33%

செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று!!

எப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே? என்ற ஒரு சந்தேகத்துக்கும், "இடஒதுக்கீடு" என்ற‌ அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....

காரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது!!

அதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...

இப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....

" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது" 

என்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான‌ முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)

இது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...

இட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!



உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

நட்புடன்,

பிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு

தொடர்பதிவு.... ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட்.... "தொடர்பதிவு" என எழுதியிருக்கும் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம்.....

"ரசனை" எனும் ஒரு புள்ளியில்தானே இதயங்களே இணைகின்றன!!

அதிலும் "பிடித்தவை" ஒத்துப்போவதைவிட "பிடிக்காதவை" ஒத்துப்போவதில் இருக்கிற சுகம் இருக்கிறதே.. ஹாஹாஹா... அது மனித இயல்பு!! ;)

தொடர்பதிவில் பங்குபெறுவது இதுவே முதன்முறை... இன்றுகாலை தேனக்காவின் பதிவை வழக்கமான ஆர்வத்துடன் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுத ஸ்க்ரோல் செய்த போது இனிய ஆச்சர்யமாக என் பெயர் இருந்தது ரிலே ரேசில் :)

இதோ இந்த இடுகையின் இணைப்போடு அவருக்குப் பின்னூட்டம் தரலாம் என்று இங்கு வந்துவிட்டேன்!!



பிடித்த பத்துப் பெண்கள்:




குறிப்பு:

நான் வரிசைப்படி எல்லாம் எழுதவில்லை.... மனதில் தோன்ற தோன்ற ஒருவாறாகத் தொகுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்... என்னடா ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு அன்னை தெரஸாவை எழுதியிருக்கிறானே என்று கோபித்துக்கொள்ளவேண்டாம்


நிர்மலா டீச்சர்: 

இவுங்க என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை!! நான் அவர்களிடம் படித்தபோது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில்தான் இருந்திருக்கும்.... ஓர் இருபது வயது இளம்பெண், ஆறேழு வயது சிறுவர்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்து நாளும் கட்டிமேய்ப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை நான் இருபதுகளில் நுழைந்தபின்தான் வணக்கத்துடன் உணர்ந்தேன்..... அதுவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போல ப்ரைமரி ஸ்கூல்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியை என்று கிடையாது... காலை முதல் மாலை வரை ஒரே ஆசிரியர்தான் எல்லா பாடவேளைகளுக்கும்....!!
 இறக்கைகள் இல்லாத ஒரு தேவதையாகத்தான் அவரை நினைவுகூற முடிகிறது என்னால்.... கண்களில் அன்பைத் தேக்கிவைத்திருக்கும் நிர்மலா டீச்சரின் முகம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது.... ஒரு குறுகிய கட்டத்துக்குள் அவரின் பங்களிப்பை என்னால் இங்கு எழுதிவிடமுடியாது.... அதிர்ந்துகூட பேசாத மென்மையான குணம்கொண்டவர் என்னுடைய டீச்சர், இருப்பினும் கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு ஸ்ட்ரிக்டாக மிரட்டுவார்....அதையெல்லாம் அப்போது நினைவில் தேக்கிவைத்துக்கொண்டு இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...... இப்போ எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..... என் அன்பு ஆசிரியைக்கு என்றுமே என் டாப் 10ல் நீங்காத இடமுண்டு :)

ஸ்டெஃபி கிராஃப்:

நான் ஸ்டெஃபியின் ரசிகன்... 1987 விம்பிள்டன் ஃபைனல்ஸ் நடந்துகொண்டிருந்தது.... எனக்கு மூன்றுவயது.... அக்ரெஸிவாக எதிர்த்து ஆடும் "டென்னிஸ் ரவுடி" மார்ட்டினா நவரத்திலோவாவைப் பிடிக்கவில்லை எனக்கு.... "அவ ஆம்பள மாதிரி இருக்கா..." என்று மனது சொன்னது....!! மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம்மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன்!!! :))))
அடுத்த ஆண்டிலிருந்து ஸ்டெஃபியின் ரசிகர்களுக்கு பொற்காலமாய் இருந்தது.... வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாறு படைத்தார் என் பாசத்துக்குரிய ஜெரிமனி அக்கா!! ஹாஹாஹா.....
மற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான்!!! எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய‌ எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை :)

இந்திராகாந்தி:

நான் பிறந்து மூன்றே மாதத்தில் கொன்றுவிட்டார்கள் இந்த இரும்புப் பெண்ணை....
இவரைப் பார்த்தறியவில்லை, கேட்டும் படித்தும்தான் அறிந்திருக்கிறேன்....
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மையும்தான் "ஆண்மை" என்றுசொன்னால்.... இதுவரை இந்தியாவை ஆண்ட ஒரே "ஆண்" இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் சொல்வேன்....!!
"விளைவுகளை எண்ணி பயப்படாததுதான் சுத்தமான வீரம்" என்பதையும் இவர்களைப் படித்துதான் கற்றுக்கொண்டேன்.... அரசியல் அபிமானம் கடந்துதான் வியக்கிறேன் இந்த அயர்ன் லேடியை :)

அன்னை தெரஸா:

என்னது அன்னையின் பெயரில்லாமல் பிடித்த பெண்களின் பட்டியலா??
பெண்மையின் தனிச்சிறப்பு தாய்மை.. அந்த தாய்மையே பெண்மையை முற்றிலுமாய் ஆட்கொண்ட அதிசிய படைப்பு இந்த அன்னை!! என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை!! வாழ்த்தவா??? வணங்கக்கூடத் தகுதி வேண்டும்... வேண்டுமானால் வழிபடலாம் இந்த தெய்வத்தை...

"மனதில் உறுதி வேண்டும்" நந்தினி(!) :

இவள் ஒரு கற்பனைப் பெண்!! "மனதில் உறுதிவேண்டும்" படத்தில் சுகாசினியின் பாத்திரத்தைத் தான் சொல்கிறேன்!!
செவிலிகள் வணக்கத்துக்குரியவர்கள்... இந்தப் பாத்திரப் படைப்பு என்னைச் சின்ன வயதிலேயே பாதித்தது.....
ஒரு தொழிலின் மேன்மை முதன்முதலில் எனக்குப் பிடிபட்டது இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் நந்தினி பேசும் வசனத்தில்தான்.... குடும்ப பாரத்தைப் போராடித் தாங்கும் பெண்கள், தினசரி போராட்டங்களில் ஈடுகொடுத்து முன்னேறும் பெண்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் தொழில் வாழ்வில் இன்முகம் காட்டும் பெண்கள் என அன்றாட வாழ்வில் காணும் எண்ணற்ற "கிரேட்" பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் எனக்கு நந்தினியை ரொம்பப் பிடிக்கும்!!

டாக்டர் ஷாலிணி:

மதுரைப் பதிவர்கள் ஏற்பாடுசெய்த "குழந்தைகள் மனநலம்: கருத்தரங்க"த்தில் கலந்துகொண்டதிலிருந்தே டாக்டர் ஷாலிணியின் மீது அளவற்றதொரு மரியாதை ஏற்பட்டது... ரொம்ப நல்லா பேசினாங்க‌... அதுபற்றிதான் ஏற்கெனவே எழுதிவிட்டேனே!! அதன்பின் "பெண்ணின் மறுபக்கம்" உள்ளிட்ட இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்....
'பெண்ணியப்' போர்வைகளால் தன்னைப் பொதிந்து கொள்ளாமல், "மனிதப் பெண்"ணின் போராட்டங்களை இயற்கை மற்றும் பரிணாமக் கூறுகளால் அணுகி ரொம்பவே யதார்த்தமாகத் தோழமையுடன் எடுத்துச் சொல்லும் பாங்கிற்கு சல்யூட்!

(அய்யோ இன்னும் நாலு இருக்கா!! வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல!!)

கிரண்பேடி:

இவரைப் பற்றி நான் சொல்லத் தனியாக எதுவும் இல்லை... நீங்கள் படித்தறிந்து வியந்து போற்றிய அதே கட்டுரைகளைப் படித்து என்னுடைய டாப் டென்னிலும் நீங்காத இடம் கொடுத்து வைத்திருப்பவன்தான் நானும்!!
வாழ்வற்ற கல்லறைத் தடமான, அதுவும் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகார் ஜெயிலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியேற்று ஆறே மாதத்தில் அந்த அவலபூமியை ஒரு பயிலரங்கம்போல் மாற்றிக் காட்டி, அதற்காகவே பிரத்யேகமாய் ராமன் மகஸேஸே விருதுவாங்கினார் கிரண்பேடி... ஓர் அதிரடி வீரமங்கை என்றபோதிலும் மங்காத தாயுள்ளம் இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது... ஓர் ஆண் அதிகாரிக்கு இது அவ்வளவு எளிதில் தோன்றாது என்பது என் தாழ்மையான கருத்து.....

மேதா பட்கர்:

இந்த அம்மா பற்றி என் நண்பன் கார்த்திகேயன் சொல்லி அறிந்தேன்...
அதன்பின் இவரைப் பற்றிப் படித்து வியந்தேன்.... ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்.. சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திரமாக..... நர்மதா நதி என்று கூகுளில் தேடினால் முதல் லிங்கில் இருந்தே மெதா பட்கரின் பெயர் கூறும்!! அந்த ஆற்றுப் படுகை மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு தந்து, இன்னும்கூட போராடிவரும் மேதாபட்கர் தன்னலமற்ற ஒரு அறிவார்ந்த போராளி....

பி.சுசீலா

பெண்குரல் இனிமையானது என்பது தெரியும்... எவ்வளவு இனிமையானது என்று கேட்டால் பி.சுசிலாவின் குரலைத்தான் சொல்வேன்!! குழலோசையினும் மெல்லிதானது இந்தக் குயிலோசை!!
இவரின் குரலையும் தாண்டி, இந்தத் தலைமுறையின் இசை நிகழ்ச்சிகளிலும், பாராட்டு விழாக்களிலும் ஒரு தாய் போல இவர் காட்டும் ஏற்புடன் கூடிய‌ Gesture நெகிழவைக்கும்!!..... எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயசுல இவங்க பாட்டைப் பாடிதான் எங்க அம்மா என்னைத் தூங்கவைப்பாங்க.......

மேடம் க்யூரி:

"ரேடியம் கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி" என்பதைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெதுவுமே ஆழமாகத் தெரியாது....
இயற்பியல், வேதியல் என ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒருவர் இதுவரை உலகில் இவர்தான்...!!
இவர் வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்த்தேன் எனது டாப் டென்னில் வந்துவிட்டார்!!
கணவனும் மனைவியும் ஓர் ஆய்வுக்கூடத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரே இலக்கை நோக்கித் திட்டமிட்டு உழைத்து... பாதியில் கணவன் ஒரு விபத்தில் திடீரென‌ மறைய, மனைவி தொடர்ந்து முயன்று ஆய்வில் வென்று உயரிய விருதாம் நோபல் பரிசு வெல்கிறாள்.... என்ன ஒரு ஒன்லைன் இவரின் வாழ்க்கைக் கதைக்கு... மேற்கொண்டு விரிவாக எனக்கு எதுவும் தெரியாது இவரைப் பற்றி..... இருப்பினும் அகமும் புறமுமாகிவிட்ட அந்த‌ ஆய்வுக்கூடத்தில் ஒரு மேசையில் கண்ணத்தில் கைவைத்து சோகமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணாக என் மனதில் எப்படியோ பதிந்துவிட்ட மேரி க்யூரியை எனக்குப் பிடிக்கும் :)


நான் தொடர அழைப்பது....

ஜெர்ரி மாமா
ஸ்ரீ
கார்த்திகைப் பாண்டியன்
சின்ன அம்மிணி அக்கா
வெற்றி
கண்ணா
காவ்யா

இவர்களை ஏற்கெனவே யாரும் அழைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை!!




தேன் அக்காவுக்கு நன்றிகளுடன்,

கதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறார்கள்??



இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதுவதா?? படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....
எங்கே விடுகிறார்கள்.... "உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்" என்று குறுஞ்செய்தி வந்தது...
இதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த‌ கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....

குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நியூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா??

ஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ??) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா? யார் வழக்கு பதிவு செய்வது? எந்த குற்றத்தின் அடிப்படையில்?? ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?? மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா??

அவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள்???? அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்????

"கதவைத் திற காற்று வரட்டும்" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி "சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?? யார் கொடுப்பது??

இந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆனால் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும்?? இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்??... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா??

இந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....

வீரப்பன் செத்துப்போனதோடு  " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....

ஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது...   வேறெந்தவொரு வெகுஜன‌ பத்திரிக்கையையும் தொடவே  விருப்பமற்றுப் போய்...  மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க‌!!) யாக்கிடுவானுங்க போலயே....

எங்கே செல்லும் இந்தப் பாதை.......


எனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால்??  இருப்பினும்  சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....