பாட்டி க‌தை (சிறுக‌தை - பாக‌ம் 1)

அழகான அதிகாலை....அருகில் உள்ள‌ கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிற‌து.... ஒரு சின்ன‌ பீப்பாய் நீர் பாய்ந்து வ‌ந்து ம‌ண்ணை நனைக்க .....ம‌ழைபெய்தால் கிளம்பும் ம‌ண்வாச‌னை ப‌ர‌வுகிறது... சாண‌த்தோடு க‌ரைத்த‌ நீரால் அந்த‌ ம‌ண்ணை மெழுகுகிறார் வாச‌ல்தெளிக்கும் அந்த‌ப் பாட்டிய‌ம்மா!!! தோல்சுருங்கி மென்மையான‌ ந‌ர‌ம்புக‌ள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... த‌சைக‌ளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்ற‌ன‌ அந்தக் கைக‌ள்.... சில‌ நொடிக‌ளில் புழுதிம‌ண்ணின்றி ப‌க்காவாக‌ செட்டாகியிருக்கிற‌து வீட்டுவாச‌ல்.... வேண்டியோர் ப‌ல‌ரின் காலடி படுவதற்காகப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!! சில மணித்துளிகள்தான், பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!

"பாட்டிம்ம்மா...." அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃப‌ன்பாக்ஸுட‌ன்!! "ஏய்ய்ய்... பூட்ஸு காலோட‌ உள்ள‌ வ‌ராதேனு பாட்டி எத்தனை த‌ட‌வ‌ சொல்லியிருக்கேன்...." செல்ல‌மாக‌ அத‌ட்டிக்கொண்டே, வேக‌மாக‌ப் பாட்டி நடந்து வ‌ந்தாலும் ந‌டையில் த‌ள‌ர்ச்சி தெரிய‌த்தான் செய்கிற‌து!!! அந்த‌க் குழ‌ந்தை நாக்கை நீட்டி வ‌ழ‌க்க‌ம்போல் சிரித்துக்கொண்டே உட‌லை ஒருவித‌மாக‌க் கோணிக்கொண்டு நிற்கிற‌து... "அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க‌...!!" டிஃப‌ன் பாக்ஸில் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ பாட்டி வைத்த சாம்பார் ஊற்ற‌ப் ப‌டுகிற‌து!!! பாட்டி த‌லையைப் பின்னிவிட, டாட்டா காட்டிவிட்டு ஓடுகிற‌து குழ‌ந்தை..... அவ‌ள் அம்மாவுக்கு அர‌புநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்த‌ப் பாட்டியில்லை பேத்திக்கு ஜ‌டை பின்னிவிட‌!!!

சில‌மைல் தொலைவில் சேவ‌லுக்குப் ப‌திலாக‌ ஸ்கூல்பஸ்களின் ஹார்ன்கள் கொக்கரிக்கும் ந‌க‌ர‌த்து அதிகாலை.... நூறுவ‌ய‌து ல‌ட்சிய‌த்துட‌ன் வேகமாய் ந‌டைப்ப‌யிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்க‌ளுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உண‌ர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜ‌கோபால‌ன்...ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் க‌ற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!! "நேர‌மாகிவிட்ட‌தோ... ??? "அட!! நேரமானால்தான் என்ன‌!!!" அச‌ட்டுத் த‌ன‌மாக‌த் தெரிந்த‌து ம‌ன‌தின் இத்தனை வருடத்து வ‌ழ‌க்க‌மான‌ காலை நேரப் ப‌த‌ற்ற‌ம்... இன்னும் மனது முழுதாக‌ப் ப‌ழ‌க‌வில்லை இந்த‌ப் புது ரிட்டைய‌ர்மென்ட் வாழ்க்கைக்கு!!! சீரான‌ நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேர‌த்தில் வெயிலும் தூசியும் ப‌ர‌ப‌ர‌ப்புமாக‌ இந்த அழ‌கை ஊர் இழ‌ந்துவிடும்.... அந்த‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பில் அவ‌ருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்ட‌ப்ப‌ட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன‌ வ‌ய‌தில் ர‌சித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் ப‌ழைய‌ ப‌ட‌ டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக‌ உள்ள‌து!!

ஒரு வ‌ருட‌மாகியும் கூட‌ இப்போது வ‌சிக்கும் வீடு இன்னும் புதிதாக‌த் தெரிகிற‌து.... ந‌க‌ர‌த்தின் மிக‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் ஒரே ம‌க‌ன் ஜீவா வாங்கிய‌ வீடு...! திரு.ராஜகோபாலன்.... க‌றாரான‌ அதிகாரி.... க‌ண்டிப்பான‌ அப்பா... திட்ட‌மிடுதலும் அதைச் சிறிதும் பிச‌காம‌ல் செய‌ல்ப‌டுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் க‌தையின் ஒன்லைன்!! ஜீவா பிற‌ந்த‌போதே அவ‌ன‌து முதல் இருப‌து ஆண்டுகளை அவர் திட்ட‌மிட்டுவிட்டார்... இடையே ப‌ள்ளிக்கால‌த்தில் அவ‌னுக்கு வ‌ந்த‌ ம‌ஞ்ச‌ள் காமாலையைத் தவிர மற்ற‌ அனைத்துமே அந்தத் திட்டத்தின்ப‌டிதான் ந‌ட‌ந்தது!

ஜீவா...எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்க‌ள் ம‌ற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரிய‌தொரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் ரீஜின‌ல் ஹெட்!! அலுவ‌ல‌க‌ ம‌ற்றும் சொந்த‌த் தேவைக‌ளுக்கென‌ விலையுய‌ர்ந்த‌ கார் ஒன்றை ஓட்டுந‌ருட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தது ஜீவா ப‌ணிபுரியும் நிறுவ‌ன‌ம்...இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திரும‌ண‌ம்... அப்பாதான் பெண் பார்த்தார், ஜீவாவின் ப‌ரிபூர‌ண‌ ச‌ம்ம‌த‌த்துட‌ன்!!

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்புதான் ஜீவா அஞ்ச‌லியிட‌ம் முத‌ன்முறையாக‌ போனில் பேசினான்.....

"பேசிட்டியா??.." வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.

"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"

"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... உடனே கால் பண்ணு... Dont make me call again... அந்தப் பொண்ணுக்கு செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா..."
..
....
......
........

சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....

"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."

"ஹம்..ஹலோ... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."

மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது..."ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"

" ம்ம்...ஆமா... நானும் கால் ப‌ண்ணேனே...!!!"

"இல்லையே..!!!"

"நேத்து இதே டைம்ல‌ ரெண்டு ரிங் ம‌ட்டும் வ‌ந்து ஒரு கால் க‌ட் ஆகியிருக்குமே!!"
இருமுனையிலும் கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் சிரிப்பு....
.................
........................
மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க‌... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்துவிட்ட‌ ராஜ‌கோபால‌ன் இனிமேல் தன் ம‌க‌னின் முடிவுக‌ளின்ப‌டிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்தார் சந்தோஷ‌மாக‌!!

இஷ்ட‌ப்ப‌ட்டு உழைப்ப‌தால் க‌ஷ்ட‌ம் தெரிவ‌தில்லை ஜீவாவுக்கு... தின‌ம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவ‌த‌ற்குள் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தின் தொலைதூர‌ ஊழிய‌ர்கூட‌ டிராஃபிக் ம‌ற்றும் சிக்ன‌ல்க‌ளைக் க‌ட‌ந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!! இப்போதெல்லாம் தின‌மும் வேலைமுடியும் நேர‌ம் உத‌ட்டோர‌ம் கொஞ்சம் இனிக்கிற‌து... அஞ்ச‌லியுட‌ன் பேசுவ‌து பிடித்திருக்கிற‌து ஜீவாவுக்கு!! ஓர் இனிமையான‌ அனுபவமாய் அறியாம‌லேயே அறிந்துகொள்கின்ற‌ன‌ர் ஒருவ‌ரையொருவ‌ர் அழ‌காக‌!!

"இந்தியாவுக்கு விளையாடுற‌ எல்லாரையும்தான் எனக்கு ரொம்ப‌ப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"

"எல்லாருமேதான் ந‌ல்லா ந‌டிக்கிறாங்க‌.... ஒவ்வொரு ப‌ட‌த்திலும் ஒவ்வொருத்த‌ரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"

இதுதான் அஞ்ச‌லி!!! இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் ச‌ச்சினும், க‌ம‌லஹாச‌னும் அவ‌ளுக்குக் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல் என்று!! அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவார‌ஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!! ம‌ணிர‌த்ன‌ம், ஏ ஆர் ர‌குமான், ர‌ச‌குல்லா, த‌யிர்சாத‌ம், மாதுள‌ம்ப‌ழ‌ம், ஸ்பைட‌ர்மேன், கொடைக்கான‌ல், எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்..!!!! எல்லாரையும் ம்ற்றும் எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்த‌ அஞ்ச‌லிக்கே தெரியாது இவையெல்லாம் அவ‌ளுக்குப் பிடித்த‌வையென்று... ஆனால் ஜீவாவுக்குத் தெரிந்த‌து!!! அஞ்ச‌லியே த‌ன‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்ட‌து இர‌ண்டே விஷ‌ய‌ங்களைத்தான் ஒன்று ப‌ச்சை நிற‌ம் இன்னொன்று அவ‌ளுடைய பிரியமான பாட்டி!!!

அஞ்ச‌லியின் த‌ந்தைக்கு உயிர‌ளித்த‌ அவ‌ள் பாட்டியால் அவ‌ள் க‌ல்லூரி சேர்ந்த‌ வயதுவரைதான் உட‌ன்வ‌ர‌முடிந்த‌து... அந்த‌ இத‌ய‌ம் இறுதியாகத் துடித்த‌து அஞ்ச‌லியின் அர‌வ‌ணைப்பில்தான்... "உன‌க்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூட‌த்தான் இருக்க‌ப்போற‌.." என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்ச‌லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த‌ இத‌ய‌த்தின் துடிப்பு தானாக‌ அட‌ங்கிப்போன‌தை அந்த‌ அணைப்பிலேயே நேர‌டியாக‌ உண‌ர்ந்தாள் அஞ்ச‌லி.... அவ‌ள் குழ‌ந்தையாக‌ இருந்த‌போது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேன‌ல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட‌ செல்ல‌ப் பாட்டி!!! பாட்டியின் நினைவுக‌ள் ப‌சுமையாக‌வே தொட‌ர்ந்தன‌ அஞ்ச‌லியின் ப‌ய‌ண‌த்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன‌!!!

கிராம‌த்துவீட்டில் அதே ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இர‌வு உண‌வு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டிய‌ம்மா.... பீம‌ன்தான் அந்த‌ப்பாப்பாவுக்குப் பிடித்தமான‌ ஹீரோ!!! பாப்பாக்க‌ளை ஓரிட‌த்தில் உட்கார‌வைத்துக் கதைசொல்லி உருண்டை உருண்டையாக சோறுதிணிப்ப‌து காலம்காலமாய் பாட்டிக‌ளுக்கும‌ட்டுமே கைவ‌ரும் லாவ‌க‌ம்!! பாட்டியின் க‌தைக‌ளில் துரியோதன சகோதரர்களை ம‌ட்டுமன்றி ப‌லப்பல‌ வில்ல‌ன்க‌ளையும் தின‌மும் த‌ன் க‌தாயுத‌த்தால் புர‌ட்டியெடுத்துவ‌ந்தான் பீம‌ன் அந்த‌க் குழ‌ந்தைக்காக‌!!! திடீரென‌ப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உத‌றல்... பேச‌ முடிய‌வில்லை.... ஒருவித‌மாக‌த் தோட‌ர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்த‌து... க‌தை சொல்ல‌க் க‌ஷ்ட‌ப்ப‌ட்டப் பாட்டிக்கு த‌ண்ணீர் குடித்தும் அட‌ங்க‌வில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்களை யெல்லாம் அழைத்து வ‌ந்துவிட்டாள் குட்டிப்பாப்பா...ஆளுக்கொரு வைத்திய‌ம் சொல்லியும் அட‌ங்க‌வேயில்லை... இர‌வு ரொம்ப‌ நேர‌ம்வ‌ரைக்கும் தொட‌ர்ந்த‌து தொண்டைக் குமுற‌ல்!!

பின்னே... இத்த‌னை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட‌ ம‌ற‌ந்தேபோய்விட்ட பேரன் த‌ன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து தூக்க‌மின்றித் த‌விக்கையில் தொண்டை விக்காதா பாட்டிக்கு!! அஞ்ச‌லியின் பேச்சைக் கேட்ட‌திலிருந்தே தன் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு..."என்ன‌ பாவ‌ம் செய்தாள் என் பாட்டி இப்படி தனிமைத் தண்டனையில் துவழ‌??" என்று ம‌ன‌ம் கேட்கும் கேள்விக‌ளுக்கு விடைய‌ற்றுத் த‌விக்க‌த் துவ‌ங்கினான் ஜீவா!!

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்... உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம் இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!! வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!! ந‌டு இர‌வில் தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போக, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து அந்த‌வீட்டின் முக‌ப்பு... கார் க‌தவு திற‌ந்து.. அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!! தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!! வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!!! "சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!" ஜீவா சிரிக்க‌.... " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

--தொடரும்.....


(கொஞ்ச‌ம் நீண்ட‌க‌தை... இர‌ண்டாவ‌து பகுதியை விரைவில் எழுதிப் ப‌திவிடுகிறேன்...
அசௌக‌ரிய‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும்!! Hope you'll like this story!!)


பிர‌பு. எம்

3 comments:

Anonymous said...

good story..i read it fully and liked it.. keep the good work up!!!

Mahalingam said...

Prabu, I'm speechless ... Even though it was bit long.. I never got bored.. You have rekindled my old memories.. I think When I completed reading this first part..By this time, my Granny might be having hiccups... Prabu, You made cry, such a emotional story.. You words has such a wonderful power.. Keep Blogging my friend..

Udhayakumar said...

good one. Nice narration.

Post a Comment