கால்ஷீட் - சிறுக‌தை



"கருப்பு.....

......வெள்ளை


கருப்பு........

......மீண்டும் வெள்ளை...


லைட்ஸ் ஆன்.......

........லைட்ஸ் ஆஃப்


லைட்ஸ் ஆன்.......

.......லைட்ஸ் ஆஃப்"


கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!


"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???" என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்...இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்.... "ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??" இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!


தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்... "மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி.... நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....

இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!

"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."

மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."

கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"

எழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......

சுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார். "சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்ப‌டுகிறான்!" என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்.....

"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு "என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌...." என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...!!

சுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...

அன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்..... "அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்..." என்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிட‌ம் "அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌.." என்று உத்த‌ர‌விடுகிறார்.... சுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....

தொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார்! உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மாக‌வே குடிப்பார்.....

நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ்! இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....

"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்!!" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...

ந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வேளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....

தன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

என்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...

"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து!! நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து... "எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை!!" என்று கூறியிருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன்... "சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்ந்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகத் திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....

சுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து!!... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."ந‌ம்மாழ் சார்..!!" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...!!

ர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள்!! ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார்!! அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு!!!

"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ!!" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவ‌ந்த‌து ப‌தில்!!!
க‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு!!

கதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள்!! ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து!!!! மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன்!!! முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்.....! துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில்!!!! பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன்றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....

ம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....

பேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......

அந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து...

"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....

"இல்ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்...."

"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே.." கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......

ஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....

க‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......

"யோவ்! தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌....?? அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..!!"
ந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......

-பிர‌பு.

சுப்ரமணியபுரம்- விமர்சனம்


" நம்ப மாவட்டத் தலைவர செஞ்சது நீங்கதான??

""ம்ம்ம்...."

" பணத்துக்கா?"

" காசு பணமெல்லாம் இல்ல..."

"பின்ன ஏதும் பெரிய மோட்டிவா?..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... பழக்கத்துக்காகப் போட்டோம்ணே..."

"ஹும்.... நம்ப ஊருக்காரெங்கெதான்யா பழக்கத்துக்காகல்லாம் கொல பண்ணுவாய்ங்கெ!!"

பலத்த கைத்தட்டல் அர‌ங்கினுள்.... அநேக‌மாக‌ இந்த‌க் காட்சிக்கு ம‌துரைப் ப‌குதிக‌ளில்தான் கைத்த‌ட்ட‌ல் அதிர்ந்திருக்கும் என‌ நினைக்கிறேன்... கோலிவுட்டில் இது மீண்டும் "ம‌துரைக் கால‌ம்"!!

பார‌திராஜாவின் பாதிப்பால் சினிமாவுக்குக் க‌தைக‌ளைத் தூக்கிக்கொண்டுவ‌ந்த‌ ப‌ல‌ இய‌க்குன‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ள் எல்லாவ‌ற்றிலுமே ம‌ண‌ந்தது ம‌துரைத் த‌மிழ்தான்.. க‌தையின் க‌ள‌ம் ம‌துரையாக‌ இல்லாதபோதுகூட‌ க‌தைமாந்த‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ப் பேசுவ‌து என்ன‌வோ ம‌துரை வ‌ட்டார‌ வ‌ழ‌க்காகத்தான் இருக்கும்... சினிமாத்த‌ன‌ங்க‌ள் ய‌தார்த்த‌த்துக்கு மெல்ல‌ மெல்ல‌ வ‌ழிவிட‌ ஆர‌ம்பித்த‌வுடனேயே க‌ள‌த்திற்கேற்ற‌ த‌மிழ்தான் பேச‌ப்படவேண்டுமென்பது க‌ட்டாய‌மாகிப்போய்விட்ட‌து... "பருத்திவீர‌"னைத் தொட‌ர்ந்து மீண்டும் முழுக்க‌ முழுக்க‌ ம‌துரைத்த‌மிழை அந்த‌ மண்வாசனையோடு ம‌ண‌க்க‌ வ‌ழ‌ங்கியிருக்கிற‌து "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" (ர‌த்த‌வாச‌னைக்கும் குறைவில்லை)

ல‌ட்சிய‌மில்லாத இளமையின் ஆபத்தை உணர்த்தும் படம். முனைப்பில்லாத யவனத்தை கோபமும் திமிருமாய்ப் பாத்திர‌ப்ப‌டுத்தியிருக்கும் வித‌ம் மிகவும் ருசிக‌ர‌ம். ஒரேயொரு ட‌வுனை வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி உள்ள அத்தனை கிராமங்களின் தேவைகளையும் நிறைவு செய்துவந்த எண்பதுகளின் மதுரையில் ஒரு சிறு பகுதிதான் களம், திமிரும் இளமையை சொர்ப்ப வருமானத்துக்கு அடகுவைக்க மனமின்றிப் பிழைப்புக்கு என்ன செய்வது என்ற யோசனைகூட இல்லாமல், யாருக்கும் அடங்காமல் திரியும் சண்டியர்கள் பரமனும் அழகரும்தான் கதை நாயகர்கள்... "Man hours" "Maximum utility of resources" என்று ஏகத்துக்கும் பீட்ட‌ர்விடும் நமக்கு syllabusசிலேயே இல்லாத மனிதர்கள்!!

க‌தை எண்ப‌துக‌ளில் ந‌க‌ர்கிற‌து என்று வ‌லியுறுத்த‌ப் பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ள் அதிக‌ம் தேவைப்ப‌ட‌வேயில்லை இய‌க்குன‌ருக்கு!! அவ்வ‌ள‌வு க‌ச்சித‌மான‌ அர‌ங்க‌மைப்புகள். க‌லை இய‌க்குன‌ர் ரெம்போன் அல‌ட்டிக்கொள்ளாம‌ல் அசத்தியிருக்கிறார்... க‌தாபாத்திர‌ங்க‌ள் ம‌ட்டுமின்றி துணை ந‌டிக‌ர்களைக் கூட‌ உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்திலும் க‌தையின் கால‌ம், க‌ருப்பொருள் கெட்டுவிடாம‌ல் இய‌க்கியிருப்ப‌து இய‌க்குன‌ரின் துல்லிய‌த்தைக் காட்டுகிற‌து. இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌த் துணிச்ச‌லான இய‌க்குன‌ர் என்று ச‌சிக்குமாருக்கு இப்போதே விருது கொடுத்துவிட‌லாம்... ப‌ட‌த்தின் தயாரிப்பாளரும் அவ‌ரே என்கிற‌ ஒரு சான்று போதாதா??!!

க‌தை, திரைக்க‌தை இர‌ண்டுமே ம‌ர‌புக‌ளை உடைத்திருக்கும் இன்னுமொரு ம‌க‌த்தான முய‌ற்சிதான். சுப்ர‌ம‌ணிய‌புரம் ஏரியா....கால‌ம் க‌டிவாள‌மிடாத இரண்டு முர‌ட்டுக்குதிரைகள்... அதற்குக் கொஞ்ச‌ம் தீனிபோட்டுப் பதிலுக்கு பலிபோட‌ முயற்சிக்கும் ந‌ரிக்கூட்ட‌ம்... அதற்குப் பின்னனியாக‌ அர‌சிய‌ல்! தேசிய அரசியலெல்லாம் இல்லை இது "வட்டார அரசியல்"!!!இடையே நான்கு க‌ண்க‌ள் ம‌ட்டும் ப‌ங்கேற்கும் ஒரு typical ம‌துரைக்காத‌ல்!! இப்படி மிக‌ மிக compactடாகக் க‌ட்ட‌ங்களை வரைந்துகொண்டு அதில் அழ‌காக‌க் காய்க‌ளை அடுக்கியிருக்கிறார்கள் முத‌ல்பாதியில். இடைவேளை நெருங்கும் ச‌மய‌த்தில்தான் தொட‌ங்குகிறது, அடுத்த நகர்வை யூகிக்க‌ முடியாத, அத‌க‌ள‌ ஆடுபுலியாட்ட‌ம்!! ஆடு எது? புலி எது? என்று யாருக்கும் இனம் புரியாத‌ அர‌சிய‌லாட்ட‌ம்!! 'முக்கிய‌ ச‌ம்ப‌வத்'திற்குப் பின் மாறி மாறி முட்டிக்கொள்ளும் வ‌ழ‌க்க‌மான‌ க‌தைதான் என்றாலும் முட்ட‌லுக்கு ந‌டுவே மூச்சுத்திண‌ரும் ஓர் ஊமைக்காதலை உலவவிட்டுப் பின் அதை வைத்தே அதிர‌வைக்கும் ஓர் அறுவைசிகிச்சையை எதிர்பாராத‌ நேர‌த்தில் அர‌ங்கேற்றிப் புருவ‌ங்க‌ளை உய‌ர்த்த‌ வைத்திருக்கிறார் இய‌க்குனர், மிரட்சியாக‌! சொல்ல வந்ததைக் கச்சிதமாக சொன்னால் வெற்றி நிச்சியம் என்று நிரூபித்திருக்கும் துணிச்சலான முயற்சி, இருப்பினும் ந‌ல்ல‌ ப‌ட‌ம் பார்த்த‌ உண‌ர்வு மேலோங்கினாலும் அந்தவொரு நிறைவு கிடைக்க‌வில்லை... ச‌சிக்குமாராக‌ இட‌ம்பிடிக்க "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" மிகச் ச‌ரியான‌ ஓர் அடையாள‌ம் ஆனால் ஒரு பாலாவாக‌, அமீராக நிலைபெற‌ அடுத்த‌ப‌ட‌ம் அவ‌சிய‌ம்!!

ந‌டிப்பில் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளுமே ய‌தார்த்த‌மான‌ உட‌ல்மொழியை அனாய‌ச‌மாக‌ வெளிப்ப‌டுத்தி அச‌த்தியிருக்கிறார்க‌ள், அனைவ‌ருமே ம‌துரைக்கார‌ர்க‌ளாக‌ இருக்கும்போது ஜெய் ம‌ட்டும் அச‌லூர்க்கார‌ராக‌த் தெரிகிறார்... பாவ‌ம் ம‌துரைத்த‌மிழ் முழுதாக‌ப் பிடிப‌ட‌வில்லை அவ‌ருக்கு, இருப்பினும் ப‌ட‌த்திற்காக‌ க‌டுமையாக‌ உழைத்திருக்கிறார் "சென்னை- 28" பைய‌ன்!! தாவ‌ணி போட்ட‌ தீபாவ‌ளியாக அறிமுகம் ஸ்வாதி... ச‌சிகுமாருக்குக் கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள்!!! சிலையாக‌ இருக்கிறார், சிரிப்பாலேயே கொல்கிறார்!!...அடுத்த‌ ப‌ட‌ம் எப்போ ஸ்வாதி??!! வில்லன் குடும்பத்தில் ச‌முத்திர‌க்க‌னி...அவரை விடுங்கள்,அவரே இய‌க்குன‌ர் பின்பு ந‌டிக்க‌ மாட்டாரா?.. அவருடைய‌ அண்ண‌னாக‌ வ‌ரும் முன்னாள் க‌வுன்சில‌ர் "எங்க‌ப்பா புடிச்சாய்ங்கெ??" அதிராத‌ அர‌சிய‌ல்வாதியாக‌ மிர‌ட்டியிருக்கிறார் ம‌னித‌ர்... மாவ‌ட்ட‌த் த‌லைவ‌ர் பதவி கொடுக்காம‌ல் கட்சியில் க‌லாய்த்த‌பின் வெற்றிபெற்ற‌ப் புதுத் த‌லைவ‌ர் வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தும் காட்சியில் காரிலிருந்து மாலையோடு இற‌ங்கி மெதுவாக‌ ந‌ட‌ந்து உள்ளே செல்லும் மிக‌ நீள‌மான‌ டேக் கில் சிக்கலான நேரத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென அர‌சிய‌ல்வாதிக‌ளுக்குப் பாட‌ம் சொல்லிக் கொடுக்கிறார்!! செம்ம‌ ந‌டிப்பு..!! பரவை முனியம்மா, 'காதல்' கரட்டாண்டி, 'அஞ்சாதே' குருவி வரிசையில் ஊண‌முற்ற‌வ‌ரான‌ "டும்கா"வும் அருமையான‌ ஓர் அறிமுக‌ம் இவ‌ர்க‌ளுக்கெல்லாம் cameraப‌ய‌மே இருக்காதா!! க‌ஞ்சா க‌ருப்பு முத‌ன்முறையாக‌ அழுத்த‌மாக‌ ந‌டித்திருக்கிறார்... ச‌வுண்ட் ச‌ர்வீஸ் சித்த‌ன், கோயில் விழாக்குழு த‌லைவ‌ர் மீசைக்கார‌ர் என‌ அனைவ‌ரும் ம‌ண்வாச‌னையைக் கிள‌ப்பும் ர‌க‌ம்!!

இன்னும் ஒரு ப‌த்து இருப‌து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ப‌ட‌த்துக்கு இசைய‌மைப்பாள‌ர் ராஜாவா? ர‌ஹ்மானா? என்று நிச்சியம் கேட்க‌மாட்டார்க‌ள்... இந்த‌ப் ப‌ட‌த்திற்கு இசைய‌மைத்த‌து யார்? என்றுதான் கேட்பார்க‌ள்... அவ்வ‌ள‌வு த‌னித்துவ‌மான ஜேம்ஸ்வ‌சந்த‌னின் இசை ப‌ட‌த்திற்கு அதீத‌ ப‌ல‌ம்... ப‌ல‌ காட்சிக‌ளில் பின்னணிக்கு இசையைவிட‌ மௌன‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கும் நேர்த்தி முத‌ல் திரைப்ப‌ட‌த்திலேயே அவ‌ருக்குக் கைகூடிவ‌ந்திருப்ப‌து இசைத்துறையில் அவ‌ர‌து அனுப‌வ‌ம் அதிக‌ம் என்று உண‌ர்த்துகிற‌து... "க‌ண்க‌ளிர‌ண்டால்..." பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களுமே இனிமையான, கதையோடிணைந்தப் பதிவுகள்.. மிக‌வும் ஈர்த்த‌ இன்னும் இரு விஷ‌ய‌ங்க‌ள் க‌திரின் சுழ‌ன்று அடிக்கும் ஒளிப்ப‌திவும், ச‌ண்டைப்ப‌யிற்சியும்... ஒரு வீதிச்ச‌ண்டையை அத‌ன் கோப‌த்தோடு ப‌ட‌மாக்கி மிர‌ட்டியிருக்கிறார்க‌ள்...சோடா பாட்டில்க‌ளைத் துண்டில் க‌ட்டி அடிக்கும்போது வித்தியாச‌மான‌ ச‌த்த‌ம் கொடுக்க‌ டிஜிட்ட‌ல் மிக்ஸிங்கிலும் மென‌க்கிட்டிருக்கிறார்க‌ள்...

ஒரு திரைப்ப‌ட‌மாக‌ இத்த‌னை பாஸிடிவ்க‌ள் இருக்கின்ற‌போதும் வ‌ன்முறை மிக‌வும் அதிக‌ம் என்ப‌து மறுக்க‌ முடியாத‌ குறை... பெண்க‌ள், குழ‌ந்தைக‌ளுக்குப் படத்தில் இய‌க்குன‌ர் எதுவுமே வைக்க‌வில்லை.. வைக்க‌வும் முடியாதுதான் இந்த‌க் க‌தையில்!!"உன் பலத்தை நீ அறிந்து உனக்கு நீ பயன்படுத்தத் தவறிவிட்டால் பலருக்குப் பயன்பட்டுப் போவாய்.." என்று பயமுறுத்தும் அடிநாதம் உரக்கவே ஒலித்திருக்கிறது படத்தில்...!!சுத்த‌மான‌ திரைக்க‌தைப் பிரிய‌ர்க‌ள் த‌வ‌ற‌விட‌ முடியாத‌ ப‌ட‌ம்.... அடுத்த‌ ப‌ட‌த்தில் ச‌சிக்குமார் சிக்ஸ‌ர் அடித்தே ஆக‌வேண்டும், எதிர்பார்ப்புக‌ள் எகிறிப்போயிருக்கின்ற‌ன‌... இதே ஸ்டைல் க‌தை மீண்டும் கை கொடுக்காது என்று நினைக்கிறேன்!
பிர‌பு. எம்

தசாவதாரம் -விமர்சனம்



வெறும்முகத்தசை அசைவுகளாலேயே பலநூறு அவதாரங்கள் கண்டுவிட்ட கமல்ஹாசன், பிளாஸ்டிக் முக(மூடி)ங்களால் எடுத்திருக்கும் மேலும் பத்து அவதாரங்கள்தான் இந்த "காஸ்ட்லி காவியம்"! திரையில் பத்துக் கமல்களையும் மற்றும் சிலரை(!)யும் ஆட்டுவிக்கும் திரைக்கதை அவதாரம் தரித்திருப்பவரும் உலக நாயகனே!


ஏதோவொரு கடற்கரையில் நடந்த அல்லது நடக்கவிருந்த ஒரு பூகம்பத்தையும், அதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையும் முடிச்சு போடும் "கேயஸ் தியரி"யை முன்மொழிந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். பிரம்மிக்க வைப்பதுதான் 'பிரம்மாண்டம்' என்று சொன்னால், மிரட்டும் நடுக்கடலிலிருந்து வான்வழியாகச் சென்னையைக் காட்டிப் பறந்துவந்து சேப்பாக்கம் மைதானத்தில் மையம் கொள்வதிலும், தொடர்ந்துவரும் 12ம் நூற்றாண்டுக் காட்சியமைப்பிலும் பிரம்மாண்டத்தின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், "அதற்குள் முடிந்துவிட்டதே..!" என்று மனம் பதைக்கும் வேறொரு திரைப்படம்!! "கல்லை மட்டும்" பாடலோடு கடலில் மாண்டு போகும் முதலவதாரமான முரட்டு வைணவ இளம் சம்சாரி ரங்கராஜன் நம்பிதான் படம் முடிந்தும் நினைவுகளை ஆக்கிரமிக்கிறார்.


"கதை" என்று வலிய களம் எல்லாம் கிடையாது. "திரைக்கதை" எனும் நூல்தான் படம்! முதல்காட்சியில் 12ம் நூற்றாண்டு சைவ-வைணவ மோதலில் பறக்கவிட்டுப் பின் அடுத்தகாட்சிக்கு அமெரிக்காவில் நூல்பிடித்திருக்கிறார் கமல். பிடித்ததை இருகப் பற்றிக்கொண்டு எங்கெங்கோ பயணித்தாலும், இறுதியில் முதலில் தவறவிட்ட முதல் முனையைத் தொட்டு முடித்திருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம்!


"பேரழிவு" எனும் வார்த்தை அடிக்கடி வாக்கியமாவதில் கமல் மிகவும் ஆதங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பேரழிவை அரங்கேற்றும் வல்லமை இன்று இயற்கைக்கு அதாவது கடவுளுக்கு மட்டும் கிடையாது, மனிதனாலும் பூமிப்பந்தைக் குலுக்கிப் பார்க்க முடியும்! பேரழிவை விளைவிக்கும் லேட்டஸ்ட் ஆயுதம் (Bio-weapon)... அதைத் தவறான கைகளுக்குத் தாரைவார்க்கிறார்கள் சில மனித வைரஸ்கள். அதைத் தடுக்க நினைக்கும் அமெரிக்கவாழ் தமிழ் விஞ்ஞானி, அவரை விர‌ட்டும் ச‌க‌ல‌க‌லா வில்ல‌ன், க‌ண்டுபிடிக்க‌ முனையும் சி.பி.ஐ அதிகாரி, ஆயுத்தை ஆதரிக்கும் அமெரிக்க அதிபர் ம‌ற்றும் க‌தை ந‌க‌ர்த்தும் இத‌ர‌ மாந்த‌ர்க‌ள் என‌ அனைவ‌ரும் க‌ம‌ல்தான்!! அந்த‌ வைர‌ஸ் த‌ன் அழிவு அத்தியாய‌ங்க‌ளை அர‌ங்கேற்றும் நேர‌த்தில் இன்னொமோர் பேர‌ழிவு இய‌ற்கையால் அர‌ங்கேற‌ அழிவே அழிவை அழிவால் அழிக்கிற‌து!! இர‌ண்டுக்குமே ம‌னித‌ப்பூச்சிக‌ள் ப‌லியாகின்ற‌ன‌! இவ்வ‌ழிவுக‌ளுக்கு மூல‌ம் தேடித்தான் "கேய‌ஸ் திய‌ரி"யின் ப‌டி 12ம் நூற்றாண்டுவ‌ரைப் ப‌ய‌ணிக்க வேண்டியிருக்கிற‌து! ப‌யோ-வார்,ம‌ண‌ல் திருட்டு, என‌ இய‌ற்கையைச் சீண்டி அழிவுக்குக் கோடுபோடும் கார‌ண‌ங்க‌ளைக் க‌தையில் புத்திசாலித்த‌ன‌மான‌ காட்சிய‌மைப்பினால் அங்க‌ங்கே அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு வேக‌மாக‌ ந‌க‌ர்த்தியிருக்கிறார்க‌ள்.


முத‌ல்பாதி டெக்னிக்க‌லாக‌ மிர‌ட்டினாலும், க‌ம‌ல்க‌ள் திடீர் திடீரென்று தோன்றி பிர‌ம்மிக்க‌வைத்தாலும், ஒரு திரைக்க‌தையாக‌க் கொஞ்ச‌ம் க‌டிக்கிற‌து. குறிப்பாக‌ ம‌ல்லிகா ஷெராவ‌த் காட்சிக‌ள். 1970க‌ளின் சில‌ப‌ல‌ ம‌சாலாப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் முக‌த்தில் பெரிய‌ ம‌ச்ச‌ம்வைத்த‌ கோட் சூட் வில்ல‌ன்க‌ள் 'சில்க்'ஸ்மிதாவை ஆயுத‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ளே, அதையே அமெரிக்காவில் செய்திருக்கிறார்க‌ள் (என்ன‌ கொடுமை ஸார் இது!!)ஆனால் சிலுக்கைப் போல் க‌டைசி காட்சியில் குறுக்கே விழுந்து சாகாம‌ல் முத‌ல் ஒரும‌ணி நேர‌த்திலேயே ம‌ல்லிகா செத்துப் ப‌ட‌த்தைப் பிழைக்க‌ச் செய்கிறார்!! இர‌ண்டாம்பாதியில் தூள் கிள‌ப்பிவிடுகிறார்க‌ள்!


க‌ம‌ல்ஹாச‌ன் ந‌டிப்பில் ஒரு "டிராக‌ன்". அத்த‌னைப் புலன்க‌ளையும் ஒரே நேர‌த்தில் இய‌க்கி ந‌டிக்கும் ஆற்ற‌ல் பெற்ற‌வ‌ர், உண்மைதான். இருப்பினும் பாவ‌னைக‌ளால் முக‌த்தைப் பிசைந்துக் க‌ண்க‌ளால் க‌தை சொல்வ‌துதான் "க‌ம‌ல் ந‌டிப்பு"! ஏனோ இந்த‌ப் ப‌ட‌த்தில் பிளாஸ்டிக்கால் 10 பெரிய‌ குல்லா செய்து முக‌த்தை மூடிக்கொண்டு ந‌டித்திருக்கிறார்! "க‌ம‌ல்" என்கிற‌ அடையாள‌த்தை முற்றிலும் ம‌றைத்து வியப்பூட்டுகிற‌து ஒப்ப‌னை. ஆனால் பாவ‌ம் அந்த‌ முக‌மூடிக்குள் மாட்டிக்கொண்ட முக‌மும் க‌ண்க‌ளும் மூச்சுமுட்ட‌ ந‌டித்திருக்கும், அதையும் சேர்த்து மேக்-அப் ம‌றைத்திருப்பது ஏமாற்ற‌மே! இருப்பினும் 10 அவ‌தார‌ங்க‌ளும் ரொம்ப‌வே புதிய‌வை, இதுவரையிலான‌ த‌ன் சாத‌னைக‌ளுக்கு ம‌குட‌மாக‌ இதைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளாம‌ல் ஒவ்வொரு அவதாரத்துக்கும் உட‌ல் நோக‌ உழைத்திருக்கிறார் உல‌க‌ நாய‌க‌ன்! சில‌ காட்சிக‌ளில் க‌தை ந‌க‌ர்த்தும் பாத்திர‌ங்க‌ள் திரையில் அவ‌ர‌வ‌ர் பாதையில் ந‌கர "அந்த‌ப் பாத்திர‌ங்க‌ள் யாவரும் ஒரே க‌ம‌ல்தானே!" என்ற‌ நினைப்பு வ‌ந்து சிலிர்க்க‌ச் செய்கிற‌து! மூன்று க‌ம‌ல்க‌ள் மோதிக்கொள்ளும் க்ளைமாக்ஸ் ச‌ண்டைக்காட்சி ஓர் சாக‌ச‌மான‌ உதார‌ண‌ம்... சாத்திய‌மே இல்லாத‌ ஒன்றை சாத்திய‌ப்ப‌டுத்தியிருக்கிறார் க‌ம‌ல்... உண்மைதான்!!


10 க‌ம‌ல்க‌ளையும் முத‌ல் ப‌த்து இட‌ங்க‌ளைப் பிடிக்க‌ விட்டுவிடாம‌ல் த‌ங்க‌ள் இட‌ங்க‌ளை உரிமையுட‌ன் ப‌றித்திருக்கிறார்க‌ள் அஸினும், "ப‌ட்டாபி" பாஸ்க‌ரும்!"Hair thread life escape" மற்றும் "Yes" துரை", என்று சொல்வ‌த‌ற்குக் காற்றில் "S" என்று வ‌ரைந்து காட்டுவ‌தும் அபார‌ காமெடிக‌ள்... M.S Bhaskar Rockzzz...


"க‌ல்லை ம‌ட்டும்" பாடலுக்காக‌ ம‌ட்டும் வேண்டுமானால் ஹிமேஷை ம‌ன்னிக்க‌ முய‌ற்சிக்க‌லாம்! தேவிஸ்ரீ பிர‌சாத்தின் பின்னணி இசை ந‌ன்றாக‌ இருந்தாலும் ப‌ட‌த்தின் த‌ர‌த்திற்குப் பொருத்த‌மாக்க‌ இன்னும் மென‌க்கிட்டிருக்க‌லாம். ப‌ட‌த்துக்கு ச‌ர்வ‌தேச‌த் த‌ர‌ம் கொடுத்திருக்கிற‌து ர‌விவ‌ர்ம‌னின் ஒளி ஓவிய‌ம்! குறிப்பாக‌ 12ம் நூற்றாண்டுக் காட்சிக‌ள். சைவ‌ம‌ன்ன‌ன் யானைமீது க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்க‌... க‌ம‌ல் அத‌ற்கும் உய‌ர‌த்தில் த‌சையால் தொங்க‌... கூட்ட‌ம் த‌ரையில் அலைமோத‌... அத்த‌னையையும் அந்த‌க் கால‌த்திற்கேற்ற‌ லைட்டிங்கில், அவ‌ர‌வ‌ர் ப‌ர‌ப்பில் ப‌ட‌ம்பிடித்து ந‌ம்மை உறைய‌ வைத்திருக்கிறார்! இந்த‌ப் ப‌ட‌த்திற்கு எப்ப‌டித்தான் இத்த‌னைக் க‌ச்சித‌மாக‌ அஷ்மித்குமார் ப‌ட‌க்கோர்வை செய்தாரோ?? 'இய‌க்குந‌ராக‌' ம‌ட்டும் வேலை செய்திருக்கிறார் கே.எஸ். ர‌விக்குமார் சிற‌ப்பாக‌!


"த‌த்துவார்த்தமான‌ திரைக்க‌தையாள‌ர்" என்று த‌னி இட‌ம் நிச்சிய‌ம் த‌மிழ் சினிமாவில் க‌ம‌லுக்கு உண்டு, ஆனால் "கமல் சினிமா"வில், "ராஜ‌பார்வை", "மூன்றாம் பிறை", "அன்பே சிவ‌ம்" லிஸ்டில் "த‌சாவ‌தார‌த்"திற்கு இட‌மில்லை. இது அவ‌ரின் க‌ம‌ர்ஷிய‌ல் கில்லிக‌ளில் இட‌ம்பிடிக்கும்!

(இருநூறு ரூபாய் கொடுத்து இர‌ண்டாம் நாள் பார்த்தேன், வ‌ருத்த‌மில்லை... தியேட்ட‌ரில் ம‌ட்டுமே பார்க்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்!!!)


-பிர‌பு. எம்






தரிசனம் - சிறுகதை

தரிசனம்
மாலை 5:30 மணியிருக்கும், அது ஒரு பரபரப்பான மாலைவேளையாகத்தானிருந்தது சிபிக்கு. சிபி படிக்க வேண்டுமென்பதற்காக அவன் அப்பா தன் வீட்டு மாடியில் கட்டித்தந்த பத்துக்குப் பத்து அளவிலான அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது. ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்துறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில், இவைதான் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன. மேசையில் புத்தகங்கள் இறைஞ்சிக்கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்கள், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக்கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி. நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை.

ஒரு 10 மார்க் கணக்கிற்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது... பதற்றம்..."கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?"... "அதற்குள் இருட்டிவிட்டதே?"என்று மனம் பதை பதைக்கிறது. அந்தக் கணக்கிற்கு விடை தெரியவில்லை. " நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான் மறந்த விட்டேனா?" என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதுக்காகிதத்தில் மீண்டும் எழுதத்துங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன. அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம். அந்தச் சுண்ணாம்புச் சிதறலகளுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது. அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' அவ‌னுக்கு இதே போல் விசித்திர‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அவ‌னுக்கு அதுவ‌ரை ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று.. திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான். சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து. இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேண்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டுத் த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா பேப்ப‌ர் திருத்திக் கொண்டிருந்தார். சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ 'சிபிசார்' எங்கே கிள‌ம்பிட்டார்??" என்று கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன். அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம் அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து. "ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம் "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்". என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக்கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை.. ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி. அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான். மெயின்ரோடு வ‌ந்த‌து. அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர்சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும்.அம்மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ந்தான் ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து.. அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான், சுவ‌ரெங்கும் அவ‌ன் அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு. மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும் ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.
புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். " நீ ந‌ம்ம‌ த‌லைமாறியே இருக்கேடா!!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை... க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப்பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை. சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்! "பார்த்துவிட்டுத்தான் போவோமே" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், " ந‌ம‌க்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், இம்முறை ஒருதடவை வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை... புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து. ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே??" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால். ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி!

- பிர‌பு