வெறும்முகத்தசை அசைவுகளாலேயே பலநூறு அவதாரங்கள் கண்டுவிட்ட கமல்ஹாசன், பிளாஸ்டிக் முக(மூடி)ங்களால் எடுத்திருக்கும் மேலும் பத்து அவதாரங்கள்தான் இந்த "காஸ்ட்லி காவியம்"! திரையில் பத்துக் கமல்களையும் மற்றும் சிலரை(!)யும் ஆட்டுவிக்கும் திரைக்கதை அவதாரம் தரித்திருப்பவரும் உலக நாயகனே!
ஏதோவொரு கடற்கரையில் நடந்த அல்லது நடக்கவிருந்த ஒரு பூகம்பத்தையும், அதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையும் முடிச்சு போடும் "கேயஸ் தியரி"யை முன்மொழிந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். பிரம்மிக்க வைப்பதுதான் 'பிரம்மாண்டம்' என்று சொன்னால், மிரட்டும் நடுக்கடலிலிருந்து வான்வழியாகச் சென்னையைக் காட்டிப் பறந்துவந்து சேப்பாக்கம் மைதானத்தில் மையம் கொள்வதிலும், தொடர்ந்துவரும் 12ம் நூற்றாண்டுக் காட்சியமைப்பிலும் பிரம்மாண்டத்தின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், "அதற்குள் முடிந்துவிட்டதே..!" என்று மனம் பதைக்கும் வேறொரு திரைப்படம்!! "கல்லை மட்டும்" பாடலோடு கடலில் மாண்டு போகும் முதலவதாரமான முரட்டு வைணவ இளம் சம்சாரி ரங்கராஜன் நம்பிதான் படம் முடிந்தும் நினைவுகளை ஆக்கிரமிக்கிறார்.
"கதை" என்று வலிய களம் எல்லாம் கிடையாது. "திரைக்கதை" எனும் நூல்தான் படம்! முதல்காட்சியில் 12ம் நூற்றாண்டு சைவ-வைணவ மோதலில் பறக்கவிட்டுப் பின் அடுத்தகாட்சிக்கு அமெரிக்காவில் நூல்பிடித்திருக்கிறார் கமல். பிடித்ததை இருகப் பற்றிக்கொண்டு எங்கெங்கோ பயணித்தாலும், இறுதியில் முதலில் தவறவிட்ட முதல் முனையைத் தொட்டு முடித்திருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம்!
"பேரழிவு" எனும் வார்த்தை அடிக்கடி வாக்கியமாவதில் கமல் மிகவும் ஆதங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பேரழிவை அரங்கேற்றும் வல்லமை இன்று இயற்கைக்கு அதாவது கடவுளுக்கு மட்டும் கிடையாது, மனிதனாலும் பூமிப்பந்தைக் குலுக்கிப் பார்க்க முடியும்! பேரழிவை விளைவிக்கும் லேட்டஸ்ட் ஆயுதம் (Bio-weapon)... அதைத் தவறான கைகளுக்குத் தாரைவார்க்கிறார்கள் சில மனித வைரஸ்கள். அதைத் தடுக்க நினைக்கும் அமெரிக்கவாழ் தமிழ் விஞ்ஞானி, அவரை விரட்டும் சகலகலா வில்லன், கண்டுபிடிக்க முனையும் சி.பி.ஐ அதிகாரி, ஆயுத்தை ஆதரிக்கும் அமெரிக்க அதிபர் மற்றும் கதை நகர்த்தும் இதர மாந்தர்கள் என அனைவரும் கமல்தான்!! அந்த வைரஸ் தன் அழிவு அத்தியாயங்களை அரங்கேற்றும் நேரத்தில் இன்னொமோர் பேரழிவு இயற்கையால் அரங்கேற அழிவே அழிவை அழிவால் அழிக்கிறது!! இரண்டுக்குமே மனிதப்பூச்சிகள் பலியாகின்றன! இவ்வழிவுகளுக்கு மூலம் தேடித்தான் "கேயஸ் தியரி"யின் படி 12ம் நூற்றாண்டுவரைப் பயணிக்க வேண்டியிருக்கிறது! பயோ-வார்,மணல் திருட்டு, என இயற்கையைச் சீண்டி அழிவுக்குக் கோடுபோடும் காரணங்களைக் கதையில் புத்திசாலித்தனமான காட்சியமைப்பினால் அங்கங்கே அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு வேகமாக நகர்த்தியிருக்கிறார்கள்.
முதல்பாதி டெக்னிக்கலாக மிரட்டினாலும், கமல்கள் திடீர் திடீரென்று தோன்றி பிரம்மிக்கவைத்தாலும், ஒரு திரைக்கதையாகக் கொஞ்சம் கடிக்கிறது. குறிப்பாக மல்லிகா ஷெராவத் காட்சிகள். 1970களின் சிலபல மசாலாபடங்களில் வரும் முகத்தில் பெரிய மச்சம்வைத்த கோட் சூட் வில்லன்கள் 'சில்க்'ஸ்மிதாவை ஆயுதமாகப் பயன்படுத்துவார்களே, அதையே அமெரிக்காவில் செய்திருக்கிறார்கள் (என்ன கொடுமை ஸார் இது!!)ஆனால் சிலுக்கைப் போல் கடைசி காட்சியில் குறுக்கே விழுந்து சாகாமல் முதல் ஒருமணி நேரத்திலேயே மல்லிகா செத்துப் படத்தைப் பிழைக்கச் செய்கிறார்!! இரண்டாம்பாதியில் தூள் கிளப்பிவிடுகிறார்கள்!
கமல்ஹாசன் நடிப்பில் ஒரு "டிராகன்". அத்தனைப் புலன்களையும் ஒரே நேரத்தில் இயக்கி நடிக்கும் ஆற்றல் பெற்றவர், உண்மைதான். இருப்பினும் பாவனைகளால் முகத்தைப் பிசைந்துக் கண்களால் கதை சொல்வதுதான் "கமல் நடிப்பு"! ஏனோ இந்தப் படத்தில் பிளாஸ்டிக்கால் 10 பெரிய குல்லா செய்து முகத்தை மூடிக்கொண்டு நடித்திருக்கிறார்! "கமல்" என்கிற அடையாளத்தை முற்றிலும் மறைத்து வியப்பூட்டுகிறது ஒப்பனை. ஆனால் பாவம் அந்த முகமூடிக்குள் மாட்டிக்கொண்ட முகமும் கண்களும் மூச்சுமுட்ட நடித்திருக்கும், அதையும் சேர்த்து மேக்-அப் மறைத்திருப்பது ஏமாற்றமே! இருப்பினும் 10 அவதாரங்களும் ரொம்பவே புதியவை, இதுவரையிலான தன் சாதனைகளுக்கு மகுடமாக இதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒவ்வொரு அவதாரத்துக்கும் உடல் நோக உழைத்திருக்கிறார் உலக நாயகன்! சில காட்சிகளில் கதை நகர்த்தும் பாத்திரங்கள் திரையில் அவரவர் பாதையில் நகர "அந்தப் பாத்திரங்கள் யாவரும் ஒரே கமல்தானே!" என்ற நினைப்பு வந்து சிலிர்க்கச் செய்கிறது! மூன்று கமல்கள் மோதிக்கொள்ளும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஓர் சாகசமான உதாரணம்... சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறார் கமல்... உண்மைதான்!!
10 கமல்களையும் முதல் பத்து இடங்களைப் பிடிக்க விட்டுவிடாமல் தங்கள் இடங்களை உரிமையுடன் பறித்திருக்கிறார்கள் அஸினும், "பட்டாபி" பாஸ்கரும்!"Hair thread life escape" மற்றும் "Yes" துரை", என்று சொல்வதற்குக் காற்றில் "S" என்று வரைந்து காட்டுவதும் அபார காமெடிகள்... M.S Bhaskar Rockzzz...
"கல்லை மட்டும்" பாடலுக்காக மட்டும் வேண்டுமானால் ஹிமேஷை மன்னிக்க முயற்சிக்கலாம்! தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் படத்தின் தரத்திற்குப் பொருத்தமாக்க இன்னும் மெனக்கிட்டிருக்கலாம். படத்துக்கு சர்வதேசத் தரம் கொடுத்திருக்கிறது ரவிவர்மனின் ஒளி ஓவியம்! குறிப்பாக 12ம் நூற்றாண்டுக் காட்சிகள். சைவமன்னன் யானைமீது கம்பீரமாக வீற்றிருக்க... கமல் அதற்கும் உயரத்தில் தசையால் தொங்க... கூட்டம் தரையில் அலைமோத... அத்தனையையும் அந்தக் காலத்திற்கேற்ற லைட்டிங்கில், அவரவர் பரப்பில் படம்பிடித்து நம்மை உறைய வைத்திருக்கிறார்! இந்தப் படத்திற்கு எப்படித்தான் இத்தனைக் கச்சிதமாக அஷ்மித்குமார் படக்கோர்வை செய்தாரோ?? 'இயக்குநராக' மட்டும் வேலை செய்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார் சிறப்பாக!
"தத்துவார்த்தமான திரைக்கதையாளர்" என்று தனி இடம் நிச்சியம் தமிழ் சினிமாவில் கமலுக்கு உண்டு, ஆனால் "கமல் சினிமா"வில், "ராஜபார்வை", "மூன்றாம் பிறை", "அன்பே சிவம்" லிஸ்டில் "தசாவதாரத்"திற்கு இடமில்லை. இது அவரின் கமர்ஷியல் கில்லிகளில் இடம்பிடிக்கும்!
(இருநூறு ரூபாய் கொடுத்து இரண்டாம் நாள் பார்த்தேன், வருத்தமில்லை... தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய படம்!!!)
-பிரபு. எம்