டெர்மினேட்டர் (The Terminator Series)


"I am back" இயந்திரக் குரலில் அர்னால்ட் ஆண்மையுடன் கர்ஜித்த இந்த வசனத்தை மறக்க முடியுமா?!!

But he's not going to be back anymore!! :-))

அதான் தலைவர் அரசியலில் போய் செட்டில் ஆகிவிட்டாரே! இருக்கட்டும்.... அவர் வாழட்டும் வளமுடன்...!

அர்னால்ட் இல்லாததால் டெர்மினேட்டரின் கதைத்தொடர்ச்சிக்கு அதிகம் பாதிப்பில்லைதான், எனினும் படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு "அர்னால்ட் ஸ்வார்சினேக்கர்" என்ற பெயரும் ,பேராண்மையுடன் மிரட்டும் அவரது ஸ்டில்லும் இல்லாமல் போனது பேரிழப்பே!

அர்னால்டுக்குப் பதிலாக சாம் வொர்த்திங்டன், அதிக சக்திவாய்ந்த ஒரு மனித இதயம் பொருந்திய இயந்திரமாகப் பதவியேற்று, (வழக்கத்துக்கு சற்று மாறான) ஒரு டெர்மினேட்டர் படம் வெளிவந்து ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது!

டெர்மினேட்டரின் கதைக்கு ஒரு சிறப்பம்சம் யாதெனில் முன்கதையோ, பின்கதையோ ஏதுமின்றி வெளிவந்துள்ள நான்கு பாகங்களில் எந்த ஒன்றை நாம் பார்த்தாலும் அந்த இரண்டரை மணி நேர சாகச மிரட்டல்களில் அதிக குழப்பமின்றிப் பங்குகொண்டு திளைக்க முடியும்! நான்கு பாகங்களுமே ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள்தான் என்றாலும் நான்கு படங்களின் திரைக்கதை அமைப்புமே, அந்தந்த பாகங்களில் முக்கியக் கதாபாத்திரங்களின் குறிக்கோள் என்ன, அதனை ஈடேற்றுவதற்கான‌ சவால்கள் என்ன என்று மிகத்தெளிவாக வரையறுத்துக் கூறுவதால், குழப்பமேயின்றி ஒரு ஹீரோ=வில்லன் சேஸிங் கதையாக, அதன் தனித்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் சாராம்சங்களில் மெய்மறந்து நாம் எந்தவொரு பாகத்தைப் பார்க்கையிலும் ரசிகனின் இரண்டரை மணிநேர த்ரில்லிற்குப் பஞ்சம் இருப்பதில்லை!

பாகம் 1, 2, 3.... என்று கதை சொல்லும் sequel திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்... அந்த வகையில் sequel களுக்கு ஏற்ற ஆழமும், போகிற போக்கில் சுவாரஸ்யம் குன்றிவிடாத‌ நீளமும் கச்சிதமாகக் கைவந்துள்ள‌ டெர்மினேட்டரின் கதையமைப்பு என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!

திரைப்படம் மற்றும் காட்சிகளின் பிரம்மாண்டத்தைத் தாண்டி டெர்மினேட்டரில் அடிநாதமாய் அமிழ்ந்து கிடக்கும் படத்தின் "கதைக் கரு" பிரம்மாண்ட‌மானது.... அந்த பிரம்மாண்டமான கற்பனையின் விஸ்தீரனத்தைதான் இங்கு பதிவிட விழைகிறேன்.... (கதை மற்றும் திரைக்கதைகளின் மீதுள்ள ஆர்வமிகுதியால்!)

T 1 = The Terminator (1984)

1984 ல் ஜான் கான்னர் எனும் ஒரு குழந்தை சாரா கான்னர் எனும் பெண்ணிடம் கருத்தரிக்கிறது கருவிலேயே அதை அழிக்க T- 600 எனும் மனித உருவிலான ஓர் இயந்திரம் ஏவப் படுகிறது எதிர்காலத்திலிருந்து!!

பிறக்கப் போகும் குழந்தையான ஜான் கான்னர் பின்னாட்களில் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கப் போகும் மாபெரும் போரில் மனிதகுலத்துக்குத் தலைமைதாங்கிப் போரை வழிநடத்தப் போகிறவன் என்பதால்தான் இயந்திரங்களின் இந்த ஏற்பாடு! ஜான் கான்னரைப் பிறக்குமுன்பே அழிக்க முதல் பாகத்தில், எதிர்காலத்திலிருந்து வருபவர் சாட்சாத் நம்ம‌ அர்னால்ட்தான்! அதனை முறியடித்து சாராவைக் காத்து ஜானைப் பிறக்க வைக்க அதே எதிர்காலத்திலிருந்து ஒரு "மனிதன்" ஏவப்படுகிறான் அவன் பெயர் கேய்ல் ரீஸ்.... ( திரையில் மைக்கேல் பெய்ன்)

முதல் பாகம் நடக்கும் 1984ஆம் வருடம், இயந்திரங்களை ஒன்றுகூட்டி மனிதர்களுக்கு எதிராக ஆட்டுவிக்கும் ஸ்கைநெட் தன் இயக்கத்தைத் தொடங்கியிருக்கவேயில்லை!! எதிர்கால உலகிலிருந்துதான் ஸ்கைநெட், ஜான் கான்னர்ஸை அழிக்க அர்னால்டை அனுப்பிவைத்திருக்கிறது...... கேய்ல் ரீஸை அனுப்பி வைப்பது "ரெஸிஸ்டன்ஸ்" என்று சொல்லப் படும் இயந்திரங்களுக்கெதிராக போர்செய்யும் மனிதவீரர்களின் அமைப்பு!! அதன் தலைவன் தான் பிறக்கப் போகும் ஜான் கான்னர்ஸ்!!! சாரா கான்னர் என்று பெயர் வைத்திருக்கும் அத்தனை பேரையும் "ஃபோன் புக்" மூலம் கண்டறிந்து வரிசையாகக் கொன்றுவரும் "ஃபோன் புக் கில்லராக" அர்னால்ட் மிரட்டிய முதல் பாகம் உலகம் முழுதும் வசூலை அள்ளியெடுத்தது...... இயந்திரம் அர்னால்டை முறியடித்து ஜான் கான்னர்ஸ் பூமியில் பிறக்கிறான்.....!!!! (தி டெர்மினேட்டர் வெளிவந்த ஆண்டு 1984!!)

T 2 -The Judgement Day (1991)

கொலைசெய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட "கில்லர் மெஷின்" அர்னால்டைக் கைப்பற்றி "ரெஸிஸ்டன்ஸ்" அதன் ஆதார புரோக்ராமையே மாற்றியமைத்துவிட, பத்து வயது நிரம்பிவிட்ட சிறுவனான ஜான்கான்னர்ஸை இப்பொழுது ஸ்கைநெட்டிடமிருந்து காப்பாற்றும் இயந்திரமாக வருகிறார் அர்னால்ட்!!! சக்கைபோடு போட்ட இரண்டாம் பாகமான ஜட்ஜ்மெண்ட் டே தான் டெர்மினேட்டர் சீரிசிலேயே (Series) தி பெஸ்ட் என்று சொல்லலாம்!!

ஜட்ஜ்மெண்ட் டேயில் கதை நிகழும் வருடம் 1995 (படம் வெளிவந்த ஆண்டு 1991!) பின்னாளில் ஸ்கைநெட்டால் அரங்கேற்றப் படப் போகும் மனிதகுல அழிவு நாள்தான் "ஜட்ஜ்மெண்ட் டே!" பத்துவயது சிறுவனான ஜானைக் கொல்ல ஸ்கை நெட் அனுப்பும் கை தேர்ந்த நவீன இயந்திரம் டி 1000 (திரையில் ராபர்ட் பாட்ரிக்) இம்முறை இளம் ஜானைக் காப்பாற்ற எதிர்காலத்திலிருந்து "ரெஸிஸ்டன்ஸ்" அனுப்பிவைப்பது ஜானைக் காப்பாற்ற மாற்றி புரோக்ராம் செய்யப்பட்ட அர்னால்டை!!! இந்த படத்தின் சிறப்பம்சம் வில்லனாக வரும் T- 1000 இயந்திரம்தான்!! ஒரு திரவ உலோகத் தன்மைகொண்ட இந்த இயந்திரம் மனித உருவெடுத்து வந்து அர்னால்டைப் படுத்தியெடுக்கும் அதகளம் அதி சுறுசுறுப்பானது!! முதல் பாகத்தில் கூறியிருந்த ஜட்ஜ்மென்ட் டே 1997ல் அரங்கேறுவது தடுத்து நிறுத்தப் படுகிறது..... சாரா கான்னர் தன் மகன் ஜானை இளமையிலிருந்தே பிற்காலத்தில் இயந்திரங்களிடையான போரில் மனிதகுலத் தலைவனுக்குரிய தகுதிகளுடன் வளர்த்துவருவார்...... அர்னால்டுடன் இணைந்து சாராவும் சிறுவன் ஜானும் போராடுவது சுவாரஸ்யம் நிறைந்த திரைத்திருவிழா!!

T 3 - The Rise of Machines (2003)

1997ல் தடுத்து நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறுவது 2004ல்!!! இதுதான் மூன்றாம் பாகமான "தி ரைஸ் ஆஃப் மெஷின்ஸ்"ன் க்ளைமாக்ஸ்!!! சாரா கான்னர் ரத்தப் புற்று நோயால் மரணித்துவிட, தன்னுடைய எதிர்கால பொறுப்புகளின் பளு அறிந்த ஜான் கான்னர் இப்போது இளைஞன்!! ஒரு ஃபோன் நம்பரோ, இ மெயிலோ, ஃபேஸ் புக் அக்கௌண்ட்டோ இல்லாத தலைமறைவு இளைஞனாக மறைந்து வாழும் ஜான் கான்னரைக் கொல்ல ஸ்கைநெட் அனுப்பி வைப்பது ஒரு சூப்பர் ஃபிகரை!! T-X என்று அழைக்கப்படும் மிகப் புதுமையான ஒரு இயந்திரமாக வரும் பெண் கிறிஸ்டினா லோக்கென்!! அவளை எதிர்க்கும் டெர்மினேட்டர் அர்னால்டோ பழமையான இயந்திரம்!! ஜான் கான்னரை இரண்டு இயந்திரங்களும் கண்டுகொண்டவுடனேயே தொடங்குகிறது ஆட்டம் (படம் ஆரம்பித்த முதல் கால்மணி நேரத்திலேயே ஆரம்பித்துவிடுவதுதான் திரைக்கதை மந்திரம்!!) ஜான் கான்னர் தன் துணைவியான கேட் (kate) டை சந்திப்பான்..... இவள்தான் உன் வருங்கால மனைவி என்று அசால்ட்டாக அர்னால்ட் சொல்வது ருசிகரமான கட்டம்....... வருங்காலத்திலிருந்து அர்னால்டை, இம்முறை ஜானைக் காப்பாற்ற அனுப்பிவைப்பதே கேட் தான் என்று அர்னால்ட் கூறுவார்..... அதுமட்டுமின்றி அப்பொழுது ஜான் கான்னர் உயிரோடு இல்லை என்பது ஷாக்!! ஒரு நவீன இயந்திரத்துடன் போராடும் பழைய இயந்திரமாக அர்னால்ட் செம அடி வாங்குவார்...... இறுதியில் ஜான் கான்னரையும் கேட்டையும் காக்கும் தன் கடமையில் அர்னால்ட் வெற்றிபெற்றாலும் உலகத்தின் அழிவை ஜானால் தடுக்க முடியாது!! இந்தப் பாகத்தில் ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறிவிடும்.......... அர்னால்ட் மிகவும் கஷ்டப்பட்டு அந்த அழகான வில்லியுடன் மோதுவது படுவேகத்தில் படத்தை நகர்த்திச் சென்றுவிடும் ஓர் எக்ஸ்பிரஸ் ஆக்ஷன் ட்ரீட்!!!

T 4 - The Salvation (2009)

டெர்மினேட்டர் வரிசையில் T 4 கொஞ்சம் சுமார் தான்!! அர்னால்ட் இடத்தை பூர்த்தி செய்வதன் இயலாமையைப் படம் தெளிவாக எதிரொலித்தது டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு... எனினும் திரையில் சில ஜாலங்கள் தெளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் McG!! கதை நடக்கும் ஆண்டு 2018.... இம்முறை கதை நிகழ்வதே எதிர்காலத்தில்தான்!! ஜான் கான்னர் ரெஸிஸ்டன்ஸில் ஒரு நட்சத்திரமாக இயங்கி இம்முறை ஸ்கை நெட்டுடன் ஒரு போரை அரங்கேற்றி வெற்றிபெறுகிறார்!! கதை சமகாலத்திலேயே நிகழும் ஒரு நேரடிப் போர்தான் என்றாலும் வழக்கமான டெர்மினேட்டர் கதை என்று "பிராண்ட்" பண்ணிக் காட்டுவதற்கோ என்னவோ இம்முறை ஸ்கைநெட் அழிக்கப் போகும் ஹிட்லிஸ்டில் ஜானுக்கு இரண்டாம் இடம் என்று ஒரு ட்வ்ஸ்ட் வைத்து முதலிடம் பெறுபவராக, முதல் பாகத்தில் 2030களிலிருந்து அனுப்பிவைக்கப் பட்ட, கெய்ல் ரீஸை அறிவிக்கிறார்கள்..... முதல் பாகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து வந்து ஜானின் தந்தை ஸ்தானம் எடுக்கும் கேய்ல் ரீஸை 2018ஆம் ஆண்டு காக்கத் துடிக்கிறார் ஜான் கான்னர்ஸ்!! (ரொம்பக் குழப்பம்தான்!!) மசாலா சேர்ப்பதற்காக இம்முறை இயந்திரமாக ஸ்கைநெட் தத்தெடுக்கும் சாம் வொர்த்திங்டன் தன்னை ஒரு மனிதன் என்று நம்பிக்கொண்டு ரெஸிஸ்டன்ஸ் , ஸ்கைநெட்டுடன் தொடுக்கும் போரில் ஜானுடன் இணைந்து மனிதர்களுக்காகப் போராடுகிறார்..... இறுதியில் போரில் மனிதர்கள் வெற்றிபெறுவது மட்டுமின்றி கேய்ல் ரீஸையும் ஜான் காப்பாற்றுகிறார்!!.... கடைசி சண்டையில் படுகாயம் அடையும் ஜான் கான்னர்ஸைக் காப்பாற்ற இயலாது என்று டாக்டரான மனைவி கேட் தவிக்க இயந்திர மனிதன் சாம் வொர்த்திங்டன் தன் மனித இதயத்தை ஜானுக்கு வழங்கும் செண்டிமெண்ட்டோடு முடிகிறது சால்வேஷன்........ அடுத்த பாகத்தை இயக்கப் போவதும் McG தான்... 2011ல் படப்பிடிப்பு துவங்கும் என்று இப்போதைக்கு எதிர்பார்க்கப் படுகிறது!!


இவ்வளவு பெரியதொரு பயணத்தைத் தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களாக கற்பனைக் குதிரைகளைத் தேரில் பூட்டி மிடுக்கு குறையாமல் இன்றும் வலம் வருவது டெர்மினேட்டரின் கிரியேட்டர்களை பிரமிப்புடன் கவனிக்க வைக்கிறதென்றால்..... அதன் வணிகம் அதையும் தாண்டி நம்மை மயக்கத்தில் ஆழ்த்துமளவு விசாலமானது!!! 80களில் யாரோ சில எழுத்தாளர்களுக்கு மற்றும் சில கிரியேட்டர்களின் மனதில் எங்கோ தோன்றிய ஒரு கற்பனை விதை நான்கு வெற்றித் திரைப்படங்களாக, இன்னும் சில தொலைக்காட்சித் தொடர்களாக (தொலைக்காட்சித் தொடரில் சாரா கான்னர் நாயகியாக வருவார்!!), ஹாட் வீடியோகேம்களாக, காமிக்ஸ்களாக பணத்தைக் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புகுந்து அள்ளி வருகிறது வேரூன்றி உலகெங்கும் விழுதுகள் பரப்பி!!!

கற்பனையில் இன்னொரு உலகையே படைத்து அதில் உயிர்களை உலவவிட்டு நிஜ உலகில் நட்சத்திரங்களாக, மில்லியனர்களாக‌ வெற்றி நடைபோடும் கலைஞர்களுக்கு வணக்கம்!! ஒரு கற்பனைக்கும் ஜீவனுள்ள ஒரு கதாபாத்திரப் படைப்புக்கும் எவ்வளவு வணிகமதிப்பு இருப்பதை நம் கலைஞர்களும் உணரவேண்டிய தருணமிது...... கேட்டால் அந்தளவு "பட்ஜெட்" இல்லை என்றுமட்டும்தான் சொல்வார்கள் படத்துக்கு பத்துகோடி சம்பளம் கொடுக்கும் நம் ஃபிலிம் மேக்கர்கள்!!!

- பிரபு .எம்

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

cool post prabhu.. have collected lots of details.. me too love this series.. have not seen the salvation yet.. heard its not that good.. anyway.. keep posting mate..:-)))))))))

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்லொரு அறிமுகத்தையும், விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள். நன்றி

Post a Comment