தரிசனம் - சிறுகதை

தரிசனம்
மாலை 5:30 மணியிருக்கும், அது ஒரு பரபரப்பான மாலைவேளையாகத்தானிருந்தது சிபிக்கு. சிபி படிக்க வேண்டுமென்பதற்காக அவன் அப்பா தன் வீட்டு மாடியில் கட்டித்தந்த பத்துக்குப் பத்து அளவிலான அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது. ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்துறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில், இவைதான் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன. மேசையில் புத்தகங்கள் இறைஞ்சிக்கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்கள், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக்கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி. நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை.

ஒரு 10 மார்க் கணக்கிற்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது... பதற்றம்..."கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?"... "அதற்குள் இருட்டிவிட்டதே?"என்று மனம் பதை பதைக்கிறது. அந்தக் கணக்கிற்கு விடை தெரியவில்லை. " நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான் மறந்த விட்டேனா?" என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதுக்காகிதத்தில் மீண்டும் எழுதத்துங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன. அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம். அந்தச் சுண்ணாம்புச் சிதறலகளுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது. அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' அவ‌னுக்கு இதே போல் விசித்திர‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அவ‌னுக்கு அதுவ‌ரை ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று.. திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான். சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து. இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேண்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டுத் த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா பேப்ப‌ர் திருத்திக் கொண்டிருந்தார். சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ 'சிபிசார்' எங்கே கிள‌ம்பிட்டார்??" என்று கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன். அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம் அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து. "ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம் "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்". என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக்கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை.. ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி. அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான். மெயின்ரோடு வ‌ந்த‌து. அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர்சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும்.அம்மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ந்தான் ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து.. அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான், சுவ‌ரெங்கும் அவ‌ன் அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு. மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும் ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.
புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். " நீ ந‌ம்ம‌ த‌லைமாறியே இருக்கேடா!!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை... க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப்பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை. சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்! "பார்த்துவிட்டுத்தான் போவோமே" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், " ந‌ம‌க்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், இம்முறை ஒருதடவை வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை... புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து. ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே??" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால். ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி!

- பிர‌பு