" நம்ப மாவட்டத் தலைவர செஞ்சது நீங்கதான??
""ம்ம்ம்...."
" பணத்துக்கா?"
" காசு பணமெல்லாம் இல்ல..."
"பின்ன ஏதும் பெரிய மோட்டிவா?..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல... பழக்கத்துக்காகப் போட்டோம்ணே..."
"ஹும்.... நம்ப ஊருக்காரெங்கெதான்யா பழக்கத்துக்காகல்லாம் கொல பண்ணுவாய்ங்கெ!!"
பலத்த கைத்தட்டல் அரங்கினுள்.... அநேகமாக இந்தக் காட்சிக்கு மதுரைப் பகுதிகளில்தான் கைத்தட்டல் அதிர்ந்திருக்கும் என நினைக்கிறேன்... கோலிவுட்டில் இது மீண்டும் "மதுரைக் காலம்"!!
பாரதிராஜாவின் பாதிப்பால் சினிமாவுக்குக் கதைகளைத் தூக்கிக்கொண்டுவந்த பல இயக்குனர்களின் படைப்புகள் எல்லாவற்றிலுமே மணந்தது மதுரைத் தமிழ்தான்.. கதையின் களம் மதுரையாக இல்லாதபோதுகூட கதைமாந்தர்கள் பெரும்பான்மையாகப் பேசுவது என்னவோ மதுரை வட்டார வழக்காகத்தான் இருக்கும்... சினிமாத்தனங்கள் யதார்த்தத்துக்கு மெல்ல மெல்ல வழிவிட ஆரம்பித்தவுடனேயே களத்திற்கேற்ற தமிழ்தான் பேசப்படவேண்டுமென்பது கட்டாயமாகிப்போய்விட்டது... "பருத்திவீர"னைத் தொடர்ந்து மீண்டும் முழுக்க முழுக்க மதுரைத்தமிழை அந்த மண்வாசனையோடு மணக்க வழங்கியிருக்கிறது "சுப்ரமணியபுரம்" (ரத்தவாசனைக்கும் குறைவில்லை)
லட்சியமில்லாத இளமையின் ஆபத்தை உணர்த்தும் படம். முனைப்பில்லாத யவனத்தை கோபமும் திமிருமாய்ப் பாத்திரப்படுத்தியிருக்கும் விதம் மிகவும் ருசிகரம். ஒரேயொரு டவுனை வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி உள்ள அத்தனை கிராமங்களின் தேவைகளையும் நிறைவு செய்துவந்த எண்பதுகளின் மதுரையில் ஒரு சிறு பகுதிதான் களம், திமிரும் இளமையை சொர்ப்ப வருமானத்துக்கு அடகுவைக்க மனமின்றிப் பிழைப்புக்கு என்ன செய்வது என்ற யோசனைகூட இல்லாமல், யாருக்கும் அடங்காமல் திரியும் சண்டியர்கள் பரமனும் அழகரும்தான் கதை நாயகர்கள்... "Man hours" "Maximum utility of resources" என்று ஏகத்துக்கும் பீட்டர்விடும் நமக்கு syllabusசிலேயே இல்லாத மனிதர்கள்!!
கதை எண்பதுகளில் நகர்கிறது என்று வலியுறுத்தப் பிரயத்தனங்கள் அதிகம் தேவைப்படவேயில்லை இயக்குனருக்கு!! அவ்வளவு கச்சிதமான அரங்கமைப்புகள். கலை இயக்குனர் ரெம்போன் அலட்டிக்கொள்ளாமல் அசத்தியிருக்கிறார்... கதாபாத்திரங்கள் மட்டுமின்றி துணை நடிகர்களைக் கூட உடைகள் உட்பட அனைத்திலும் கதையின் காலம், கருப்பொருள் கெட்டுவிடாமல் இயக்கியிருப்பது இயக்குனரின் துல்லியத்தைக் காட்டுகிறது. இந்த வருடத்தின் மிகத் துணிச்சலான இயக்குனர் என்று சசிக்குமாருக்கு இப்போதே விருது கொடுத்துவிடலாம்... படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்கிற ஒரு சான்று போதாதா??!!
கதை, திரைக்கதை இரண்டுமே மரபுகளை உடைத்திருக்கும் இன்னுமொரு மகத்தான முயற்சிதான். சுப்ரமணியபுரம் ஏரியா....காலம் கடிவாளமிடாத இரண்டு முரட்டுக்குதிரைகள்... அதற்குக் கொஞ்சம் தீனிபோட்டுப் பதிலுக்கு பலிபோட முயற்சிக்கும் நரிக்கூட்டம்... அதற்குப் பின்னனியாக அரசியல்! தேசிய அரசியலெல்லாம் இல்லை இது "வட்டார அரசியல்"!!!இடையே நான்கு கண்கள் மட்டும் பங்கேற்கும் ஒரு typical மதுரைக்காதல்!! இப்படி மிக மிக compactடாகக் கட்டங்களை வரைந்துகொண்டு அதில் அழகாகக் காய்களை அடுக்கியிருக்கிறார்கள் முதல்பாதியில். இடைவேளை நெருங்கும் சமயத்தில்தான் தொடங்குகிறது, அடுத்த நகர்வை யூகிக்க முடியாத, அதகள ஆடுபுலியாட்டம்!! ஆடு எது? புலி எது? என்று யாருக்கும் இனம் புரியாத அரசியலாட்டம்!! 'முக்கிய சம்பவத்'திற்குப் பின் மாறி மாறி முட்டிக்கொள்ளும் வழக்கமான கதைதான் என்றாலும் முட்டலுக்கு நடுவே மூச்சுத்திணரும் ஓர் ஊமைக்காதலை உலவவிட்டுப் பின் அதை வைத்தே அதிரவைக்கும் ஓர் அறுவைசிகிச்சையை எதிர்பாராத நேரத்தில் அரங்கேற்றிப் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறார் இயக்குனர், மிரட்சியாக! சொல்ல வந்ததைக் கச்சிதமாக சொன்னால் வெற்றி நிச்சியம் என்று நிரூபித்திருக்கும் துணிச்சலான முயற்சி, இருப்பினும் நல்ல படம் பார்த்த உணர்வு மேலோங்கினாலும் அந்தவொரு நிறைவு கிடைக்கவில்லை... சசிக்குமாராக இடம்பிடிக்க "சுப்ரமணியபுரம்" மிகச் சரியான ஓர் அடையாளம் ஆனால் ஒரு பாலாவாக, அமீராக நிலைபெற அடுத்தபடம் அவசியம்!!
நடிப்பில் அனைத்துப் பாத்திரங்களுமே யதார்த்தமான உடல்மொழியை அனாயசமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள், அனைவருமே மதுரைக்காரர்களாக இருக்கும்போது ஜெய் மட்டும் அசலூர்க்காரராகத் தெரிகிறார்... பாவம் மதுரைத்தமிழ் முழுதாகப் பிடிபடவில்லை அவருக்கு, இருப்பினும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் "சென்னை- 28" பையன்!! தாவணி போட்ட தீபாவளியாக அறிமுகம் ஸ்வாதி... சசிகுமாருக்குக் கோடான கோடி நன்றிகள்!!! சிலையாக இருக்கிறார், சிரிப்பாலேயே கொல்கிறார்!!...அடுத்த படம் எப்போ ஸ்வாதி??!! வில்லன் குடும்பத்தில் சமுத்திரக்கனி...அவரை விடுங்கள்,அவரே இயக்குனர் பின்பு நடிக்க மாட்டாரா?.. அவருடைய அண்ணனாக வரும் முன்னாள் கவுன்சிலர் "எங்கப்பா புடிச்சாய்ங்கெ??" அதிராத அரசியல்வாதியாக மிரட்டியிருக்கிறார் மனிதர்... மாவட்டத் தலைவர் பதவி கொடுக்காமல் கட்சியில் கலாய்த்தபின் வெற்றிபெற்றப் புதுத் தலைவர் வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தும் காட்சியில் காரிலிருந்து மாலையோடு இறங்கி மெதுவாக நடந்து உள்ளே செல்லும் மிக நீளமான டேக் கில் சிக்கலான நேரத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென அரசியல்வாதிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்!! செம்ம நடிப்பு..!! பரவை முனியம்மா, 'காதல்' கரட்டாண்டி, 'அஞ்சாதே' குருவி வரிசையில் ஊணமுற்றவரான "டும்கா"வும் அருமையான ஓர் அறிமுகம் இவர்களுக்கெல்லாம் cameraபயமே இருக்காதா!! கஞ்சா கருப்பு முதன்முறையாக அழுத்தமாக நடித்திருக்கிறார்... சவுண்ட் சர்வீஸ் சித்தன், கோயில் விழாக்குழு தலைவர் மீசைக்காரர் என அனைவரும் மண்வாசனையைக் கிளப்பும் ரகம்!!
இன்னும் ஒரு பத்து இருபது வருடங்கள் கழித்து "சுப்ரமணியபுரம்" படம் பார்ப்பவர்கள் படத்துக்கு இசையமைப்பாளர் ராஜாவா? ரஹ்மானா? என்று நிச்சியம் கேட்கமாட்டார்கள்... இந்தப் படத்திற்கு இசையமைத்தது யார்? என்றுதான் கேட்பார்கள்... அவ்வளவு தனித்துவமான ஜேம்ஸ்வசந்தனின் இசை படத்திற்கு அதீத பலம்... பல காட்சிகளில் பின்னணிக்கு இசையைவிட மௌனத்தைப் பயன்படுத்தியிருக்கும் நேர்த்தி முதல் திரைப்படத்திலேயே அவருக்குக் கைகூடிவந்திருப்பது இசைத்துறையில் அவரது அனுபவம் அதிகம் என்று உணர்த்துகிறது... "கண்களிரண்டால்..." பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களுமே இனிமையான, கதையோடிணைந்தப் பதிவுகள்.. மிகவும் ஈர்த்த இன்னும் இரு விஷயங்கள் கதிரின் சுழன்று அடிக்கும் ஒளிப்பதிவும், சண்டைப்பயிற்சியும்... ஒரு வீதிச்சண்டையை அதன் கோபத்தோடு படமாக்கி மிரட்டியிருக்கிறார்கள்...சோடா பாட்டில்களைத் துண்டில் கட்டி அடிக்கும்போது வித்தியாசமான சத்தம் கொடுக்க டிஜிட்டல் மிக்ஸிங்கிலும் மெனக்கிட்டிருக்கிறார்கள்...
ஒரு திரைப்படமாக இத்தனை பாஸிடிவ்கள் இருக்கின்றபோதும் வன்முறை மிகவும் அதிகம் என்பது மறுக்க முடியாத குறை... பெண்கள், குழந்தைகளுக்குப் படத்தில் இயக்குனர் எதுவுமே வைக்கவில்லை.. வைக்கவும் முடியாதுதான் இந்தக் கதையில்!!"உன் பலத்தை நீ அறிந்து உனக்கு நீ பயன்படுத்தத் தவறிவிட்டால் பலருக்குப் பயன்பட்டுப் போவாய்.." என்று பயமுறுத்தும் அடிநாதம் உரக்கவே ஒலித்திருக்கிறது படத்தில்...!!சுத்தமான திரைக்கதைப் பிரியர்கள் தவறவிட முடியாத படம்.... அடுத்த படத்தில் சசிக்குமார் சிக்ஸர் அடித்தே ஆகவேண்டும், எதிர்பார்ப்புகள் எகிறிப்போயிருக்கின்றன... இதே ஸ்டைல் கதை மீண்டும் கை கொடுக்காது என்று நினைக்கிறேன்!
பிரபு. எம்