.... சில‌ நொடிக‌ளில் புழுதிம‌ண்ணின்றி ப‌க்காவாக‌ செட்டாகியிருக்கிற‌து வீட்டுவாச‌ல்.... வேண்டியோர் ப‌ல‌ரின் காலடி படுவதற்காகப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!! சில மணித்துளிகள்தான், பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!

"பாட்டிம்ம்மா...." அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃப‌ன்பாக்ஸுட‌ன்!! "ஏய்ய்ய்... பூட்ஸு காலோட‌ உள்ள‌ வ‌ராதேனு பாட்டி எத்தனை த‌ட‌வ‌ சொல்லியிருக்கேன்...." செல்ல‌மாக‌ அத‌ட்டிக்கொண்டே, வேக‌மாக‌ப் பாட்டி நடந்து வ‌ந்தாலும் ந‌டையில் த‌ள‌ர்ச்சி தெரிய‌த்தான் செய்கிற‌து!!! அந்த‌க் குழ‌ந்தை நாக்கை நீட்டி வ‌ழ‌க்க‌ம்போல் சிரித்துக்கொண்டே உட‌லை ஒருவித‌மாக‌க் கோணிக்கொண்டு நிற்கிற‌து... "அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க‌...!!" டிஃப‌ன் பாக்ஸில் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ பாட்டி வைத்த சாம்பார் ஊற்ற‌ப் ப‌டுகிற‌து!!! பாட்டி த‌லையைப் பின்னிவிட, டாட்டா காட்டிவிட்டு ஓடுகிற‌து குழ‌ந்தை..... அவ‌ள் அம்மாவுக்கு அர‌புநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்த‌ப் பாட்டியில்லை பேத்திக்கு ஜ‌டை பின்னிவிட‌!!!

சில‌மைல் தொலைவில் சேவ‌லுக்குப் ப‌திலாக‌ ஸ்கூல்பஸ்களின் ஹார்ன்கள் கொக்கரிக்கும் ந‌க‌ர‌த்து அதிகாலை.... நூறுவ‌ய‌து ல‌ட்சிய‌த்துட‌ன் வேகமாய் ந‌டைப்ப‌யிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்க‌ளுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உண‌ர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜ‌கோபால‌ன்...ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் க‌ற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!! "நேர‌மாகிவிட்ட‌தோ... ??? "அட!! நேரமானால்தான் என்ன‌!!!" அச‌ட்டுத் த‌ன‌மாக‌த் தெரிந்த‌து ம‌ன‌தின் இத்தனை வருடத்து வ‌ழ‌க்க‌மான‌ காலை நேரப் ப‌த‌ற்ற‌ம்... இன்னும் மனது முழுதாக‌ப் ப‌ழ‌க‌வில்லை இந்த‌ப் புது ரிட்டைய‌ர்மென்ட் வாழ்க்கைக்கு!!! சீரான‌ நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேர‌த்தில் வெயிலும் தூசியும் ப‌ர‌ப‌ர‌ப்புமாக‌ இந்த அழ‌கை ஊர் இழ‌ந்துவிடும்.... அந்த‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பில் அவ‌ருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்ட‌ப்ப‌ட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன‌ வ‌ய‌தில் ர‌சித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் ப‌ழைய‌ ப‌ட‌ டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக‌ உள்ள‌து!!

ஒரு வ‌ருட‌மாகியும் கூட‌ இப்போது வ‌சிக்கும் வீடு இன்னும் புதிதாக‌த் தெரிகிற‌து.... ந‌க‌ர‌த்தின் மிக‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் ஒரே ம‌க‌ன் ஜீவா வாங்கிய‌ வீடு...! திரு.ராஜகோபாலன்.... க‌றாரான‌ அதிகாரி.... க‌ண்டிப்பான‌ அப்பா... திட்ட‌மிடுதலும் அதைச் சிறிதும் பிச‌காம‌ல் செய‌ல்ப‌டுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் க‌தையின் ஒன்லைன்!! ஜீவா பிற‌ந்த‌போதே அவ‌ன‌து முதல் இருப‌து ஆண்டுகளை அவர் திட்ட‌மிட்டுவிட்டார்... இடையே ப‌ள்ளிக்கால‌த்தில் அவ‌னுக்கு வ‌ந்த‌ ம‌ஞ்ச‌ள் காமாலையைத் தவிர மற்ற‌ அனைத்துமே அந்தத் திட்டத்தின்ப‌டிதான் ந‌ட‌ந்தது!

ஜீவா...எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்க‌ள் ம‌ற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரிய‌தொரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் ரீஜின‌ல் ஹெட்!! அலுவ‌ல‌க‌ ம‌ற்றும் சொந்த‌த் தேவைக‌ளுக்கென‌ விலையுய‌ர்ந்த‌ கார் ஒன்றை ஓட்டுந‌ருட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தது ஜீவா ப‌ணிபுரியும் நிறுவ‌ன‌ம்...இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திரும‌ண‌ம்... அப்பாதான் பெண் பார்த்தார், ஜீவாவின் ப‌ரிபூர‌ண‌ ச‌ம்ம‌த‌த்துட‌ன்!!

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்புதான் ஜீவா அஞ்ச‌லியிட‌ம் முத‌ன்முறையாக‌ போனில் பேசினான்.....

"பேசிட்டியா??.." வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.

"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"

"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... உடனே கால் பண்ணு... Dont make me call again... அந்தப் பொண்ணுக்கு செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா..."
..
....
......
........

சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....

"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."

"ஹம்..ஹலோ... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."

மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது..."ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"

" ம்ம்...ஆமா... நானும் கால் ப‌ண்ணேனே...!!!"

"இல்லையே..!!!"

"நேத்து இதே டைம்ல‌ ரெண்டு ரிங் ம‌ட்டும் வ‌ந்து ஒரு கால் க‌ட் ஆகியிருக்குமே!!"
இருமுனையிலும் கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் சிரிப்பு....
.................
........................
மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க‌... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்துவிட்ட‌ ராஜ‌கோபால‌ன் இனிமேல் தன் ம‌க‌னின் முடிவுக‌ளின்ப‌டிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்தார் சந்தோஷ‌மாக‌!!

இஷ்ட‌ப்ப‌ட்டு உழைப்ப‌தால் க‌ஷ்ட‌ம் தெரிவ‌தில்லை ஜீவாவுக்கு... தின‌ம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவ‌த‌ற்குள் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தின் தொலைதூர‌ ஊழிய‌ர்கூட‌ டிராஃபிக் ம‌ற்றும் சிக்ன‌ல்க‌ளைக் க‌ட‌ந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!! இப்போதெல்லாம் தின‌மும் வேலைமுடியும் நேர‌ம் உத‌ட்டோர‌ம் கொஞ்சம் இனிக்கிற‌து... அஞ்ச‌லியுட‌ன் பேசுவ‌து பிடித்திருக்கிற‌து ஜீவாவுக்கு!! ஓர் இனிமையான‌ அனுபவமாய் அறியாம‌லேயே அறிந்துகொள்கின்ற‌ன‌ர் ஒருவ‌ரையொருவ‌ர் அழ‌காக‌!!

"இந்தியாவுக்கு விளையாடுற‌ எல்லாரையும்தான் எனக்கு ரொம்ப‌ப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"

"எல்லாருமேதான் ந‌ல்லா ந‌டிக்கிறாங்க‌.... ஒவ்வொரு ப‌ட‌த்திலும் ஒவ்வொருத்த‌ரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"

இதுதான் அஞ்ச‌லி!!! இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் ச‌ச்சினும், க‌ம‌லஹாச‌னும் அவ‌ளுக்குக் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல் என்று!! அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவார‌ஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!! ம‌ணிர‌த்ன‌ம், ஏ ஆர் ர‌குமான், ர‌ச‌குல்லா, த‌யிர்சாத‌ம், மாதுள‌ம்ப‌ழ‌ம், ஸ்பைட‌ர்மேன், கொடைக்கான‌ல், எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்..!!!! எல்லாரையும் ம்ற்றும் எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்த‌ அஞ்ச‌லிக்கே தெரியாது இவையெல்லாம் அவ‌ளுக்குப் பிடித்த‌வையென்று... ஆனால் ஜீவாவுக்குத் தெரிந்த‌து!!! அஞ்ச‌லியே த‌ன‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்ட‌து இர‌ண்டே விஷ‌ய‌ங்களைத்தான் ஒன்று ப‌ச்சை நிற‌ம் இன்னொன்று அவ‌ளுடைய பிரியமான பாட்டி!!!

அஞ்ச‌லியின் த‌ந்தைக்கு உயிர‌ளித்த‌ அவ‌ள் பாட்டியால் அவ‌ள் க‌ல்லூரி சேர்ந்த‌ வயதுவரைதான் உட‌ன்வ‌ர‌முடிந்த‌து... அந்த‌ இத‌ய‌ம் இறுதியாகத் துடித்த‌து அஞ்ச‌லியின் அர‌வ‌ணைப்பில்தான்... "உன‌க்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூட‌த்தான் இருக்க‌ப்போற‌.." என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்ச‌லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த‌ இத‌ய‌த்தின் துடிப்பு தானாக‌ அட‌ங்கிப்போன‌தை அந்த‌ அணைப்பிலேயே நேர‌டியாக‌ உண‌ர்ந்தாள் அஞ்ச‌லி.... அவ‌ள் குழ‌ந்தையாக‌ இருந்த‌போது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேன‌ல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட‌ செல்ல‌ப் பாட்டி!!! பாட்டியின் நினைவுக‌ள் ப‌சுமையாக‌வே தொட‌ர்ந்தன‌ அஞ்ச‌லியின் ப‌ய‌ண‌த்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன‌!!!

கிராம‌த்துவீட்டில் அதே ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இர‌வு உண‌வு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டிய‌ம்மா.... பீம‌ன்தான் அந்த‌ப்பாப்பாவுக்குப் பிடித்தமான‌ ஹீரோ!!! பாப்பாக்க‌ளை ஓரிட‌த்தில் உட்கார‌வைத்துக் கதைசொல்லி உருண்டை உருண்டையாக சோறுதிணிப்ப‌து காலம்காலமாய் பாட்டிக‌ளுக்கும‌ட்டுமே கைவ‌ரும் லாவ‌க‌ம்!! பாட்டியின் க‌தைக‌ளில் துரியோதன சகோதரர்களை ம‌ட்டுமன்றி ப‌லப்பல‌ வில்ல‌ன்க‌ளையும் தின‌மும் த‌ன் க‌தாயுத‌த்தால் புர‌ட்டியெடுத்துவ‌ந்தான் பீம‌ன் அந்த‌க் குழ‌ந்தைக்காக‌!!! திடீரென‌ப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உத‌றல்... பேச‌ முடிய‌வில்லை.... ஒருவித‌மாக‌த் தோட‌ர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்த‌து... க‌தை சொல்ல‌க் க‌ஷ்ட‌ப்ப‌ட்டப் பாட்டிக்கு த‌ண்ணீர் குடித்தும் அட‌ங்க‌வில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்களை யெல்லாம் அழைத்து வ‌ந்துவிட்டாள் குட்டிப்பாப்பா...ஆளுக்கொரு வைத்திய‌ம் சொல்லியும் அட‌ங்க‌வேயில்லை... இர‌வு ரொம்ப‌ நேர‌ம்வ‌ரைக்கும் தொட‌ர்ந்த‌து தொண்டைக் குமுற‌ல்!!

பின்னே... இத்த‌னை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட‌ ம‌ற‌ந்தேபோய்விட்ட பேரன் த‌ன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து தூக்க‌மின்றித் த‌விக்கையில் தொண்டை விக்காதா பாட்டிக்கு!! அஞ்ச‌லியின் பேச்சைக் கேட்ட‌திலிருந்தே தன் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு..."என்ன‌ பாவ‌ம் செய்தாள் என் பாட்டி இப்படி தனிமைத் தண்டனையில் துவழ‌??" என்று ம‌ன‌ம் கேட்கும் கேள்விக‌ளுக்கு விடைய‌ற்றுத் த‌விக்க‌த் துவ‌ங்கினான் ஜீவா!!

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்... உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம் இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!! வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!! ந‌டு இர‌வில் தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போக, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து அந்த‌வீட்டின் முக‌ப்பு... கார் க‌தவு திற‌ந்து.. அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!! தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!! வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!!! "சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!" ஜீவா சிரிக்க‌.... " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

--தொடரும்.....


(கொஞ்ச‌ம் நீண்ட‌க‌தை... இர‌ண்டாவ‌து பகுதியை விரைவில் எழுதிப் ப‌திவிடுகிறேன்...
அசௌக‌ரிய‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும்!! Hope you'll like this story!!)


பிர‌பு. எம்

ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்


இந்திய ஆங்கிலம் பேசும் இந்தத் திரைப்படம்தான் சென்ற வருடத்தின் சிறந்த ஹாலிவுட் படம்!! 1927 லிருந்து வழங்கப்படும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுப் பட்டியலில் இறுதியில் 2008ல் ஏ ஆர் ரஹ்மான் என்ற பெயரும் நிலைத்து இடம்பிடித்து விட்டது.... ஓர் அற்புத வரலாறு நாம் வாழும் நாளில் அரங்கேறிய ஒரு திருப்தி.... "எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!!"

"கவுன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி இரண்டாம் பாகம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமிதாப் பச்சனை விகடன் பேட்டி கண்டது நினைவிருக்கிறது.... அதில் ஒரு கேள்வி அமிதாப்பிடம் கேட்கப்பட்டது... "இந்நிகழ்ச்சியில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பவர் "யூனிவர்சிடி சேலஞ்ச்" போன்ற நிகழ்ச்சிகளைக் கொடுத்து அசத்திய சித்தார்த்தபாசு, இருப்பினும் தீயணைப்பு வண்டி என்ன நிறம்?? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டு அதற்குப் பச்சை, மஞ்சள் என்று சாய்ஸும் கொடுக்கப் படுகிறதே??"

அதற்கு அமிதாப்பின் பதில்: "க்ரோர்பதி நிகழ்ச்சி ஒரு க்விஸ் ஷோ இல்லை..கேம் ஷோ!! எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படி கேள்விகள் இதில் இருக்கும். இருக்க வேண்டும்! ஏதோ அறிவாளிகளுக்கான நிகழ்ச்சியென்று தோன்றிவிட்டால், அதன் சுவாரஸ்யமே போய்விடும். ஓரளவு பொதுவிஷயங்களில் ஆர்வமிருந்தாலே போதும் ஹாட்சீட்டில் அமரலாம், அப்படி அமர்பவர்களுக்குக் கொஞ்சம் "மசாலா" இருந்தால் க்ரோர்பதியும் ஆகலாம்.. அதுதான் ஃபார்முலா!!"

ஸ்லம்டாக் பார்த்து முடித்த கணமே மனதில் தோன்றியது அமிதாப்பின் இந்த பதில்தான்! சேரியில் பிறந்த ஜமால் போன்ற ஓர் இளைஞன் இத்தகைய ஒரு மெகா ஷோவில் அறிவுஜீவிகள் யாவரும் நெருங்கவியலாத கடைசி கட்டம் வரை வந்து வெற்றியும் பெற்றதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் படத்தைத் துவக்கி முடிவில் D) It's Written என்று முடிக்கும்போது ஒரு நிறைவை உணரமுடிகிறது அதற்கே ஒரு ஸ்பெஷல் விருது தரலாம்.....

மில்லியனராவதற்குப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்... அந்தப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்கு?? பதினான்காயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் சரிதான் அல்லது விதிவசத்தாலோ எதனாலோ கேட்கப்படுகிற அந்த அசல் பதினான்கு கேள்விகளுக்கும் பதில்தெரிந்திருந்தாலும் சரிதானே!! வாழ்க்கைத் தன் மீது கிறுக்கிப் போட்டப் பாடங்களைத் தவிர வேறெதையுமே படித்திராத ஓர் இளம் காதலனுக்கு அந்த வாழ்க்கையே தந்த பரிசு, மில்லிய‌ன் டால‌ர் ம‌திப்புள்ள‌ சில‌ ப‌தில்க‌ளை அவ‌ன் ம‌ன‌தில் போகிற‌ போக்கில் வ‌லியுட‌ன் ப‌ச்சைக் குத்திவைத்த‌து!!
எல்லா குழ‌ந்தைக‌ளுக்குமே பிடித்த‌து த‌ண்ணீரில் முங்கி விளையாடுவ‌து... க‌ள்ள‌மின்றி க‌ப‌ட‌மின்றித் த‌ண்ணீரில் முங்கி விளையாடிக்கொண்டிருகும் வேளையில் சிறுவ‌ர்கள் ச‌லீமும் ஜ‌மாலும் நிச்சய‌மாக‌ உண‌ர்ந்திருக்க‌ மாட்டார்க‌ள் இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் அர்த்த‌மில்லாத‌ கேவ‌ல‌மான‌ ஒரு ம‌த‌ச்ச‌ண்டையில் த‌ங்க‌ள் தாய் பலியாக‌ப்போகிறாள் என்று.... பார்வையாள‌ர்க‌ளாகிய‌ நாமும்தான்!! உயிர்க்கொல்ல‌ வ‌ல்ல‌ கொடூர‌ ஆயுத‌ங்க‌ளைத் தாங்கிய‌ தாடிவைத்த‌ த‌டிய‌ர்க‌ள் பெருங்குரலெடுத்து ர‌த்த‌வெறியோடு ம‌க்க‌ளை நோக்கி ஓடிவ‌ந்தால் இந்தியாவில் 'க‌ல‌வ‌ர‌ம்' என்பார்க‌ள், என்ப‌தை முற்றிலும் அய‌ல்நாட்டு இய‌க்குன‌ர் டேனியேல் கூட‌ அறிந்துகொண்டுள்ளார்!! அவ‌ர் வாயிலாக‌ இன்று உலக‌மே அறிந்துகொண்டிருக்கும் ஆளுக்கொருவித‌மாக‌! அந்த‌ இள‌ம்தாயின் முக‌த்திலேயே அறைகிற‌து வ‌லிய‌தொரு உருட்டுக்க‌ட்டை அவ‌ளின் உயிரை அங்கேயே வாங்கிக்கொண்டு... அவ‌ள் பிஞ்சு ம‌க‌ன்க‌ளின் பூவிழிக‌ளின் வாச‌லிலேயே சுருண்டு விழுந்து உயிர்துற‌க்கிறாள் அந்த‌ப் பெண்.... தொட‌ரும் அந்த‌க் க‌ல‌வ‌ர‌த்தின் அத‌க‌ள‌த்தில் நிதான‌மிழ‌க்கும் ஒரு சாமானிய‌னின் க‌ண்க‌ளாக‌வே மாறி சுழ‌ன்ற‌டித்து ஒளிப்ப‌திவு செய்திருக்கும் ஆஸ்க‌ர் வென்ற‌ கேமரா நிலைகுத்தி நிற்ப‌து த‌ன‌து வ‌ல‌துகையில் வில்லொன்றை வைத்துக்கொண்டு திறுதிறு வென்று விழித்துக்கொண்டிருக்கும் ஒரு குட்டி "இராம‌ன்" மீது!! (இராம‌வேஷ‌ம் போட்டு அந்த‌ சிறுவ‌ன் உங்க‌ள் தெருக்க‌ளில் என்ன‌ செய்து கொண்டிருக்கிறான்?? என்று கேட்டார் த‌மிழ் தெரிந்த‌ வெளிநாட்ட‌வ‌ர் ஒருவ‌ர்... அவ‌ன் 'யாச‌க‌ம்' செய்கிறான் என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடர்ந்தேன் அவ‌ருக்கு அந்த‌ வார்த்தைக்கு நிச்சிய‌ம் அர்த்தம் தெரியாது என்று ம‌ன‌துக்குள் உறுதிப் ப‌டுத்திக்கொண்டு!!) அதுவே மில்லிய‌ன‌ர் விளையாட்டில் ஜமாலுக்கு ஒரு கேள்வியின் ப‌திலாகிற‌து..!! இவ்வாறு அநாதையாகிப் போகிற‌ ஜ‌மாலைத் த‌த்தெடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம்போல‌க் குப்பைத்தொட்டிக‌ள்தான்.... குப்பைத்தொட்டியின் பராம‌றிப்பில் வ‌ள‌ர்கிற‌ சிறுவ‌ர் சிறுமிக‌ளைக் க‌ண்டெடுத்துப் பிச்சைக்கார‌ர்க‌ளாக‌ ந‌வீன‌ப்ப‌டுத்துகிறான் (!) ஒரு கிராத‌க‌ன். ந‌ன்றாக‌ப் பாட‌த்தெரிந்த‌ ஒரு சிறுவ‌னின் கண்க‌ளில்.... அந்த‌க் காட்சியின் கொடூர‌த்தை விவ‌ரிக்க‌ ம‌ன‌மில்லை... குருட‌னாக்க‌ப்ப‌டும் அந்த‌க் குழ‌ந்தைபாடும் பாட‌ல் அங்கிருந்து த‌ப்பித்து செல்லும் ஜ‌மாலுக்கு இன்னொரு மில்லிய‌ன‌ர் கேள்விக்கு ப‌திலாகிற‌து!! குருட்டுப் பிச்சைக்கார‌னாக‌ upgrade செய்ய‌ப்ப‌ட்ட அதே சிறுவ‌ன் பின்னாளில் ஓர் அமெரிக்க‌ டால‌ரை முக‌ர்ந்து பார்த்து அதிலிருக்கும் பெஞ்ச‌மின் ஃப்ராங்க்ளினை ஜ‌மாலுக்கு அறிமுக‌ம் செய்து வைக்கிறான் அடுத்த‌ கேள்விக்கு அவன் சரியான‌ ப‌தில்சொல்ல‌!!

ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ கேள்விக‌ளுக்கான‌ பொக்கிஷ‌ ப‌தில்க‌ளை எழுதிவைத்துவிட்டால் அழிந்துவிடுமோ என்று.... ஒவ்வொன்றையும் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ இள‌ம் நெஞ்சில் நெருப்பால் ப‌திக்கிற‌து ஜமாலின் வாழ்க்கை!! ஒவ்வொரு கேள்வியின்போதும் அது தொட‌ர்பான‌ அழுத்த‌மான‌ நிக‌ழ்வுக‌ள் காட்சிகளாய் விரிய, தொய்வின்றி ந‌க‌ர்ந்துகொண்டே செல்கிற‌து ப‌ட‌ம்..... வ‌லுவான‌ க‌ற்பனையை ஆதார‌மாக‌க் கொண்டு அழுத்தம் திருத்த‌மான‌ திரைக்கதையால் படத்தை அத‌ன் வ‌லியோடும் வேக‌த்தோடும் ப‌ட‌ம்பிடித்துத் த‌ந்திருக்கிறார்க‌ள்... க‌டைசி கேள்விக்குப் ப‌தில் தெரிவ‌த‌ற்கு முன்பே வெற்றியாள‌னாகி விடுகிறான் ஜமால்... ஏனெனில் அவ‌ன‌து இல‌க்கு அந்த‌ப் ப‌ண‌மில்லை... காத‌ல்! த‌ன் காத‌லி ல‌த்திக்கா நிச்சிய‌ம் அந்த‌ நிக‌ழ்ச்சியைக் காண்பாள் என்ப‌தால்தானே அவ‌ன் அந்த‌ நிக‌ழ்ச்சியில் க‌லந்துகொள்ள‌வே த‌ன்னை நிர்ப‌ந்தித்துக் கொள்கிறான்...!! இவ்வாறு க‌தையில் க‌டைசிவரை சிலிர்க்க‌ வைக்கும் சுவார‌ஸ்ய‌ங்க‌ள் உண்டென்றால் திரைக்கதையில் அவ்வ‌ப்போது உண‌ர்வுக‌ளில் தீ ப‌ற்றவைக்கும் ர‌சாய‌ண‌ங்க‌ளும் ஏராள‌ம்!! இல்லாம‌லா ஆஸ்கார் வ‌ரை வென்றிருக்கும்!!

அமிதாப் ப‌ச்ச‌ன் மீதுள்ள‌ அள‌வில்லாத‌ அபிமான‌ம் குட்டிப்பைய‌ன் ஜ‌மாலை ம‌ல‌க்குழியில் குதித்து மேனிமுழுவ‌தும் ம‌ல‌ம்பூசி ஓட‌வைப்ப‌து எல்லாம் ரொம்ப‌வே மிகையான‌ க‌ற்ப‌னை... சிறுவ‌ன் ஒருவ‌ன் குருட‌னாக்க‌ப் ப‌டுவ‌து குரூர‌மான‌ ஒரு ப‌திவு... மேலும் இன்னும் இர‌ண்டே கேள்விக‌ளுக்குப் ப‌தில் சொல்லிடும் வேளையில் மில்லிய‌ன‌ராக‌ப் போகும் "ஸ்ல‌ம்டாக்" ஜ‌மாலைப் போட்டி ந‌ட‌த்தும் அணில்க‌பூரின் ச‌ந்தேக‌த்தின் அடிப்ப‌டையில் போலீஸ் கைது செய்வ‌துகூட‌ப் ப‌ரவாயில்லை... ஆனால் அங்கு அவ‌னுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் தேர்ட் (3rd) டிகிரி ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப‌ ஓவ‌ராக‌த் தோன்றிய‌து... ஒரு கேம் ஷோவில் க‌ள்ள‌ ஆட்ட‌மே ஆடினாலும் கூட‌ போட்டி முடியும் முன்ன‌மே போலீஸ் த‌லையிட்டு உண்மையைக் கொண்டுவர ஜமாலை இரவுமுழுதும் அடித்துத் துன்புறுத்துவார்களாம்.... ஒருவேளை அமெரிக்காவில் இப்ப‌டியெல்லாம் அப‌த்த‌ங்க‌ள் சாத்திய‌ம் போல‌!!

தன் இசையால் இரண்டு ஆஸ்கார்கள் வென்று ந‌ம்மை ம‌கிழ்ச்சிக் க‌ட‌லில் ஆழ்த்தியிருக்கும் ந‌ம் இசைப்புய‌ல்தான் இந்த‌ப் ப‌ட‌த்துக்குப் பின்னாலிருந்து முழுக்க இசை வழங்கியிருக்கிறார் என்று எளிதில் கிரகித்துவிட இயலாத அளவுக்குப் பிலிம்சுருளின் இருபுற‌மும் ஒட்டியிருக்கும் ஒலியாக, காட்சிக‌ள் சொல்லும் கதையை இசையால் ஒருபுற‌ம் அதன் உணர்வோடு மொழிபெய‌ர்த்திருக்கிறார் ரஹ்மான் த‌ன் அடையாள‌த்தை முற்றிலும் மறைத்துக்கொண்டு!! ஆனால் "ஜெய் ஹோ!" பாட‌லுக்கு இத்த‌னை அங்கீகார‌த்தை ச‌ர்வ‌தேச‌ சினிமா உல‌க‌ம் கொடுத்திருக்கிற‌து என்றால் ந‌ம்ம‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ர‌ஹ்மான் கொடுத்திருக்கும் ஏராள‌மான‌ அபூர்வ‌ராக‌ங்க‌ளுக்கு ஹாலிவுட் என்னென்ன‌ த‌ந்திருக்க‌ வேண்டியிருக்கும்!!

க‌டைசியாக‌..... இந்த‌ப்ப‌ட‌ம் இந்திய‌ர்க‌ள் இருவ‌ருக்கு ஆஸ்கார் வாங்கிக்கொடுத்திருந்தாலும்... இந்தியாவை ச‌ர்வ‌தேச‌ அர‌ங்கில் கொஞ்ச‌ம் அசிங்க‌ப் ப‌டுத்திவிட்ட‌தாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ர் கொதிக்கிறார்க‌ள்... உண்மைதான்... சேரிக‌ளின் ந‌டுவே குப்பை மேடுக‌ளிலும் விபச்சார‌ விடுதிக‌ளிலும்தான் கேம‌ரா இந்தியா எனும் அடையாள‌த்தை பெரும்பாலும் ப‌திவாக்கியிருக்கிற‌து.... "ஸ்ல‌ம்டாக்" என்ற‌ சொல்லுக்கு மும்பையின் உண்மையான‌ ஸ்ல‌ம்களிலிருந்து எதிர்ப்புக் குர‌ல் வ‌ந்த‌தும் இய‌ல்புதான்...

நான் நினைத்த‌து என்ன‌வென்றால்.... சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாக‌ நாய்க‌ள் அல்ல‌.... இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!!


பிர‌பு. எம்